உழைக்கும் வர்க்கப் போராட்டத்தில் பொது வேலை நிறுத்தங்களின் தாக்கம் – கடந்த வேலை நிறுத்தங்களை பற்றிய பார்வை

‘முதலாளித்துவ சமுதாயத்தில் இயற்கையாகவே வெளிப்படும் வேலை நிறுத்தப் போராட்டங்கள், சமூகக் கட்டமைப்பிற்கு எதிரான தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தின் அறிகுறியாகும்’ – லெனின்

முன்னுரை

இந்தியாவில் 1991ல் தாராளமயக் கொள்கைகள் புகுத்தபட்ட பின்னர் நடைபெற்ற தேசிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் குறித்து இந்த கட்டுரையில் ஆய்வு செய்ய முற்பட்டுள்ளோம். இந்த காலகட்டத்தில் உழைக்கும் வர்க்க இயக்கங்கள் 16 தேசிய வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தியுள்ளன. எண்ணிக்கையிலும் சரி, அமைப்பின் வலிமையிலும் சரி போராட்டங்களின் தீவிரம் அதிகமாகியுள்ளன. ஆனாலும், தற்போது தொழிலாளர் வர்க்கத்தினால், முதலாளி வர்க்கத்தின் சுரண்டல் முறைகளை எதிர்கொள்வது மேலும் கடினமாகி உள்ளது. ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் முதலாளிகளின் தொழிலாளர் சீர்திருத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஒருவரை மற்றொருவர் மிஞ்சுகின்றனர். வேலை நிறுத்தப் போராட்டங்களின் பிண்ணனியில் அதிகமாகும் சுரண்டல்களை ஆராயும் போது ஏன் தொழிலாளர் வர்க்கத்தால் முதலாளித்துவத்தைஇன்னும் வலுவாக எதிர்கொள்ள முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது. 1991 முதல் நடந்த 16 தேசிய வேலை நிறுத்தங்கள், குறிப்பாக 2012, 2013 மற்றும் 2015 களில் நடந்த மூன்று பொது வேலை நிறுத்தங்களின் தன்மைகளையும் முதலாளித்துவ பதில்களையும் ஆராய்வதில் இன்றைய முதல்-தொழிலாளர் உறவின் பரிணாம வளர்ச்சியின் புரிதலை தேடுகிறோம்.

1Sept WSC Rally (2)

பொது வேலை நிறுத்தப் போராட்டங்களின் இயக்கத்தை பரிசீலிக்கும் போது, நடைமுறையில் முரண்பாடு எழுவதை காண்கிறோம். தொழிற்சங்கங்கள் இன்று மிகவும் பிளவுபட்டு உள்ளன. பிளவுபட்ட சங்கங்களால் வர்க்க ஒற்றுமையை உருவாக்குவது கடினமாகிறது. இதனால், தொழிலாளர்களை திரட்டுவதிலும், அவர்களை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதிலும், உள்ள தீவிரம் குறைகிறது. இந்த முரண்பாடுகளை ஆய்வில் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

எங்களுடைய ஆய்வு இரண்டு முரண்பாடான பார்வைகளை முன்வைக்கிறது;. ஒரு பக்கம் முதலாளித்துவ சமூகத்தை மாற்றுவதற்கான போராட்டங்களை தொழிலாளர் வர்க்கத்தினால் தானே எடுத்து செல்ல முடியும் என்ற பாரம்பரிய இடதுசாரி சிந்தனையை சார்ந்துள்ளது. இந்த பார்வையிலிருந்து பார்க்கும் போது தேசிய வேலை நிறுத்தத்தின் தாக்கம் வெகுவாக இல்லை என்ற உணர்வு எழுகிறது. இந்த உணர்வு பாரம்பரிய இடதுசாரி சிந்தனையை அடிப்படையாக மட்டும் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்துகிறோம்.

நடைமுறைக்கு ஒத்த இன்னொரு பார்வையில் தேசிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் வெற்றியடைந்துள்ளன என்ற கருத்து வெளியாகிறது. 1960ல் இருந்து மும்பய் தொழிற்சங்க இயக்கத்தின் தலைவர் தோழர் வாசுதேவனுடன் இது குறித்த உரையாடல்களில் இந்த கருத்து முன்வைக்கப்படுகிறது. தொழிற்சங்கங்கள் இன்றைக்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் அடிப்படையிலும் இயக்கத்தின் பிளவுகள் பிண்ணனியிலும் இருந்து பார்க்கும் போது தேசிய வேலை நிறுத்தம் நடப்பதே ஒரு வெற்றி என்று அவர் வாதிடுகிறார்.

