மத்திய தொழிற்சங்கங்களின் மாநில போராட்டம்

ஜனவரி 25 அன்று சென்னையின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மத்திய தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று அமைப்புசார்ந்த மற்றும் அமைப்புசாரா துறைகளில் இருந்து வந்த இத்தொழிலாளர்கள் சைதாப்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் போராட்டம் நடத்தினர். குறைந்த பட்ச மாத ஊதியமாக ரூ18000, சம வேலைக்கு சம ஊதியம், விலைவாசியை கட்டுப்படுத்துதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இப்போராட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுத்துறை தொழிலாளர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள் எனப் பல்வேறு பிரிவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தை சிஐடியு, ஏஐடியுசி, ஏஐசிசிடியு, ஹெச்எம்எஸ், ஏஐயுடியுசி, எல்பிஎஃப் மற்றும் ஐஎன்டியுசி தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைத்தனர்.

புரசைவாக்கத்தில் போராட்டம்

போராட்ட கோரிக்கைகள் –

 • அனைத்து தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியமாக ரூ18000 உறுதி செய்ய வேண்டும்.
 • சம வேலைக்கு சம உரிமை.
 • அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.
 • விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும்.
 • தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளுக்கு சாதகமாக திருத்தி அமைப்பதை கைவிட வேண்டும்.
 • தொழிற்சங்க மற்றும் கூட்டு பேர உரிமையை உறுதி செய்ய வேண்டும்.
 • பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும்.
 • புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்.
 • மோட்டர் வாகன பாதுகாப்பு சட்டம் 2015ஐ ரத்து செய்ய வேண்டும்.
 • அங்கன்வாடி, டாஸ்மாக், மாநகராட்சி மற்றும் கூட்டுறவு தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் உறுதி செய்ய வேண்டும்.
 • தொழிற்சங்க அங்கீகாரச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அண்ணா சாலையில் மறியல்

சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் சுமார் 1000 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். காவல்துறை அவர்களை ஒரு பக்கத்தில் மட்டும் கட்டுப்படுத்த முனைந்த போது, அவர்களையும் மீறி தொழிலாளர்கள் அண்ணா சாலையை மறித்தனர். இதனால் 15 நிமிடங்களுக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. தொழிலாளர் வர்க்கத்தின் மீது போர் தொடுக்கும் மத்திய மாநில அரசின் கொள்கைகளை எதிர்த்து அவர்கள் கோஷமிட்டனர்.

சைதாப்பேட்டையில் போராட்டம்

சிஐடியுவின் தனியார் மருத்துவமனை செவிலியர் தோழர் விஜயா, தோல் தயாரிப்பு தொழிலாளர் தோழர் சித்ரா மற்றும் உழைக்கும் பெண்கள் குழுவின் தோழர் வசந்தி ஆகியோரின் தலைமையில் சிஐடியு பெண் தொழிலாளர்கள் மிகச் சிறப்பாக கோஷங்களை முழங்கினர். பெண் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதிய கோரிக்கை முக்கியமானது என அவர்கள் வலியுறுத்தினர். ‘நாங்கள் பல துறைகளில் இருந்து வருகிறோம். ஆனால் எந்த துறையிலும் நாங்கள் கோரும் குறைந்த பட்ச ஊதியம் எங்களுக்கு கிடைப்பதில்லை’ என தோழர் விஜயா கூறினார்.

மாநில அரசு அறிவித்துள்ள பேருந்து உயர்வு கட்டணத்திற்கு எதிராக தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ‘நாங்கள் ஆட்டோ ஓட்டினாலும், எங்கள் குடும்பத்தினர் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். பேருந்து கட்டண உயர்வு மிகவும் அதிகம்’ என ஆட்டோ ஓட்டுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகளை புகுத்தி திட்டத்தை அரசு பலவீனப்படுத்துவதையும் தொழிலாளர்கள் எதிர்த்தனர். இதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு(BPL) மட்டுமே ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படுவதாக அவர்கள் கூறினர். கடந்த சில மாதங்களில் ரேஷன் கடைகளில் பருப்புகள் விநியோகம் செய்வதை அரசு நிறுத்தியுள்ளது. அனைவருக்கும் பொது விநியோகத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், பருப்பு, கெரோசின் உட்பட 14 அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் விநியோகிக்க வேண்டும் என்று சிஐடியு தென் மாவட்ட செயலாளர் தோழர் குமார் கோரினார்.

