மோடி ஆட்சியில் கல்வி – அ.மார்க்ஸ்

ஒன்று

சங்கப் பரிவாரங்களின் கையில் ஆட்சி அதிகாரம் வந்தால் அவர்கள் கல்வித் துறையில் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது நாம் அறிந்ததுதான். இரண்டு வகைகளில் நமக்கு இதில் முன் அனுபவங்கள் உண்டு. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னதாகவே அவர்கள் இந்தியாவெங்கிலும் நடத்திக் கொண்டுள்ள சுமார் 60,000 கல்வி நிறுவனங்களில் அவர்கள் கடைபிடிக்கும் பாடத் திட்டம் நமக்கு முதல் எடுத்துக்காட்டு. அடுத்து அவர்கள் 1999 – 2004 கால கட்டத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் கல்வித்துறையில் அவர்கள் ஆரவாரமாக நுழைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள். தலைமுறைகளைத் தாண்டி சமூகத்தில் கொடும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தவல்ல செயல்பாடுகளாக அவை இருந்தன.

முந்தைய ஆட்சிக் காலத்தில் அவர்களது கல்வி சார்ந்த நடவடிக்கைகள் எப்படியெல்லாம் அமைந்தன என்பதை இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்.

  1. கல்வித் துறை சார்ந்த நிறுவனங்களான இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம் (ICHR), இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் (ICSSR), தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT), பல்கலைக்கழக நல்கைக் குழு (UGC) முதலான முக்கிய நிறுவனங்களில் இருந்த தகுதிமிக்க அறிஞர்களை நீக்கி அந்த இடங்களில் தக்க தகுதிகள் இம்மியும் அற்ற சங்கப் பரிவார ஆதரவாளர்களைக் கொண்டு நிரப்புதல்,
  2. பாட நூற்களில், குறிப்பாக வரலாற்றுப் பாட நூல்களில் சமூக ஒற்றுமையைச் சிதைக்கும் நோக்கில் வரலாறுகளைத் திருத்தி அமைத்தல்,
  3. சிந்துவெளி நாகரிகம், ஆரிய மொழிக் குழுவினரின் வருகை, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் மற்றும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம் முதலானவை குறித்த சென்ற இரு நூற்றாண்டுகளில் மேலுக்கு வந்து, உலக அளவில் துறைசார்ந்த அறிஞர் குழுமங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளுக்கு எதிரான கருத்துக்களை பாடநூற்களில் புகுத்துதல்,
  4. ஜோதிடக் கல்வி, புரோகிதக் கல்வி, வேத கணிதம் முதலான அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளைப் பாடத்திட்டங்களாகப் பல்கலைக் கழகங்களில் திணித்தல்,
  5. புதிய பொருளாதாரச் சூழலுக்குத் தக கல்விக் கொள்கையை வடிவமைத்தல் என்கிற பெயரில் வெளிநாட்டுப் பலகலைக் கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களின் பெருக்கத்திற்கு வழியமைக்கும் வகையில் கல்விக் கொள்கையை மாற்றி அமைத்தல். முதன் முதலாகத் தொழிலதிபர்களைக் கொண்டு (அம்பானி – பிர்லா) ஒரு கல்விக் கொள்கை பற்றிய அறிக்கை அவர்கள் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.

சென்ற ஆட்சிக் காலத்தில் அவர்கள் இவ்வாறு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக, குறிப்பாகக் காவி மயமாக்கும் முயற்சிகளுக்கு எதிராக நம்மைப் போன்றவர்கள் கடும் எதிர்ப்புகளை முன்னெடுத்தோம். இந்தியாவெங்கிலும் அரசியலுக்கு அப்பாற்பட்டுக் கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், வரலாற்றறிஞர்கள் ஆகியோர் இதனைக் கண்டித்தனர் (பார்க்க: எனது ‘ஆட்சியில் இந்துத்துவம்’ மற்றும் ‘பாட நூல்களில் பாசிசம்’, ‘ஆரியக் கூத்து’ முதலான நூல்கள்). இதனால் அவர்கள் தம் நடவடிக்ககள் சில்வற்றில் பின்வாங்க நேர்ந்தது.

இந்துத்துவம் கல்வித்துறையில் செய்யும் மாற்றங்கள் குறித்து டாக்டர் பாலகோபால் அவர்கள் முன்வைக்கும் ஒரு பார்வை முக்கியமானது. கம்யூனிஸ்டுகளோ, காங்கிரஸ்காரர்களோ இல்லை தலித் பகுஜன் கட்சியினரோ யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தத்தம் கருத்தியலுக்குத் தக்கவாறு பாட புத்தகங்களை எழுதத்தான் செய்வார்கள், அப்படி இருக்கும்போது இவர்களை மட்டும் குறை சொல்வதேன்?

