காப்பீடு துறையில் ஏன் அன்னிய முதலீட்டை எதிர்க்க வேண்டும்?

இந்திய அரசு சில்லரை வணிகம், காப்பீடு, ஓய்வுதியம் ஆகிய துறைகளில் அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரித்துள்ளது. அரசின் முயற்சியை இந்திய முதலாளிகள் வரவேற்றுள்ளனர். ஆனால் பலதரப்பட்ட மக்களிடமிருந்து இதற்கு எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் பல வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் இதை எதிர்த்து போராடிவருகின்றனர். குறிப்பாக காப்பீட்டில் அன்னிய நேரடி முதலீட்டை 51% அதிகரித்துள்ளதை எதிர்த்து காப்பீடு ஊழியர்கள் ஒரு நாள் போராட்டம் நடத்தினர். தங்கள் நிலைபாட்டை தென் மண்டல காப்பீடு தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் திரு சுவாமிநாதன் விளக்குகிறார்:

காப்பீடுகளிலும், ஓய்வூதியத்திலும் நீஙகள் அன்னிய நேரடி முதலீட்டை நீஙகள் ஏன் எதிர்க்கின்றீர்கள்?
ஓய்வூதியம், காப்பீடு ஆகியவை தேசிய பொருளாதாரத்தின் இரண்டு முக்கிய துறைகள். ஒருவர் தன்னுடைய வேலை காலத்தில் இறந்தாலோ அல்லது விபத்திற்குள்ளாகி விட்டாலோ காப்பீடு இதனால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டுகிறது. தொழிலாளர்களின் ஓய்வு காலத்தில் தன் வாழ்வை பராமரிப்பதற்கு ஓய்வூதியம் ஈடுகட்டுகிறது. இன்றைக்கு நம்முடைய நாட்டில் அரசு எந்த சமூகப்பாதுகாப்பு தராத நிலையில் இந்த துறைகள் குறைந்த பட்ச சமூகப்பாதுகாப்பை உறுதி செய்கின்றன. இவை இரண்டும் பொதுமக்களின் நீண்ட கால சேமிப்பை வலுப்படுத்துகின்றன.

இந்த சேமிப்புகள் நீண்ட கால சேமிப்புகளாக உள்ளதால், அரசின் கட்டமைப்பு வேலைகளுக்கு முதலீடாக உபயோகப்படுகின்றன. கடந்த 5 ஆண்டு திட்டத்திற்கு மட்டும் எல்.ஐ.சி நிறுவனம் இந்திய அரசிற்காக 7.4 லட்சக் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. ரயில் போக்குவரத்து துறையின் 28% முதலீடு எல்.ஐ.சி நிறுவனத்திலிருந்து வருகிறது. தேசிய வளர்ச்சிக்கு இந்த முதலீடுகள் முக்கியமாக இருப்பதால், இந்த துறைகள் தனியார்மயமாக்கப்படுவதையும், அன்னிய முதலீட்டையும் நாங்கள் எதிர்க்கிறோம்.

இந்த துறைகளுக்கு அன்னிய நேரடி முதலீடு அவசியமா?
காப்பீடு ஓழுங்குபடுத்தல் மற்றும் வளர்ச்சி சட்டம் (Insurance Regulation and Development Act) 1999ல் அமலாக்கம் செய்யபட்டபின் இந்திய அரசு காப்பீடு துறையில் 26% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது. இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து அன்னிய முதலீடுகளை கொண்டு தனியார் காப்பீடு நிறுவனங்கள் வளர்ந்துள்ளனர். இந்திய காப்பீட்டில் தனியார் முதலீடு இன்று 29000 கோடி ரூபாயாகும். இதில் அன்னிய முதலீடு ரூ6300 கோடி ரூபாய். இந்திய முதலீடுகளையும், வருமானத்தையும் வைத்து பார்த்தால் இது மிகவும் சிறு தொகையாகும். மேலும் இந்திய முதலாளிகள் நாட்டிற்கு வெளிNயு முதலீடு செய்யும் தொகை இதைவிட பல மடங்கு அதிகமாகும். டாடா கோரஸ் நிறுவனத்தை வாங்கிய தொகை சுமார் 55000 கோடி ரூபாய். இந்திய முதலாளிகளுக்கு அன்னிய முதலீடுகள் தேவையில்லை. அவர்களுக்கு தேவை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள். இவைகளை அணுகுவதற்கு அன்னிய முதலீடுக்கு இந்திய நிதித்துறையில் அனுமதிப்பது அவசியமாகிறது. அதனால் இந்திய முதலாளிகள் இந்த கொள்கைகளை மேற்கொள்ள அரசை நிர்பந்திக்கின்றனர்.

