சொத்துரிமைக்கு நிகரான ஓய்வூதியம் – எஸ்.சம்பத்

இந்திய உச்ச நீதிமன்றம் திரு ட்டி.எஸ்.நகரா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி தொடர்ந்த ஓய்வூதியம் தொடர்பான ஒரு பொது நல வழக்கில் 17/12/1982ல் வரலாற்றுச் சிறப்பு மிக்கதீர்ப்பு வழங்கியது. அதன் காரணமாக டிசம்பர் 17 என்பது இந்திய அளவில் ஓய்வூதியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதில் ஒன்றிணையும் விதமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் துவக்கப்பட்டு 26 ஆண்டுகள் கழித்து செப் 1998ல் ஒப்பந்தம் வழியாக ஏற்கப்பட்ட ஓய்வூதியம் முதன் முதலாக 17/12/2000 அன்றுநடைபெற்ற அரசு விழாவில் அன்றைய தமிழக முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

ஓய்வூதிய உரிமை தொடர்பான மேற்சொன்ன பொது நல வழக்கு அன்றைய இந்திய தலைமைநீதியரசர் ஒய்.வி.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வினால்பரிசீலிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப் பட்டது. தீர்ப்பினை தொடங்கும் நீதியரசர் இவ்வாறு துவக்குகிறார். “மனுதாரர்களின் கோரிக்கையைபரிசீலிக்கிற போது ஆங்கில நாட்டு அரசின் பிரதம மந்திரியாக பதவி வகித்த ஊல்சியின் இறுதிபிரார்த்தனையான” அரசிடம் எவ்வளவு பய பக்தியுட்ன் சேவை செய்தேனோ, அது போல நான்இறைவனிடம் சேவை செய்திருந்தால் என் வயோதிக காலத்தில், இந்த ஈன வறிய நிலைக்கு நான்அவரால் தள்ளப்பட்டிருக்க மாட்டேன்” என்ற கூக்குரல் போன்றும்,
“நான் இரத்தம் சிந்திய (என் வாழ்நாளில் சேவை செய்த) அதே வாழ்க்கை முட்களில் வீழ்கின்றேன்” என்ற ஷெல்லியின் சோக ராகமாகவும் உள்ளது”.

அந்த தீர்ப்பில் சொல்லப்பட்ட பலஅம்சங்களில் மிகக் குறிப்பாக சொல்லப்படும் 3 அம்சங்கள்
(1) ஓய்வூதியர் அனைவரும் ஒரேதன்மையினர்தான் அவர்களை பணி நிறைவு பெற்ற நாளின் அடிப்படையில் பிரிப்பது சரியன்று,
(2)ஓய்வூதியம் அரசின் விருப்பப்படி வழங்கும் கருணைக் கொடையோ அல்லது வெகுமதியோ, அல்லதுபரிசோ கிடையாது அது அவர்களின் சொத்துரிமைக்கு நிகரான உரிமை,
(3) அரசுப் பணியில்உள்ளவர்களுக்கு எப்போதெல்லாம் ஊதியம் உயர்த்தப்படுகிறதோ, அப்போது ஓய்வூதியதாரர்களுக்கும்ஓய்வூதியம் உயர்த்தப்பட வேண்டும் என்பனவையாகும்.

வயோதிக காலத்தில் பெற்ற பிள்ளைகளிடம் கூட மரியாதையும், மதிப்பும் கிடைப்பதற்குஇத்தகைய ஓய்வூதியம் என்பது பெரும் உதவியாக இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மாறி வரும் பொருளாதார சூழலில் இத்தகைய ஓய்வூதியத்திற்கும் அவ்வப்போது அபாயச்சங்கு என்பது உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இரு வருடம் முன்பாக லண்டனில்ஓய்வூதியத் திட்டத்தில் பல நிபந்தனைகளை விதித்து, படிப்படியாக பயன் பெறுபவர்கள்எண்ணிக்கையை குறைக்க முயன்றபோது அந்த நாட்டில் மாணவர்களும், இளைஞர்களும் ஓய்வூதியர்களோடு களம் இறங்கி இந்த பிரச்சனை வருங்கால சந்ததியை பாதிக்கும் பிரச்சனை எனபோராடி அரசின் முயற்சியை திரும்பப் பெற வைத்தனர் என்பது முக்கியமான செய்தி.

அரசு மற்றும் பொதுத்துறை தவிர இந்தியா முழுவதும் இருக்கிற தனியார் துறைகளைப்பொறுத்தவரை வருங்கால வைப்பு நிதியின் நிர்வாகம் செலுத்துகிற பங்குத் தொகையில் ஒரு பகுதிஓய்வூதிய நிதியாக ஒதுக்கப்பட்டு சந்தாதாரர்கள் ஓய்வு பெறுகையில் ஓய்வூதியம் என்பதுவழங்கப்பட்டு வருகிறது. முதலில் இது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கான குடும்ப ஓய்வூதியமாக மட்டும் இருந்தது. பின்னர் ஓய்வு பெறுபவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
ஆனால் பெரும்பாலான தனியார் நிறுவனங்களால் 5 ஆண்டுக்ள்- 6 ஆண்டுகளில் பணி நீக்கம்செய்யப்படுகிற தொழிலாளர்கள், தவிர அவர்களாக வேறு பணி தேடி இடம் மாறுகிற தொழிலாளர்கள் தங்களின் முந்தைய நிறுவன பணிக்காலத்திற்கான வ.வை.நிதி தொகையை, ஓய்வூதிய பங்கை உரிமை கோரல் என்பது மேற்கொள்வதே இல்லை. இத்தகைய உரிமை கோராத தொகையே 27,000 கோடிக்கு மேல் உள்ளது என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணைய இணையதள ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.

