விமான நிலைய சுமையேற்றும் தொழிலாளர்கள் 97 பேர் வேலைநீக்கத்திற்கு எதிரான போராட்டம்!

சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்த 97 சுமையேற்றும் தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் விமான நிலைய நுழைவு அனுமதி (Airport Entry Permits -AEP)பறிக்கப்பட்டுவிட்டதன் காரணமாக டிசம்பர் 21 முதல் அவர்கள் வேலைக்குச் செல்ல முடியவில்லை. ஜனவரி 25 அன்று கம்பெனி, அவர்களின் வேலையைப் பறித்தது. அவர்களுக்கான பணப் பலன்களை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டது. வேலைநீக்கம் செய்யப்பட்டத் தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமான தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தாங்கள் ஏன் வேலைநீக்கத்திற்கு ஆளானோம் என்பது கூட அவர்களுக்குப் புரியவில்லை. இந்திய விமான நிலைய அதிகார அமைப்பின் (Airport Authority of India -AAI) பத்ரா யூனியன் ஜனவரி 30 அன்று, 97 தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று கோரி, ஒரு நாள் பட்டினிப் போராட்டத்தை பல்லாவரத்தில் நடத்தியது. அப்போராட்டத்தில் 400 தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். அது முதல், இப்போராட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்களைக் குறிவைத்து அவர்களைப் பழிவாங்க பத்ரா நிர்வாகம் முயற்சியெடுத்து வருகிறது.

பிரச்சனையின் பின்னணி
இந்திய விமான நிலையங்கள் இந்தியா விமான நிலைய அதிகார அமைப்பால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை விமான நிலையத்தின் சரக்குப் போக்குவரத்தும், தரை நிர்வாக வேலைகளும் பத்ரா இண்டர்நேஷனல் என்று நிறுவனத்திடம் ஒப்பந்தப் பணியாக AAI அளித்துள்ளது. இந்தியாவில் உள்ள 11 விமான நிலையங்களில் இதுபோன்ற பணிகள் ஒப்பந்தப் பணிகளாக பத்ரா இன்டர்நேஷலுக்கு அளிக்கப்பட்டுள்ளன. பத்ராவில் பணிபுரியும் தொழிலாளர்கள் 3 முதல் வருடங்களுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் பத்ரா தொழிலாளர்கள் மத்தியில் AITUC வலுவாக உள்ளது. AITUCவுக்கு இங்கு 9 சங்கங்கள் உள்ளன. சுமையேற்றும் தொழிலாளர்கள், கார் நிறுத்தும் இடத்தில் பணியாற்றுபவர்கள், சுமை வண்டி இழுப்பவர்கள், பராமரிப்புப் பணியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் போன்ற தொழிலாளர்கள் சங்கங்களில் உள்ளனர். இந்த சங்கங்கள் 2009 முதல் தொழிலாளர்கள் சார்பில் கூட்டுப் பேரத்தில் ஈடுபட்டு வருகின்றன. விமான நிலையத்தில் 2000 பேர் சுமையேற்றும் தொழிலாளர்களாக உழைத்து வருகின்றனர். அவர்களில் 1148 பேர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். மீதமுள்ள தொழிலாளர்கள் பிரதானமாக கண்காணிப்புப் பணியில் இருக்கும் ஊழியர்கள் ஆவர். சங்கத்தில் அவர்கள் உறுப்பினர்கள் ஆவதை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் சுமையேற்றும் தொழிலாளர்கள் சங்கத்தைத் சேர்ந்தவர்கள். இந்த மட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் AITUC யூனியனின் உறுப்பினர்கள்.

சம்பவங்கள் நடந்த விதம்
தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்வதற்குக் காரணமான சிறு தீப்பொறி போன்ற சம்பவம் ஒன்று 21 டிசம்பர் காலை பத்து மணி அளவில் நடைபெற்றது. AITUC தலைவரான தோழர் வஹீதா சொன்ன தகவல் இது: ஒரு தொழிலாளியின் தாய் இறந்துபோனதால் கண்காணிப்பாளரிடம், அந்தத் தொழிலாளர் இரண்டு நாள் விடுப்புக் கேட்டார். அதற்குக் கண்காணிப்பாளர் ஒப்புக்கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. ஏறக்குறைய 10:20 மணி அளவில் பத்ராவின் மனிதவள நிர்வாகி யூனியனைத் தொடர்புகொண்டார். சங்கத்தின் தலைவர் வேலைக்குத் திரும்பும்படி தொழிலாளர்கள் அனைவருக்கும் சொன்னார். தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பிவிட்டனர். பதட்டம் தணிந்துவிட்டது.
