பணமற்ற வங்கிகள் உள்ளன, பணமற்ற ஏடிஎம்கள் உள்ளன ஆனால் பணமற்றப் பொருளாதாரம் இல்லை

செல்லா நோட்டுகளாக்கும் திட்டம்  குறித்து பொருளாதார நிபுணர்கள் கருத்து

நவம்பர் 23 அன்று சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தில் ரூ500 மற்றும் ரூ1000 ஆகியவற்றை செல்லா நோட்டுகளாக்கும் திட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய பொருளாதார வல்லுனர்கள் வெங்கடேஷ் ஆத்ரேயா, பேராசிரியர் சுப்பிரமணியன், பேராசிரியர்; ஜனகராஜன் மற்றும் சென்னை பல்கலைகழக பொருளாதாரத் துறைத் தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம் ஆகியோர் இக்கொள்கையை விமரிசித்தனர். கருப்புப் பணத்தை கட்டுப்படுத்துவதற்காக செய்யப்படுவதாக கூறும் இத்திட்டத்தின் நோக்கமும், செயலாக்கமும் தொழிலாளர் வர்க்கத்தை சுரண்டுவதாகவும் அவர்களுக்கு இன்னல்களை கொடுப்பதாகவும் உள்ளது என்று அவர்கள் கூறினர். திட்டத்தை அறிவித்த முறை ஊடகங்கள் வழியாக பரபரப்பை ஊட்டுவதாக அமையப்பட்டிருந்ததையும், பொது மக்களின் மேல் எற்படுத்திய தாக்கத்தை மத்திய அரசு கணக்கில் கொள்ளவில்லை என்று அவர்கள் கருதினர். அவர்கள் கூறிய கருத்துகளும், விவரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

mids-seminar

நோக்கம்
இந்தியாவின் கருப்புப் பொருளாதாரம் சுமார் 30 லட்ச கோடி ரூபாய் ஈட்டுவதாக உள்ளது. இதில் புழக்கத்தில் உள்ள பணம் 7.75 லட்ச கோடி ரூபாயாக மதிப்பிடப்படுகிறது. பெரும்பான்மையான கருப்பு பணங்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சொத்துகளாக சேமித்து வைக்கப்படுகின்றன. இங்கிருந்து செல்லும் கருப்புப் பணம் அன்னிய முதலீடாக மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டுவரப்ப பட்டு வெள்ளையாக்கப் படுகிறது. இந்தியாவில் உள்ளது கருப்புப் பணம் அல்ல கருப்பு பொருளாதாரமும் அதை ஏதுவாக்கும் நடவடிக்கைகளும் ஆகும். கருப்புப் பொருளாதாரத்தை அரசு முடக்க முயற்சிக்க வேண்டும்.

நாட்டில் கருப்பு பணத்தை முடக்குவதற்கு பல துறைகள் உள்ளன. குறிப்பாக வருமான வரித் துறை, ஊழல் ஓழிப்பு துறைகள் மற்றும் பல சட்டங்கள் உள்ளன. அவற்றை பலப்படுத்தி செயலாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது இல்லாமல் மீண்டும் கருப்பு பொருளாதாரம் புது வடிவங்களில் உருவாக்கப்படும்.

செயலாக்கம்
1978ல் இதே போல் உயர் மதிப்புள்ள பணத்தாள்கள் பணப்பரிவர்த்தனைகளில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நீக்கப்பட்டத் தொகை புழக்கத்தில் இருந்த தொகையில் 1சதம் ஆகும். அதனால் மக்களும், வணிகமும் பாதிக்கப்படவில்லை. தற்போது இந்தியாவில் 16லட்ச கோடி ரூபாய்கள் பரிவர்த்தனையில் உள்ளன. இதில் 500ரூபாய் மற்றும் 1000ரூபாய் தாள்கள் மதிப்பு 14லட்ச கோடி ரூபாயாகும். பரிவர்த்தனையிலிருந்து 86சத பண மதிப்புகளை தற்போதைய திட்டம் நீக்கி உள்ளது. இது அடிப்படை பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் சராசரியாக 1 லட்ச மக்களுக்கு 10.7 வங்கிக் கிளைகளும் 16 ஏடிஎம்களும் உள்ளன. தென் மாநிலங்களிலும் நகரங்களிலும் வங்கி மற்றும் ஏடிஎம் கட்டமைப்புகள் அதிகமாக உள்ளன. அதாவது வட மாநிலங்களிலும் கிராமப்புறப் பகுதிகளிலும் இக்கட்டமைப்புகள் குறைவாக உள்ளன. இப்பகுதிகளில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