மற்ற கட்சிகள் அதிகாரத்திற்கு வந்தால் செய்யும் மாற்றங்களுக்கும் இவர்கள் செய்யும் மாற்றங்களுக்கும் குறைந்த பட்சம் இரு வித்தியாசங்கள் உண்டு. அவை:

1.எந்த ஒரு கட்சியும் தாம் அதிகாரத்துக்கு வந்தவுடன் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் நிலச் சீர்திருத்தம், தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றி அமைத்தல் முதலானவற்றிற்கு முன்னுரிமை அளிப்பர். தலித் பகுஜன் கட்சி ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு முதலானவற்றில் கவனம் செலுத்துவர். திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்தபோது அவர்கள் வடமொழி நீக்கம், மாநில சுயாட்சி முதலானவற்றிற்கு முதன்மை அளித்தார்கள். இவர்களெல்லாம் இந்த நடவடிக்கைகளுக்கு அடுத்தபடியாகவே அவர்கள் கூடுதலாகக் கல்வித்துறை மாற்றங்களைச் செய்தனர். ஆனால் பா.ஜ.க ஆட்சி வரும்போதெல்லாம் அவர்கள் முதலில் செய்வது பாடத் திட்டங்களை மாற்றுவது, கல்வி நிறுவனங்களை அவர்களது ஆட்களைக் கொண்டு நிரப்புவது ஆகியவைதான்.. அவர்களின் நோக்கம் என்ன என்பதற்கு வேறு விளக்கம் தேவையில்லை.

2.எந்த ஒரு கல்வித் திட்டத்தையும் மதிப்பிடக் குறைந்த பட்சம் மூன்று கேள்விகளை நாம் எழுப்பிப் பார்க்க வேண்டும். 1. மாற்றப்படும் கல்வி முறை எத்தகைய மதிப்பீடுகளை முன்வைக்கிறது? 2. தாங்கள் முன்வைக்கும் உலகக் கண்ணோட்டத்திற்கு மாறான கருத்துக்களை விவரித்து அவை எவ்வாறு தவறானவை என தர்க்க ரீதியாக விளக்கப்படுகிறதா? 3. தான் முன்வைக்கும் மதிப்பீடுகளை விஞ்ஞான ரதியான சோதனைகளுக்கு உட்படுத்த அது தயாராக இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு பா.ஜக அரசின் கல்வித் துறைத் தலையீடுகளைப் பொருத்தமட்டில் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.. வேத காலத்திலேயே சோதனைக் குழாய்க் குழந்தைகளும், முன்னோக்கி மட்டுமின்றி பின்னோக்கியும்கூட ஓடும் விமானங்களும் இருந்தன என்பதற்கெல்லாம் அவர்கள் என்ன விஞ்ஞான ரீதியான விளக்கங்களை அளிப்பார்கள்?

கம்யூனிஸ்டுகளோ பிறரோ ஆட்சிக்கு வந்தபோது கல்வித் திட்டங்களில் மாற்றங்கள் செய்தார்கள் என்றால் அந்த மாற்றங்கள் உலக அளவில் துறைசார்ந்த அறிஞர் பெருமக்கள் ஏற்றுக்கொண்டவையாக இருந்தன. அவை முன்வைத்த மாற்றங்கள் சமூக ஒற்றுமைக்கும், சமூகச் சமத்துவத்திற்கும் ஏற்றமளிப்பவை. சுருங்கச் சொல்வதானால் அவை நமது அரசியல் சட்ட விழுமியங்களுடன் (constitutional values) பொருந்துபவை.

இதுதான் இந்துத்துவவாதிகள் கல்வித்துறையில் செய்யும் மாற்றங்களுக்கும் மற்றவர்கள் செய்யும் மாற்றங்களுக்கும் உள்ள வேறுபாடு.

“கல்வி என்பது ஒருவரை நிர்வாணமான சிந்தனா சக்தி உடையவராக ஆக்குவது” என்பார் தந்தை பெரியார். கல்வி என்பது புதிதாக எதையும் குழந்தைகளின் மூளைக்குள் திணிப்பது என்பதைக் காட்டிலும், ஏற்கனவே சமூகம் அந்தக் குழந்தைகளின் மூளைக்குள் திணித்திருக்கும் நம்பிக்கைகளை நீக்கி அவர்களைச் சுய சிந்தனை உடையவர்களாக ஆக்குவது என்பது அதன் பொருள். ஏனெனில் சமூகம் திணித்திருக்கும் பல நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாகவே உள்ளன என்பதுதான்.

எடுத்துக்காட்டாக முஸ்லிம்கள் வாளோடு வந்து இங்கு மதம் பரப்பினார்கள், இந்துக் கோவில்களை அழித்தார்கள், சமஸ்கிருதமே இறைவனுக்கு உகந்த மொழி, ஒவ்வொரு சாதிக்கும் ஒரு புத்தி உண்டு என்பதெல்லாம் சமூகம் நம்முள் பொதித்திருக்கும் மூடக் கருத்துக்கள். விஷக் கருத்துக்கள். சரியான கல்வி என்பது இவற்றை மறுப்பது. ஆனால் சங்கப் பரிவாரங்களின் கல்வி என்பது எப்படி இருக்கிறது? ஏற்கனவே உள்ள இந்த மூட நம்பிக்கைகளை உறுதி செய்வனவாக அவர்களின் திருத்தங்கள் இருக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல. இது அவர்களுக்கு எளிதானதும் கூட. ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்வது என்பது எளிதானது தானே?

