மஸ்தூர் சங்கதன் சமிதிக்குத் தடை: இந்தியத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் தீர்மானகரமான வரலாற்று நிகழ்வு!

 2017 டிசம்பர் 27 அன்று ஜார்கண்ட்டின் பாரதிய ஜனதா கட்சி அரசு மஸ்தூர் சங்கதன் சமிதிக்கு (MSS) தடை விதித்தது. அமைப்பாகத் தொழிலாளர்களுக்கான இந்தத் தொழிற்சங்கம் கடந்த 30 ஆண்டுகளாக இயங்கிவந்திருக்கிறது. குற்றவியல் திருத்தச் சட்டத்தின் (Criminal Law Amendment Act -CLAA) கீழ்ப் பொய் வழக்குகள் புனையப்பட்டுத் தடை செய்யப்பட்டது. இதே சட்டத்தின் கீழ்ச் சங்கத்தின் நிர்வாகிகள் பத்துப் பேர் மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. வரவர ராவ் என்ற புகழ்பெற்ற தெலுங்கு கவிஞரை ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழாவில் பேசுவதற்கு அழைத்ததுதான் தடைக்கும் பொய் வழக்குகளுக்குமான காரணம். MSS மாவோயிஸ்ட் அமைப்புடன் இணைக்கப்பட்ட ஒன்று முடிவு செய்வதற்கும், அமைப்பைத் தடை செய்வதற்கும் இந்த அழைப்பு ஒன்றே அரசுக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது! நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை நடத்துவதற்காக MSS “சட்ட விரோதமாக நிதி திரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Photo Credit: Janjwar Newspaper

மஸ்தூர் சங்கதன் சமிதி (MSS) ஜார்கண்ட்டின் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களில் ஒன்றாகும். 1985ல் சத்ய நாராயணா பட்டாச்சார்யா என்ற வழக்கறிஞரால் அது நிறுவப்பட்டது. 1989ல் பதிவு செய்யப்பட்டது. தற்போது அந்தச் சங்கத்தில் 22 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் அமைப்பாகா துறை தொழிலாளர்கள். தன்பாத்தின் நிலக்கரிச் சுரங்கங்கள், அனல் மின்நிலையத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், ஷிக்கர்ஜி என்ற புனிதத்தலத்தின் தொழிலாளர்களை MSS அமைப்பாக்கி வந்தது. இந்தத் தொழிற்சங்கம் ஜார்கண்ட்டில் ஓர் மருத்துவமனையை நடத்தி வருகிறது. இப்பகுதியில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும், பழங்குடியினருக்கும் மருத்துவமனையில் இலவசச் சேவை அளிக்கப்பட்டது. மேலும், தொழிலாளர்களுக்கான மாதாந்திரச் செய்திப் பத்திரிக்கை ஒன்றையும் நடத்தி வந்தது. அமைப்பாகத் தொழிலாளர்களை அமைப்பாக்கிய காரணத்தால், கடந்த முப்பது ஆண்டுகளாக, பழங்குடியினர் தொழிலாளர்கள் போராட்டங்கள் பலவற்றின் முன்னணியில் MSS இருந்து வந்தது.

MSS தற்போதுதான் தடை செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

முப்பது ஆண்டுகளாகச் சட்டப்பூர்வத் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொண்டு வந்த அமைப்பின் மீது இதற்கு முன்பு வன்முறைக்காகவோ அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளுக்காகவோ ஒரு FIR கூடப் பதியப்படவில்லை. இப்போது MSS அரசு ஏன் தடை செய்தது? இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி அரசின் வேலைத் திட்டங்களில் ஒன்று, தொழிலாளர் சட்டச் சீர்திருத்தம் என்ற முகமூடியில் மறைந்திருக்கும் தொழிலாளர் விரோதக் கொள்கைகள் ஆகும். அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைப் போர்க்குணத்துடன் எதிர்க்கும் தொழிற்சங்கங்கள் குறித்துப் பாரதிய ஜனதா அரசு அச்சம் கொண்டுள்ளது. புனிதத்தலத்திலும், நிலக்கரிச் சுரங்கங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்களை அமைப்பாக்கியிருந்த MSS பற்றி அரசு குறிப்பிடத்தக்க அளவு அச்சம் கொண்டிருந்தது. இவற்றின் காரணமாக அரசு நடுக்கத்துடன் MSS பிரச்சனையைக் கவனித்துக்கொண்டிருந்தது. மேலும், ஜார்கண்ட்டுக்கு உந்துவிசை அளிக்கும் திட்டம் ( “momentum Jharkhand program” ) என்ற அரசின் திட்டத்திற்கு எதிராக MSS செயல்பட்டுக்கொண்டிருந்தது. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில், பழங்குடிகளை வெளியேற்றுவது, அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது, அவர்களுக்கு இயற்கை வள ஆதாரங்கள் கிடைக்காமல் செய்வது என்பதுதான் மேற்சொன்ன உந்து விசை அளிக்கும் திட்டத்தின் சாரம் ஆகும். கடந்த ஆண்டு, மாவோயிஸ்ட் என்று சொல்லி மோடிலால் பாஸ் என்ற தொழிலாளர் கொல்லப்பட்டபோது, MSS அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தலைமைதாங்கி நடத்தியது. நீதிவிசாரணை வேண்டும் என்று கோரியது.