வேலை நிறுத்த கோரிக்கைகள்

1991 முதல் 2008 வரை 12 ஒரு நாள் தேசிய பொது வேலை நிறுத்தப் போராட்டங்கள் தொழிற்சங்கங்களின் ஆதரவுக் குழு அல்லது மக்கள் இயக்கங்களின் தேசிய மேடையின் கீழ் நடைபெற்றன. ஒரு அல்லது பல மத்திய தொழிற்சங்கங்கள் – குறிப்பாக ஆளும் கட்சியைச் சார்ந்த தொழிற்சங்கம் – போராட்டத்தில் இருந்து விலகிச் சென்றதால் அதன் தாக்கம் குறைவாகவே இருந்தது. தொழிற்சங்கங்களின் மத்தியில் ஒருங்கிணைப்பையும் ஒற்றுமையையும் வலுப்படுத்த 2009ல் தில்லியில் தொழிற்சங்கங்களின் தேசிய மாநாடு நடைபெற்றது. இது இந்திய தொழிற்சங்க வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. ஐந்து முக்கிய கோரிக்கைகளின் அடிப்படையில் தேசிய அளவில் தொழிலாளர் பிரச்சனைகளை கொண்டு செல்வதற்கான பொது மேடையை அமைப்பதற்கும், அனைத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்பதற்கும் அது வழிவகுத்தது. அந்த 5 கோரிக்கைகளை காண்போம்:

1. அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்துதல் – பணவீக்கத்தை எதிர்கொள்ள போதிய ஊதிய உயர்வு இல்லாததால், இது தொழிலாளர்களுக்கு அடிப்படை கோரிக்கையாகும்.

2. அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மையை கட்டுப்படுத்தி தேசிய அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல் – முதலீடு அதிகமுள்ள தொழிற்சாலைகளை ஊக்குவிப்பதன் மூலம் கடந்த 30 வருடங்களில் உற்பத்தி துறைகள் 3சத வேலை வாய்ப்புகளையே உருவாக்கியுள்ளன. இந்த காலகட்டத்தில் விவசாயத் துறைகளில் வேலை வாய்ப்பு 15சதம் குறைந்தது.

3. தொழிலாளர் சட்டங்களை முறையாக செயல்படுத்துதல் – அதிக சுரண்டல்களிலிருந்து ஓரளவுக்கு தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு பல சட்டங்கள் 1930களில் இருந்து தொழிற்சங்க போராட்டங்களின் வழியாக பெற்றவையாகும். ஆனால் இந்த சட்டங்கள் தொழிற்சாலைகளில் அமல்படுத்தப் படுவதில்லை.

4. நிறுவனங்கள், நிலச்சுவான்தார்களிடம் இருந்து வரி வசூலித்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை ஏற்படுத்துதல். இந்தியாவின் 90சத தொழிலாளர்கள் அமைப்புசாரா துறைகளில் வேலை செய்கின்றனர். இந்த கோரிக்கை மூலம் தொழிற்சங்கங்கள் அமைப்புசாரா தொழிலாளர்களின் பிரச்சனைகளை அமைப்புசார்ந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளுடன் இணைத்து போராட்டங்களை இணைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினர்.

5. லாபம் பெறும் பொது துறை நிறுவனங்களை தனியார் கையில் தாரை வார்த்தல்

2010,2012,2013 மற்றும் செப்டம்பர் 2015ல் நடந்த அனைத்து தேசிய வேலை நிறுத்தங்கள் இந்த மாநாட்டில் எழுப்பபட்ட கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு போராட்டத்திலும் மேலும் சில கோரிக்கைகள் சேர்க்கப்பட்டு தற்போது 12 கோரிக்கைகள் அரசின் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளில் சில தெளிவற்றதாகவும் பொதுப்படையாகவும் உள்ளது என்று நாங்கள் கருதுகிறோம். உதாரணமாக இரண்டாவது கோரிக்கை வேலை வாய்ப்பை ஏற்படுத்தக் கோருகிறது. திறனுள்ள வேலைக்கு இன்று கல்லூரி படிப்பு தேவையாக உள்ள பட்சத்தில் கல்வி தனியார்மயமாக்குதலை தடுக்காமல் வேலை வாய்ப்பு கோருவது தொழிலாளர் வர்க்கத்திற்கு பயனுள்ளதாக இருக்காது. அதே போல், தேசிய அளவில் குறைந்த பட்ச ஊதியத்திற்கான சட்டத்தை ஏன் தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தவில்லை?. இன்று தொழிற்சங்கங்கள் 15000ரூபாய் குறைந்த பட்ச ஊதியம் கோருகின்றனர். ஆனால் நகரங்களில் வாழும் 3 பேர் உள்ள சிறிய குடும்பத்திற்கு கூட இது போதாது. ஏன் தொழிலாளர்களுக்கு தேவையான ஊதியத்திற்கும் குறைந்த பட்ச ஊதிய கோரிக்கைகளுக்கும் இடைவெளி உள்ளது?

மத்திய மாநில அரசுகள் இந்த கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றால், தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை தொழிற்சாலை மற்றும் பகுதிவாரியாக நடத்த வேண்டியுள்ளது. வெறும் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் போதாது. இந்த தொடர் போராட்டங்களை தொழிற்சங்கங்கள் நடத்துவதற்கான அறிகுறிகள் தென்படுவதில்லை. இதற்கான வலுவான போராட்டத்தை அமைத்தால் ஒழிய அரசுகள் இதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை.

