போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் குறித்த பார்வை

போக்குவரத்து நிர்வாகம் தங்களுக்கு தர வேண்டிய 6000 கோடி ரூபாய் நிலுவை பாக்கிகளை தரக்கோரி ஆயிரக்கணக்கான மாநிலப் போக்குவரத்து தொழிலாளர்கள் மே 15 மற்றும் 16 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழிற்நுட்பத் தொழிலாளர்கள் என பெரும்பான்மையான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வேலை நிறுத்தம் ஒரு வகையில் வெற்றியடைந்தது. தொழிலாளர்கள் மத்தியில் 40 தொழிற்சங்கங்கள் இருந்தும் தொழிலாளர்கள் ஒற்றுமையோடு போராடியது இப்போராட்டத்தின் முக்கியத்துவம் ஆகும். தற்போது பணிபுரியும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மட்டுமின்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் உள்ளிட்டு போராட்டம் நடைபெற்றது.

எப்போதும் போல,  போதிய பயிற்சியில்லாத தொழிலாளர்களை தினக்கூலி அடிப்படையில் கொண்டு வந்து பேருந்துகளை இயக்கியும், சில பகுதிகளில் தனியார் பேருந்துகளை அனுமதித்தும் அரசு வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்கான பணிகளை மேற்கொண்டது. தொழிலாளர்களை பயமுறுத்துதல், குற்ற வழக்குப் பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம் எனத் தொழிலாளர்களிடம் இருந்து பயமுறுத்தி கடிதங்கள் வாங்கும் வேலைகளும் நடந்தன.

போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்ற பொய்யான தகவல்களையும் ஊடகங்கள் வாயிலாக பரப்ப மாநில அரசு முயற்சித்தது. தனியார் நிறுவனங்கள் அதிகமாக கட்டணம் வசூலிக்க ஆரம்பித்த நிலையில் பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்தது. இரண்டாம் நாளே பேச்சுவார்த்தையில் ஈடுபட அரசு மேல் நிர்ப்பந்தம் அதிகரித்தது. அனுபவம் குறைந்த போக்குவரத்து அமைச்சருடன் மூத்த அமைச்சர்களும் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் தங்களுக்கு அனுகூலமான செய்தி கிடைக்கும் எனத் தொழிலாளர்கள் மாநகரப் போககுவரத்து அலுவலகம் முன் திரள ஆரம்பித்தனர்.

ஆனால் தொழிலாளர்கள் மீது எஸ்மா சட்டத்தை பிரயோகிக்க வேண்டும் என மதுரையில் உள்ள சென்னை உயர்நீதி மன்றம் ஆணையிட்ட உடன் நிலைமை மாறியது. இதன் மூலம் வரும் பிரச்சனைகளையும், காவல்துறை நடவடிக்கைகளையும் சந்திக்க தொழிற்சங்கங்கள் போதிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் தொழிற்சங்கங்கள் கோரிய தொகையில் ஐந்தில் ஒரு பங்கை அதாவது 1250 கோடி ரூபாய் ஒதுக்குவதற்கு அரசு ஒத்துக் கொண்டது. இதில் மாணவர்களின் இலவச கட்டணத்தை ஈடுகட்டுவதற்கு அரசு ஒதுக்கியள்ள 250 கோடி ரூபாய் தவிர மற்றவை போக்குவரத்திற்கு அரசு கொடுக்கும் குறைந்த கால கடனாகும். இதை போக்குவரத்து கழகம் அரசுக்கு திரும்ப அளிக்க வேண்டும்.

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ஒரு வேலை நிறுத்தம் ஏன் இவ்வளவு குறைவான பலனை தந்துள்ளது? தொழிற்சங்க கோரிக்கைகளும், யுக்திகளும் போதுமானவையாக இருந்தனவா? இது குறித்தான எங்கள் ஆய்வை இங்கு பதிவு செய்துள்ளோம்.

முந்தைய வேலை நிறுத்தங்களும் தற்போதைய வேலை நிறுத்தமும்

இதற்கு முன்னர் 2000ல் போனஸ் கோரியும், 2014ல் ஊதிய உயர்வு கோரியும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டனர். இம்முறை தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளை மட்டுமே தொழிற்சங்கங்கள் கோரினர். ஓய்வூதியம், அகவிலை பாக்கி, வைப்புநிதி, விடுமுறை ஊதியம், பணிக்கொடை, இழப்பீடு கட்டணம், போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டுறவிற்கு போய் சேர வேண்டிய தொகை என தற்போதைய தொழிலாளர்களுக்கும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் எட்டு போக்குவரத்துக் கழகங்கள் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை சூ6000 ஆகும்.

