எது மக்கள் விரோதம்? “தீக்கதிர்” பத்திரைக்காக தோழர் எஸ்.வி.வேணுகோபாலன்

என்னடா, இரண்டு நாள் அகில இந்திய அளவில் அனைத்துச் சங்க வேலைநிறுத்தம் வீச்சோடு நடைபெற இருக்கிறதே, அதைப் பற்றி ஏதாவது குழப்படி வேலையை இன்னும் செய்யவில்லையே தினமணி நாளிதழ் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்….எழுதிட்டாங்கய்யா எழுதிட்டாங்கய்யா ! பிப்ரவரி 20, 21 இரண்டு நாள் வேலைநிறுத்தம் மக்கள் விரோதப் போராட்டமாம்! திருவாளர் இரா சோமசுந்தரம் என்பவர் பிப்ரவரி 19 தேதிய தினமணியின் நடுப்பக்கத்தில் இந்தத் தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையில் சிதறும் முத்துக்களைப் பாருங்கள்:
1. இரண்டு நாள் போராட்டம் என்? 2. எல்லாத் துறைகளும் ஒரே நாளில் ஏன் வேலைநிறுத்தம் செய்யவேண்டும்? 3. கோரிக்கை நிறைவேறாவிட்டால் என்ன லாபம் ? 4. கோரிக்கை நிறைவேறிவிட்டால் தொழிலாளர் நலன் மட்டும் காக்கப்படுவது வெற்றியா?
சரி இந்தப் புரிதல் அற்ற கட்டுரையாளருக்கு இப்படியான கேள்விகளுக்கு விளக்கம் சொல்லலாம் என்று பார்த்தால், தொடக்கத்தில் தென்பட்ட தெளிவின்மை படிப்படியாய்ப் பரிணமித்துக் கட்டுரையை எங்கோ கொண்டு போய் முடித்திருக்கும் அவரை என்ன சொல்லித் தெளிவிப்பது என்று புரியவில்லை. இருந்தாலும் வாசகர்களையும் சேர்த்துக் குழப்பி இருப்பார் என்பதால் மோசமான அந்தக் கட்டுரைக்கு நாம் எதிர்வினை செய்தே தீரவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
ஆளும் கட்சி சங்கம் வேலை நிறுத்தத்தில் பங்கெடுக்காது, ஆகவே எதிர்க்கட்சி போராட்டம் தோல்வி என்று அரசு அறிவிக்கும் என்று எழுதுகிறார். அப்புறம், அப்படியே போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றாலும் விலைவாசி குறையாது, கல்வி கட்டணம் குறையாது, எதுவும் மாறாது, எதற்காக இந்த போராட்டம், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த மட்டுமா என்று அப்பாவி மாதிரி கேட்கிறார்
அதற்கும் ஒரு படி மேலே போய், அரசு வங்கிகள் வேலைநிறுத்தம் செய்யும்போது, மக்கள் அந்த இரண்டு நாள் தனியார் வங்கிக்குள் போவார்களாம். அந்த வசதியை அனுபவித்துவிட்டு தனியாரே பரவாயில்லை என்று முடிவு செய்வார்களாம். அது தேவையா என்கிறார்.