ஆனால், சற்று நேரத்தில் மத்திய தொழில பாதுகாப்புப் படையினர் (Central Industrial Security Force-CISF) அந்த இடத்தில் இருந்த 92 தொழிலாளர்களின் விமான நிலையத்தில் நுழைவதற்கான அனுமதி அட்டையினைப் பறித்துவிட்டனர். அந்த இடம்தான் சுமையேற்றும் செய்யும் தொழிலாளர்களின் பணியிடம். அவர்கள் அந்த இடத்தில் இருப்பதுதான் நியாயமாக நடக்க வேண்டியது. அதில் எந்தத் தவறும் இல்லை. CISF என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுதப் போலீஸ் ஆகும். விமான நிலையங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான அடிக்கட்டுமானங்களைப் பாதுகாப்பது அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணியாகும். தொழிலாளர்களின் அனுமதி அட்டையைப் பறித்த பின்னர், தொழிலாளர்களை CISF சுற்றி வளைத்தது. பத்ரா வாகனங்களில் ஏற்றப்பட்டு விமானநிலையத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு இறக்கிவிடப்பட்டனர். அனுமதி அட்டைகள் இல்லையென்றால் தொழிலாளர்கள் தங்கள் வேலைக்குப் போக முடியாது.
தொழிலாளர்கள் தாங்களே முன்வந்தது CISF ஆட்களிடம் அனுமதி அட்டைகளை அளித்ததாக பத்ரா சொல்கிறது. ஆனால், முன்னெச்சரிக்கை ஏதும் இல்லாமல், பலவந்தமாக அட்டைகளைப் பறித்ததாக தொழிலாளர்கள் சொல்கிறார்கள். தங்களின் அனுமதி அட்டையை ஒரு சிறு பையில் வைத்திருப்பது தொழிலாளர்களின் வழக்கம். சிலர், அந்த சிறு பையில் ஓட்டுநர் உரிமத்தையும், பணத்தையும் வைத்திருக்கவும் செய்வார்கள். ஆனால், அடையாள அட்டை வைத்திருந்த சிறு பை வேகமாகப் பறிக்கப்பட்டதால், அதில் இருந்தவற்றை எடுத்துக்கொள்வதற்கான நேரம் தொழிலாளர்களுக்குக் கிடைக்கவில்லை. அவற்றைப் பெறுவதற்கான தொழிற்சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தை நிர்வாகம் பெற்றுக்கொண்ட போதும், எந்த பதிலையும் அளிக்கவில்லை.
(சென்னை) தொழிலாளர் துறை துணை ஆணையரிடம் (DCL) தொழிற்சங்கம் புகார் ஒன்றை 21 டிசம்பர் அன்று அளித்தது. டிசம்பர் 28 அன்று தொழிலாளர் துறை ஆணையரோடு கூட்டம் ஒன்றும் நடந்தது.
DCLலிடம் பத்ராவின் நிர்வாக இயக்குநர் பிரேம் பஜாஜ் என்ன நடந்தது என்பது குறித்த தங்களின் கூற்றை முன்வைத்தார். அது முழுமையும் இட்டுக்கட்டப்பட்ட கதை என்று தொழிலாளர் தரப்பினர் சொல்கின்றனர். தொழிலாளர்களோடு ஏற்பட்ட தகராறின்போது, விமான நிலையம் என்ற அதி உயர் பாதுகாப்பு நிறுவனத்தில் அபாயகரமான சூழல் ஏற்பட்டதாக நிர்வாக இயக்குநர் தன் கூற்றில் சொல்லியிருக்கிறார். விமானம் ஒன்றின் அடிவயிறு பகுதித் திறந்திருந்தாகவும், ஒரு தீக்குச்சிப் பற்ற வைக்கப்பட்டிருந்தால் கூட மிகப்பெரும் தீ ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். மேலும், அந்த விமான நிறுத்த இடத்தில் 21 விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவையும் கூட தீக்கிரையாகியிருந்திருக்க வாய்ப்பிருந்ததாகவும் அவர் கூறியிருந்திருக்கிறார். CISFஆட்களை நிர்வாகம் அழைக்கவில்லை என்றும் நிர்வாக இயக்குநர் சொல்லியிருக்கிறார். சில விமானங்கள் புறப்படுவதும், தரையிறங்குவதும் பாதிப்புக்கு ஆளானதாகவும், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிலிருந்தும், விமான ஓட்டிகளும் தொலைபேசியில் அழைத்துச் சொன்னதாலும் CISF சம்பவ இடத்துக்கு வந்ததாகவும் நிர்வாக இயக்குநர் சொன்னார்.
நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த சுற்றறிக்கையில் ஏழு தொழிலாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்கள்தான் பிரச்சனையைத் துவக்கினார்கள் என்று எழுதப்பட்டிருந்தது. அந்த ஏழு தொழிலாளர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றறிக்கை குறிப்பிட்டது.
சுற்றறிக்கையில் தொழிலாளர்களின் பெயர்கள்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதால், மீதமுள்ள 85 தொழிலாளர்களை வேலைக்கு அனுமதிக்க வேண்டும் என்று தொழிற்சங்கம் வாதிட்டது. இதற்கு ஒப்புதல் தெரிவித்து அறிக்கை கொடுப்பதற்கு நிர்வாகம் ஒப்புக்கொண்டது. அதில் நிர்வாக இயக்குநரும் பத்ராவின் நிதித்துறையைச் சேர்ந்த விபின் மகாஜன்னும் கையொப்பமிட்டிருந்தனர். ஆனால், மறுநாள் நுழைவு அட்டைகளைப் பெறுவதற்காக தொழிலாளர்கள் சென்றிருந்தபோது, அவை AAIயிடம் இருப்பதாகவும், தொழிற்சங்கமும் பத்ராவின் மனித வளத்துறை அதிகாரியும் சேர்ந்து சென்றுதான் அதனைப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
சில நாட்கள் கழிந்த பின்னர், 97 தொழிலாளர்களுக்குக் காரணம் கேட்கும் அறிவிக்கைகள் அனுப்பப்பட்டன. மேலும் கூடுதலாக 5 தொழிலாளர்களை ஏன் சேர்த்தார்கள் என்பது தொழிலாளர்களுக்கு இன்னமும் புரியாத மர்மமாக இருக்கிறது. அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வேலை செய்தவர்கள். தொழிலாளர்கள் தங்களின் பதிலை அனுப்பி வைத்தனர். நிர்வாகம், ஒன்று அளிக்கப்பட்ட பதிலைத் திருப்திகரமானது என்று ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது, உள் விசாரணை ஒன்றைக் கட்டமைக்க வேண்டும் என்பது சட்டம். கம்பெனி, முறைப்படி அளிக்க வேண்டிய பதிலை அளிக்கவில்லை. மாறாக, நுழைவு அனுமதி அட்டைகளை எப்போது அளிப்பார்கள் என்பதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே செல்கின்றனர்.
ஜனவரி 22 அன்று தொழிற்சங்கம் தொழில் தகராறு சட்டத்தின்படி 2K மனுவைத் தாக்கல் செய்தது. மூன்று நாட்கள் கழித்து, 97 தொழிலாளர்களுக்கான செட்டில்மெண்ட் தொகையை, நிர்வாகம், தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ஏற்றியது. வேலைநீக்கம் செய்யப்பட்டது பற்றிய ஒற்றைக் குறிப்பு ஒன்று தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டது. தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டது இறுதி மற்றும் முழுமையான செட்டில்மெண்ட் என்று நிர்வாகம் குறிப்பிட்டது. இந்திய விமானப் போக்குவரத்து அதிகார அமைப்பு ஒழுங்குமுறைச் சட்டம் 2003ன்படி (Airport Authority of India Regulation Act 2003) தொழிலாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும் வேலையிலிருந்து வெளியேற்றும் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், மேற்படி சட்டத்தின்படி குற்றச்சாட்டு செய்யும் அதிகாரம் பத்ராவிற்கு இல்லை. இச்சட்டத்தின்படி AAI மட்டுமே குற்றச்சாட்டு செய்ய முடியும்.
இதற்கிடையில், புலம்பெயர்ந்தத் தொழிலாளர்களை கம்பெனி வேலைக்கு வைத்துக்கொண்டுள்ளது. இது ஒப்பந்த மீறலாகும். தொழிற்சங்கத்தின் பலத்தை உடைக்கும் நோக்கத்துடன், ஒரு சிறு சம்பவத்தை ஊதிப் பெரிதாக்கியிருக்கின்றனர் என்று தோழர் வஹீதா குறிப்பிடுகிறார்.