பல்வேறு சமூகப் பாதுகாப்புகள் உள்ளதனால் போக்குவரத்து துறையில் குறைந்த ஊதியத்துடன் பணிபுரியும் தொழிலாளர்களின் சமூகப்பாதுகாப்பிற்கான ஊதியப் பிடித்தத்தை கழக நிர்வாகம் செலுத்தாதது மிகுந்த அநீதி செயலாகும். தங்களுடைய ஊதியத்தை போக்குவரத்து கழகங்கள் கொள்ளையடிப்பதை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை தொழிற்சங்க கோரிக்கைகள் வெகுவாக ஈர்த்தன. அதனால் தான் இம்முறை ஆளும் அரசின் தொழிற்சங்கமான அண்ணா பேரவைத் தொழிலாளர்கள் கூட இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நஷ்டத்தில் ஓடுவதனால் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை தருவது சாத்தியமில்லை எனப் போக்குவரத்துக் கழக நிறுவனங்கள் கூறுகின்றன. போக்குவரத்து கழகங்கள் 2981.57 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக அரசு ஆணைகள் குறிப்பிடுகின்றன. மார்ச் 2017 வரை இழப்புகளை கணக்கிட்டால் போக்குவரத்து இழப்பு 18000 கோடி ரூபாயாகும். போக்குவரத்து கழகங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட அரசு முன் வர வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் கோரிக்கைகள் விடுத்தனர். நஷ்டத்தை ஈடுகட்ட அதிக வட்டியில் கடன் கொடுப்பதை விட்டு விட்டு மானியங்கள் தர வேண்டும் என அவர்கள் கோருகின்றனர். போக்குவரத்து கழகங்களின் நிதிப் பற்றாகுறையை தீர்க்காமல் எந்த ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையிலும் பயன் இல்லை என தொழிற்சங்கங்கள் கருதுகின்றன.

நஷ்டத்தில் ஓடுவதனால் தொழிலாளர்களின் நிலுவை பாக்கியை அரசு தர முடியாது எனும் கூற்று சரியா?

தமிழ்நாட்டில் எட்டு அரசு கழகங்களால் பொதுப் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படுகின்றன. நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இவை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மாநில அரசுதான் போக்குவரத்து கழகங்களை நடத்தி வருகிறது. அரசு நிர்வகாத்தின் கைகளில் தான் முடிவு எடுக்கும் அதிகாரமும் கழகங்களை நடத்தும் அதிகாரமும் உள்ளது. போக்குவத்து துறையின் செயலாளர் போக்குவரத்து கழகங்களின் தலைவராகவும் பொறுப்பில் உள்ளார், மேலும் தமிழ்நாடு போக்குவரத்து நிதி வளர்ச்சி கழகத்தின் இயக்குனராகவும் செயல்படுகிறார்.

Stealing a Lighter Moment – Worker dances to tune

செயல்பாட்டு செலவுகளில் 50சதம் தொழிலாளர்களின் ஊதியத்திற்காக செலவு செய்யப்படுவதாக தொழிலாளர் துறை கூறுகிறது. மேலும் சேவை கட்டணங்கள் குறைவாக இருப்பதாகவும், கடந்த 16 ஆண்டுகளாக கட்டணங்கள் கணிசமாக ஏற்றப்படவில்லை எனவும் கடந்த கட்டண உயர்வு 2011ல் நடைபெற்றதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் 2012ல் கட்டண உயர்வு குறித்து தொழிலாளர் கூடம் மேற்கொண்ட ஆய்வில் எரிபொருள், உரிமங்கள், சுங்கக் கட்டணம் ஆகியவற்றில் போக்குவரத்து துறையின் செலவுகள் அதிமாக உள்ளதை எடுத்துரைத்தோம். டீசல், வரிகள், கடன் வட்டிகள், சுங்க வரிகள் ஆகியவை போக்குவரத்து செலவுகளில் 40சதப் பங்கு வகிக்கின்றன. ஒரு பக்கம் தொழிலாளர்களுக்கு அவர்களுக்கு உரிய தொகைகளை செலுத்த முடியவில்லை என்று கூறும் அரசு இன்னொரு பக்கம் போக்குவரத்து கழகங்களில் இருந்து வரிகiளையும் கடன் வட்டிகளையும் வசூலித்து வருகிறது.

