அந்நியனே உள்ளேவா… -எஸ்.சம்பத்

வெள்ளையனே வெளியேறு” என்று முழக்கமிட்டு 70 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் மற்றும் பிஜேபி அரசுகளால் கேந்திரமான தொழில்களில் நேரடி அந்நிய முதலீடு என்ற பெயரில் பல்வேறு நாடுகள் ஈடுபட அனுமதிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு திட்டத்தின் பெயரிலும் பாரத் என்ற வார்த்தையை சேர்த்து தேசப் பற்றிற்கு தாங்கள்தான் சொந்தக்காரர்கள் என்று காண்பித்துக் கொள்ளும் பிஜேபி மோடி அரசு தனது சமீபத்திய அமைச்சரவை கூட்ட முடிவின்படி பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட பலவற்றில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.

முக்கிய அம்சங்கள்

  • பாதுகாப்பு (ராணுவம்) துறையில் சிறிய ஆயுதங்கள், வெடி மருந்துகள் தயாரிப்பு பிரிவுகளில் 100 சதவீத அந்நிய முதலீட்டிற்கு அனுமதி

  • விமான நிலையங்களில் விரிவாக்க திட்டங்களில் அரசு ஒப்புதலின்றி 100 சதவீத அந்நிய முதலீட்டிற்கு அனுமதி

  • விமான போக்குவரத்துத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு

  • மருந்து துறையில் விரிவாக்க திட்டங்களில் நேரடியாக 74 சதவீத முதலீட்டிற்கு அனுமதி

  • சிங்கிள் பிராண்டு சில்லரை விற்பனையில் நவீன தொழில்நுட்ப தயாரிப்புகளை உள்நாட்டில் கொள்முதல் செய்வதற்கான விதிமுறை தளர்வு

  • கேபிள் நெட் ஒர்க், டி டி எச், மொபைல் டிவி துறைகளில் 100 சதவீத நேரடி முதலீட்டிற்கு அனுமதி

அந்நிய முதலீடுகளும் அவசர சட்டங்களும்

மக்களவையில் அறுதிப் பெரும்பான்மையுடன் அமர்ந்திருந்த போதிலும், மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததால் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்கும் சில மசோதாக்களை அவசர சட்டத்தின் மூலம் அமுல்படுத்துகிறது மத்திய அரசு. குறிப்பாக காப்பீட்டு துறையில் நேரடி அந்நிய முதலீட்டை 49 சதவீதம் என உயர்த்தியதை அவசர சட்டத்தின் மூலம் அமுலுக்கு கொண்டு வந்தது.

  • மசோதா என்பது ஒரு சட்டத்தின் முன் வடிவம். இது நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு, திருத்தங்கள் இருந்தால் ஏற்கப்பட்டு அல்லது மறுக்கப்பட்டு பின்னர் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டு சட்ட வடிவம் பெறும்.

  • சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் கூடாத நேரங்களில் சூழலின் அவசரம் கருதி அவசர சட்டம் ஆளுநரால் அல்லது குடியரசு தலைவரால் முன்மொழியப்படும்.

  • அவ்வாறு முன்வைக்கப்படும் சட்டம் மறுமுறை அவை கூடியதிலிருந்து 6 வார காலத்திற்குள் அவையில் வைத்து நிறைவேற்றப்பட வேண்டும்.

கேள்விக்குறியாகும் நாட்டின் பாதுகாப்பு

பொதுவாக எந்தவொரு வியாபாரத்தில் முதலீடு செய்பவருக்கும் அதிலிருந்து என்ன லாபம் ஈட்டப்போகிறோம் என்பதுதான் முக்கிய குறிக்கோளாக இருக்கும். லாபம் அதிகரிக்க வேண்டுமெனில் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். அவ்வாறான நிலையில் பாதுகாப்பு, இராணுவம் போன்றவற்றில் 100 சதவீதம் நேரடி முதலீட்டிற்கு கதவை திறந்து விடுவது என்பது ஆயுதங்கள், தளவாடங்கள் உற்பத்தி அதிகரிக்கச் செய்யும் அவ்வாறெனில் போர் மூளவேண்டும் என்கிற அபாயத்தை நோக்கி செல்லும். ஏற்கனவே சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுடனான இந்திய எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவிவரும் சூழலில் பாதுகாப்புத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு என்பது அபாயத்தை நோக்கிய நகர்வாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

