சம வேலைக்கு சம ஊதியம் கோரிய சீகால்(SICAL) தொழிலாளர்களுக்கு வேலை மறுப்பு

மீஞ்சூரில் உள்ள சீகால் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கில் சம வேலைக்கு சம ஊதியத்துடன் 29 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி, தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பிப்ரவரி 5 முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அவர்களின் நிறுவனம் சிகால் லாஜிஸ்டிக்ஸ், முன்னாள் கர்நாடகா முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணனின் மருமகன் வி.ஜி.சித்தார்த்தாவின் காஃபி டே குழுமத்தைச் சார்ந்தது. தங்களுக்கு பின்னர் பணியில் அமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகம் அதிக ஊதியம் கொடுத்ததை அடுத்து தங்களுக்கும் அதே ஊதியம் கொடுக்க வேண்டும் என்று கோரியதற்காக நிர்வாகம் அவர்களை 2017 ஜுலை 28 முதல் பணியில் இருந்து நீக்கியுள்ளது. தொழிலாளர் துறை துணை ஆணையர் முன் இதற்கான தாவா எழுப்பப்பட்ட போதும், இதுவரை தொழிலாளர்களுக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பேச்சுவார்த்தைகள் நடந்தும் இது வரை எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக வீதியில் போராட வந்துள்ளனர். இத்தொழிலாளர்கள் சிஐடியுவைச் சார்ந்த மீஞ்சூர் பகுதி பொது தொழிலாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

Sical Workers in protest

கோடீஸ்வர பொது வர்த்தக நிறுவனமான சிகால் லாஜிஸ்டிக்ஸ் இந்தியா முழுவதும் சரக்குகளை ஏற்றுதல், இறக்குதல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. சென்னையில் காமராஜர் துறைமுகத்திற்கு அருகே மீஞ்சூரில் சுங்க அங்கீகரிக்கப்பட்ட சரக்கு கிடங்கு(Customs Bonded Warehouse) ஒன்றை இயக்கி வருகிறது. இந்த கிடங்கில் இருந்து அனைத்து விதமான பொருட்கள் கையாளப்படுகின்றன. சராசரியாக தினமும் 100 ஊழியர்கள் மற்றும் 100 ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளே வரும் கன்டெயினர்கள் மற்றும் வெளியே செல்லும் கன்டெயினர்களையும் அதில் உள்ள பொருட்களையும் கையாளுகின்றனர். கன்டெயினர்கள் பொறுத்து பணி செய்யும் தொழிலாளர்கள் எண்ணிக்கை மாறும். இங்கு பணிபுரியும் ஊழியர்களும்(நிரந்தரத் தொழிலாளர்கள்) ஒப்பந்த தொழிலாளர்களும் ஒரே வேலைகளை செய்கின்றனர் அதாவது அனைவரும் அனைத்து வேலைகளும் செய்கின்றனர எனத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதைத் தவிர ஊழியர்களுக்கு ஆவணப்படுத்துதல், கணிணிகளை இயக்குதல், இயந்திரங்கள் இயக்குதல் போன்ற சில திறன் மிக்க பொறுப்புகளும் உள்ளது.

போரட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இங்கு பல வருடங்களாக பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்கள் ஆவர். ஆனால் அவர்களுக்குரூ7000 முதல் ரூ13000 வரையே ஊதியம் கொடுக்கப்படுகிறது. ஊதிய உயர்வும் என்பதும் மிகவும் குறைவாகவே அளிக்கப்படுகிறது. பல வருடங்களாக பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசம். திறனற்ற தொழிலாளருக்கு நியமனம் செய்துள்ள குறைந்த பட்ச ஊதியத்தை விட குறைவாகவே ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியம் பெறுகின்றனர். கடந்த இரு வருடங்களாக தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அனைத்து பதவிகளிலும் ஒப்பந்த தொழில்முறை அதிகரித்துள்ளது. ஆனால் நிர்வாகம் புதிதாக சேர்ந்த ஒப்பந்த தொழிலாளருக்கு ரூ15000 ஊதியம் அளித்து வருகிறது. இது இங்கு பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களை விட கூடுதலாகும். உதாரணமாக இங்கு கடந்த 10 வருடங்களாக பணிபுரியும் கண்காணிப்பாளருக்கு ரூ13000 கொடுக்கப்படுகிறது. அதே பணியில் சேர்ந்த புது கண்காணிப்பாளருக்கு ரூ35000 ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Banner Announcing the Protest