மேலும் மாணவர்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ்கள் என சலுகைகளை அளித்து அதற்கான செலவுகளை ஏற்க மறுக்கிறது. இலவச பஸ் பாஸ்களுக்காக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை 2262.97 கோடி ரூபாயாகும். இதில் 2017-18ல் மட்டும் கொடுக்க வேண்டிய தொகை ரூ540.9905 ஆகும். பேச்சுவார்த்தையில் அரசு வெறும் 250 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்க முன் வந்துள்ளது. போக்குவரத்து கழகங்களுக்கு இலவச பஸ் பாஸ்களால் ஏற்படும் இழப்புகளை இது ஈடுகட்டாது எனத் தொழிற்சங்கங்கள் கருதுகின்றன. அரசின் கொள்கைகளால் போக்குவரத்து கழகங்கள் இன்று நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்திற்கு இன்று அளிக்கும் மானியங்களை தொழி;றசங்கங்கள் மேற்கோளாக காட்டுகின்றனர். இரு கழகங்களும் மக்களுக்கான அடிப்படைத் தேவையான ஒரு சேவையை கொண்டு செல்கின்றனர். ஆனால் மின்சாரத் துறையின் நிதிப் பற்றாக்குறைக்கு அரசு பொறுப்பெடுத்து கொள்ள தயாராக உள்ளது. மின்சாரத் துறைக்கு 9000 கோடி ரூபாய் மானிய ஒதுக்கீடு செய்தது மட்டுமல்லாமல், அரசு மின்சாரத் துறைக்கு நிதி திரட்ட பத்திரம் ஒன்றை வெளியிட்டு அதற்கான வட்டியை தர முன் வந்துள்ளது. இது தவிர மின்சார வாரியத்தின் 22000 கோடி ரூபாய் கடனையும் பங்கு முதலீடு உதவி வழியாகவும், மத்திய அரசின் உதய் திட்டத்தின் மூலமாகவும் மாநில அரசு பொறுப்பெடுத்துள்ளது.

மற்ற பொது சேவைகளுக்கு அரசு பொறுப்பெடுப்பதைப் போல மலிவு போக்குவரத்து இந்திய குடிமக்களின் உரிமையாகக் கருதி போக்குவரத்துத் துறைக்கும் பொறுப்பெடுக்க வேண்டும் எனத் தொழிலாளர்கள் கருதுகின்றனர். அரசுத் துறையின் தவறான நிர்வாகத்திற்கு ஏன் தொழிலாளர்களை பழிவாங்க வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.

தொழிலாளர் நிர்வாகத்தின் கீழ் போக்குவரத்துத் துறை

மூத்த அதிகாரிகளின் மத்தியில் உள்ள ஊழல், மோசமான திட்டமிடல், மேலிருந்து கீழே பாயும் அதிகாரத்தன்மை, அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் அதிகப்படியான ஊதியம் மற்றும் பணப்பயன்கள் எனப் பல நிர்வாகப் பிரச்சனைகள் போக்குவரத்துத் துறையில் உள்ள போது இழப்புகள் ஏன் தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட வேண்டும் எனத் தொழிலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

உதாரணமாக வால்வோ ஏசி பேருந்துகளை வாங்குவதற்கு ஏராளமான பணம் செலவளிக்கப்பட்டது. ஆனால் சில பேருந்துகளே இன்று இயங்கும் நிலையில் உள்ளன. இவற்றை பராமரிப்பதற்காக போக்குவரத்து கழகம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பழுதுபட்ட வாகனங்களில் இருந்து பாகங்களை எடுத்து மற்ற பேருந்துகளை பராமரித்து வருகின்றனர். சில இடங்களில் பாகங்களை விற்று விடுகின்றனர். பராமரிப்பு வேலைகளை போக்குவரத்து கழகம் தனியாரிடம் விட்டு வருகின்றது. ஆனால் இவை சரியாக பராமரிக்கப்படுவதில்லை. பழுதடைந்த வாகனங்களை ஓட்டும் நிலைமைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பழுதடைந்த சாலைகள், போக்குவரத்து நெரிசல் என்று பலப் பிரச்சனைகள் இருந்தும் அன்றாட இலக்குகளை தொழிலாளர்கள் முடிக்க வேண்டும்.

இப்பிரச்சனைகள் தொழிலாளர்களுக்கு உரித்தானது மட்டுமல்ல. நுகர்வோர்களையும் இது பாதிக்கிறது. பாதுகாப்பு மிகுந்த தரமான போக்குவரத்து பற்றி போக்குவரத்துக் கழக நிர்வாகமோ அரசோ கவலைப்படுவதாக தெரியவில்லை.