எனவே இதற்கு எதிரான பணி இன்னும் கடினமாகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இரண்டு

இந்த முறை ஆட்சிக்கு வந்தவுடன் ஆர்.எஸ்.எஸ் முதலான அமைப்புகள் உள்ளே புகுந்து விளையாடுவதற்குத் தோதாக, கல்வித்துறை அனுபவங்கள் ஏதும் இல்லாத ஸ்மிருதி ராணி மனித வளத்துறை அமைச்சராக்கப்பட்டார். பதவி ஏற்ற சில வாரங்களில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அவரது அலுவலகத்திற்குச் சென்று நமது கலாச்சாரம், வரலாறு, ஒழுக்க மரபு ஆகியவற்றிற்குக் கல்வியில் கொடுக்க வேண்டிய அழுத்தம் குறித்து அமைச்சருக்குப் பாடம் நடத்தினர். இதுவரை முக்கியத்துவம் கொடுக்கப்படாத சில வரலாற்றுத் திரு உருக்களுக்கு இனி பாட நூல்களில் முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தினர். ஆர்.எஸ்.எஸ்சின் கல்வித்துறை “அறிவுஜீவி” தீனாநாத் பத்ரா, “ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே கல்வி முழுமையாகப் புத்துருவாக்கம் செய்யப்பட வேண்டும்” என வெளிப்படையாக அறிவித்தார். அவரது ‘சிக்‌ஷா பச்சோவ் அந்தோளன்’ பாடத்திட்ட மாறுதல்கள் குறித்து திட்டங்கள் தீட்டுவதாகச் செய்திகள் வெளியாயின. பா.ஜ.க தலைவர்கள் பாடத் திட்டங்கள் மாற்றப்படும் என வெளிப்படையாகப் பேசினர். இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR) தலைவராக சுதர்ஷன் ராவ் என்கிற சங்கப் பரிவார ஆதரவாளர் நியமிக்கப்பட்டார். இந்தியச் சாதிமுறையைப் பாராட்டி எழுதியவர் இவர். ஹைதராபாத்தில்உ:ள்ள மௌலானா ஆசாத் உருதுப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆக இருந்த சிறந்த கல்வியாளரான சைதா ஹமீத் நீக்கப்பட்டு அந்த இடத்தில் சொகுசுக் கார்களை விற்பனை செய்து வந்த சஃபார்சரேஷ்வாலா என்பவர் நியமிக்கப்பட்டார். அவரது தகுதி மோடிக்கு நெருக்கமானவர் என்பது மட்டுமே. புனேயில் உள்ள புகழ் பெற்ற திரைப்படக் கல்லூரி முதல்வராக கஜேந்திர சவுஹான் எனும் கட்சிக்காரரை நியமித்ததி எதிர்த்து மாணவர்கள் கிட்டத் தட்ட ஆறு மாத காலம் போராடினர்.

எல்லாம் எதிர்பார்த்ததுதான். இதை எல்லாவற்றையும் விட நான் முக்கியமாக இங்கே குறிப்பிட விரும்புவது பா.ஜ.க அரசு இப்போது அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கை குறித்தும் சென்ற மாதம் (டிச 15 -18, 2015) நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தகக் கழகத்தின் (WTO – GATS) வணிக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் பத்தாவது அமைச்சு நிலை மாநாட்டில் (tenth ministerial conference) உயர்கல்வியை ஒரு வணிகச் சேவையாக (treadable service) அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது குறித்தும்தான். இந்த இரண்டும் தனித்தனியான நடவடிக்கைகள் அல்ல. ஒன்றோடொன்று இணைந்தவைதான். உயர் கல்வியை ஒரு வணிகச் சேவையாக ஏற்கும்போது அதற்குரிய வகையில் உள்நாட்டுக் கல்விக் கொள்கையையும் திருத்தியமைக்க வேண்டி உள்ளது.