யாருக்கு லாபம்

ஒரு அந்நிய நிறுவனம் நேரடியாகவோ அல்லது இந்நாட்டிலுள்ள பெரு முதலாளிகளை பங்குதாரா்களாக சேர்த்துக் கொண்டோ, இங்கு ஒரு தொழில் நிறுவனம் நடத்தினால் அது அந்நிய நேரடி முதலீடு எனப்படும். இதற்கு அந்த நிறுவனம் தனது சொந்தப் பணத்தை முதலீடு செய்வதில்லை. மாறாக நம் நாட்டு வங்கிகளில் கடன் பெற்று முதலீடு செய்கின்றன. இத்தகைய அந்நிய முதலீட்டில் தொழில் துவக்கப் படும் போது காப்புரிமைத் தொகை, லாப ஈட்டுத் தொகை, தொழில்நுட்ப கட்டணம், ஆதாயப்பங்கு, திறன் கட்டணம் என பல வடிவங்களில் அரசு அந்த நிறுவனத்திற்கு மாதா மாதம் கட்டணங்கள் செலுத்த வேண்டும். இது தவிர அரசியல் நிர்பந்தங்கள் காரணமாக அளிக்கப்படுகிற வரிச்சலுகைகள். இதனால் உள்நாட்டு அந்நிய செலாவணி வெகுவாக கரையும் என்பதே யதார்த்தம்.

1995-2003 ஆப்பிரிக்க நாடுகளில் நுழைந்த அந்நிய நேரடி முதலீடு ஏறத்தாழ 4243 கோடி ரூபாய். ஆனால் காப்புரிமை, லாப ஈட்டு, தொழில்நுட்ப கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் முதலிய வகைகளில் வெளியேறிய மூலதனம் ஏறத்தாழ 25,294 கோடி ரூபாய்.

காங்கோ நாட்டில் அந்தக் காலத்தில் போடப்பட்ட அந்நிய நேரடி முதலீடு ஏறத்தாழ 7303 கோடி ரூபாய். வெளியேறிய மூலதனமோ 12,478 கோடி ரூபாய். பிரேசிலிலும் இதே தான் நடந்தது. 1998ல் இந்நாட்டிலிருந்து வெளியேறிய உள்நாட்டு மூலதனம் 28,000 கோடி (ஆதாரம்– 2005ல் ஒருங்கிணைந்த நாடுகளின் வணிகம் மற்றும் முன்னேற்றம் குறித்த மாநாட்டு அறிக்கை)

அமெரிக்க என்ரான் நிறுவனம் இந்தியாவில் கடன் வாங்கி தொழில் நடத்தி திவாலானவுடன் அந்தக் கடன் இந்திய மக்கள் தலையில் விழுந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் நடத்திய ஒரு ஆய்வின்படி, ஏறத்தாழ 300 அந்நிய நேரடி முதலீடு நிறுவனங்களால் கிடைத்த தொகையை விட அந்நிறுவனங்களுக்கு இந்திய அரசு கொடுத்த காப்புரிமை தொகை, லாப ஈட்டுத் தொகை, தொழில் நுட்ப கட்டணம், ஆதாயப்பங்கு, திறன் கட்டணம் ஆகிய வகையில் அந்நிய செலாவணியே அதிகமாக உள்ளது. மேலும் ஒரு நாட்டில் முதலீடு செய்த மூலதனத்தையே மோசடி கணக்குகள் மூலம் படிப்படியாக கடத்தி சென்று விடுகின்றன.

வேலை வாய்ப்பு

அந்நிய முதலீடு அதிகரித்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்பது ஒரு மோசடியான வாதமே. இங்கு ஏற்கனவே சிக்கோர்ஸ்கி, லாக்கி மார்ட்டின் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. தற்போது அந்நிய முதலீடு 100 சதவீதமாக உயர்ந்தால் பன்னாட்டு நிறுவனங்களும் அவற்றின் துணை நிறுவனங்களும் இங்கு ஆயுத உற்பத்தி தொழில் துவங்கும் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் அந்நியர்களை பயன்படுத்தலாம் என்ற விதி விலக்கை பயன்படுத்தி, சாதாரண ஒப்பந்த தொழிலாளர்களை மட்டும் இந்தியாவில் எடுத்துக் கொண்டு பிற வல்லுநர்களை தங்கள் நாட்டிலிருந்து அல்லது எங்கே குறைவான கூலிக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் கிடைக்கிறார்களோ அந்த நாட்டிலிருந்து கொண்டு வந்துவிடுவர். எனவே இங்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பில்லை.