கட்டுரையாளருக்கு, முதற்கண் எந்தக் கோரிக்கைகளின் மீது யார் யார் இந்தப் போராட்டத்திற்கான அறைகூவல் கொடுத்துள்ளனர் என்று தெரியவில்லை இவ்வளவு மெனக்கெட்டு எழுதியவர் இணையத்தில் தேடித் பார்த்திருந்தாலே இந்த விவரம் எல்லாம் கிடைத்திருக்கும். கோரிக்கைகளின் நோக்கம் என்ன, அரசின் போக்கு என்ன, இது தவிர்த்திருக்கக் கூடிய போராட்டமா….உலக நாடுகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது…உள்ளபடியே தொழிற்சங்கங்கள் போராடுவது நியாயமான அடிப்படையில் தானா என்றெல்லாம் அவர் யோசித்திருக்க முடியும். அதற்கு தொழிற்சங்கங்கள் ஐந்து மாத அவகாசம் கொடுத்திருந்தன. செப்டம்பர் 2012ல் விடுக்கப்பட்ட இந்த போராட்ட அறிவிப்பை பிரதமர் மன்மோகன் சிங் எப்படி இரண்டு நாளுக்குமுன் தான் கணக்கில் கொண்டு இரண்டு வார்த்தை பேசினாரோ, கட்டுரையாளருக்கும் அது தான் முதல் தகவல் போலிருக்கிறது பத்திரிகையில் எழுதுபவர் செய்தித் தாள் எல்லாம் தொடர்ந்து பார்க்கவேண்டாமா..
ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான ஐ என் டி யு சி சங்கமும் உள்ளடக்கிய அனைத்து மத்திய சங்கங்களின் ஒருமித்த முடிவுதான் இந்தப் போராட்டம் என்பதை சோமசுந்தரம் தெரிந்து கொள்ள வேண்டும். இடது சாரி கருத்தாக்கம் கொண்டுள்ள சி ஐ டி யு, ஏ ஐ டி யு சி இவர்களோடு பாரதீய ஜனதா கருத்தியலில் இயங்கும் பி எம் எஸ், இன்னும் ஹெச் எம் எஸ்…..என பதினோரு மத்திய சங்கங்களும், துறைவாரி சம்மேளனங்களும், பல நூறு தொழிற்சங்கங்களும் கூட்டாக விடுத்திருக்கும் அறைகூவல் இந்த இரண்டு நாள் போராட்டம். அரசு அறிவிப்பில் உத்தரவாதம் இல்லை என்று  இடித்துப் பேசியிருப்பது ஐ என் டி யு சி தான்.
விலைவாசியைக் கட்டுப்படுத்து என்று போராடுவது எப்படி மக்கள் விரோத போராட்டம் ஆகும் என்பதை இரா.சோ விளக்க வேண்டும். கடந்த ஆறேழு ஆண்டுகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் என அத்தியாவசிய பொருள்கள் பலவற்றின் விலைகளும் பல மடங்கு ஏறியுள்ளன. பெட்ரோல் விலையில் தனது கட்டுப்பாட்டை விலக்கிக் கொண்டுவிட்ட மத்திய அரசு, டீசல் விலையை மாத மாதம் உயர்த்துவேன் என்று சொல்லிவிட்டது. பெட்ரோல் விலையோ எப்போது உயரும் என்று தீர்மானிக்க முடியாதபடி தாறுமாறாக ஏறிக்கொண்டே இருக்கிறது. அண்மையில், திரிபுரா தேர்தல் முடியக் காத்திருந்த ஆட்சியாளர்கள் மறுநாளே ஓசைப்படாமல் பெட்ரோல் விலையை ரூ 1.50 உயர்த்தி முடித்தனர். விலைவாசியால் பாதிப்புறும் மக்கள் பக்கம் நின்று போராடுவது மக்கள் விரோதப் போராட்டம் என்றால், மத்தியில் உள்ள ஆட்சி மக்கள் நலன் காக்கும் ஆட்சி என்று சொல்கிறாரா சோமசுந்தரம்?
நிரந்தரத் தொழிலாளிகளை நியமிக்காமல், அவர்களுக்குரிய ஊதியம், சீருடை இன்ன பிறவற்றை மறுப்பதற்காக வேலைகளை அவுட்சோர்சிங் என்ற பெயரில் வெளியாட்களிடம் கொடுத்து முடித்துக் கொள்கின்றன தொழில் நிறுவனங்கள். இந்த நவீன சுரண்டலை அம்பலப்படுத்தி எதிர்த்துப் போராடுவது, பல லட்சம் புதிய வேலைவாய்ப்புகளுக்காகக் குரல் கொடுப்பது எப்படி மக்கள் விரோதப் போராட்டம் ஆகும்? வங்கிகளைத் தனியாரிடம் தாரை வார்க்காதே என்று சொல்வது பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் சேமிப்பைப் பாதுகாக்கும் விஷயம் ஆயிற்றே, இது எப்படி மக்கள் விரோதச் செயலாகும் ?