அமைப்பாகாத தொழிலாளர்களை அமைப்பாக்கிக்கொண்டு, அவர்களுக்கான மருத்துவமனையை நடத்திக்கொண்டு, அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையை எதிர்த்து,அரசோடு நேரடியாக மோதல் நடத்துகின்ற தொழிற்சங்கத்தை, நவ தாராளவாதக் கொள்கையை நடைமுறைப்படுத்துகின்ற எந்தவொரு பாசிச அரசும் தடைசெய்யவே முயற்சி செய்யும்.

MSS மீதான குற்றச்சாட்டுகள் கேலிக்கூத்தானவை. வரவர ராவ் ஒரு கவிஞர். அவர் பேசக்கூடாது என்று எந்தத் தடையும் இல்லை. அல்லது அவர் தப்பிச் சென்ற குற்றவாளியும் இல்லை. அப்படியிருக்க, அவரை அழைத்தது எப்படிச் சட்டவிரோத நடவடிக்கையாகும்? தொழிற்சங்கத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு செயல்பாட்டுக்காகத் தொழிலாளர்களிடமிருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் பணம் வசூல் செய்வது சட்டப்பூர்வமானதாகும். தொழிற்சங்க நடவடிக்கையொன்றுக்காக அதன் நிர்வாகிகள் நிதி வசூல் செய்ததையே குற்றச்சாட்டாக ஆக்குவது நீதிமுறையின் அடிப்படைகளுக்கே முழுமையும் விரோதமானது. தடை நடவடிக்கையின் சட்ட விரோதத் தன்மை இன்னும் நீள்கிறது. ஒரு தொழிற்சங்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்றால், அதன் நிர்வாகிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக நோட்டீஸ் அளித்து அவர்களின் வாதம் என்னவென்று கேட்பது அவசியமானதாகும். ஒரு தொழிற்சங்கத்தின் பதிவை ரத்துசெய்வது தொழிற்சங்கப் பதிவாளருக்கு உரிய அதிகாரம் ஆகும். வழக்கமாக, தொழிலாளர் துறையின் துணை ஆணையர் ஒருவர்தான் தொழிற்சங்கப் பதிவாளராகவும் இருப்பார். சம்பந்தப்பட்ட பதிவாளர் மூலம் இந்தத் தடை விதிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, தடைக்கு எதிரான தங்களின் வாதங்களை முன்வைப்பதற்கும் தடையுத்தரவுக்கு எதிரான பிற தற்காப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்குமான கால அவகாசமும் சங்கத்திற்குக் கொடுக்கப்படவில்லை. சங்கம் அமைப்பதற்கான உரிமையையும், கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையையும் கேள்விக்குள்ளாக்குவதால், இந்தத் தடை அரசியல் சட்டத்தின் அடிப்படையைக் கொலை செய்வதற்கான தாக்குதல் ஆகும்.

சுதந்திர இந்தியாவில் தொழிற்சங்கம் தடை செய்யப்பட்டது இது முதல் முறை அல்ல. 1992ல், ஆந்திரப்பிரதேசத்தின் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் சங்கமாகிய SIKASA தடைசெய்யப்பட்டது. சுரங்கத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைக்காக 90களில் மிகப்பெரும் வேலைநிறுத்தங்களை நடத்திய போர்க்குணமிக்க சங்கமாக SIKASA இருந்தது. இருந்தபோதும், பதிவு பெற்ற சங்கம் ஒன்றை எந்தவிதச் சட்ட அடிப்படையும் இல்லாமல் தடை செய்தது இதுதான் முதன்முறை.

தொழிற்சங்கத்தைத் தடை செய்து உழைக்கும் வர்க்கத்தின் மீது தாக்குதல் தொடங்கப்பட்ட நாஜிகளின் ஜெர்மனியை இது நினைவுபடுத்துகிறது. இதில் ஆச்சரியப்பட மற்றொரு விஷயமும் இருக்கிறது. இடதுசாரி மையத் தொழிற்சங்கங்கள் இது பற்றி முழுமையான மௌனம் சாதிக்கின்றன! இதுபோன்ற ஒரு நிகழ்வில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்று சேர்ந்து தடைக்கு எதிராகப் போராடுவது அவசியமான ஒன்று. ஆனால், இந்தப் போராட்டத்தில் MSSக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு மாறாக, CITU ஒரு பத்திரிகை செய்தி கூட கொடுக்கவில்லை, அல்லது போராட்டம் எதையும் நடத்தவில்லை. போர்க்குணமிக்க தொழிற்சங்கம் ஒன்று தடைசெய்யப்படும்போது, இன்றே நாம் போராடவில்லை என்றால், அதன்பின் ஒவ்வொரு சங்கமும் தடையைச் சந்திக்க வேண்டிவரும். இந்தத் தடை நீடிக்கும் என்றால், ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இந்தியத் தொழிலாளர் வர்க்க இயக்கம் குறிப்பிடத்தக்க அடி வாங்கும். தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் இதனை உணர்ந்து தடையை நீக்குவதக்காகவும், நிர்வாகிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் கைவிடச் செய்வதற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் MSSஉடன் சேர்ந்துகொள்ள வேண்டும்.

This entry was posted in News, Working Class Vision and tagged , , . Bookmark the permalink.