1999ல் தனியார்மயக் கொள்கைகள் காப்பீடு திட்டத்தில் கொண்டுவருவதற்கு 3 காரணங்கள் கூறப்பட்டன. காப்பீடுகளை அதிகரிப்பது, புதிய பாலிசிகளை கொண்டு வருவது, காப்பீடு கோரிக்கைகளை துரிதமாக தீரப்பது. இதன் மூலம் நுகர்வோர்களின் திருப்தியை மேம்படுத்துவது. கடந்த 12 வருடங்களில் இந்த மூன்று நோக்கங்களிலும் தனியார் நிறுவனங்களை விட அரசு துறைகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. எல்.ஐ.சி பாலிசிகள் மொத்தம் 40 கோடியாகும். மற்றும் எங்களுடைய பாலிசிகள் இருப்பதிலேயே குறைந்த மதிப்புகள் உடையவை. இந்தியாவிலேயே குடும்பரீதியான காப்பீடுகள் கொடுப்பது எங்கள் நிறுவனம் மட்டுமே. மற்றும் யூனிட் லிங்க்ட் காப்பீடு திட்டத்தை தவிர அனைத்து புதுவகையான காப்பீடு திட்டங்களை எல்.ஐ.சி மற்றும் ஜி.ஐ.சி நிறுவனங்களே அறிமுகப்படுத்தியுள்ளன. காப்பீடு கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதிலும் எல்.ஐ.சி நிறுவனமே முதன்மையாக உள்ளது. காப்பீடு பாலிசி முழுமையாகும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் 99சதமும், அனைத்து கோரிக்கைகளில் 97சத இலக்கை எட்டியுள்ளோம். தனியார் நிறுவனங்களோ 86சத இலக்கையே எட்டியுள்ளன. தனியார் நிறுவனங்கள் 10சதத் கோரிக்கைகளை தள்ளுபடி செய்கின்றன. எங்களுடைய கோரிக்கைகள் 1சதமே மறுக்கப்படுகின்றன.

(அன்னிய முதலீடு 26சதமாக அனுமதிக்கப்பட்டு) இந்த 12 வருட காலத்தில் இந்த துறைகiளை நடத்துவதற்காக அனுபவத்தை தனியார் நிறுவனங்கள் கற்றுள்ளன. இதற்கு மேலும் தொழிற்நுட்பங்களையும், அனுபவங்களை அன்னிய நிறுவனங்கள் இங்கு கொண்டுவரப்போவதில்லை. எவ்வாறு பார்த்தாலும் அன்னிய நேரடி முதலீடு தனியார் லாபத்தையே கூட்டுகின்றன பொதுநலனை காக்கப்போவதில்லை.

நிதித் துறைகளில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
தனிநபர் நீண்ட நாள் சேமிப்பை கொண்டு தேசிய பொருளாதார வளர்ச்சி கட்டமைப்பை பலப்படுத்துவதில் காப்பீடு பயனுள்ளதாக உள்ளது. இவற்றை செயல்படுத்த வளரும் நாடுகளில் காப்பீடு என்பது தேசியமயமாக்கப்பட்ட துறையாக நடத்தப்பட வேண்டும். காப்பீடு தனியார்மயமாக்கப்பட்டதால், முக்கியமில்லாத துறைகளில் சேமிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் குறுகிய காலத்தில் மிகுந்த லாபம் கிடைத்தாலும், அதில் உள்ள இடர்கள் மற்றும் சேமிப்புகளின் முதலீடுகள் தேசிய வளர்ச்சிக்கு உதவுவதில்லை. எல்.ஐ.சி நிறுவனம் பங்குசந்தையில் ஒரு பகுதியை மட்டுமே முதலீடு செய்கிறது. இன்றைக்கு தனது மற்ற கடமைகளையும் தாண்டி எல்.ஐ.சி நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டாளராக உள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும் போது அதை நிறுத்துவதற்கு, அரசாங்கம் எங்களையே அணுகுகிறது.