தொழிற்சாலைகளில் உற்பத்தி முறை இன்று டெய்லரிசம் மற்றும் போர்டிசத்திலிருந்து டயோடிசத்திற்கு மாறியுள்ள நிலையில், தொழிற்சங்க கோரிக்கைகள் அடிப்படை கோரிக்கைகளில் இருந்து மாறாமல் உள்ளது. 2009ல் 5 கோரிக்கைகளில் இருந்து இன்று கோரிக்கைகள் 12 ஆக மாறியுள்ளன. ஆனால் இது வரை ஒரு கோரிக்கையும் நிறைவேறப்படவில்லை. இந்நிலையில் தேசிய வேலை நிறுத்தங்களின் தாக்கம் என்ன என்ற கேள்வி எழுகிறது. கடந்த 3 தேசிய வேலை நிறுத்தங்களை இன்னும் விரிவாகக் காணலாம்.

2012 தேசிய வேலை நிறுத்தம்

2012 பிப்ரவரி 28ல் இந்தியாவின் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்புகள் தேசிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் அனைவரும் பங்கு பெற அழைப்பு விடுத்தன. போராட்டத்தில் 10 கோடித் தொழிலாளர்கள் பங்கு பெற்றதாக தகவல்கள் தெருவிக்கின்றன. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின்னர் இது மிகப் பெரிய வேலை நிறுத்தமாகும். அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து தொழிற்சங்க கூட்டமைப்புகள் நடத்தும் முதல் போராட்டமாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி டீசல் விலையை 14 சதம் கூட்டியிருந்தது. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடை ஊக்குவிக்க முயற்சித்து வந்நது. இந்த கொள்கைகளை பி.ஜே.பியின் பி.எம்.எஸ் தொழிற்சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்த்தன(ஆனால் பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்னர் அதே கொள்கைகளை பின்பற்றியது). பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் 5000 கட்சி சார்பற்ற தொழிற்சங்கங்கள் பங்கு பெற்றன. மேற்கூறிய 5 கோரிக்கைகளுடன், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை தடுப்பது, நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த முறையை தடுப்பது, அதுவரை ஒப்பநத தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தொழிலாளர்களுக்கான ஊதியம் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியமாக ரூ10000, ஓய்வூதியம், தேசிய குறைந்த பட்ச ஊதியத்தை உறுதி செய்ய குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தை மாற்றுதல் போன்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டன.

தேசிய பொது வேலை நிறுத்தத்தில் பெருவாரியான தொழிலாளர்கள் பங்கு பெற்றனர். முக்கிய துறைகளான வங்கி, காப்பீடு துறைகள் முடங்கியன. தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் இருந்த அதிருப்தியை வேலை நிறுத்தம் வெளிப்படுத்தியது. ஆனால் வேலை நிறுத்தம் முடிந்த பின்னர், தொழிற்சங்க பிரதிநிதிகள் எதிர்பார்த்தபடி அரசு கோரிக்கைகளில் கவனம் செலுத்தவில்லை. தொழிலாளர் வர்க்கத்தின் அதிருப்தியையும் வேலை நிறுத்தத்தின் தாக்கத்தையும் வெளிக்காட்டவே போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் தொழிற்சங்கங்களின் கட்சிசார்பு நிலையும் வெளிபட்டது. உதாரணமாக, மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்தும் சேர்ந்து தேசிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தும் பொது வேலை நிறுத்தம் அரசியல் நோக்கம் கொண்டது என்று காரணம் காட்டி காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியுசி தொழிற்சங்கம் கடைசி நிமிடத்தில் வேலை நிறுத்தத்தில் இருந்து விலகியது. ஆனாலும் பொது வேலை நிறுத்தத்தின் தீவிரம் குறையவில்லை. குறிப்பாக இடதுசாரி கட்சிகள் எதிர்கட்சிகளாக செயல்பட்ட மேற்கு வங்காளம், கேரளா போன்ற இடங்களில் பொது வேலை நிறுத்தம் இன்னும் தீவிரமாக இருந்தது. இடதுசாரிகளின் அரசியலுடன் வேலை நிறுத்தம் ஒற்றுப்போவதனால் இந்த தீவிரம் இருந்தது என்பதை நாம் ஏற்று கொள்ள வேண்டும்.

2012 வேலை நிறுத்தம் இடதுசாரி தொழிற்சங்கங்களுடன், பிஜேபி, சிவசேனா போன்ற வலதுசாரிகளின் தொழிற்சங்கங்களையும் இணைத்தது. மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் இக்கட்சிகள் எதிர்கட்சிகளாக உள்ள நிலையில் போராட்டத்தில் பங்கு பெற்றனர். இவ்வாறான சந்தர்ப்பவாத பகுதிவாரியான கூட்டணிகள் வேலை நிறுத்த்தத்தின் பலன்களையும் அதற்கடுத்த செயல்களையும் பாதிக்கின்றன. தொழிற்சங்க கூட்டமைப்புகள் கோரிக்கைகளை தெளிவற்றதாகவும் பொருளாதார அடிப்படையில் வைத்தது இதற்கு ஒரு காரணம். பிற்போக்கு தொழிற்சங்கங்கள், தங்கள் கட்சியின் நலன்களின் அடிப்படையில் வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்கின்றனர். 2015 தொழிலாளர் போராட்டத்தில் பிஜேபியின் தொழிற்சங்கம் பிஎம்எஸ் அதே போல் வாபஸ் வாங்கியதை நினைவு கூர்கிறோம். தற்போதைய பிஜேபி அரசு முந்தைய அரசின் கல்வியை தனியார்மயமாக்குதல், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு என தாராளமயக் கொள்கைகளை இன்னும் அதிக வேகமாக செயல்படுத்தி வருகிறது.