புரசைவாக்கம் மோட்சம் தியேட்டர் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 500 தொழிலாளர்கள் பங்கேற்றனர். அங்கு காவல்துறை குவிக்கப்பட்டிருந்தனர். 100 மீட்டர் பேரணியில் சென்ற தொழிலாளர்கள் காவல்துறை தடுத்து நிறுத்தினர். ஆயினும் சில தொழிலாளர்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி சாலையை மறித்ததில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆனால் ஏற்கனவே இதை எதிர்பார்த்து வந்த காவல்துறை தொழிலாளர்களையும் பிரதிநிதிகளையும் உடனடியாக வேனில் ஏற்றினர். தொழிலாளர்களின் மறியலை தடுப்பதற்காக காவல்துறை மாநகரப் போக்குவரத்து பேருந்தை சாலையில் ஓட்ட நிர்ப்பந்தம் செய்ததால் தொழிலாளர்களுக்கும் காவல்துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தொழிலாளர்களை ஏற்றுவதற்கு ஒரு பேருந்தில் இருந்து பயணிகளை இறக்க முற்பட்ட போதும் வாக்குவாதம் நடைபெற்றது. 15 நிமிட போக்குவரத்து பாதிப்பிற்கு பின்னர் காவல்துறை தொழிலாளர்களை அப்புறப்படுத்தினர்.

மத்தியத் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை தாண்டி தொழிலாளர்கள் தங்கள் உடனடி பிரச்சனைகளை குறித்து அதிகம் பேசினர். வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பொது விநியோகத்தை பலவீனப்படுத்துதல், பேருந்து கட்டண உயர்வு ஆகியவை தொழிலாளர்களின் எதிர்ப்பில் ஓங்கி இருந்தன. தொழிலாளர்களை மிகவும் பாதிக்கும் பொருளாதார கொள்கைகளை செயல்படுத்தும் மத்திய, மாநில அரசு போக்குகளை தொழிலாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஏஐயுடியுசியின் பிரதிநிதி ஒருவர் சமீபத்திய ஆக்ஸ்ஃபாம்(Oxfam) அறிக்கையை மேற்கோள் காட்டி இந்தியாவில் பணக்காரர்களின் கையில் செல்வம் குவிந்து கொண்டிருப்பதையும், ஏழைகள் இன்னும் ஏழையாகிக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

This slideshow requires JavaScript.

அடையாளப் போராட்டமாக அமைந்திருந்த சாலை மறியலில் தொழிற்சங்கங்களின் மாநில, மாவட்ட, கிளைப் பிரதிநிதிகளே அதிகம் கலந்து கொண்டனர். அடிமட்ட தொழிலாளர்களின் பங்கேற்பு குறைவாகவே இருந்ததது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கவனிக்கத்தக்க வகையில் நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டங்களையோ, செவிலியர் போராட்டங்களையோ, தொழிலாளர் வர்க்க போராட்டங்களுக்கு மாற்றும் முயற்சிகளில் தொழிற்சங்கங்கள் பின்தங்கி உள்ளன. மாநிலப் போராட்டத்தில் போக்குவரத்து, செவிலியர் மற்றும் அரசு தொழிலாளர்களின் பங்கேற்பு குறைந்த அளவிலேயே காணப்பட்டது. போராட்டங்களின் போது பொதுமக்களுக்கு துண்டறிக்கை விநியோகித்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை எடுத்து செல்லவும் பெரிய அளவில் முயற்சி எடுக்கப்படவில்லை.

This entry was posted in News, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.