வால்மார்ட் கிளை முற்றுகை போராட்டம்!

பிரேம், சந்திரிகா

சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்று ஆளும் அதிமுக அரசு அறிவித்தும் வால்மார்ட் நிறுவனம் புறவழியாக தமிழகத்தில் கால் பதித்திருப்பதை கண்டித்து வால்மார்ட் நிறுவனத்தின் அண்ணாநகர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 26.12.2012 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ(எம்)) கட்சிகள் போராட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு சமையல் தொழிலாளர்கள் சங்கம் ஆகிய தொழிலாளர் சங்கங்களும், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் அமைப்பு மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்புகள், எஸ்எப்.ஐ அமைப்பபுளிலிருந்து சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்ட போராட்டத்தில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் எங்குமே அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை முன்வைத்தனர்.

இந்தியாவில் சில்லரை வணிகத்தில் ஏறக்குறைய 1.5 கோடி கடைகளில் 4.5 கோடி மக்கள் வேலை செய்கின்றனர். 20 கோடி மக்கள் சில்லறை வியாபாரத்தை நம்பி வாழ்க்கை நடத்தி கொண்டு வருகின்றனர். சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் வால்மார்ட், கேரிஃபோர், டெஸ்கோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் சிறு வியாபாரிகளும் போட்டி போடும் நிலைமை வரும். ‘இன்றைய சூழ்நிலையில் நிரந்தர வேலை கிடைக்காத நிலையில் சிறு முதலீடுகளை வைத்து கொண்டு சிறுகடைகளை நடத்திவருபவர்களின் வாழ்வாதார நிலை என்னவாகும்?’ எனக் கேள்வி எழுப்பிகிறார் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் அமைப்பின் மாநில குழு உறுப்பினர் தோழர் கோடிஸ்வரி.

வால்மார்ட் நிறுவனம் திருவேற்காடு பள்ளிகுப்பத்தில் 1 லட்சம் சதுர அடியில் சேமிப்பு குளிர்பதன கிடங்கையும் அண்ணாநகரில் தலைமை அலுவலகத்தையும் கட்டி வருகிறது. பாரதி வால்மார்ட் நிறுவனம் பல சில்லரை வணிகர்களை அணுகி அவர்களுக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் தருவதாக கூறி அவர்களை உறுப்பினர்களாக பதிவு செய்து வருகிறது. இதன் மூலம் சிறுகடை வியாபாரிகளின் கொள்முதல்களை கைப்பற்றும் இந்த நிறுவனம் அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து விடும் எனறு கோடிஸ்வரி கூறுகிறார்.

வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யும்போது விலைகள் குறையும் எனக் கூறப்படுகிறது. வால்மார்ட் நிறுவனம் அமெரிக்க பால்பண்ணைகளிலிருந்து 1 லிட்டருக்கு ரூ77க்கு வாங்கி ரூ176க்கு விற்கின்றது. தமிழ்நாட்டில் அரசு நிறுவனம் ஆவின் 1லிட்டர் பாலை ரூ22க்கு வாங்கி ரு32க்கு விற்கிறது. (பெரிய கடைகளுக்கும் சிறுகடைகளுக்கும் உள்ள விலை வித்தியாசம் பற்றிய ஆய்வு தொழிலாளர் கூடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது) இது குறித்து ஏ.ஐ.டி.யு.சியின் தேசிய துணைத் தலைவர் தோழர் தியாகராஜன் ‘பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் அரசின் கொள்கைகளால் விவசாயிகள் நிறைய பாதிக்கப்படுவார்கள்.’ எனக் கூறினார். போராட்டத்தில் பேசிய தோழர் தா.பாண்டியன் ‘வால்மார்ட் போன்ற நிறுவனம் அன்னிய நேரடி முதலீட்டாக ரூ1000 கோடி கொண்டுவந்தால், லாபமாக ரூ10000 கோடியை வெளியே எடுத்து செல்கிறது.’ என கூறினார்.

இது குறித்து சி.ஐ.டி.யு மாநில செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் ஏ. சவுந்தரராஜன் ‘சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது. கொள்முதல் வணிகத்தின் மூலம் தமிழ்நாட்டில் பின்புற வழியாக பாரதி வால்மார்ட் நிறுவனம் கால் பதிப்பதையும் அனுமதிக்கக் கூடாது.இந்நிறுவனத்துடைய தொழிலாளர் சட்டமீறல்களும் கொள்கைகளும் நம்பகமற்ற தன்மையுடையது’ எனக் கூறினார். போராட்டத்தில் சிபிஐ(எம்) ராமகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொண்டனர்.

அண்ணாநகர் பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய போராட்டம் அருகில் இருந்த வால்மார்ட் நிறுவனத்தை நோக்கி நகர்ந்து காவலர்களையும், தடைகளையும் மீறி மக்கள் முற்றுகையிட்ட போது, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.
This entry was posted in News, Retail Sector, Street Vendors, Unorganised sector, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.