கல்வி, மருத்துவம், சுகாதாரம், சமூக நலத் திட்டங்கள் முதலியவற்றை “திறன்சார் பொருட்கள்” (merit goods) என்பர். அதாவது இவற்றைப் பெற்றுக் கொள்பவர்களைத் தாண்டி சமூகம் முழுமையும் இதனால் பயன்பெறும். எனவே இவற்றை லாப நோக்கில் அணுகாமல் அரசு மான்யங்களுடன் செயல்படுத்த வேண்டும். ஆனால் இன்று உலக வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வார்த்தைகளில் உயர்கல்வியை ஒரு வணிக சேவையாக இந்தியா ஏற்றுக் கொள்வதன் மூலம் அது ஒரு “திறன்சாராப் பொருளாக” (non merit good) அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் உயர்கல்வி என்பது பன்னாட்டு நிறுவனங்கள் விருப்பத்திற்குப் புகுந்து விளையாடி லாபம் சம்பாதிக்கும் துறையாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் எப்படியெல்லாம் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு கொள்ளை அடிக்க முடியும் என்பது குறித்துச் சுமார் பத்தாண்டுகள் முன்பே நான் எழுதினேன் (‘உயர் கல்வி எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள்’).

இங்கொரு கேள்வி எழலாம். காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் கூடத்தான் இது நடந்திருக்கும் இதற்குப் போய் பா.ஜ.க அரசைக் குறை சொல்வதேன்? உண்மைதான். இந்த அம்சங்களில் காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் பெரிய வேறுபாடு இல்லைதான். ஆனால் இந்தியப் பொருளாதாரத்தை கார்பொரேட் மயமாக்குவதிலும் உலகப் பொருளாதாரத்தின் ஒரு கண்ணியாக அதை மாற்றுவதிலும் காங்கிரசைக் காட்டிலும் பா.ஜ.கவுக்கு முனைப்பு அதிகம். பாசிசம் குறித்து ஆய்வு செய்துள்ளவர்கள் கார்பொரேட்மயமாதலுக்கும் பாசிசத்திற்கும் உள்ள நெருக்கமான உறவு குறித்துப் பேசுவது இங்கு நினைவுகூரத் தக்கது.

உயர்கல்வியை வணிக ஒப்பந்தத்திற்குள் கொண்டு வருவது குறித்த விவாதம் 15 ஆண்டுகளாக நடக்கிறது. முதன் முதலில் 2001ல் வாஜ்பேயி தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்தில்தான் காட் ஒப்பந்தங்களின் கீழ் உயர் கல்வியை உலக வணிக ஒப்பந்தத்திற்கு ‘அர்ப்பணம்’ (offer) செய்யப்பட்டது. பேச்சுவார்த்தைகளின் ஊடாக இது கையெழுத்தானால் இந்த ‘அர்ப்பணம்’ ‘கடப்பாடு’ (commitment) ஆகும். கடப்பாடு என்கிற நிலையை எட்டிவிட்டால் அப்புறம் அவ்வளவுதான். திரும்பி வர இயலாத பாதை அது. திரும்பி வருவது எளிதல்ல.

2004ல் மன்மோகன்சிங் தலைமையில் ‘ஐக்கிய முற்போக்குக் கூடணி’ (UPA) அரசு அமைக்கப்பட்டபோது 2005 ல் இந்த அர்ப்பணத்தில் சில மாற்றங்களைச் செய்ததோடு அதை ஏற்றுக் கொண்டது. அடுத்த பத்தாண்டுகளில் ‘காட்ஸ்’ பேச்சுவார்த்தைகளில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. இந்தத் தேக்கத்தை உடைக்கும் நோக்கத்துடன் சென்ற ஆண்டு இறுதியில் (டிசம்பர் 15 – 18, 2015) நடைபெற்ற பத்தாவது அமைச்சு நிலைக் கூட்டத்தில் மோடி அரசு இது தொடபாக ஒரு சிறு முணுமுணுப்பையும் கூட வெளிப்படுத்தாமல் கையொப்பமிட்டது. இதன் மூலம் 2000 த்தில் வாஜ்பேயி அரசு செய்த ‘அர்ப்பணம்’ இப்போது மோடி அரசில் ‘கடப்பாடு’ ஆகியுள்ளது. உயர்கல்வி மட்டுமல்ல, கல்வி ஆய்வுகள், ஆயுள் காப்பீடு, மருத்துவம் முதலான முக்கிய சேவைகள் அனைத்தையும் உலக முதலாளிகளின் லாப வேட்டைக்கு அர்ப்பணம் செய்துள்ளது மோடி அரசு.

இந்த அர்ப்பணமும் கடப்பாடும் நமது மக்களை எப்படியெல்லாம் பாதிக்கப்போகின்றன?