2013ன் வரலாற்று சிறப்பான 2நாள் வேலை நிறுத்தம்

2012 வேலை நிறுத்தத்தில் விலைவாசி உயர்வு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, உரிய குறைந்த பட்ச ஊதியம், ஒப்பந்த முறையை குறைத்தல் உட்பட தொழிற்சங்கங்கள் முன்வைத்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான எந்த அறிகுறியும் மத்திய அரசிடமிருந்து வரவில்லை. அதனால் செப்டம்பர் 4, 2012ல் புது தில்லி தல்கத்தோரா அரங்கத்தில் நடந்த தேசிய மாநாட்டில் அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்தன. அதே கோரிக்கைகளை முன்வைத்து 48 மணி நேர போராட்டத்தை 2013 பிப்ரவரி 20-21ல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்திய தொழிலாளர் வர்க்க வரலாற்றில் பிப்ரவரி 20-21 தேசிய வேலை நிறுத்தம் ஒரு மைல்கல் ஆகும். சுதந்திரத்திற்கு பின்னர் நடந்த முதல் 2 நாள் வேலை நிறுத்தம் இது. 10 கோடி தொழிலாளர்கள் இதில் பங்கு பெற்றனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போதும் ஐஎன்டியுசி தொழிற்சங்கம் பங்கு பெற்றது. வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் ஸ்தம்பத்தது. லட்சக்கணக்கான தொழிற்சாலை தொழிலாளர்களும், வங்கித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தனர். பல நகரங்களில் பொதுப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல இடங்களில் தொழிலாளர்களின் கோபமும் போராட்ட குணமும் வெளிப்பட்டன. நோய்டாவில் தொழிலாளர்கள் தொழிற்சாலை ஜன்னல்களை இரும்பு கம்பிகள் வைத்து தாக்கினர். கார்கள் மற்றும் ஒரு தீயணைப்பு வண்டியும் சேதமாகின. ஹரியானாவில் பஸ்களை நிறுத்த முயன்ற போது ஒரு தொழிலாளர் தலைவர் நசுங்கி இறந்தார்.

வேலை நிறுத்தத்தின் இழப்பீடு குறித்து 25000 கோடி ரூபாய் நிதி இழப்பு நேர்ந்ததாக ஃபிக்சி(FICCI) கூறியது. எவ்வாறு இந்த மதிப்பு கணிக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது, ஆனால் கார்ப்பரேட்களை இவ்வாறான வேலை நிறுத்தங்கள் உலுக்குகின்றன என்பதை நிச்சயம். இந்த வேலை நிறுத்தத்தின் தாக்கத்தின் விளைவாக, 45வது இந்திய தொழிலாளர் மாநாட்டை துவக்கிய பிரதமர் மன்மோகன் சிங், தொழிலாளர்கள் கோரிக்கைகள் நியாயமானவை என்றும் அவற்றை அரசு நிறைவேற்றும் என்றார். ஆனால் எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக தொழிலாளர்களை இன்னும் சுரண்டும் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களும், அன்னிய முதலீடுகளும் அரசின் கொள்கைகளாக தொடர்ந்தன. 2015, செப்டம்பர் 2ல் நடந்த தேசிய பொது வேலை நிறுத்தத்தில் இவை முக்கிய கோரிக்கைகளாக இருந்தன.

தொழிலாளர் வர்க்கத்தின் கோபம், அதிருப்திக்கான பிரச்சனைகளுக்கு நேரடி போராட்டமே தீர்வு என்பதை பொது வேலை நிறுத்தம் காட்டியது. இரண்டு நாள் வேலை நிறுத்தம் என்பதால், தொழிலாளர்கள் பங்கும், போராட்டத்தின் தீவிரமும் அதிகமாகின. நீண்ட கால போராட்டத்திற்கு அது ஒரு தொடக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், வேலை நிறுத்தத்திற்கு பின்னர், தொழிற்சங்கங்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் தொடர்ச்சியான போராட்டத்தில் இறங்கவில்லை.

2015 தேசிய வேலை நிறுத்தம்

பிஜேபியின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி பதவி ஏற்ற பின்னர், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் 10 கோரிக்கைகள் குறித்து அரசு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். ஆனால் அரசு எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்ற தயாராக இல்லை என்பது இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் தெளிவாகியது. தொழிலாளர் சட்டங்களை மாற்றி நவீன தாராளமயக் கொள்கையை கடைபிடிப்பதில் அரசு தீவிரமாக இருந்தது. என்டிஏ அரசின் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதையும் போராடுவதையும் வெகுவாக கட்டுப்படுத்துகிறது. புது சட்டத்தின் படி தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதற்கு 10சத தொழிலாளர்கள் அல்லது 100 பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று கோருகிறது. இரண்டு தொழில் தகராறை தீர்ப்பதற்கு தொழிலாளர் துறை மத்தியஸ்தம் செய்யும் காலத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது. ஆனால் மத்தியஸ்தம் செய்வதற்கு எந்த கால நிபந்தனையும் கிடையாது.
பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல், 11 மத்திய தொழிற்சங்கங்கள் தேசிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.

