சிகாகோ ஆசிரியர்கள் சங்க வேலைநிறுத்தம் குறித்து ஆசரியர் பிரிஜெட் பேங்க்ராப்டுடன் ஒரு பேட்டி

chicago(For the English version click here)

அமெரிக்காவின் சிகாகோ அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும், ஏழ்மையான தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி இலவசம். ஏழ்மையான சிறுவர்களுக்கு இலவச உணவு இரு வேளை தரப்படுகிறது. சிகாகோ மேயர் ரஹம் இமானுவல், கவர்னர் ப்ரூஸ் ராவ்னர் கீழ், பள்ளிக்கான பட்ஜெட் வெகுவாக குறைக்கப்படுகின்றது. அரசு கல்வி போர்ட் உறுப்பினர்களின் ஊழலால், பெரிய வங்கிகளிடமிருந்து வாங்கப்பட்ட கடன்கள் சரியாக திரும்பக் கொடுக்கப்படாமல், பள்ளிகளின் நிதி நிலைமை மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படாமல், ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இந்தியாவில் உள்ள நிலைமை போல, அமெரிக்காவிலும் பள்ளித்திட்டத்தை தனியார்மயமாக்க முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், முதலாளித்துவ பணக்காரர்களும் முயற்சிக்கின்றனர்.

சிகாகோ அரசு பள்ளிகளில் வேலை செய்யும் 27000 ஆசிரியர்களை ஒருங்கிணைத்த சிகாகோ ஆசிரியர் சங்கம் அமெரிக்காவில் ஒரு முக்கிய சங்கமாக திகழ்கிறது. வெள்ளி ஏப்ரல் 1 அன்று பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்கக் கோரி சிகாகோ ஆசிரியர் சங்கம் ஒரு நாள் மாபெரும் வேலைநிறுத்தம் நடத்தியது. ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், போதிய நிதி இல்லாததால் பாதிக்கப்படும் மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட உள்ளுர் மக்களையும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. வேலை நிறுத்தம் அன்று ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், மாணவர்கள், உள்ளுர் மக்கள் என அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டது போராட்;டத்தின் சிறப்பு.
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற கலை ஆசிரியரும் சங்க உறுப்பினரும் ஆன பிரிஜெட் பேங்க்ராப்ட் பள்ளி நிலைமைகளையும் போராட்டத்தையும் பற்றி கூறுகிறார்.
தொ.கூ: ஏப்ரல் 1 அன்று நடந்த வேலை நிறுத்தப் போராட்டம் எவ்வாறு நடைபெற்றது?
பி.பே: மிகவும் நன்றாக நடைபெற்றது. போராட்டத்தை நடத்தும் வரை நாங்கள் பதட்டத்தில் இருந்தோம். 3 வருடங்களுக்கு முன்னர் தான் ஏற்கனவே ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினோம். தற்போதை வேலை நிறுத்தத்தால் என்ன நடந்து விடப் போகிறது என்று கேள்விகள் எழுந்தன. அதனால் நாங்கள் போராட்டத்தை நடத்தலாமா வேண்டாமா என்று உறுப்பினர்களிடம் வாக்கு நடத்தினோம். அனைவரும் செய்யலாம் என்று கூறியதால் போராட்டத்தை நடத்த திட்டமிட்டோம்.
போராட்டத்திற்கு முன்னர் ஊடகங்கள் எங்களுடைய முடிவை மோசமாக விமரிசனம் செய்தன. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாததால், அவர்களை பார்த்து கொள்ள வேலை செய்யும் பெற்றோர்களுக்கு கடினம் என்று அவர்கள் எங்களை விமரிசனம் செய்தனர். அதனாலும் எங்களுக்கு எவ்வாறு இதற்கு ஆதரவு வரும் என்ற பதட்டமும் இருந்தது. ஆனால் போராட்டம் மிக மிக வெற்றியாக அமைந்தது.
காலையில் அனைத்து பள்ளிகளின் முன்னர் அந்த பள்ளியின் ஆசிரியர்கள் சேர்ந்து பேனர்களை பிடித்து மறியல் நடத்தினர். அந்த பக்கம் சென்ற கார்கள் ஹார்ன் அடித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். அதனால் நாங்கள் மிகவும் உற்சாகம் அடைந்தோம். மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் எங்களுடன் வந்து போராடினர். எங்கள் முதல்வர் எங்களுடன் போராடுவதற்கு அவரால் முடியவில்லை என்றாலும் எங்களை வந்து பாராட்டி சென்றார்.
அதற்கு பின்னர் நாங்கள் அருகில் இருந்த நாபிஸ்கோ தொழிற்சாலைக்கு சென்று போராடினோம். ஏனென்றால், நாபிஸ்கோ தொழிற்சாலையை மூடுவதற்கு நிர்வாகம் முயற்சித்து வருகிறது. அதனால் 700 தொழிலாளர்கள் வேலை இழக்க உள்ளனர். பல நாபிஸ்கோ தொழிலாளர்கள் எங்களுடைய மாணவர்களின் பெற்றோர்கள் அதனால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக போராடினோம்.
மாலை சிகாகோ ஆசிரியர்கள் அனைவரும் நகர மையத்தில் பேரணிக்காக கூடினோம். அற்புதமான அனுபவம் அது. ஆசிரியர்கள் மட்டுமல்ல அனைத்து வயதிலும் மக்கள் கூடியிருந்தனர். மெக்சிகோ, டெட்ராய்ட், கலிபோர்னியா, மிசிகன் போன்ற பல இடங்களில் இருந்து சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். செவிலியர்கள் சங்கம், பிளம்பர்கள் சங்கம் என பலதரப்பட்ட தொழிலாளர்கள் சங்கம் அங்கு இருந்தனர். மிகவும் அற்புதம்.