முதலில் நாம் போராடிப் பெற்ற சமூக நீதி உரிமைகள், இட ஒதுக்கீடு உட்பட, பறிபோகும் ஆபத்து உள்ளது. உயர் கல்விக்கு வழங்கப்படும் மானியங்கள் இனிமேல் நிறுத்தப்படும். அப்படி ஏதேனும் ஒரு மானியம் வழங்கினால் இங்கே கடை விரித்திருக்கும் அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், வெளிநாட்டுக் கார்பொரேட் நிறுவனங்களுக்கும் அதே அளவு மானியம் வழங்கியாக வேண்டும்.. இதைக் காரணம் காட்டி நமது அரசுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கும் மானியங்கள் நிறுத்தப்படும். பதிலாகக் கல்விக் கடன் தருகிறோம் எனச் சொல்லி ஏழை எளிய மக்களை குடும்பத்தோடு நிரந்தரக் கடனாளியாக்கும். இப்படி நமது மக்களுக்குச் செய்யும் சலுகைகளை தனியார்களுக்கும், வெளிநாட்டுக் கார்பொரேட்களுக்கும் செய்வதைத்தான் அவர்கள் level playing field என்கிறார்கள். எல்லோரையும் ஒரே மட்டத்தில் வைப்பது என்பதன் பொருள் இப்படி மக்களின் தலையில் மண்ணை வாரிப் போடுவதுதான் ஏற்கனவே சென்ற அக்டோபர் 7, 2015ல் பல்கலைக்கழக நல்கைக் குழு எம்.ஃபில் மற்றும் பி.எச்டி மாணவர்களுக்கு வழங்கும் உதவித் தொகைகளை (Non- net felloowships ரூ 5000 மற்றும் 7000/=) நிறுத்தப்பட்டது. மாணவர்கள் அதை எதிர்த்துப் போராடினர்.

பா.ஜ.க அரசு பதவி ஏற்றபின் வழங்கிய முதல் நிதிநிலை அறிக்கையில் (2015 – 16) உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீடு முந்தைய காங்கிரஸ் அரசின் ஒதுக்கீட்டைக் காட்டிலும் 3,900 கோடி ரூபாய் குறைவு என்பதையும் நாம் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். அதே போல உயர் கல்வி நிருவனங்களுக்கு உதவித் தொகை அளிக்கும் ‘ராஷ்ட்ரீய உச்சாதார் சிக்‌ஷா அபியான்’ எனும் மத்திய அரசு நிறுவனத்டிற்கு ஒதுக்கப்பட்ட தொகை 2,200 கோடியிலிருந்து வெறும் 390 கோடியாகக் குறைக்கப்பட்டது. மொத்தத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி 13,697 கோடி குறைக்கப்பட்டது. இந்தச் சுமை அனைத்தும் நம் மாணவர்களின் தலையில்தான் விடிந்துள்ளது.

உயர் கல்வியை இப்படி வணிகமயம் ஆக்கியதன் விளைவாக நமது மாணவர்களுக்கு வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்களில் படிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது எனவும். வெளி நாட்டு ஆசிரியர்களின் சேவை நமக்குக் கிடைக்கிறது எனவும், நமது மாணவர்கள் வெளிநாடுகளுக்கு உயர் கல்வி கற்கச் செல்லும் வாய்ப்பு அதிகமாகிறது எனவும் அரசுத் தரப்பில் ஆசை காட்டப்படுகிறது. வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்கள் வரும், வெளிநாட்டு ஆசிரியர்கள் வருவார்கள் எனச் சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனால் அதன் மூலம் மாணவர்களின் கல்விச் செலவு பலமடங்கு அதிகரிக்கும். உயர்கல்வி வணந்த்தின் மூலம் சம்பாதிக்கும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளே இதனால் பயன் பெறும். தவிரவும் இந்த வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்கள் எல்லாம் தரமானவை என்பதில்லை. எல்லாக் குப்பைப் பல்கலைக்கழகங்களும் இங்கே கடை விரிக்கும். 2000 த்தில் வெளியிடப்பட்ட யுனெஸ்கோ அறிக்கை ஒன்று ஓரளவு தரமான வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் கூட பின்தங்கிய நாடுகளில் கடை திறக்கும்போது அவை தரம் குறைந்தவையாக உள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

இவை தவிர மோடி அரசு செய்துள்ள இந்த அர்ப்பணம் நமது கல்விக் கொள்கையிலும் வெளிநாட்டு நிறுவனங்களின் தலையீட்டிற்கு வழி வகுக்கும். கல்வி நிறுவனகளின் தர நிர்ணயிப்பிலும் (accreditation policy) அவை தலையிடும். அடிப்படை அறிவியல், கலைத் துறைப் பாடங்கள் ஆகியவற்றிற்குப் பதிலாக பிரயோக அறிவியல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். உயிரியல், இயற்பியல், வேதியல் முதலான அடிப்படை அறிவியல்களே எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் ஆதாரமாக உள்ளன. இந்த ஆய்வுகள் புறக்கணிக்கப்படும். வேலைவாய்ப்பு என்கிற பெயரில் biotechnology, biochemistry முதலான பாடத் திட்டங்கள் ஊக்குவிக்கப்பட்டு உலகளாவிய அளவில் அறிவியலில் ஒரு வேலைப்பிரிவினை உருவாவதற்கு இது வழிவகுக்கும். அடிப்படை ஆய்வுகள் மேற்குலகிலும், பிரயோக அறிவியல்கள் மட்டுமே இந்தியா போன்ற நாடுகளிலும் என்கிற நிலை ஏற்படும். நமது TIFR, IISC முதலான ஆய்வு நிறுவனங்கள் பொலிவிழந்து ஒடுங்கும். எல்லா அடிப்படை ஆய்வுகளும் மேற்குலகில் மேற்கொள்ளப்பட்டு ‘பேடன்ட்” பெற்று நமக்கு விற்கப்படும்.