2012 போலவே இந்த வேலை நிறுத்தத்திலும் அரசியல் குறுக்கிட்டது. பிஜேபியின் பிஎம்எஸ் தொழிற்சங்கம் கடைசி நிமிடத்தில் போராட்டத்திலிருந்து விலகியது ஆனால் பிஎம்எஸ் தொழிற்சங்கம் போராட்டத்தை எதிர்க்கவில்லை. மும்பயில் பிஎம்எஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றதாக ப்ளுஸ்டார் தொழிற்சங்கத்தின் தோழர் வாசுதேவன் கூறுகிறார். எண்ணிக்கையின் படி பார்த்தால் இந்த போராட்டம் மிகப் பெரிய வெற்றியாகும். 10 கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வர் என்ற தொழிற்சங்கவாதிகளின் கணிப்பை மிஞ்சி 15 கோடி தொழிலாளர்கள் நாடு தோறும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். வங்கி, போக்குவரத்து பல இடங்களில் முடங்கின. பல பகுதிகளில் மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவின. குறிப்பாக கொல்கத்தாவில் பெண் போராளிகளை காவல் துறை இழுத்து சென்றது. பள்ளிகள் மூடின. தென் மாநிலங்களிலும் போராட்டத்தின் தாக்கம் இருந்தது. ஹைதராபாதில் 3500 அரசு பேருந்துகள் ஓடவில்லை. கேரளாவில் போக்குவரத்து முடங்கியது. சென்னையில் போராட்டம் முன்னரை விட அதிகமாக இருந்தாலும், குர்காவ், கொல்கத்தா போன்ற தொழிற்சாலை பகுதிகளில் இருந்த தீவிரம் சென்னைக்கு அருகே உள்ள தொழிற்சாலை பகுதிகளில் காணப்படவில்லை.

2013ல் மாபெரும் 2 நாள் வேலை நிறுத்தம் நடத்திய பின்னர், தொழிலாளர் வர்க்க சுரண்டல் அதிகமாகும் காலகட்டத்தில், 2015 போராட்டம் மீண்டும் ஒரு நாள் மட்டும் நடத்தப்பட்டது. தொழிற்சங்கங்கள் ஏன் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தவில்லை என்பது குறித்து நடக்கும் விவாதங்கள் வெளியிடப்படுவதில்லை. ஆதாலால் இதற்கான காரணங்களை நாம் யூகிக்க வேண்டியுள்ளது. தொழிற்சங்கங்களுக்கும் அவர்களுடைய கட்சி நிலைபாட்டிற்கும் இருக்கும் தொடர்புகள் எந்த அளவிற்கு தொழிலாளர் பிரச்சனைகளில் இடையூறு விளைவிக்கின்றன, தொழிற்சங்கங்கள் தங்கள் கட்சியின் நலனிற்கு அப்பால் தொழிலாளர்களின் நலனை முன்வைக்க தயாராக உள்ளனரா என்பதை இந்த விவாதங்கள் தெளிவு செய்யும் என்ற கேள்விகளுக்கு விவாதங்கள் இல்லாமல் சரியான விடை கிடைப்பதில்லை. எண்ணிக்கை அதிகமாக இருந்தும், உழைக்கும் வர்க்கத்தின் மேல் சுரண்டலும் அடக்குமுறையும் அதிகமாகவே ஆன நிலையில் 2015 வேலை நிறுத்தம் வெற்றி அடைந்ததா என்பது கேள்வியாக தான் உள்ளது. தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையே உள்ள பேச்சுவார்த்தைகள் குறித்து ஊடகங்கள் எதுவும் வெளியிடாத பட்சத்தில் வேலை நிறுத்தத்தின் தாக்கத்தை வெறும் எண்ணிக்கையால் மட்டும் கணக்கில் கொள்ளக் முடியாது.

ஏற்கனவே 2015 செப்டம்பர் போராட்டத்திற்கு பின்னர் எழுதிய கட்டுரையில் எவ்வாறு காங்கிரஸ், பிஜேபி கட்சிகளை சார்ந்த தொழிற்சங்கங்கள் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யும் ஏஜன்சிகள் என்று குறிப்பிட்டிருந்தோம். ஆளும் வர்க்கத்தை சார்ந்த அவர்கள் தொழிலாளர்களின் அதிருப்தியை வெளிக்காட்டாமல் இருப்பதற்காக சில சீர்திருத்தங்களை மட்டும் ஆதரிப்பவர்கள் மேலும் அவர்கள் நவீன தாராளமயவாதத்தை எதிர்ப்பவர்கள் அல்ல. இவ்வாறு வலதுசாரி தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து போராட்டங்களை நடத்துவதினால் இ;டதுசாரிகளின் கருத்தியல் கொள்கைகள் சமரசம் ஆகும் நிலைமை உருவாகிறது.