இன்னொரு பக்கம், குறைந்த ஊதியம் உள்ள குடும்பங்களுக்கு காப்பீடு திட்டங்களில் சலுகைகள் அளிப்பது. பெரிய அளவில் இடர் உள்ள துறைகளுக்கும், நபர்களுக்கும், காப்பீடு தரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் பொது காப்பீடு நிறுவனங்களுக்குஇருந்தது. ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு இந்த கட்டாயம் இல்லை. அதனால் குறைந்த ஊதியம் மற்றும் மிகுந்த இடர் உள்ள பேருக்கு தனியார் நிறுவனங்கள் காப்பீடு தருவதில்லை. காப்பீடு தனியார்மயமாக்கப்படும் போது இந்த குழுக்கள் காப்பீடு பாதுகாப்பிலிருந்து வெளியேற்றப்படும் சூழ்நிலை உருவாகிறது. உதாரணமாக முன்னர் இந்தியாவில் ஒரு குடிசை எரியும் போது, காப்பீடு செய்யாதபட்சத்திலும் ஜி.ஐ.சி நிறுவனம் ரூ5000 கொடுத்து வந்தது. ஆனால் தற்போது இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இப்பொழுது உள்ள சட்டசீர்திருத்தங்கள் காப்பீடு துறையை மேலும் அன்னிய முதலீட்டிற்கு திறப்பதற்கு வழிவகை செய்கின்றது. 1999ன் சட்டத்தின் படி அன்னிய நேரடி முதலீட்டை மேலும் அதிகரிக்க முதல் தடவை மட்டுமே இந்திய அரசு பாராளுமன்றத்தை நாட வேண்டும். அதன் பின்னர் அரசின் முடிவே போதுமானது. மற்றும் ஜி.ஐ.சி நிறுவனத்தை சந்தையின் வாயிலாக 49சதம் வரை தனியார்மயமாக்க இது வகை செய்கிறது. மேலும் தற்போது இல்லாவிட்டாலும், தனிநபர் சேமிப்பை இந்தியாவிற்கு வெளியே முதலீடு செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்று நாங்கள் கருதுகிறோம். இதன் மூலம் இந்திய சேமிப்பில் அன்னிய முதலீடு பெருமளவில் ஆதிக்கத்தை செலுத்தும்.

பாராளுமன்ற நிலைக்குழு மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் யு.பி.ஏ பிரதிநிதிகள் தற்போதைய சட்டத்தை எதிர்த்துள்ளனர். தற்போது காப்பீடு துறையை மேலும் திறப்பதற்கு எந்த காரணமும் இல்லை எனவும் இதனால் அன்னிய முதலீடு நிறைய அதிகரிக்க வாய்ப்பில்லை எனவும், நிதித்துறைகளை இவ்வாறு திறப்பதன் மூலம் அன்னிய பொருளாதார பிரச்சனைகளால் மேலும் பாதிப்புகள் ஏற்படும் என அவர்கள் கருதுகின்றனர்.

காப்பீடு தொழிலாளர்கள் இந்த பிரச்சனைகளை எவ்வாறு காணுகின்றனர்?
எல்.ஐ.சி ஊழியர்கள் காப்பீடு தனியார்மயமாக்கப்படுவதை எதிர்க்கின்றனர். 1999ல் இந்திய அரசு காப்பீடு துறையில் 26சதத்திற்கு மேல் ஏன் அன்னிய முதலீடு இருக்கக்கூடாது என்பதற்கு பல காரணங்களை எடுத்துரைத்தது ஆனால் அவர்களே இன்று அன்னிய முதலீட்டை இன்று அதிகரிக்கின்றனர். இன்றைய அரசின் கொள்கையான நிதித்துறை ஒழுங்குமுறையை தளர்த்துதல் மற்றும் முதலீடுகளையும் சொத்துகளையும் உள்நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் எந்த நிபந்தனையில்லாமல மாற்றுவது(Capital account convertibility) ஆகியவை தேசிய நலனுக்கு ஆபத்து விளைவிப்பவை. இந்த பிரச்சனைகள் குறித்து எங்களுடைய கையெழுத்து இயக்கம் இந்தியாவில் 1.5 கோடி கையெழுத்துகளை பெற முடிந்தது. இதனால் ஊழியர்களும் பொது மக்களின் கருத்துகளை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

தனியார் நிறுவன ஊழியர்களை எங்களால் ஒன்று திரட்ட முடியவில்லை. இது ஒரு பிரச்சனையாக உள்ளது. தனியார் ஊழியர்களின் கருத்துகள் என்னவென்று எங்களால் கூறமுடியவில்லை.

இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?
அனைத்து துறைகளிலும் அன்னிய நேரடி முதலீட்டிற்கு எதிராக அடிப்படை மக்களிடம் நாங்கள் எங்களுடைய போராட்டத்தை வலுப்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் திரு. வெள்ளையன் தலைமையில் உள்ள வணிகர் சங்கத்துடன் இணைந்து போராட்டங்களை நடத்தவுள்ளோம். பொதுமக்களின் ஆதரவு இல்லாவிட்டால் தொழிலாளர்கள் போராட்டங்கள் வெல்வது கடினம் என நாங்கள் கருதுகிறோம். அதனால் இந்த பிரச்சனைகள் குறித்த உண்மைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறிவருகிறோம். இந்த சட்டம் பாராளுமன்றத்திற்கு வரும் போது காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்.

This entry was posted in Analysis & Opinions, Service Sector, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , , . Bookmark the permalink.