இந்த நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம், தண்ணீர், இடம் எல்லாம் சாமானிய மக்களிடமிருந்து பறித்து கையளிக்கப்படும். பதிலுக்கு மண்ணை பறிகொடுத்த மக்களில் சிலர் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்படலாம்.

விமான போக்குவரத்து

ஏற்கனவே பல தனியார் பெருமுதலாளிகள் விமான போக்குவரத்தை நடத்தினாலும், போட்டியில் கட்டண குறைவு என்பதெல்லாம் இல்லை. இந்தியன் ஏர்லயன்ஸ் என்ற பெரிய பொதுத்துறை நசிவடைய செய்ததுதான் மிச்சமாகியிருக்கிறது. இந்நிலையில் இந்த துறையிலும் அந்நிய முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தொலை தொடர்பு, தகவல் தொடர்பு என்பதில் அதிகமான பன்னாட்டு நிறுவனங்கள் பங்கெடுத்ததில் அதன் பயன்பாடு அதிகரித்து பாமர மக்கள் வரை சென்றடைந்தது போல் தோற்ற மளித்தாலும், அதனுள்ளே லாப போட்டியும், சுரண்டலும்தான் அதிகரித்துள்ளது. கைபேசி பயன்படுத்தும் நாம் எவரும் அன்றாடம் இரவு கடைசி இருப்பு, மறுநாள் துவக்க இருப்பு என கணக்கு வைத்திருப்பதில்லை. ஒரு கைபேசிக்கு வாரத்திற்கு ஒரு ரூபாய் வீதம் அனாமத்தாக கழித்தாலே அதன் பணியாளர்கள் சம்பளத்திற்கு போதுமானது. போட்டி என்ற பெயரில் பிஎஸ்என்எல் என்கிற பெரிய பொதுத்துறையை நசிவடைய செய்வதுதான் நடைபெற்றுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்துமே பங்கு சந்தையில் பட்டியலிடப்படுவதால், எப்போது உச்சத்திற்கு போகும், எப்போது பாதாளத்தில் விழும் என்பது தெரியாது. இறங்கு முகத்தில் முதலீட்டாளர்கள் தப்பித்தால் போதும் என முதலீட்டை எடுத்துக் கொண்டு ஓடுவதுதான் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றாக உள்ளது.

இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கையில் ஐக்கிய ஐரோப்பிய குடியரசிலிருந்து பிரிட்டன் வெளியேற ஆதரவு அதிகரித்ததால் சர்வதேச பங்கு சந்தை ஆட்டம் கண்டுள்ள செய்தி வருகிறது. சொந்த நாட்டிலுள்ள குடிமக்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும், புலம் பெயர்ந்து வருபவர்களால் உள்நாட்டு வேலை வாய்ப்பு பாதிக்கிறது என உலக நாடுகள் எண்ண துவங்கியுள்ள நேரத்தில் இங்கே பாரதத்தை கூறுபோட்டு விற்பதற்கான நடவடிக்கை அதிகரித்துள்ளது வேதனையளிப்பதாக உள்ளது.

குப்பையள்ளுவதிலும், கழிப்பறைகள் கட்டுவதிலும் தேசப்பற்றோடு தொடர்புபடுத்தி விளம்பரங்கள் தந்துவிட்டு, இந்த தேசத்தின் பாதுகாப்பை 100 சதவீதம் அந்நியரிடம் ஒப்படைப்பதென்பது 70 ஆண்டுகளுக்கு முன்னர் பெற்ற இந்திய விடுதலையை கேலிக் கூத்தாக்குவதாக அமையும்.

குறிப்பு:

World Investment Report, 2005
en.Wikipedia.org/wiki/Enron_scandal
Journal of advanced management science vol.2 No.4. Dec 2014 – analysis of FDI inflows and flows pdf

எஸ்.சம்பத்,கட்டுரையாளர் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க மாநில நிர்வாகி (dss1961@gmail.com)

This entry was posted in Analysis & Opinions, Political Economy, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.