கடந்த மூன்று வேலை நிறுத்தங்களை அலசும் போது, தொழிற்சாலைகளில் காணும் தொழிலாளர்களின் தீவிரம் தேசிய வேலை நிறுத்தங்களில் வெளிப்படுவதில்லை. குறிப்பாக மாருதி மாநேசரில் காணும் தொழிலாளர்களே தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தி போராட்ட யுக்திகளை வழிவகுக்கும் போராட்டங்கள் தீவிரமாக உள்ளன. இவ்வாறான தொழிற்சங்கங்கள் எந்த கட்சியை சார்ந்தது அல்ல என்பதும் முக்கிய காரணமாகும்.

ஒரு தொழிற்சங்கவாதியின் பார்வை

தொழிலாளர் வர்க்கத்தின் தற்போதைய நிலைமையை வைத்தே தொழிற்சங்க செயல்களையும், வேலை நிறுத்தங்களின் தாக்கத்தையும் நாம் ஆராய முடியும் என்ற பார்வையை ப்ளுஸ்டார் தொழிற்சங்கத்தி;ன் பிரதிநிதி தோழர் வாசுதேவன் முன் வைக்கிறார். இன்றைய தொழிலாளர் வர்க்கம் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் பொருளாதாரத்தை அடிப்படையை கொண்டுள்ளது என்றும், கோரிக்கைகள் அதனால் பொருளாதார கோரிக்கைகளாகவே வெளிப்படும் என்றும் அவர் கூறுகிறார். அதனால் தான் தொழிற்சங்க இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்கள் குறைந்த பட்ச ஊதியம், ஒப்பந்தமுறையை நீக்குதல், சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம் போன்றவை ஆகும்.

தொழிற்சங்கங்கள் ஒன்றுகூடியே இந்த பொருளாதார கோரிக்கைகளை பெற முடியும் என்பது அவரது கூற்று. தொழிற்சங்கங்கள் ஒன்று கூடுவதே தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதற்கு வழி. பிஎம்எஸ், ஐஎன்டியுசி போன்ற பிற்போக்கு சங்கங்களை ஒதுக்குவதன் மூலம் இசசங்கங்களில் உள்ள தொழிலாளர்களை நாம் ஒதுக்குகின்றோம். பிறகு எவ்வாறு நாம் இந்த தொழிலாளர்களுடன் ஒன்றுபட முடியும் என்று அவர் வினவுகிறார். மேலும் இடதுசாரி சங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் அரசியல்ரீதியாக இடதுசாரிகள் என்று கூறமுடியாது. தற்போது, இந்திய ஒருங்கிணைந்த தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உணர்வு குறைவாக உள்ளது. பிஎம்எஸ் போன்ற தொழிற்சங்கத்தில் இடதுசாரி சிந்தனை உள்ள தொழிலாளர்களையும், இடதுசாரி தொழிற்சங்கங்களில் பிற்போக்குவாத தொழிலாளர்களையும் காணலாம். தொழிலாளர்கள் தொழிற்சாலையில் எந்த அமைப்பு தங்களுக்காக போராடும் என்ற அடிப்படையிலேயே சங்கங்களை தேர்வு செய்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.

தொழிற்சங்கங்களின் மீது கட்சிகளின் செல்வாக்கு தவிர தொழிற்சங்கங்களுக்கு இடையே உள்ள போட்டியையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று வாசுதேவன் கூறுகிறார். உதாரணமாக, ஒரு கட்சி ஆட்சியில் உள்ள போது அதன் தொழிற்சங்கம் போராடாது என்பது உண்மையல்ல. 2012ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ஐஎன்டியுசி போராட்டத்தில் இருந்து விலகியது. ஆனால் 2009 வேலை நிறுத்தத்தில் அது பங்கு பெற்றது. தான் பங்கு பெறவில்லை என்றால் தனது உறுப்பினர்களை இழக்கக் கூடும் என்பது ஐஎன்டியுசிக்கு நன்றாக தெரியும். அதே சமயம் 2012 ஐஎன்டியுசியும், 2015ல் பிஎம்எஸ் விலகிய போது, அவர்கள் தங்கள் உறுப்பினர்களை இழக்க நேரிடும் என்ற பட்சத்திலும் அவர்கள் ஏன் போராட்டத்திலிருந்து விலகினார்கள் என்பது ஒரு கேள்விக்குறி.

அரசியல் கருத்தியலில் இருந்து தொழிற்சங்கங்கள் விலகியுள்ளன என்பதும் தவறான கூற்று என்று வாசுதேவன் கருதுகிறார். உதாரணமாக, மகாராஷ்ட்ராவில் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு 80களில் இருந்து செயல்பட்டு வருகிறது. இதில் பிஎம்எஸ், சிவசேனா, ஐஎன்டியுசி இவைகள் உறுப்பினர்களாக இல்லை. சில வருடங்களுக்கு முன்னால் மகாராஷ்ட்ராவில் ஒரு ஒருங்கிணைந்த போராட்டம் நடத்தியபோது, பிஎம்எஸ், சிவசேனா, ஐஎன்டியுசி தொழிற்சங்கங்கள் இணைவதற்கு தயாராக இருந்தன அதற்கு கூட்டு நடவடிக்கைக் குழு உறுப்பினராக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். குறைந்த பட்ச ஊதியம் போன்ற கோரிக்கைகளுக்கு அவர்களின் பங்கு தேவையாக இருந்ததால் அவர்கள் குழுவில் சேர்க்கப்பட்டனர். தற்போது கூட்டு நடவடிக்கை குழு நடத்தும் போராட்டத்தில் எழுப்பப்படும் முழக்கம் ‘ஏழாவது ஊதியக் குழுவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் எங்கே?’ என்பதே.