இந்த அடிப்படையில் ஏற்கனவே “விருப்ப அடிப்படையிலான மதிப்பீட்டு முறை” (choice based credit system), நான்காண்டு பட்டப்படிப்பு முதலியவற்றை கல்வித் திட்டத்தில் புகுத்துவதில் பா.ஜ.க அரசு முனைப்புக் காட்டுவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. விருப்ப அடிப்படையிலான மதிப்பீட்டு முறை, பொது நுழைவுத் தேர்வு, பொதுவான தர நிர்ணயம், பொதுவான பாடத் திட்டம் முதலான கருத்துக்கள் முரளி மனோகர் ஜோஷி காலத்திலிருந்தே பேசப்பட்டு வருகிறது.

உயர் கல்வியை ஒழுங்கமைக்க தற்போது UGC, AICTE, NCTE, Bar Council of India, Medical Council of India ,முதலான அமைப்புகள் நடைமுறையில் உள்ளன. இவற்றை எல்லாம் ஒழித்துக் கட்டிவிட்டு எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஒற்றைச் சாளரமாக ஒரு உயர் கல்வி அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது உலக வங்கி முன்வைக்கும் ஒரு திட்டம். 2006 ல் சாம் பிட்ரோடாவும், 2008 ல் யஷ்பாலும் இப்படியான மையப்படுத்தப்பட்ட மத்திய கல்வி நிறுவனம் குறித்துத் தம் அறிக்கைகளில் பேசினர். Independent Regulatory Authority of Higher Education’ (IRA for HE) என பிட்ரோடாவும் The National Council of Higher Education Research என யஷ்பாலும் இதற்குப் பெயர் இட்டனர். எல்லாத் துறைகளிலும் அதிகாரங்கள் மையப்படுத்தப்படுவதை முழுமையாக ஆதரிக்கும் பா.ஜ.க தனது 2014 தேர்தல் அறிக்கையில் இப்படியான “அதிக அளவில் அதிகாரப்படுத்தப்பட்ட மத்திய நிறுவனம்” (highly empowered central institution) குறித்துப் பேசியது.

ஒவ்வொரு பல்கலைக் கழகமும், ஆய்வு நிறுவனங்களும் மக்கள் நல்வாழ்வு, நாட்டு முன்னேற்றம் ஆகியவற்றைக் கருதி குறிப்பான நோக்கங்களுக்காக அவ்வப்போது உருவாக்கப்பட்டவை. அவற்றை ஒரே விதிகளின் கீழ் கொண்டு வரும் மத்திய பல்கலைக் கழகங்களுக்கான ஒரே சட்டம், இப்படியான ஒற்றைச் சாளர உயர் கல்வி ஒழுங்கமைப்பு அதிகார மையம் என்பனவெல்லாம் இந்தியா போன்ற ஒரு விரிந்த, பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட நாட்டிற்குப் பொருந்தாது.

பா.ஜ.க அரசு இத்தகைய மையப்படுத்தப்படும் முயற்சியில் அதிக முனைப்புக் காட்டுவதற்கான காரணம், அவர்களின் காவிமயப் படுத்தும் முயற்சிக்கு அதுவே தோதாக இருக்கும் என்பதுதான் என்கிறார் பேரா. ஹர்பான்ஸ் முக்கியா.

இன்னொன்றையும் சிந்திப்பது அவசியம். இப்படியான மாற்றங்கள் ஏதோ உயர் கல்வியைப் பாதிப்பதோடு முடிந்துவிடுவதில்லை. இத்தகைய உயர் கல்வி மூலம் பயிற்சியும் பட்டமும் பெற்றவர்கள்தான் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியையும் பயிற்றுவிக்கப் போகிறவர்கள் அந்த வகையில் இந்த முயற்சிகள் ஒட்டு மொத்தமாக நம் கல்வி அமைப்பிலேயே தாக்கங்களை ஏற்படுத்தும்.

