போக்குவரத்து தொழிலாளர்களை பழிவாங்கல், பேருந்து கட்டண உயர்வு – மாநில அரசு நடவடிக்கை

கடந்த ஜனவரி மாதத்தில் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் ஏழு நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர். வேலை நிறுத்தத்தை கைவிடவேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதன் பேரில், கோரிக்கைகளில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வேலை நிறுத்தம் முடிவடைந்தது. அதன் பின்னர், மாநில அரசு போக்குவரத்து கழகங்கள் தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு 7 நாள் ஊதிய பிடித்தம், பணியிட மாற்றம், ஓய்வூதிய நலன் மறுப்பு போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை வளர்த்துள்ளன. இது போதாதென்று, மாநில அரசு தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. தொழிலாளர் நலனை மிகவும் பாதிக்கின்ற இக்கொள்கையை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வெகுவாக விமரிசித்துள்ளன.

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நடுவம் மூலமாக தீர்க்க வேண்டும் என்று உயர்நீதி மன்ற ஆணையுடன், போக்குவரத்து தொழிலாளர்களின் ஒரு வார வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. வலை நிறுத்தத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியும் மாநில அரசு தனது நிலையை மாற்றி தொழிற்சங்கங்களுடன் புதிய ஒப்பந்தத்தை பேசி முடிவு செய்ய மறுத்தது. தொழி;ற்தாவா சட்டத்தின் 12(3) கீழ் ஏற்கனவே சில சங்கங்களுடன் மாநில அரசு ஒப்பந்தமிட்டதை சுட்டிக்காட்டி அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் இதுவே பொருந்தும் என்று மாநில அரசு கூறியது. ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பல தொழிற்சங்கங்கள்(அதிமுகவின் அண்ணா தொழிலாளர் பேரவையை தவிர) பலருக்கு தொழிலாளர் உறுப்பினர் குறைவே. சில தொழிற்சங்கங்கள் வெறும் பதிவு பெற்ற தொழிற்சங்கங்கள் மட்டுமே ஆகும்.

This slideshow requires JavaScript.

நீதிமன்ற ஆணை தொழிலாளர்களுக்கு சாதகமாக இல்லை என்று பல தொழிலாளர்கள் கருதுகின்றனர். இது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரித்துள்ளது. ‘எங்கள் நிலையத்தில் உள்ள பல தொழிலாளர்களுக்கு ஏமாற்றமே ஏனென்றால் எங்கள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேறியதாக தெரியவில்லை. அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு கூட தயாராக இல்லைஎன ஒரு பராமரிப்பு தொழிலாளர் கூறினார். போராட்டம் ஒரு ஆக்கபூர்வமானதாக சிஐடியு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கருதுகின்றனர். ‘தொழிலாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் எந்த ஆணையையும் பிறப்பிக்கவில்லை. இது போராட்டத்தின் முக்கிய வெற்றியாகும்என சிஐடியுவின் தோழர் பக்தவத்சலம் கருதினார். ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட 12(3) ஒப்பந்தத்தை மாற்றி அமைப்பது என்பது மிகக் கடினம் என அவர் கூறினார். ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட போது நடைபெற்ற விதிமீறல்களை சிஐடியு நீதிமன்ற வழக்கில் தாக்கல் செய்துள்ளது. இந்த விதிமீறல்களை அனுமதித்த தொழிலாளர் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. அதனால் வேலை நிறுத்தத்தை தோல்வியாக காணக் கூடாது என தோழர் பக்தவத்சலம் வலியுறுத்தினார்.

வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கைகளை மாநில அரசு துவக்கியுள்ளது. பல தொழிலாளர்களுக்கு குற்றச்சாட்டு குறிப்பாணைகள்(Charge Memo) கொடுக்கப்பட்டு வருகின்றன. பழைய பழைய பிரச்சனைகளை மீண்டும் எழுப்பி தொழிலாளர்களின் வீட்டுக்கே மெமோக்களை கண்காணிப்பாளர்கள் அனுப்புவதாக சிஐடியு சங்கத்தைச் சார்ந்த ஒரு எம்டிசி நடத்துனர் குறிப்பிட்டார். தொழிலாளர்கள் மீது எந்த பழிவாங்கல் நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என்று தான் கொடுத்திருந்த உத்தரவாதத்தை அரசு மீறுவதாக டிடிஎஸ்எஃப்பின் தோழர் நடராஜன் கூறினார். வழக்கமாக வேலை நிறுத்தம் விடுமுறையாக கருதப்பட்டு தொழிலாளர்கள் ஊதியம் இழக்காதவாறு சரி செய்யப்படும். ‘இம்முறை, வேலை செய்யவில்லை என்றால் ஊதியம் கிடையாது என்ற அடிப்படையில் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கமாட்டோம் என அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஆனால் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஒருபடி மேலே போய் தொழிலாளர்கள் வரவில்லை என பதிவேட்டில் ஏற்றியுள்ளனர். இதனால் ஓழுங்கீன நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளது என தோழர் நடராஜன் கூறினார். ஈரோடு, சேலம், கும்பகோணம், நாகர்கோயில் மற்றும் வேலூர் பணிமனைகளில் உள்ள தொழிலாளர்கள் தொலைவில் உள்ள இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அரசு பேருந்து கட்டண உயர்வை உயர்த்தியுள்ளது அனைவரின் கோபத்தை தூண்டியுள்ளது. இது குறித்து வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில், போக்குவரத்து கழகங்கள் ரூ20488 கோடி இழப்பில் உள்ளதாகவும், இதை ஈடுகட்ட பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது. இழப்பிற்கு காரணமாக எரிபொருள் செலவு(2011ன் பேருந்து கட்டண உயர்வை அடுத்து எரிபொருள் விலை 50 சதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது), ஊதியம், ஓய்வூதிய பாக்கிகள் ஆகியவை காரணம் என அரசு கூறியுள்ளது.

அதிமுக அரசின் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சிஐடியுவுடன் இணைந்த தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்து ஊழியர் கூட்டமைப்பு கடந்த வாரத்தில் பொது மக்கள் மத்தியில் துண்டறிக்கைகளை விநியோகித்தது. மாநில அரசு பேருந்து சேவையை வரவு செலவு கணக்கில் பார்க்கக் கூடாது என சிஐடியு தலைவர் தோழர் பாலகிருஷ்ணன் கூறினார். ‘பொதுப் போக்குவரத்து என்பது மக்களுக்கு அரசு தர வேண்டிய பொது சேவை ஆகும். மாநில அரசு இதன் மூலம் வரக்கூடிய சமூக பொருளாதார நலன்களை கணக்கில் எடுத்துக் கொண்டு போக்குவரத்து சேவையை சமூக முதலீட்டாக அணுக வேண்டும்என அவர் கருதினார். பேருந்து கட்டண உயர்வு லட்சக்கணக்கான பொது மக்களை குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்களையும் மாணவர்களையும் அதிகம் பாதிக்கின்றது. வேலை நிறுத்தத்திற்கு பின்னர் கட்டண உயர்வை மாநில அரசு உயர்த்தியிருப்பது தொழிலாளர்களுக்கு எதிராக பொது மக்களை திருப்பவே என்று ஒரு தொழிலாளர் கூறினார். கட்டணம் உயர்த்தப்பட்ட நாளன்று பேருந்து ஓட்டுனர்களும் நடத்துனர்களும் தான் பொது மக்களின் கோபத்தை சந்தித்தனர்.

பிப்ரவரி 1 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்று கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தின. இப்போது கையெழுத்திட்டுள்ள 12(3) ஒப்பந்தத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிப்ரவரி 9 அன்று பொதுக் கூட்டத்தை கூட்டி தொழிற்சங்கங்கள் விளக்க உள்ளனர். ஊதிய உயர்வு தவிர, வாகனப் போக்குவரத்து சட்டதிருத்தங்கள் மற்றும் நிலுவை பாக்கி ரூ7000 கோடி ஆகிய பிரச்சனைகளும் தொழிற்சங்கங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளன.

This entry was posted in News, Public Sector workers, Strikes and tagged , , , . Bookmark the permalink.