சென்னை அண்ணா சாலையில் தொழிலாளர்களின் சாலை மறியல் – 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு

பிப்ரவரி 20,21 அன்று 11 மத்திய தொழிற்சங்கங்களும் இதர தொழிற்சங்கங்களும் கூடி அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு விடுவிப்பு அழைத்துள்ளனர்.அனைத்து தொழில்களிலும் குறைந்த பட்ச ஊதியமாக மாதந்தோறும் ரூ10000, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பெட்ரோல் விலைகளை கட்டுப்படுத்துதல், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடை ரத்து செய்தல், பொது துறைகயை தனியார்மயப்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. பிப்ரவரி 20 அன்று அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏ.ஐ.டி.யு.சி)யின் சார்பில் நடைபெற்ற சாலை மறியலில் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்னையின் முக்கிய சாலையான அண்ணா சாலையை மறித்தனர். இதானால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள், சேவை தொழிலாளர்கள் என அனைவரும் ஒன்று கூடி நடத்திய போராட்டத்தில் இன்றைய பொருளாதார கொள்கைகளின் மேல் தமிழ்நாடு தொழிலாளர் வர்க்கத்தின் கோபம் வெளிப்பட்டுள்ளது.

சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெரியார் சிலைக்கு அருகே திரண்ட போது, காவல்துறையும் போராட்டத்தை கட்டுபடுத்த வேலிகளை அமைததனர். ஒரு கட்டத்தில் தொழிலாளர்களை அதை மீற முயன்ற போது, காவல் துறை தடுத்தனர். தொழிலாளர்களும் சங்க பிரதிநிதிகளும் அதை மீறி சென்று சாலையில் உட்கார்ந்து மறியல் செய்து தங்களுடைய கோரிக்கைகளை கோஷங்களாக வெளிப்படுத்தினர். இன்றைய மத்திய மாநில அரசின் பொருளாதார கொள்கைகள் தொழிலாளர் வர்க்கத்தை சுரண்டுவதாக உள்ளன என்பதை அவர்கள் வலியுறுத்தினர். லாபத்தை மட்டும் குறிக்கோளாக கொள்ளும் முதலாளிகளுக்கு துணை போவதை விட்டு பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலங்காலமாக தொழிலாளர் வர்க்க உழைப்பின் உற்பத்தியாக சேமித்து வைத்த அரசு பொது துறைகளையும் வளங்களையும் தனியாரமயமாக்கப்படுவதை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும். தொழிலாளர் வர்க்கத்திற்கு சமூகப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க உதவி செய்யும் அன்னிய நேரடி முதலீட்டை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் சங்கம் அமைக்கும் உரிமைகள்,கூட்டு பேர உரிமைகளை பறிக்கும் சட்டசீர்திருத்தங்களை நிறுத்த வேண்டும்.

2மணி நேரத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தியா தோறும் இவ்வாறு பல இடங்களில் வேலை நிறுத்தங்களும், போராட்டங்களில் ஈடுபடும் தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கைகளை முதலாளித்துவ மத்திய அரசு செவி சாய்க்குமா என்பது தெரியாத நிலையில் இன்றைய போராட்டம் ஆரம்பமே!

This entry was posted in Strikes, Workers Struggles, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to சென்னை அண்ணா சாலையில் தொழிலாளர்களின் சாலை மறியல் – 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு

  1. Pingback: தொழிலாளர் கூடம் (Thozhilalar koodam) » தில்லியில் தொழிலாளர்களின் மாபெரும் பேரணி

Comments are closed.