இதன் விளைவாக அனைத்து ஊதிய விகிதத்தில் ஒரே ஊதியத்தை தரக் கோரியும், குறைந்த பட்ச ஊதியத்தைத் தரக் கோரியும் 2016ல் இருந்து தொழிலாளர்கள் கோரி வருகின்றனர். ஆனால் நிர்வாகம் எந்த பதிலும் தராத நிலையில் தொழிலாளர்கள் குறுகிய நேர வேலை நிறுத்தப்(stop work) போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 2017 பிப்ரவரி 16ம் தேதியில் தொழிலாளர்கள் முழுநாள் வேலை நிறுத்தம் செய்தனர். உடனே நிர்வாகம் ஊதியத்தை உயர்த்துவதாக ஒத்துக்கொண்டது. ஆனால் பின்னர் பேச்சுவார்த்தையை தொடராமல், நிர்வாகம் ரௌடிகளை வைத்து தொழிலாளர்களை மிரட்ட முயற்சித்தது. தொழிலாளர்கள் ரௌடிகளை எதிர்த்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்தனர். இப்பிரச்சனையில் ஜுலை 31க்குள் ஊதியப் பிரச்சனைக்கு முடிவு காணுவதாக நிறுவன மேலாளர் ஒத்துக் கொண்டார். மேலும் பல வருடங்களாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரிந்த 10 தொழிலாளர்களை நிரந்தரம் செய்வதாகவும், படிப்படியாக அனைத்து தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்வதாகவும் நிர்வாகம் ஒத்துக்கொண்டது. ஆனால் ஜுலை 28 அன்று தொழிலாளர்கள் தங்கள் ஊதியச் சீட்டை(pay slip) வாங்கிய போது, நிர்வாகம் ஊதிய விகிதத்தில் சம ஊதியத்திற்கு பதிலாக 7-8 சத ஊதிய உயர்வு மட்டுமே வழங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நிர்வாகம் ஒத்துக்கொண்டது போல 10 ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டும் அவர்களுடய ஊதியம் புதிய தொழிலாளர்களை விட மிகவும் குறைவாகவே இருந்தது. உடனே சுமார் 80 தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் இறங்கினர்.

ஆனால் நிர்வாகம் இதை எதிர்பார்த்து ஏற்கனவே முன்னேற்பாடுடன் காவல்துறையிடம் தொழிலாளர்கள் கலகம் செய்வார்கள் என்றும் பொருட்களை சேதம் செய்வார்கள் என்றும் குற்றசாட்டு பதிவு செய்திருந்தது. அதனால் அங்கு உடனடியாக காவல்துறையினர் குவிந்து, தொழிலாளர்களை அங்கிருந்து கலைந்து செல்ல நிர்ப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததனால், 28 ஜுலை நள்ளிரவில் துணை காவல் கண்காணிப்பாளர் தொழிலாளர்கள் மீது திருட்டு பழி போட்டு பொய் வழக்கு பதிவு செய்வோம் என்று மிரட்டியுள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். தொழிலாளர்கள் கலைந்து சென்றால், பொன்னேரி தாசில்தார் முன்னர் அமைதி குழுவை(peace committee) அமைத்து நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்வதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

29ம் தேதி காலையில் நடைபெற்ற அமைதி குழு கூட்டத்தில் நிர்வாகம், தொழிலாளர் மற்றும் காவல்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அங்கு தொழிலாளர்கள் தங்களுக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள காண்டீன், கழிப்பறை, முதலுதவி வசதிகளில் உள்ள பாகுபாடுகள் குறித்து விளக்கியுள்ளனர். இக்கூட்டத்தின் முடிவில், தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் வசதிகளில் உள்ள பாகுபாடுகளை நிர்வாகம் களைய வேண்டும் என தாசில்தார் ஆலோசனை வழங்கியுள்ளார். ஊதிய விகித பிரச்சனைகளை தொழிலாளர் துறையிடம் தொழிலாளர்கள் முறையிட வேண்டும் என அவர் கூறியுள்ளார். தாசில்தாரின் ஆலோசனையை தாங்கள் ஆட்சேபிப்பதாக நிர்வாகப் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

