திட்டத் தொழிலாளர்கள் இந்தியாவெங்கும் போராட்டம்! தங்களைத் தொழிலாளர்களாக நடத்தக் கோரிக்கை!

ந்தியாவெங்கும் உள்ள திட்டத் தொழிலாளர்கள் ஜனவரி 17 அன்று வேலைநிறுத்தம் செய்தனர். அவர்கள் எழுப்பிய கோரிக்கைகளில் பின்வருவனவும் அடக்கம்:

1. மாதத்துக்குக் குறைந்தது 18 ஆயிரம் ரூபாய் சம்பளம். மேலும், மாதாந்திர ஓய்வூதியம், PF,ESI உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள். திட்டத் தொழிலாளர்களுக்கான 45வது இந்தியத் தொழிலாளர் காங்கிரசின் (Indian Labour Conference -ILC) பரிந்துரைகளின்படி இது செய்யப்பட வேண்டும்.

தற்போது, திட்டத் தொழிலாளர்களில் மிகப் பலரும் தன்னார்வலர்கள்என்றுதான் கருதப்படுகின்றனர். தொழிலாளர்களாகக் கருதப்படுவதில்லை. அவர்களுக்கு ரூபாய் 1000 மதிப்பூதியமாக (honorarium) வழங்கப்படுகிறது.

2. மத்திய அரசால் நிதியளிக்கப்படும் திட்டங்களுக்கு 2018-19 பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் அளிப்பது, திட்டங்கள் அனைவருக்கும் கிடைப்பது, திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அடிக்கட்டுமான வசதிகள், சிறப்பான தரம் கொண்ட திட்ட அமுலாக்கம் ஆகியவற்றை கூடுதல் நிதி ஒதுக்கீடு உறுதி செய்ய வேண்டும்.
3.
எந்த வடிவத்திலும் திட்டம் தனியார் மயமாக்கம் செய்யப்படக் கூடாது. பணப்பட்டுவாடா மூலம் சிதைப்பது, பயனாளிகளை விலக்கி வைப்பதைச் செய்யக் கூடாது.

திட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் கர்நாடகத்தின் சிர்சியில் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. (படம் : CPIM twitter தகவல்)

அங்கன்வாடிகள், குறு அங்கன்வாடிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாடு சேவை திட்டம் (Integrated Child Development Services Scheme), மதிய உணவுத் திட்டம் (Mid-Day Meal Scheme), தேசிய சுகாதார இயக்கம் (National Health Mission), தேசிய கிராமப்புர வாழ்வாதார இயக்கம் (National Rural Livelihoods Mission), தேசிய குழந்தைத் தொழிலாளர் செயல்முறை திட்டம் (National Child Labour Project), சர்வ சிக்ஷா அபியான், சிறு சேமிப்புத் திட்டங்கள் (Small Savings Schemes) ஆகியவற்றில் பணியாற்றும் 60 தொழிலாளர்கள் திட்டத் தொழிலாளர்கள் (Scheme workers) என்று அறியப்படுகின்றனர். இந்தியத் தொழிற்சங்க மையம் (CITU),இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC), ஹிந்து மஸ்தூர் சபா (HMS), அகில இந்திய ஐக்கிய தொழிற்சங்க மையம் (AIUTU), முற்போக்கு தொழிலாளர் சங்கம் (LPF), தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் (TUCC), சுய தொழில் பெண்கள் சங்கம் (SEWA), அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (AICCTU), ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் (UTUC) ஆகியவற்றை உள்ளடக்கிய மையத் தொழிற்சங்கங்களால் வேலைநிறுத்தம் அமைப்பாக்கப்பட்டது.

திட்ட தொழிலாளர்களின் போராட்டம்பீகார் (படம் உதவி: CPIM twitter)

இத்தொழிலாளர்கள்தான் மருத்துவம், சத்துணவு, கல்வி போன்றவற்றின் அடிப்படைச் சேவைகளைப் பரந்துபட்ட மக்களுக்கு அளிக்கிறார்கள். இருந்தாலும், அவர்கள் தொழிலாளர்கள் என்பதை அரசு ஒப்புக்கொள்வதில்லை. குறைந்தபட்சக் கூலி வழங்கப்படுவதில்லை. அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்புப் பலன்களும் கிடையாது.

அங்கன்வாடித் தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்களின் அகில இந்திய கூட்டமைப்பின் (All India Federation of Anganwadi Workers and Helpers-AIFAWH ) பொதுச் செயலாளர் A. R. சிந்து Newsclick-கிடம் பின்வருமாறு சொன்னார்: “பட்ஜெட்டில் வெட்டுகள் நடப்பதன் காரணமாக இந்தத் திட்டங்களின் செயல்பாடு பாதிப்புக்கு ஆளாகிறது. . 2015-16 மத்திய பட்ஜெட்டில் ICDSக்கான நிதி ஒதுக்கீட்டை மிகக் கடுமையாகக் குறைத்து ரூபாய் 8335.77 கோடியாக்கியது. அதற்கு முந்தைய ஆண்டு (2015-16) நிதி ஒதுக்கீடு 18,195 கோடிகள் ஆகும். மதிய உணவுத் திட்டத்திற்கு 13 ஆயிரம் கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு 9 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டது.”

மோடி அரசு பட்ஜெட்டை மட்டும் வெட்டிச் சுருக்கவில்லை. திட்டங்களுக்குள் தனியாரை நுழைப்பதையும் செய்கிறது. நிதி போதவில்லை என்று அதற்குக் காரணம் சொல்கிறது. குறிப்பாக, வேதாந்தா, JP சிமெண்ட், நதி பவுண்டேஷன், ISKON ஆகிய தொழில் நிறுவனங்கள் அல்லது NGOக்களை உள்ளுக்கு இழுக்கிறது. உதாரணமாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான அமைச்சகம், 2015ல் வேதாந்தாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டு இந்தியாவில் உள்ள 4,000 அங்கன்வாடிகளை அந்த தொழில்நிறுவனத்துக்கு அளித்தது.

இந்தத் திட்டங்களை நீக்கி விடுவதற்கு அரசு துடிப்புடன் முயற்சி எடுப்பதாக தொழிற்சங்கங்களின் கூட்டு அறிக்கை குறிப்பிடுகிறது : “ஆதாரை இணைப்பது, வங்கிக் கணக்குகளை இணைப்பது என்ற பெயரில் பயனாளிகள் விலக்கி வைக்கப்படுகின்றனர். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது உட்பட, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சேவைத் திட்டங்களில் நிபந்தனைக்குட்பட்ட பணப் பட்டுவாடா முறையை அரசு அறிமுகம் செய்து வருகிறது.”

எனவே, திட்டத் தொழிலாளர்களை அரசு நடத்தும் விதம், பெரிய திட்டத்தின் ஓர் அங்கம் மட்டுமே. தொழிலாளர்களின் பெரும் பகுதியை ஓரம் கட்டுவதும், அவர்களை துன்பகரமான தொழில் உறவுகளுக்குள் தள்ளுவதும்தான் அரசின் பெரிய திட்டமாகும்.

This entry was posted in Informal sector, News, Public Sector workers, Women Workers and tagged , . Bookmark the permalink.