பட்டினிப் போராட்டம்
ஜனவரி 30 அன்று AAI பத்ரா தொழிலாளர் சங்கம் பட்டினிப் போராட்டம் ஒன்றைக் கட்டமைத்தது. வேலைநீக்கம் செய்யப்பட்ட 97 தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு எடுக்க வேண்டும் என்பது போராட்டத்தின் கோரிக்கையாகும். சுமையேற்றும் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், AITUCயின் பிற தொழிற்சங்கங்களும் பட்டினிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். INTUC, CITU, LPF, AICCTU, HMS, AIUTUC உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்கள் பலவும் ஆதரவு தெரிவித்தன. அத்தொழிற்சங்க மையங்களின் தலைவர்கள் போராட்டத்தின் போது உரையாற்றினர். இந்த சண்டையில் பத்ரா தொழிலாளர்கள் தன்னந்தனியாக ஈடுபட்டிருக்கவில்லை, நாங்களும் உங்களோடு இருக்கிறோம் என்று தலைவர்கள் குறிப்பிட்டனர். மோடி அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொடுத்துள்ள தாக்குதலின் ஓர் அங்கம் இது என்றும், மோடி அரசாங்கம் அளிக்கும் துணிச்சலின் காரணமாக, இதுபோன்ற சட்ட விரோத, மற்றும் பாரதூரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். ‘குறிப்பிட்ட காலத்துக்கான வேலை‘ என்ற மத்திய அரசின் நகல் அறிவிக்கையைத் தலைவர்கள் பலரும் கண்டித்தனர். இந்த நகல் அறிவிக்கை மனம் போன போக்கில் வேலைக்கு எடுக்கவும் – நீக்கவும் கம்பெனிகளுக்கு வாய்ப்பளிக்கிறது என்றும் தலைவர்கள் குறிப்பிட்டனர்.

வேலையை இழப்பது தங்கள் மரியாதையைப் பாதிக்கும் என்று தொழிலாளர்கள் நினைக்கிறார்கள். தொழிலாளர்கள் பலரும் தங்களின் வேலை பறிபோய்விட்டதை தங்கள் குடும்பத்தினருக்குச் சொல்லவில்லை. தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பங்கெடுக்கும் போராட்டமாகத்தான் பட்டினிப் போராட்டம் திட்டமிடப்பட்டது. ஆனால், போராட்டம் அப்படி நடக்கவில்லை.
இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் தோழர் வஹீதா உரையாற்றினார். நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் தொழிலாளர்களின் 41 நாள் வேலைநிறுத்தத்தைக் குறிப்பிட்டார். நெய்வேலித் தொழிலாளர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் பங்கெடுத்ததின் காரணமாக போராட்டம் பல மடங்கு பலம்பெற்றது என்பதை வலியுறுத்தினார். மேலும், பத்ரா தொழிலாளர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அப்படியிருக்க குடும்பத்தினரிடம் உண்மையைச் சொல்ல ஏன் தயங்க வேண்டும், தன்னந்தனியாகப் போராட வேண்டும் என்று தோழர் வஹீதா கேள்வியெழுப்பினார்.
பத்ராவும், AAIயும், பிரும்மாண்டமான அரசு யந்திரமும் சேர்ந்து தொடுக்கும் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும், விட்டுக்கொடுக்காதப் போராட்டத்துக்குத் தொழிலாளர்கள் தயாராக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போராட்டத்திற்கு பின்பு நடந்தவை பற்றிய செய்திகள்
97 தொழிலாளர்களை சட்டவிரோதமாக வேலைநீக்கம் செய்த பின்னர், தொழிலாளர்களைக் குறிவைத்து அவர்களைப் பழிவாங்குவதை நிர்வாகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பட்டினிப் போராட்டத்தின்போது, நிகழ்வில் பங்கெடுக்கும் தொழிலாளர்கள் யார் என்று கண்டுபிடிப்பதற்காக, ஒருவன் விடியோ எடுத்துக்கொண்டிருந்தான். தொழிலாளர் ஒருவர் T. பாண்டியன் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று முகநூலில் வெளியானது. அந்தத் தொழிலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார். நிர்வாகத்திற்கு எதிரானப் போராட்டங்களில் தொழிலாளர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்று நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது.
பிப்ரவரி 2 அன்று 97 தொழிலாளர்களும் தொழில் தகராறு சட்டத்தின் கீழ் தனித் தொழிலாளருக்கான 2A மனுவை சென்னை DCL முன்பு தாக்கல் செய்துள்ளனர். தங்களுக்கான சட்டத் தீர்வு கிடைக்கும் வரையில் தங்கள் கணக்கில் நிர்வாகம் செலுத்தியுள்ள செட்டில்மெண்ட் தொகையில் இருந்து மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவுகளுக்காக எடுத்துக்கொள்வோம் என்று தொழிலாளர்கள் நிர்வாகத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

This entry was posted in News and tagged , , , , , . Bookmark the permalink.