மூன்று

இறுதியாக ஒன்று. மோடி அரசு தனது Mygovt எனும் இணையதளத்தில் ‘புதிய கல்விக் கொள்கை பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 1968, 1986, 1992 ஆகிய ஆண்டுகளில் முந்தைய அரசுகள் கல்விக் கொள்கைகளை வெளியிட்டன. 1968 ல் வெளியிடப்பட்ட கோதாரி அறிக்கை எல்லோருக்குமான பொதுப் பள்ளிகள், ஒவ்வொருவருக்கும் அருகாமையில் உள்ள பள்ளிகள் முதலான முக்கியமான வரவேற்கத் தக்க கருத்துக்களை முன்வைத்தது. இந்த வகையில் அது நமது அரசியல் சட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்திருந்தது. 1986ல் ராஜீவ் காந்தி காலத்தில் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கைதான் பிறகு 1992ல் திருத்தி அமைக்கப்பட்டது. இந்தியா நவ தாராளவாதப் பாதையில் நுழந்து கொண்டிருந்த தருணம் அது. அதற்குரிய வகையில் நமது கல்விக் கொள்கையை அமைக்கும் நோக்கில் அது உருவாக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஒரு விரிவான தேசிய விவாதத்திற்கு அது வழிவகுத்திருந்தது. அனைத்துப் பள்ளிகளுக்கும் அடிப்படை வசதிகள் செய்து தரும் ‘கரும்பலகைத் திட்டம்’ முதலியன அதில் பேசப்பட்டிருந்தது.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நம்மைப் போன்றவர்கள் அந்தக் கொள்கையைக் கடுமையாக விமர்சித்தோம். நானே அந்தச் சமயத்தில் “நமது கல்விப் பிரச்சினைகள்’, ‘பாசிசமும் கல்விக் கொள்கையும்’ என இரு விமர்சன நூல்களை எழுதினேன். விவாதங்கள் மிகவும் ஜனநாயக பூர்வமாக நடத்தப்பட்டு அனைவரது கருத்துக்களும் உள்வாங்கப்பட்டன எனக் கூற இயலாவிட்டாலும் விரிவான விவாதத்திற்கு அதில் வழி இருந்தது.

ஆனால் இன்று பா.ஜ.க அரசு வெளியிட்டுள்ள இந்த கல்விக் கொள்கை குறித்த அறிவிப்பிலோ அத்தகைய வாய்ப்பே இல்லை. “முதல் முறையாகச் சாதாரண மனிதர்களையும் கொள்கை உருவாக்கலில் இணைக்கும் முயற்சி” எனவும், “எல்லோரையும் உள்ளடக்கி, பங்கேற்க வாய்ப்பளிக்கும் முழுமையான முயற்சி” எனவும் ஆர்பாட்டமான சொல் அலங்காரங்களுடன் அது முன்வைக்கப் பட்டிருந்தாலும், பல்வேறு கருத்துக்களையும் வரவேற்று, விவாதத்திற்கு உட்படுத்தி, தேவையானவற்றை உள்ளடக்கித் திருத்தி அமைக்கும் நோக்குடன் அது அமையவில்லை. மாறாக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட கருத்துக்களைப் பங்கேற்பவர்களிடமிருந்து கறக்கும் நோக்குடனேயே அது அமைந்துள்ளது.

தவிரவும் ஏற்கனவே உல்ள கல்விக் கொள்கையில் உள்ள பிரச்சினைகள், தனியார் மயம், வணிகமயம் முதலானவை இன்று எழுப்பியுள்ள சவால்கள் என்பது குறித்தெல்லாம் எதுவும் அதில் பேசப்படவும் இல்லை. இப்படி அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டுள்ள ஒரு முழுமையான நகல் அறிக்கையை முன்வைத்து அதன் அடிப்படையில் பங்கேற்பவர்கள் கருத்துக்களை வைப்பது என்கிற வடிவில் அது அமைக்கப்படவில்லை. மாறாக 33 மையக் கருத்துக்கள் (themes), ஒவ்வொன்றும் 200 வார்த்தைகளில் தரப்பட்டுள்ளன. 13 மையக் கருத்துக்கள் தொடக்கக் கல்வி குறித்தவை. மற்றவை உயர் கல்வி குறித்தவை. ஒவ்வொன்றுக்கும் கீழ் சில தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகள் உள்ளன. இந்தக் கேள்விகளுக்கு மட்டுந்தான் பார்வையாளர்கள் பதில் சொல்ல வேண்டும். அந்தப் பதில்கள் 500 எழுத்துக்களுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.

இத்தகைய ‘ட்விட்டர்’ பாணிப் பதில்கள் மூலமாக எந்த ஒரு விவாதத்தையும் கோவையாக முன்வைக்க இயலாது. ஒன்று அதை அப்படியே ஏற்கலாம். அல்லது முற்றாக மறுக்கலாம். அல்லது ஒரு மாற்றுக் கருத்தை வைக்கலாம். ஆக மொத்தம் பல்வேறு சிதறலான கருத்துக்கள்தான் விளைவாக அமையுமே ஒழிய அது ஒரு தேசிய விவாதமாக அமைய வாய்ப்பே இல்லை. விவாதத்தினூடான கருத்தொருமிப்பு இதில் சாத்தியமில்லை.

இந்தப் பதில்களைத் தொகுப்பதற்கும், தேசிய அளவில் “முன்னரே வரையறுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு வடிவிலான” ஒரு கேள்வித்தொகுப்பின் அடிப்படையில் விவாதங்களை நடத்திக் கருத்துக்களைத் தொகுப்பதற்கும், ஒரு முழுமையான புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கும் “குழு” ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இணையத் தளம் அறிவிக்கிறது. ஆனால் அந்த மர்மமான குழுவில் யாரெல்லாம் உள்ளனர் என்பது அறிவிக்கப்படவில்லை.