இந்நிலையில் தொழிலாளர்கள் நிர்வாகத்தில் போக்குவரத்து துறையை கொண்டு வருவது இப்பிரச்சனைகளுக்கு நீண்ட கால தீர்வாக இருக்கும். இதற்கான வழிகளை தொழி;ற்சங்கம் ஆராய வேண்டும். ஏற்கனவே வேலை நிறுத்தங்களையும், இழப்புகளையும் காரணம் காட்டி அரசு பொதுத் துறைகளை தனியார்மயமாக்கி வருகிறது. ஓட்டுனர்கள், நடத்துனர்கள், பராமரிப்புத் தொழிலாளர்களுக்கு தான் இந்த பிரச்சனைகள் குறித்து நேரடி அனுபவம் உள்ளது. அரசினால் இப்பிரச்சனைகளை தீர்க்க முடியாத நிலையில் தொழிலாளர்கள் போக்குவரத்து துறையை கையில் எடுப்பதே நிரந்தரத் தீர்வாகும்.

செய்ய வேண்டியது என்ன?

போக்குவரத்து துறையில் அடிப்படை மாற்றங்கள் தேவை எனத் தொழிற்சங்கங்கள் கூறினாலும் தொழிற்சங்கங்களின் பார்வை உடனடிப் பிரச்சனைகளை நோக்கியே உள்ளது. குறிப்பாக அரசு போக்குவரத்துத் துறையின் இழப்பை அரசு ஈடுகட்ட வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கைகள் வைத்துள்ளன. ஆனால் இதே பிரச்சனைகள் திரும்ப வரும் என்ற நிலையில் நிரந்தரத் தீர்வுகளுக்கான கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைக்கவில்லை. தொழிலாளர்கள் மத்தியில் ஆலோசித்து தொழிலாளர்களின் தீர்வுகளை மக்கள் முன் வைப்பதற்கான எந்த கட்டமைப்புகளையும் தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தவில்லை.

வேலை நிறுத்தத்திற்கு முன்னர் பல்வேறு பகுதிகளிலும், பேருந்து நிலையங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் இக்கோரிக்கைகளில் போக்குவரத்தை உபயோகிக்கும் வெகுஜன மக்கள் குறிப்பாக உழைக்கும் மக்களை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. போக்குவரத்து துறை இழப்பு குறித்து அரசின் வாதத்தை முறியடிப்பதற்கான கருத்துகள் வெளிப்படுத்தப்படவில்லை. 2011ல் பேருந்து கட்டணம் உயர்த்துவதற்கு இதே காரணங்களை தான் அரசு கூறியது. ஒரு பக்கம் பணக்காரர்களுக்கும், தனியார் முதலாளிகளுக்கும் வரிசலுகைகளை அளிக்கும் மாநில அரசு உழைக்கும் மக்கள் பயன்படுத்தும் பொதுத் துறைக்கு வரி சலுகைகளை கொடுக்க மறுக்கின்றன. மாறாக தொழிலாளர்களின் ஊதியத்தை திருடுவதையும் உழைக்கும் மக்களின் கட்டணத்தை உயர்த்துவதையும் அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. இப்பிரச்சனைகளை ஒன்றிணைத்து போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையே கூட்டணியை ஏற்படுத்தும் வாய்ப்பை தொழிற்சங்கங்கள் தவற விடுகின்றன. மேலும் இதே பிரச்சனைகளை சந்தித்து வரும் தனியார் ஓட்டுனர்கள் குறிப்பாக டாக்சி ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியிலும் ஆதரவு திரட்ட தொழிற்சங்கங்கள் முயற்சிக்கவில்லை.

தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவில்லை என்றால் எஸ்மா சட்டத்தை உபயோகிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதி மன்ற ஆணை வேலை நிறுத்தம் முழுமையாக வெற்றியடையாததற்கு முக்கிய காரணம் ஆகும். தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் வாதத்தை கேட்காமலேயே அவர்களை வழக்கில் இணைக்காமலேயே நீதிமன்றம் தன்னிச்சையாக இந்த உத்தரவை பிறப்பித்தது. தொழிலாளர்கள் தங்களுக்குரிய ஊதியத்தை பெறாமலேயே வேலை செய்ய வேண்டும் என்ற கூற்றை நீதிமன்றம் ஆதரிக்கிறது என்பது இதில் இருந்து புலப்படுகிறது. இது தொழிலாளர்களை கொத்தடிமையாக்கும் செயலாகும் மேலும் அரசியலமைப்பு அடிப்படை உரிமை 23ஐ மீறுவதாகும். தொழிலாளர்கள் ஏன் வேலை நிறுத்தத்தில் இறங்கினர் என்பதை பற்றி ஒன்றும் கூறாமல், அரசு தன் கடமையை செய்ய தவறிய போதும் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப வேண்டும் எனக் கோரி நீதிமன்றம் விதிமுறை அடிப்படையில் நடுவம் செய்து நடுநிலையை நாட்டத் தவறிவிட்டது.