இதன் பின்னர், தாசில்தாரின் ஆலோசனையை செயல்படுத்தாமல், தொழிலாளர்களும், அவர்கள் பிரதிநிதிகளும், குடும்பங்களும் நிறுவன இயக்கத்தை பாதிக்கும் வகையில் போராடக்கூடாது என தடையுத்தரவு கோரி நிர்வாகம் பொன்னேரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. நீதிமன்றமும் நிறுவனக் கிடங்கிலிருந்து 200மீட்டருக்கு உள்ளே தொழிலாளர்கள் போராட்டம் செய்ய தடைவிதித்தது. அதே சமயம் போராட்டத்தில் ஈடுபட்ட 80 தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க நிர்வாகம் மறுத்தது. நிரந்தரம் செய்யப்பட்ட 10 தொழிலாளர்களையும் தன்னுடைய நிர்வாகத்தில் இருந்து நீக்கியது. இதை அடுத்து ஜுலை 31 அன்று தொழிலாளர் துறை துணை ஆணையர் முன் தொழிற்தாவா தாக்கல் செய்தனர். நிர்வாகம் ஆட்குறைப்பு செய்து நிறுவனத்தின் ஒரு பாகத்தை மூடியதாகவும், இது அனுமதியின்றி செய்யப்பட்டதாகவும் தொழிலாளர்கள் வாதம் செய்துள்ளனர்.

தொழிற் தாவா துவங்கிய 3 வாரங்களில், நிர்வாகம் 51 தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்த்தியது. இதில் சில ஒப்பந்த தொழிலாளர்களும் அடங்கும். ஆனால் 13 நிரந்தரத் தொழிலாளர்கள் உட்பட 29 தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த நிர்வாகம் மறுத்து விட்டது. அதற்கு பதிலாக 13 நிரந்தரத் தொழிலாளர்களுக்கு விசாகபட்டினம் மற்றும் தூத்துக்குடிக்கு பணியிட மாற்றம் செய்து, அவர்கள் அங்கு சென்றால் தான் அவர்களுக்கு வேலை அளிக்கப்படும் என்று நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் தாங்கள் எந்த பணியிட மாற்றத்திற்கும் ஒத்துக் கொள்ளவில்லை என்றும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற நிவாரணத்தை நிர்வாகம் தர வேண்டும் என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர். 16 ஒப்பந்த தொழிலாளர்களின் நிலைமையை குறித்து நிர்வாகம் எதுவும் கூறவில்லை. தொழிற்தாவா துவங்கி கடந்த 6 மாதங்களில் நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றும் மாறாக வழக்கை தாமதப்படுத்துவதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

Women family members argue with police to let them protest

சட்டரீதியான அணுகுமுறை எந்த பலனையும் தராத நிலையில், நிறுவனத்தின் முன் காலவரையற்ற பொதுப் போராட்டத்தை நடத்த தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். பிப்ரவரி 5 அன்று தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும்(சிலருடைய வயதான பெற்றோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்) நிறுவனக் கிடங்குக்கு அருகே போராட்டம் நடத்தினர். பெண் காவலர்கள் உட்பட காவல்துறை அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், சாலைக்கு அருகே தலைவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் இம்மாதிரியான அடையாளப் போராட்டம் எந்த வித பலனையும் தராது என்று குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக பெண்கள் வாதாடினர். பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றால் நிறுவனக் கிடங்கு வாயில் முன்னர் போரட்டம் நடத்த வேண்டும் அல்லது சாலை மறியல் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினர். அதன்படி பெண்கள் நிறுவன வாயிலை நோக்கி நகர்ந்தவுடனேயே, காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தினர். தொழிலாளர் தலைவர்களின் ஆலோசனையின் பேரில், தொழிலாளர்களும் முன்னே செல்ல தயங்கி சாலையருகில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவிலும் போராட்டத்தை தொடர்வதற்கு பந்தலும் நிறுவப்பட்டுள்ளன.

சிகால் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ800 கோடியாகும். 2016-17ல் அவர்களது லாபம் ரூ45 கோடி ஆகும். இந்தியா முழுவதும் 6 லட்சம் கன்டெயினர்களை ஆண்டு தோறும் கையாளுவதாக சிகால் கூறுகிறது. சென்னையில் உள்ள கிடங்கில் மாதம் 800-1000 கன்டெயினர்கள்(20 அடி கன்டெயினர்கள்) கையாளப்படுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். சிகாலின் முன்னாள் முதலாளி ஏசி.முத்தையா ஆவார். காஃபி டே குழும முதலாளி சித்தார்த்தா ரூ121 கோடி ரூபாய்க்கு 50சத பங்கை வாங்கியுள்ளார். தற்போது சித்தார்த்தாவின் டாங்கிளின் ரீடெயில் ரியாலிட்டி பிரைவேட் லிமிடட் நிறுவனம் சிகாலின் 52 சதப் பங்கை வைத்துள்ளது.

This entry was posted in Contract Workers, News, Workers Struggles and tagged , , , , , , . Bookmark the permalink.