500ரூ மற்றும் 1000ரூபாய்களை எடுத்து விட்டு 2000ரூபாய் நோட்டுகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதை மாற்றுவதற்கு போதுமான ரூ50, ரூ100 போன்ற சிறிய மதிப்புள்ள தாள்கள் கிடையாது.

நவம்பர் 8 அன்று இரவு 8 மணிக்கு திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் அடுத்த நாள் காலை 4 மணி வரை பொன் சந்தையில் வணிக நடவடிக்கை என்றும் இல்லாத அளவுக்கு எகிரியது. தங்கம் விலை அதிகரித்தது. வெளிநாட்டு கரன்சிகளின் விலை கருப்பு சந்தையில் அளவுக்கு அதிகமாக மீறியது. சிறிய நோட்டுகளுக்கு கருப்பு சந்தையில் மதிப்பு ஏறியது. தங்களிடம் இருந்த கருப்பு பணத்தை மாற்ற நினைத்து அதற்கான வழி தெரிந்தவர்கள் 8 மணி நேர இடைவெளியில் தங்களுடைய பணத்தை சொத்துகளாக மாற்றி கொண்டனர்.

இவ்வாறான திட்டங்கள் முறையாக கணிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். சந்தையில் இருந்து நீக்கும் பண மதிப்பை விட குறைவாக நோட்டுகள் அச்சடித்தால், செல்வ அழிப்பு ஏற்படும் இதனால் பணவீக்கம் அதிகரிக்கும். அதிக நோட்டுகள் அச்சடித்தால் பணச்சுருக்கம் ஏற்படும். இரண்டுமே பொருளாதாரத்தை பாதிக்கும். இது குறித்து ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகமும் வாய் திறக்கவில்லை. அவர்களுடைய பொறுப்புகள் இங்கு வலு இழக்கும் நிலைமை உருவாக்கப்படுகிறது.

தாக்கம்
நவம்பர் 8 முதல் இதுவரை(23), 5.45 லட்ச கோடி ரூபாய்கள் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 1.03 லட்ச கோடி ரூபாய் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 4 லட்ச கோடி ரூபாய் பரிவர்த்தனையில் இல்லை.

மனித மற்றும் பொருளாதார ரீதியில் இத்திட்டம் பெரும் இழப்பை தந்துள்ளது. வங்கிகளின் வரிசைகளில் நின்று மக்கள் இறந்துள்ளனர். வங்கிகளில் தொழிலாளர்கள் இறந்துள்ளனர். உணவு, மருத்துவம் இல்லாமல் பலர் இறந்துள்ளனர். பலருக்கு வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன. இவ்வாறான இழப்புகள் தான் இந்தியாவை வளர்த்தெடுக்கும் என்றால் அது யாருக்கான வளர்ச்சி என்று நாம் கேட்க வேண்டும்?