கடந்த 25 வருடங்களாக தொழிற்சங்கங்களிடமிருந்தும், அவர்கள் நடத்திய 20 தேசிய போராட்டங்களில் இருந்தும் மட்டும் தான் தாராளமயத்திற்கு எதிரான ஒரு உறுதியான எதிரப்பு வெளிப்பட்டுள்ளது. ஆனாலும் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவதையும் தொழிலாளர்களின் பணிநிலைமை நிலையற்றதாகவும் மாறிவருவதாக அவர் ஒத்து கொள்கிறார். அதற்கு காரணமாக இன்று பல்வேறு சங்கங்களாக தொழிலாளர் வர்க்கம் பிளவு பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதனால் தான் என்டியுஐ போன்ற அரசியல் கட்சி சாராத ஒரு தொழிற்சங்க மேடை தேவை என்று அவர் கூறுகிறார்.

2015 பொது வேலை நிறுத்தம் ஒரு வெற்றியாகக் கருதப்பட வேண்டும் ஏனென்றால்; தற்போதைய தொழிலாளர் விரோதப் போக்கை தொழிலாளர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை அது முதலாளிகளுக்கும் அரசுக்கும் வெளிச்சம் போட்டு காட்டியுது என்று வாசுதேவன் கூறுகிறார். ஃபிக்சி அதனால் தான் 25000கோடி ரூபாய் நஷ்டம் நாட்டுக்கு எழுந்ததாக கூறியது. ஒரு நாள் அல்லது இரண்டு நாள் போராட்டங்கள் அரசின் கவனத்தை ஈர்ப்பதில்லை என்பதை அவர் மறுத்தார். மாறாக சீரான இடைவெளியில் இவ்வாறான போராட்டங்கள ஒரு முக்கிய நிகழ்வுகள் ஏனென்றால் இவை தொழிலாளர் போராட்டங்களை தீவிரமாக்கும் தீப்பொறிகள் என்று அவர் கூறுகிறார்.

வேலை நிறுத்தங்கள் மற்றும் தொழிற்சங்க இயக்கம் குறித்து நாம் வைத்த கூற்றுகளில் இருந்து, தோழர் வாசுவின் வாதங்கள் முரண்படுகின்றன. இவைகளை இன்னும் ஆராய்ந்து முக்கியாக இக்கருத்துக்களின் இடையே நீண்ட விவாதம் இந்தியாவின் தொழிற்சங்க இயக்கத்தின் வளர்ச்சியை புரிந்து கொள்ள உதவும்.

முடிவுரை

நவீன தாராளமயத்தால் தொழிலாளர்களின் நிலைமைகளில் மிகப் பெரிய மாற்றம் வந்துள்ளது. அதிகரிக்கும் ஒப்பந்த வேலைமுறை மற்றும் ஆட்டோமேஷன் மற்றும் துண்டாகும் உற்பத்தி முறை (ஒரே நிறுவனத்தின் கீழ் இல்லாமல் பல நிறுவனங்கள் பல இடங்களில் பரந்திருப்பது) போன்ற மாற்றங்கள் தொழிலாளரகளை நிலையற்ற வேலைக்கும் அதிக சுரண்டலுக்கும் உட்படுத்தியுள்ளன. தொழிலாளர் வர்க்கத்தை போராடுவதற்கு ஊக்குவிக்கும் செயலாக தேசிய வேலை நிறுத்தங்கள் அமைய வேண்டும். திறன், வேலை பாதுகாப்பு போன்றவற்றில் பல தளங்களில் உள்ள தொழிலாளர்கள், சமூக, கலாச்சார பன்முகத்தன்மைக்கு அப்பாற்பட்டு ஒரு இயக்கத்தில் ஒன்று திரட்ட வேண்டும்.

தொழிலாளர்கள் வேலை பாதுகாப்பின்மை அதிகரிப்பினால் வேலைநிறுத்த போராட்டங்கள் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இது ஏன் நடக்கவில்லை என்பதை நாம் கூர்ந்து ஆராய வேண்டியுள்ளது. தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஏற்படுத்தியதன் மூலம், பிளவுபட்டிருக்கும் தொழிற்சங்க இயக்கத்தை ஒருங்கிணையும் ஒரு புது யுகம் துவங்குவதற்கான சாத்தியம் உருவாகியுள்ளது. ஆனால் இந்த ஒருங்கிணைப்பு இன்னும் தேசிய அளவில் வலுப்படவில்லை. பரந்த அளவீட்டீல் கடந்த தேசிய வேலை நிறுத்தங்கள்; மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கையை தான் கொடுத்துள்ளன குறைந்தபட்ச அளவீட்டீல் ஆளும் கட்சிக்கு இடையூறு விளைவிக்க எதிர்கட்சியினர் தொழிலாளர் வர்க்கத்தை உபயோகிக்கும் யுக்திகளாக தோன்றுகின்றன.