தொழிலாளர்களின் போராட்டங்களை, நியாயமான கோரிக்கைகளை கட்டுப்படுத்த அரசு என்ன வேண்டுமென்றாலும் செய்ய தயாராக உள்ளது. ‘அத்தியாவசிய சேவைகள்என்ற வரைமுறையை அரசு பல்வேறு துறைகளில் புகுத்தி வருகிறது. அத்தியாவசிய சேவைகளை தடையின்றி தருவதற்கு அரசு கடமைப்பட்டுள்ளது. ஆனால் அது சேவைகளுக்காக தங்கள் உழைப்பை செலுத்தும் தொழிலாளர்களின் சுரண்டலின் அடிப்படையில் இருக்கக் கூடாது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சனையில் தொழிலாளர்கள் விரோதப் போக்கை நீதிமன்றம் எடுத்துள்ள நிலையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை மறுக்கப்படும் நிலைமை அதிகரித்துள்ளது. இம்மாதிரியான தொழிலாளர் விரோத சட்டங்களை நீக்குவதற்கு தொழிற்சங்கங்கள் பாடுபடவேண்டும்.

வேலை நிறுத்தம் முடிந்த பின்னரே எஸ்மா சட்டம் குறித்த ஆணையை ரத்து செய்ய தொழிற்சங்கங்கள் நடவடிக்கைகள் எடுத்தனர். ஆனால் ஒரே நாளில் வேலை நிறுத்தப் போராட்டத்தை பாதித்தது. எஸ்மா சட்டத்தை அரசு பிரயோகித்திருந்தால் வேலை நிறுத்தக் கோரிக்கைகளை விட்டு விட்டு எஸ்மா சட்டத்தின் பாதிப்புகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் எனத் தொழிற்சங்தத் தலைவர்கள் கூறினர். இதனால் தான் பேச்சுவார்த்தையில் சமரச நிலைக்கு தொழிற்சங்கங்கள் சென்றனர். ஆனால் எஸ்மா சட்டம் பிரயோகிக்க அரசு முயற்சி செய்யும் என்பது அவர்களின் அனுபவம் அவர்களுக்கு உணர்த்தியிருக்க வேண்டும். அதற்கான யுக்திகளையும் தொழிற்சங்கங்கள் யோசித்திருக்க வேண்டும். காவல் நடவடிக்கைகளை தங்களால் மேற்கொள்ளமுடியாது என்று தொழிற்சங்கவாதிகள் கணித்திருந்தால் மற்ற வகையான வேலை நிறுத்தநடவடிக்கைகளில் அவர்கள் இறங்கியிருக்கலாம். உதாரணமாக எங்களுடன் பேசிய ஒரு ஓலா ஓட்டுனர் கொடுத்த யோசனை மிகவும் சிறப்பானதாகும். தொழிலாளர்கள் இலவசமாக பேருந்தை ஓட்டியிருக்கலாம் அல்லது கட்டணத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையில் செலுத்தியிருக்கலாம் இதன் மூலம் எஸ்மா சட்டம் பிரயோகிக்க வழியில்லாமல் ஆனால் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்ட வடிவை எடுத்திருக்கலாம்.

மே 13 ல் இருந்து ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தொழிலாளர்களின் கோரிக்கைகள் எவ்வளவு நிறைவேற்றப்படும் என்பது இனிமேல் தெரியும். வேலை நிறுத்தம் மூலம் போக்குவரத்து தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் மேற்கொண்ட சிரமங்கள் தொழிலாளர்களின் உடனடி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் என நம்புகிறோம். அதே சமயம் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் இணைந்து போக்குவரத்துத் துறையை நிர்வகிப்பதற்கான யுக்திகளை நோக்கி இடதுசாரி தொழிற்சங்கங்கள் செல்ல வேண்டும்.

This entry was posted in Analysis & Opinions, Featured, Public Sector workers, Strikes, Workers Struggles, Working Class Vision, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.