இந்தக் கேள்வித் தொகுப்புகள் தமக்கு வேண்டிய கருத்துக்களை எவ்வாறு பங்கேற்பவர்களிடமிருந்து வரவழைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளளன என்பது குறித்து அக்கறையுள்ள சிலர் விமர்சனங்களைச் செய்துள்ளனர். அவற்றிலிருந்து ஒன்றிரண்டு மட்டும் இங்கே.

தொடக்கக் கல்விக்கான 13 மையைக் கருத்துக்களையும் அதற்கு எழுப்பப்பட்ட கேள்விகளையும் மொத்தமாகப் பார்த்தால் “பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஒத்துழைப்பு” (Public Private Partnership – PPP) என்கிற பெயரில் தனியார் மயத்தை நோக்கியதாகவே அவை அமைந்துள்ளன என்பது ஒருவிமர்சனம். எடுத்துக்காட்டாக ஒன்று: “பள்ளியில் உங்கள் பிள்ளை சரியாகப் படிக்காததற்கு என்ன காரணங்கள் என நினைக்கிறீர்கள்?” என்பது ஒரு கேள்வி. ஆக அரசுப் பள்ளிகள் ஒழுங்காகச் செயல்படுவதில்லை என்கிற முன் கருத்துடன் அதற்கு ஏற்ப ஒரு பதிலைப் பெறும் முயற்சியாக இது அமைகிறது என்கிறார் இது குறித்து எழுதியுள்ள நிரஞ்சனரத்யா..

இடைநிலைக் கல்வி சார்ந்த மையக் கருத்தில் இந்த தனியார் பொதுத்துறை ஒத்துழைப்பு என்பது நேரடியாகவே முன்வைக்கப்பட்டு, அதனடியாக “பள்ளிக் கல்வியை தனியார் பொதுத்துறை ஒத்துழைப்பின் மூலம் விரிவாக்கலாம் என நினைக்கிறீர்களா?” எனக் கேட்கப்படுகிறது. தொடர்ந்து பல இடங்களில் “ஆசிரிய மதிப்பீடு” (teacher assessment) குறித்த கேள்வி எழுப்பப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். “செய்து காட்டு அல்லது செத்துமடி” (perform or perish) எனும் உலகவங்கியின் அணுகல் முறையை இது அப்படியே முன்வைக்கும் முயற்சியாக உள்ளது. அதாவது ஆசிரிய மதிப்பீடுகளைச் செய்து அவ்வப்போது அவர்களின் பணி போதுமான தரத்தில் இல்லை எனச் சொல்லி அவர்களை வேலையை விட்டு நீக்கும் முயற்சி இது. நிரந்தர ஆசிரியர்கள் என்கிற ஒரு இனத்தையே ஒழித்துக் கட்டும் கொடூரமான ஒரு கார்பொரேட் அணுகல் முறை இது.

மொத்தத்தில், கல்வித்துறையைத் தனியார் மயமாக்கி உள்நாட்டு வெளிநாட்டு கார்பொரேட்களுக்குக் கடை விரிக்க அனுமதிக்கும் ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள மோடி அரசு அதற்குத் தக உருவாக்கியுள்ளதுதான் இந்தப் புதிய கல்விக்கொள்கை குறித்த ட்விட்டர் பாணி “விவாதம்”.

மோடி அரசைப் பொருத்தமட்டில் அதற்கு இந்த நாட்டின் அரசியல் சட்டத்திலும் நம்பிக்கை கிடையாது. அதன் அடிப்படை மதிப்பீடுகளான மதச்சார்பின்மை, சமத்துவம், பொதுப்பள்ளிகள், அருகாமைப் பள்ளிகள் ஆகியவற்றின் மீதும் இம்மியும் மரியாதையோ, நம்பிக்கையோ கிடையாது என்பதை அறிவோம். மோடி அரசின் ஒரே கவலை கல்வியைக் காவிமயமாக்கும் அதன் முயற்சிக்கமெந்தத் தடையும் வந்துவிடக் கூடாது என்பது மட்டுந்தான். உலக வல்லரசுகளைப் பொருத்தமட்டில் இப்படிக் காவிமயமாவதெல்லாம் அவற்றிற்கு ஒரு பொருட்டல்ல. அவற்றின் ஒரே பிரச்சினை தனது கொள்ளைக்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதுதான்.

ஆக இருதரப்பும் எந்த முரண்பாடுகளும் இல்லாமல் இணையும் புள்ளிகளில் இன்னொன்றாக ஆகிறது கல்வித் துறை.

பாவம் மக்கள்.

This entry was posted in Analysis & Opinions, Education Sector, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.