தொ.கூ: ஊடகங்கள் போராட்டத்தை எவ்வாறு வர்ணித்தன?
பிபே: போராட்டத்திற்கு முன்னர் எங்களை மோசமாக விமரிசித்தனர். ஆனால் போராட்டத்திற்கு பின்னர் ஊடகங்கள் எங்கள் போராட்டத்தை நடுநிலையாக சித்தரித்தனர். போராட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டனர், எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை போட்டோக்களுடன் வெளியிட்டிருந்தனர். குறிப்பாக முற்போக்கு ஊடகங்களில் இது காணப்பட்டது.

தொ.கூ: ஆசிரியர் சங்கத்தை குறித்து பொதுமக்களின் கருத்து என்னவாக இருந்தது?
பி.பே: கல்வி குழு(Board of Education)வை விட ஆசிரியர் சங்கம் மக்களால் விரும்பப்படுகிறது. முன்னார் குழு தலைவர் பார்பரா பென்னெட், சில அமைப்புகளுக்கு பணம் கொடுத்ததால் வேலையை விட்டு நீக்கப்பட்டார். அதற்கு முன்னர் இருந்த ஜான்-கிளாட் பிரிசார்ட் தலைமையில் பள்ளிகள் மூடப்பட்டன. இந்த பதவியில் இருப்பவர் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்படவில்லை, நியமிக்கப்படுகிறார். தற்போதைய புது தலைவர பாரஸ்ட் க்ளேபூல் ஆசிரியர் வேலை நிறுத்தத்தால் தான் மிகவும் ஏமாற்றம் அடைவதாகவும், இதனால் மாற்று ஏற்பாடு இல்லாமல் பெற்றோர் அவதிப்படுவர் என்றும், மாணவர்களுக்கு இரண்டு வேளை உணவு கிடைக்காது என்றும் ஆசிரியர்கள் சுயநலவாதிகள் என்றும் வேலை நிறுத்தம் சட்டத்திற்கு புரம்பானது என்றும், பெற்றோருக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதம் ஆசிரியர்களை சஞ்சலத்திற்கு உள்ளாக்கியது, அவர்கள் இதை நடத்தவேண்டுமா என்று சந்தேகப்பட ஆரம்பித்தனர். ஆனாலும், கல்வி குழுவை விட சங்கத்திற்கு அங்கீகார மதிப்பீடு(Approval Rating) அதிகமாக உள்ளது. அவர்கள் கல்விகுழுவை நம்பவில்லை என்பது நன்றாக தெரிகிறது. சங்கத்தை நம்புகிறார்களா என்பது தெரியவில்லை.