இத்திட்டம் விவசாயிகளை விரக்தியடையச் செய்துள்ளது. அவர்களுடைய உற்பத்திகளை வாங்குவதற்கு பணம் இல்லாததால் சந்தைகளில் அவர்களது அறுவடைகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு போன்ற இடங்களில் பொருட்களை குப்பையில் போடும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. அதே சமயம் அடுத்த பருவத்திற்கு விதை மற்றும் உட்பொருட்களை வாங்குவதற்கான பணமும் இல்லை. இதன் விளைவு குறுகிய காலத்தில் பொருள் தேவைகள் குறையும் . நடுத்தர காலத்தில் விவசாய உற்பத்தியில் தேக்கம் ஏற்படும். விவசாயிகளுக்கு வாழ்வாதார பிரச்சனை அதிகமாகி உள்ளது.

இந்தியாவின் அமைப்புசாரா துறைகளின் வர்த்தகம் ஏறத்தாழ பண பரிவர்த்தனை மூலமே நடக்கின்றது. நாட்டின் 51 கோடி தொழிலாளர்களில் 90சதத் தொழிலாளர்கள் விவசாயம், கட்டுமானம், மீன்பிடி உட்பட அமைப்பு சாரா துறைகளில் வேலை செய்கின்றனர். திட்டம் அமல்படுத்தியதில் இருந்து பெரும்பான துறைகளில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. பல கட்டுமான இடங்களில் முதலாளிகள் தொழிலாளர்களுக்காக உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர் ஆனால் இது எவ்வளவு நாளைக்கு தொடரும் என்று தெரியவில்லை. ஈசிஆர் சாலை ஓரம் வாழ்ந்து வந்த குப்பை பெறுக்கும் தொழிலாளர்கள் குப்பைகளை யாரும் வாங்க முடியாமல் இன்று நடுத்தெருவிற்கு வந்துள்ளனர். இடம் பெயர் தொழிலாளர்கள் வேலை இழந்து ஊருக்கு திரும்புகின்றனர்.

வங்கிகளில் காத்திருக்கும் தொழிலாளர்களின் வேலை பாதிப்பால் உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி யாரும் கணிக்கவில்லை. ஏற்கனவே நாடு பொருளாதார மந்தத்தில் உள்ளது. வர்த்தகம் தேக்கத்தில் உள்ளது, பொதுத் துறைகளில் அரசின் முதலீடுகள் குறைந்துள்ளன. முதலாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளால் உள்நாட்டு உற்பத்தியில் வரி விகிதம் குறைந்துள்ளது. இப்போது நுகர்வோர் செலவுகளும் குறைக்கப்பட்டால் பொருளாதாரப் பிரச்சனைகள் வளரும்.

கரன்சிகளை குறைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் பணப் பரிவர்த்தனையில் இருந்து பணமற்ற இணைய பரிவர்த்தனைக்கு மாறாது ஏனென்றால் அதற்கான கட்டமைப்பு இங்கு இல்லை. நம் நாட்டில் பணமற்ற வங்கிகள் உள்ளன, பணமற்ற ஏடிஎம்கள் உள்ளன ஆனால் பணமற்றப் பொருளாதாரம் இல்லை.

நாட்டின் வறுமை மற்றும் சமமின்மையை போக்குவதில் கணக்கில் வராத பொருளாதாரம்(பணப்பரிவர்த்தனை பொருளாதாரம்) பங்கு குறித்து ஆராய வேண்டியுள்ளது. இப்பொருளாதாரம்(அமைப்புசாரா) உள்நாட்டு உற்பத்தியில் 77சதமாக மதிப்பிடப்படுகிறது. இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் ரூ6000 மாதம் பொதுவான அடிப்படை ஊதியமாக கொடுக்கப்பட வேண்டும் என்று பல பொருளாதார நிபுணர்களும், கொள்கை ஆய்வாளர்களும் கூற ஆரம்பித்துள்ளனர். இது இப்பொழுது இருக்கும் பொது விநியோகம் போன்ற மக்கள் நலப் பயன்களுக்கு பதிலாக கொடுக்கப்படும் ஊதியம் அல்ல. வறுமை மற்றும் சமமின்மையை நீக்க இவற்றுடன் தரப்பட வேண்டிய சேர்க்கையாகும். அனைத்து குடிமக்களுக்கும் ரூ6000 அடிப்படை ஊதியமாக கொடுக்க வேண்டும் என்றால் உள்நாட்டு உற்பத்தியில் 10சத ஒதுக்கீடு வேண்டும். அதாவது கணக்கில் வராத பொருளாதாரத்தின் 30 சதத்தை வரிக்கு உட்படுத்தினால் இந்த நோக்கம் நிறைவேறும். இன்று மக்களுக்கு கணக்கில் வராதப் பொருளாதாரமே மக்களின் பணத் தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்கிறது. அடிப்படை ஊதியத்தை கொண்டு வராமல் இப்பொருளாதாரத்தை வரிக்குள் கொண்டு வந்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