இப்படி, மக்கள் நலன் சார்ந்த விஷயங்களின் அடித்தளத்தில் தங்களுக்குரிய பணி நிலைமை முன்னேற்றத்திற்கான குரலை எழுப்புவது தானே ஒரு தொழிற்சங்க அடிப்படை கடமை ? அதைச் செய்வது எந்த விதத்தில் தவறான அணுகுமுறையாக இருக்க முடியும்?
கல்வியையும், மருத்துவத்தையும் அரசுகள் தங்களது பொறுப்பிலிருந்து கை உதறிவிட்டு விட்டதால், லாபவெறி பிடித்த உள்நாட்டு தனியார் வசம் சிக்கிக் கொண்டு தவிக்கும் அப்பாவி மக்கள் அன்றாடம் தவிப்பது, பாதிப்புற்று நிற்பது இரா.சோமசுந்தரம் அவர்கள் பார்வையில் விழவே விழாதா…அந்தக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவது மட்டும் எப்படி மக்கள் விரோதமாக ஆகும்?
 பாரிசில், மாட்ரிட் மாநகரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஏதென்ஸ் நகரில்….மக்கள் திரள் வீதிகளில் ஆவேசமாக பாடிக் கொண்டும், முழக்கங்கள் எழுப்பியபடியும் போராடுவதை எப்படி பார்க்க மறந்தார் சோமசுந்தரம்?சந்தைப் பொருளாதாரக் கொள்கைகள் பொருளாதாரத்தைச் சீரழித்து, மக்களின் வாழ்வாதாரத்தையும் பாழாக்கி விட்டதற்கு எதிரான கோப அலைகள் வால் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டமாக அமெரிக்காவில் வெடித்ததைக் கூட சோமசுந்தரம் தேர்வுக்கு இந்தக் கேள்வி வராது என்பது மாதிரி படிக்க மறந்து விட்டாரா?
படிப்படியான போராட்டங்களாலும் விடாப்பிடியான எதிர்ப்புகளாலும் தான் அரசின் சீர்திருத்த தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டது என்றும், இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தால் பல மக்கள் விரோத நடவடிக்கைகளை அரசு அமலாக்க முடியாமல் திணறியது என்பதும் அறியாதவரா கட்டுரையாளர்?
போராட்டங்கள் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப் படுவதில்லை.  ஒரு நாள், இரண்டு நாள் போக்குவரத்தில், வங்கிச் சேவையில், இதர வேலைகளில் வேலைநிறுத்தம் காரணமாக் ஏற்படும் பாதிப்பை விட, அரசின் கொள்கைகளால் நிரந்தரமாக ஏற்பட இருக்கும் கடுமையான பின்விளைவுகளின் பாதிப்புகள் தான் உண்மையில் மக்கள் விரோதமானவை என்பதை அறியாதவர் அல்ல இரா.சோமசுந்தரம். ஆனாலும், தாராளமய காலத்தில் ஊடக தர்மம் என்பது போராட்டத்திற்கு எதிராக எழுதுவது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறபடியாலும், அடிப்படை மாற்றங்களுக்கான விதைகளை இத்தகைய போராட்டங்கள் ஊன்றிவிடுமே என்ற வர்க்கக் கவலையினாலும்,……இன்னோரன்ன காரணங்கள் அன்றி வேறென்ன, பத்து கோடி பேருக்கு மேல் எழுச்சியோடு வீதியில் இறங்கும் காட்சியை மக்கள் விரோத போராட்டம் என்று சொல்லும் தினவுக்கு ?
****************
This entry was posted in Analysis & Opinions, தமிழ். Bookmark the permalink.