2011ல் மாநேசர் தொழிற்சாலையில் மாருதி தொழிலாளர்கள் 14 நாட்கள் வேலை நிறுத்தம் செய்து தற்காலிக வேலை நீக்கம் செய்யபட்ட 64 நிரந்தரத் தொழிலாளர்களையும், வேலை நீக்கம் செய்த 1200 ஒப்பந்த தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் சேர்ப்பதற்கு நிர்வாகத்தை நிர்பந்தித்து வெற்றியும் கண்டனர். முதலாளி-தொழிலாளர் உறவுகளை மாற்றக் கூடிய தேசிய பொது வேலை நிறுத்தத்தில் இவ்வாறான தீவிர போராட்ட குணங்களை காண முடிவதில்லை. தொழற்சங்க தலைவர்கள் தொழிலாளர்களின் ஒருங்கிணைப்பிற்கு மேலாக கட்சி நலனை முன்வைப்பதும் ஒரு காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். இதற்கு மாற்று கருத்தாக, உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் உணர்வு, தொழிற்சங்க பிளவுகள், மற்றும் அவர்களின் கட்சி சார்பு என்ற காரணங்களை தோழர் வாசுதேவன் முன்வைக்கிறார். இந்நிலையில் தேசிய பொது வேலை நிறுத்தங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதே ஒரு வெற்றி என்றும், முதலாளித்துவ சுரண்டலை எதர்த்து தொழிலாளர் வர்க்கம் போராடும் தன்மையை தக்க வைத்துள்ளது என்றும் அவர் கருதுகிறார்.

தேசிய வேலை நிறுத்தங்கள் வெற்றி அடைந்தாலும், அவை ஒரு தூண்டுதல் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். வேலை நிறுத்தங்களுக்கு இடையே தொழிற்சங்கங்கள் என்ன செய்கின்றன, மத்திய மாநில அரசுகளுடன் எவ்வாறு பிரச்சனைகளை அணுகுகின்றன, முதலாளி வர்க்கத்தால் உருவாக்கப்படும் சுரண்டல்களின் புது பரிமாணங்களை எவ்வாறு எதிர்க்கின்றன, அரசியலமைப்பின் முறைகளை கொண்டு உழைக்கும் வர்க்கத்தின் நிலைமையை எவ்வாறு மேம்படுத்திகின்றன என்பது முக்கியமாகும். தொடர்ச்சியான போராட்டங்கள் இல்லாமல், வேலை நிறுத்தங்கள் வந்து போகும், நமது கோரிக்கைகள் அதிகரித்து கொண்டே செல்லும், ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படமாட்டாது. வேலைநிறுத்தங்களே வெற்றி என்ற நிலைமை வரும்.

ஏற்கனவே நாம் எழுதியுள்ளபடி, வேலை நிறுத்தப் போராட்டங்களிலும், தொழிற்சங்க வேலைகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களை பங்கு பெற வைப்பது கடினமாக உள்ளது. அதே சமயம், ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கு பெறும் போராட்டங்களின் தீவிரம் வலுவாக உள்ளது. உதாரணமாக தமிழ்நாட்டை விட குர்காவ்-மாநேசர்-பாவல் தொழிற்சாலை பகுதிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் வெகுவாக கலந்து கொண்டனர். அங்கு வேலை நிறுத்தப் போராட்டத்தின் தாக்கமும் அதிகமாக இருந்தது.

தொழிலாளர்களின் போராட்டங்கள் குறிப்பாக தேசிய வேலை நிறுத்தங்களை பற்றி தவறான பார்வைகளில் எழுதி வரும், உழைக்கும் வர்க்க நலனுக்கு எதிராக எழுதி வரும் கார்ப்பரேட் மீடியாக்களையும் தொழிற்சங்கங்கள் எதிர்க்க வேண்டும். முற்போக்கு இணையதளங்கள், வலைப்பதிவுகள், சோஷியல் மீடியாக்களுடன் தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து மக்களுடனும் குறிப்பாக மாணவர்களுடனும் பகிர்ந்து கொள்ள தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய வேலை நிறுத்தங்கள் நடைபெறும். உழைக்கும் வர்க்கத்தின் மத்தியில் வளரும் அதிருப்தியை அவை வெளிக்காட்டுகின்றன. தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தை கொண்டு செல்லும் ஒரு இயக்கமாக இவை மாறுமா இல்லை பெயரளவு செயலாக நின்று போகுமா என்பது நமது நடவடிக்கைகளில் உள்ளது.

[1] https://www.marxists.org/archive/lenin/works/1899/dec/strikes.htm

[2] http://www.aljazeera.com/news/asia/2012/02/201222842550702681.html

[2`] https://newredindian.wordpress.com/2012/02/29/the-politics-of-general-strikes-in-india

[3] http://tnlabour.in/?p=2006

[4] http://tnlabour.in/?p=2665

[5] http://www.ndtv.com/india-news/10-unions-on-strike-today-government-expects-minimal-impact-1213

This entry was posted in Analysis & Opinions, Featured, labour reforms, Strikes, Workers Struggles, Working Class Vision, தமிழ் and tagged , , . Bookmark the permalink.