கருப்பு பணம் ஏமாற்றுபவர்கள் சிலரிடமிருந்து பறித்து இன்னொரு ஏமாற்றுபவர்கள் கூட்டத்திற்கு கொடுப்பதற்கான முயற்சியே இத்திட்டம். பயணக்கைதிகளை மீட்டெடுக்கிறேன் என்று அவர்கள் அனைத்து பயணக்கைதிகளையும் கொல்வது போல் தான் செயல்படுத்தும் முறை உள்ளது.

அரசியல் சூழல்
இத்திட்டம் அறிவிக்கப்பட்ட முறை அரசின் நோக்கத்தை கேள்விகுறியாக்குகின்றது. தற்போதைய பிஜேபி அரசும் முந்தைய காங்கிரஸ் அரசும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. இவர்களது ஆட்சியில் அரசுக்கும் முதலாளிகளுக்கும் உள்ள உறவு இன்னும் வளர்ந்து கொண்டே வருகிறது. 2014-15 பட்ஜெட்டில் கலால் வரி 2.29லட்ச கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. 2015-16ல் இது 2.87 லட்ச கோடி ரூபாயாக உயர்ந்தது. ஆனால் அதே சமயம் நேரடி வரிகளான வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரிகள் குறைந்து வருகின்றன. இவ்வாறு பணக்காரர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் நேரடி வரியைக் குறைத்து மறைமுக வரிகளாக மக்களிடமிருந்து அரசு வரி வசூலிக்கின்றது.

இது வரை பிஜேபி கட்சி தனது கட்சியின் நிதி யார் கொடுத்தது என்பதை வெளியிட மறுத்து வருகிறது. ஆனால் அனைவரும் தங்களது நிதி பற்றி வெளியிட வேண்டும் என்று கேட்கிறது. அன்னிய நிறுவனங்களை உள்நாட்டு நிறுவனங்களாக மாற்றுவதற்கு எஃப்சிஆர்ஏ அரசு சட்டத்தை மாற்றி வருகிறது.

கருப்பு பணத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசு ஆர்வம் காட்டவில்லை.

தான் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை அபகரித்து அனைவருக்கும் வங்கியில் 15 லட்ச ரூபாய் செலுத்துவதாக மோடி தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். அது வெறும் தேர்தல் வித்தை என பிஜேபி எம்எல்ஏ கூறியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை பூர்த்தி செய்வதில் அரசின் செயல்பாடு படுமோசமாக உள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்க அரசால் முடியவில்லை. இவ்வாறான பொருளாதாரப் பிரச்சனைகளை பொருளாதார ரீதியாக தீர்க்காமல் மக்களை பிளவு படுத்து கர் வாப்ஸி, மாட்டுக் கறி உணவை தடைசெய்தல் என்ற அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இக்கொள்கைகளை விமரிசிப்பவர்களுடன் விவாதித்து பல்வேறு புள்ளிகளை ஆராயாமல் அனைவரையும் தேச விரோதிகள் என்று அரசு கூறி வருகிறது. இதனால் மக்கள் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்துகளை சுதந்திரமாக சொல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

This entry was posted in Analysis & Opinions, Featured, Political Economy, தமிழ் and tagged , , . Bookmark the permalink.