தொ.கூ: உங்களுடைய மாணவர்களின் சமூகப் பொருளாதார பிண்ணனி என்ன?
பிபே: நான் கற்பிக்கும் பள்ளி உள்ள ஆஷ்பர்னில் 50சதம் லத்தீன் அமெரிக்கர்களும், 50சதம் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் உள்ளனர். இது 100 சதம் குறைந்த வருமானம் வாங்கும் மக்களுக்கு அருகில் உள்ளது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் இரண்டு வேளை உணவு இலவசமாக கிடைக்கிறது.

தொ.கூ: உங்களுடைய ஆசிரயர் அனுபவத்தை பற்றி கூறமுடியுமா?
பிபே: நான் என்னுடைய பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கலை கற்பிக்கின்றேன. ஒவ்வொரு நாளும், 5 குழுக்களாக 130 மாணவர்களுக்கு கற்பிக்கிறேன். வாரத்தில் ஒவ்வொரு நாளும் வௌ;வேறு 130 மாணவர்கள. முன்னர் ஒவ்வொரு வகுப்பிலும் 45 மாணவர்கள் இருந்தனர், தற்போது 37 மாணவர்கள் இருக்கின்றனர். இத்தனை மாணவர்களுக்கு பாடம் எடுப்பது மிகவும் கடினம். பல மாணவர்களுக்கு நடத்தை குறைபாடுகள் மற்றும் கண்டறியப்படாத கற்றல் குறைபாடுகள் இருக்கின்றன. ஆசிரியர்கள் தானே கண்டுபிடிக்க வேண்டும்.

தொ. கூ: உங்கள் மாணவர்களின் பெற்றோர்களுடன் நீங்கள் உரையாடுகிறீர்களா?
பி.பே: நான் மாணவர்களின் பெற்றோர்களை அடிக்கடி தொடர்பு கொள்கிறேன். ஆனால் பல நேரம் அது மாணவர்களின் நடத்தைகள் குறித்தே உள்ளன. ஒரு மாணவரோடு இணைந்து செயல் புரிவதில் பிரச்சனைகள் அடிக்கடி எழுந்தால், முதலில் அந்த மாணவரோடு பேசுவேன். அதற்கு பலன் இல்லை என்றால், மாணவரின் பெற்றோரை தொடர்பு கொள்வேன். பல நேரம் அவர்களை தொடர்பு கொள்வது கடினமாக இருக்கும். 5 பேரோடு தொடர்பு கொண்டால், 2 பெற்றோர்கள் தான் தொலைபேசியில் பதில் சொல்வார்கள். பல நேரம் அவர்கள் தங்கள் குழந்தைகளை கூட்டி செல்ல வரும் போது நர்ன அவர்களுடன் பேசுவேன்.
பெற்றோருக்காக கலை வகுப்புகள், செராமிக வகுப்புகள், சித்திரம் வகுப்புகள் ஏற்பாடு செய்தேன. பல பெற்றோர்கள் வருவதாக ஒப்பு கொண்டனர். ஆனால் வகுப்புகளுக்கு வருவதில்லை. இது ஒரு பெரிய குறைபாடு. சமூக மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களி;ன் தேவைக்கேற்ப திட்டங்களை வகுப்பதற்கு எங்களுக்கு ஒரு முழுநேர ஒருங்கிணைப்பாளர் தேவை. நான் இன்னும் செய்ய ஆசைப்படுகிறேன். ஆனால் முடியவில்லை.

தொ. கூ: வேலை நிறுத்தம் குறித்து, மாணவர்களுடனும், பெற்றோர்களுடனும் விவாதித்தீர்களா?
பி.பே: மாணவர்களுடன் நல்ல உரையாடல்கள் இது குறித்து நடந்தது. ஆனால் பெற்றோர்களுடன் இது குறித்து நான் மிக விவாதிக்கவில்லை. மாணவர்கள் போராட்டம் குறித்து நிறைய கேள்விகள் எழுப்பினர். அப்போது எங்களுக்கு வெள்ளி(ஏப்ரல் 1) அன்று பள்ளி இருக்காதா என்று என்னிடம் கேட்டனர். நான் அவர்களிடம் ஏன் பள்ளி இருக்காது என்று நினைக்கிறீர்கள் என்று திரும்ப கேட்டேன். உடனே சில மாணவர்கள் ‘ஆசிரியர்களுக்கு இன்னும் அதிக ஊதியம் வேண்டும்’ என்று கூறினர். உடனே இன்னும் சிலர் ‘இல்லை அது மட்டும் இல்லை’ என்று கூறினர். அவர்கள் பள்ளி நிதி பற்றியும், கல்விதுறை அமைப்பை பற்றியும், மேயர் மற்றும் கவர்னர் பற்றியும் பேசினர். அவர்களுக்கு இது குறித்து மற்ற ஆசிரியர்களும் விளக்கம் அளித்து இருந்தனர். அதனால் அவர்களுக்கு நிறைய விஷயம் தெரிந்து இருந்தது. இவ்வாறு பல உரையாடல்கள் நடைபெற்றன.

