தோழர் பாஸ்டியான் வியலெங்கா மறைவிற்க்கு அஞ்சலி

டிசம்பர் 23, 2015 அன்று அதிகாலையில் விடுதலை இறையியல்(Liberation Theologist) பேராசிரியரும், மார்க்சிய சிந்தனையாளருமான தோழர் பாஸ்டியான் வியலெங்கா, வயது 79, உயிர் நீத்தார். இறையியலில் மார்க்சிய சித்தாந்தங்களை ஒருங்கிணைத்த தோழர் பாஸ் சமூகப் போராளி மட்டுமல்லாமல் பல மாணவர்களின் பேரன்பை பெற்ற ஆசிரியராவார். அவருடைய வாழ்க்கை துணைவியார் கேப்ரியலா வுடன் அவருடைய வாழ்க்கை பயணம் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடிய பாடமாகும்.

1936ல் நெதர்லாந்தில் பிறந்த பாஸ், தனது இளைய வயதிலேயே இரண்டாவது உலகப் போர் மற்றும் நாசி ஜெர்மனியின் அடக்குமுறையையும் சந்தித்தார். ஐரோப்பாவில் பனிப் போர் (cold war) உச்சகட்டத்தில் இருந்த போது, சமத்துவ நீதி சமூக அமைப்பு கொள்கையின் அடிப்படையில், மார்க்சிய சிந்தனையையும் வளர்த்தார். மேற்கு பெர்லினில் பிறந்து வளர்ந்த அவருடைய துணைவியார் பெண்ணிய இறையியல் அறிஞர் கேப்ரியலா டியட்ரிச்சுடன் மார்க்சிய அரசியலின் பொருளியல் அனுபவத்தை கற்பதற்காக இந்தியா வந்து சேர்ந்தார். 1970களில் இந்தியா வந்த இருவரும் தமிழ்நாட்டின் மதுரையை தங்களது இருப்பிடமாக தேர்ந்தெடுத்தனர். தமிழ்நாடு த்யோலாஜிக்கல் செமினரியில் வேலை தேடி, பல்வேறு சமூக அமைப்புகளுடன் சேர்ந்து தங்களது சிந்தனைகளை வளர்த்து மாணவர்களுடன் பகிர்ந்தனர். இருவரும் சேர்ந்து செமினரியில் சமூக ஆய்விற்கான மையம்(Centre for Social Analysis) என்ற அமைப்பை ஆரம்பித்தனர். பல்வேறு படிப்பு வட்டங்கள், விவாதங்கள் மூலம் இந்தியாவின் சமூக அமைப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆராய்ந்தார். பல்வேறு நபர்கள் தங்களுடைய சிந்தனைகளை உருவாக்குவதற்கும், வளர்ப்பதற்கும் படிப்பு வட்டங்கள் அடித்தளமாக அமைந்தன.

மார்க்சிய அடிப்படையில் உள்ள மனிதன்-இயற்கை உறவை நன்கு உணர்ந்த பாஸ், அது குறித்து விவாதங்கள் நடத்தியுள்ளார். ‘இயற்கை-நீதியின் சமூகத்தை நோக்கி”(Towards an Eco Just Society) என்ற அவருடைய புத்தகம் 1999ல் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தனது வாழ்விலும், தனது சுற்றுப்புறங்கள் குறிப்பாக செமினரியில், இயற்கையுடன் வாழும கூட்டமைப்பிற்கான முயற்சிகளை எடுத்தார். அவர் வாழ்நாள் முழுதும் பொதுப் போக்குவரத்து, சைக்கிளில் செல்வது போன்ற கொள்கைகளை கடைபிடித்தார். செமினரியில் குப்பைகளை பிரிப்பது, மக்கும் குப்பைகளை மறுசுழற்ச்சி செய்வது என்ற பல திட்டங்களை 30 வருடங்களுக்கு முன்னரே அமல்படுத்தினார்.

இந்தியாவில் தனது அனுபவங்களை மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையில் ஆராய்ந்து பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதியுள்ளார். அதே சமயம் உலகில் பல்வேறு இடங்களில் சேசலிஸத்தின் பயணங்களைக் கூர்ந்து ஆராய்ந்து வந்தார். தனது ‘மார்க்சியத்தின் அறிமுகம்’ (Introduction to Marxism published by Center for Social Action) என்ற நூலில் உள்ள முன்னுரையில் தன்னுடையஅரசியலை யாரும் வகைப்படுத்த வேண்டும் என்று விரும்பினால், அதை ‘இடதுசாரிகளின் ஒற்றுமை” என்று வகைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தனது வாழ்நாள் முழுதும் இடதுசாரிகளையும் முற்போக்குவாதிகளையும் இணைத்து புதிய கட்டமைப்பிற்கான வேலைகளை அவர் செய்து வந்தார். அவருக்கு அஞ்சலியாக இடதுசாரிகளின் ஒற்றுமைக்காக உழைப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

This entry was posted in Art & Life, தமிழ் and tagged , . Bookmark the permalink.