தொ. கூ: வேலை நிறுத்தத்தை பற்றி நாளை அவர்களுடன் விவாதிப்பீர்களா?
பி.பே: ஆம் கட்டாயமாக. மிகச் சிறிய குழந்தைகளுக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. ஏற்கனவே என்னுடைய 4ஆம் வகுப்பு மாணவர்களுடன் ‘சமூகப் போராளி’ குறித்து பாடம் நடத்தி வருகிறேன். இந்த வேலை நிறுத்தத்தை குறித்த இந்த பாடத்தில் இணைக்க உள்ளேன்.

தொ. கூ: சமூகப் போராளி குறித்து எவ்வாறு விளக்குவீர்கள்?
பி.பே: என்னுடைய 8வது வகுப்பு மாணவர்களுடன் நான் இதே பாடத்தை எடுத்த போது அவர்களுக்கு இது குறித்து தெரியவில்லை. அதனால் நாங்கள் முதலில் சில சொற்கள் குறித்து பாடம் படித்தோம். சமூகம், போராளி, கலைஞர் போன்ற வார்ததைகளை குறித்து அகராதியில் படித்தோம். பின்னர் ஒரு சமூகத்துடன் உள்ள போராளியின் உறவைக் குறித்து விவாதித்தோம். அதன் அடிப்படையில், போராளி என்பவர் ஒரு கருத்தில் நம்பிக்கை கொள்பவர் என்றும் அந்த கருத்திற்காக மற்றவரை ஒருங்கிணைப்பவர் என்றும், அதற்காக போராடுபவர் என்றும் நாங்கள் பொருள் கண்டோம்.
பின்னர் எங்களுக்கு தெரிந்த போராளிகள் குறித்து விவாதித்தோம். அனைவரும் மார்டின் லூதர் கிங் மற்றும் மால்கம் எக்ஸ் குறித்து பேசினர் ஆனால் உயிரோடு உள்ள போராளிகள் குறித்து யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்போது ஒரு பெண் மாணவர் எழுந்து ‘என்னுடைய சகோதரி’ ஒரு போராளி என்றார். பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் அமைப்பில் அவர் அங்கம் வகிப்பதாக குறிப்பிட்டார். நாங்கள் உடனே பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் என்றால் என்ன, அது எந்த பிரச்சனைக்காக நிற்கிறது என்பதை பற்றி பேசினோம். ஒரு வார்த்தை இவ்வளவு அற்புதமான உரையாடலுக்கு காரணமாக இருந்தது.
பின்னர் மாணவர்கள் போராட்ட பேனர்களை தயாரித்தனர். அதற்கான வார்த்தைகள், எழுத்துகளை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் பேசினோம். அவர்கள் ஒரு கருத்தை வைத்து ஒரு அழகான பேனர் தயாரித்தனர். பள்ளி நேரமும், வீட்டுப் பாடம் குறைவாக வேண்டும், காவல்துறை அடக்குமுறை, இன்னொரு நாட்டிலிருந்து குடிபெயர்தல் என்று பல பிரச்சனைகள் குறித்து அன்று மாணவர்கள் மத்தியில் எழுந்தது.

தொ.கூ: 2012ல் நடந்த முந்தைய வேலை நிறுத்தத்திற்கும் தற்போதைய வேலை நிறுத்தத்திற்கும் என்ன மாற்றம்?
பி.பே: 2012 வேலை நிறுத்தம் ஊதியம், மாணவர் எண்ணிக்கை போன்ற எங்களுடைய ஒப்பந்தத்தை பற்றி மட்டுமே இருந்தது. இன்னும் எங்களுடைய ஒப்பந்தம் குறித்து சரியாக பேச்சுவார்த்தை நடத்த மறுக்கின்றனர். ஆனால் தற்போதைய வேலை நிறுத்தம் எங்களுடைய மாநிலத்தின் நிதி உபயோகம் குறித்தானது. இது ஒரு பெரிய பிரச்சனை அதனால் சில ஆசிரியர்களுக்கு இதை குறித்து போராட தயக்கம் இருந்தது. ஆனால் அவர்களுக்கு பெரிய பிரச்சனை என்னவென்றால், நாம் ஒருங்கிணைத்து இவ்வாறான பிரச்சனைகளில் மாற்றம் கொண்டு வர முடியும் என்பதே. மேயரும் கவர்னரும் என்ன நிதி எங்கு ஒதுக்குகின்றனர் எனபதில் இருந்து எங்கு எந்த நிதி செல்ல வேண்டும் என்பதை மாற்றுவதற்கான சக்தி இது. வங்கிகளின் செல்வாக்கையும், பணக்காரர்களின் செல்வாக்கையும் எதிர்க்கும் சக்தி இது. இது என்னால் முடியுமா என்று சில ஆசிரியர்கள் பயம் கொண்டனர்.
இவற்றையெல்லாம் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் மாற்றி விடுமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இதில் பங்கு பெற்றதில் நான் நிறைய கற்று கொண்டேன். இவ்வாறு பங்கு பெறுவதில் அதுவே முக்கியம் என்று நான் கருதுகிறேன்: நாம் என்ன கற்கின்றோம், எவ்வாறான சமூகத்தை அமைக்கின்றோம், எவ்வாறு அடுத்த பாதையை தீர்மானிக்கின்றோம். இவை உணர்ச்சி ஊட்டும் செயல்கள்.

தொ. கூ: நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள்?
பி.பே: எவ்வாறு மாநில அரசு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்குகிறது. நாம் எவ்வாறான கடன் கொண்டிருக்கின்றோம், இந்த கடன்களுக்கான என்ன ஒப்பந்தம் போட்டுள்ளோம்? அதனால் பள்ளியின் நிலைமை என்னாவாகும்? கல்விக் குழு உறுப்பினர்கள் பேங்க் ஆப் அமெரிக்கா போன்ற வங்கிகளிடம் இருந்தும் நிதி வர்ததகங்களிடமிருந்தும் வந்தவர்கள். நாங்கள் தற்போது இருக்கும் நிலைமை பற்றி நன்றாக கற்றுக் கொண்டேன்.
மேலும் என்னை போல் இதைப் பற்றி யோசிப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்று தெரிந்து கொண்டேன. நாங்கள் எங்களுடைய மாநிலத்தில் நடப்பவை குறித்து கோபம் கொண்டுள்ளோம். இன்றைக்கு வீதியில் பல தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்துகின்றனர். சுகாதார துறை தொழிலாளர்கள்…முறையான ஊதியத்திற்காக(குறிப்பாக மணிக்கு 15$ குறைந்த பட்ச ஊதியம்) போராடும் தொழிலாளர்கள்..என ஒரு மக்கள் திரளுக்கு மத்தியில் இருப்பது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
நாம் தொழிலாளராக தனிமைப்படுத்தப் படுகிறோம் அதனால் நாம் வலுவற்று உள்ளோம். நம்முடைய வேலைகளை பார்;த்து கொண்டு நமது வாழ்க்கையை நடத்தி கொண்டு..நாம் ஒரு பெரிய சமூகத்தை சார்ந்தவர் என்று மறந்து போகிறோம். ஆனால் தொழிலாளர்களாகிய நமக்கு பெரிய சக்தி உள்ளது ஏனென்றால் உழைப்பு நம்மிடமே உள்ளது. ஒரு வேளை அந்த சக்தி மட்டும் தான் நம் கையில் இருக்கலாம் ஆனால் அது ஒரு மிகப் பெரிய சக்தி.

This entry was posted in Analysis & Opinions, Strikes, Working class and housing, தமிழ் and tagged . Bookmark the permalink.