தற்போது இந்த ஆணையம் வழங்கும்குறைந்த பட்ச ஓய்வூதியம் என்பது ரூ 1000 என வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஆயிரம் என்பது இன்றைய வாழும் நிலைக்கு முற்றிலும் போதாத தொகை என்பதால், இது மீண்டும் உயர்த்தியமைக்கப்படவேண்டும். அதே போல பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு நிலையை அடைகிற போது அனைத்து நிறுவன பங்குகளையும் ஒருங்கிணைத்து ஓய்வூதிய உரிமை கோரல் என்பது இன்னமும் சற்று சிரமத்திற்குரிய எட்டாக் கனியாகவே உள்ளது. அது எளிமைப் படுத்தப்பட வேண்டும். மேலும் இன்னும் பத்தாண்டுகளில் வருங்கால வைப்பு நிதி என்று ஒன்றே இருக்கக் கூடாது என்பதற்கான முயற்சியும் துவங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூடிய மத்திய அமைச்சரவை 15,000 ற்கு கீழ் சம்பளம் பெறுபவர்களுக்கு வ.வை.நிதி பிடித்தம் என்பது சட்டக் கட்டாயம் இல்லை என முடிவுசெய்திருப்பதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வூதியம் என்பது ஊதிய ஒப்பந்தத்தின் மூலம்கொண்டுவரப்பட்டது என்ற போதிலும் அதில் உட்படாத அதிகாரிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டது. தற்போது அதிகாரிகள் அரசு ஊழியர்கள் போல் ஊதியம் பெற்று வருவதால், 98 சதவீதம் பங்குத்தொகை தொழிலாளர்கள் சார்ந்தது என்ற போதிலும், 2 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் அதிகாரிகளுக்கு மட்டும் 6 வது ஊதிய கமிசனுக்கு நிகராக ஓய்வூதியத்தை மாற்றியமைத்துவிட்டனா் என்பதோடு, மாநில அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக் குழு பரிந்துரை வந்தால் அதற்கேற்பவும் கழக அதிகாரிகளுக்கு மட்டும் மாறிவிடும். ஆனால் மறுபுறம் தொழிலாளர்கள் இதுவரை 3 ஒப்பந்தங்கைள கடந்தபோதிலும் அவர்களின் ஓய்வூதியத்தில் மாற்றமில்லை. இது நகரா வழக்கில் உச்ச நீதிமன்றம்தெரிவித்த பொதுக் கருத்திற்கு முற்றிலும் முரணானது ஆகும்.

குறிப்பாக தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் மூத்த குடிமக்களான ஓய்வுபெற்றவர்களின் பணி முடிவு கணக்குகள் பணிக்கொடை, விடுப்பு ஊதியம், வ.வை.நிதி சேமிப்பு, ஓய்வூதிய ஒப்படைப்பு (கம்யுடேசன்) போன்றவை கடந்த 3 முதல் 4 ஆண்டுகளுக்கும் மேலாக (கழகத்திற்கு கழகம் நிலுவை மாதங்களில் வேறுபாடு உள்ளது) நிலுவையிலுள்ளது. ஒருபுறம் பணிக்கொடை பட்டுவாடாச் சட்டம் பணி முடிவு பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள்ளாக பணி முடிவு பயனை தீர்வு செய்யவேண்டும் என கறாராக சொல்லும் நிலையில், மதுரை அமர்வு நீதிமன்றம் மற்றும் அதனை தொடர்ந்து சென்னை முதன்மை உயர்நீதி மன்றம் பணியாளா்களின் ஓய்வு கால பயன்களை 12 தவணைகளில் வழங்க இதுவரை சுமார் 4000 தனி நபர் வழக்குகளில் உத்திரவிட்டுள்ளது. அவ்வாறு உத்திரவிட்டும் தீர்வு செய்வதில் தாமதம் நீடிக்கும் நிலையில் தினந்தோறும் சிலர் உயர்நீதிமன்றத்தை அணுகிய வண்ணம் இருக்கின்றனர். இது மிகவும் மோசமான நடவடிக்கை என்பதுடன், இந்த நிலை மின்வாரியம் போன்ற அரசுத் துறைகளுக்கும் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதற்கும் மாநில அரசு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர புதிய பென்சன் திட்டம் என 01.04.2003ற்கு பின்னர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என சொல்லப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதற்கானஓய்வூதியத்திட்டம் தொடர்பாக நிர்வகிக்கும் அதிகார அமைப்பிடமிருந்து கணக்கீடு போன்றவை இதுவரை வெளியிடப்படவில்லை என்பது வேதனையின் உச்ச கட்டம். இதன் நடுவில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகள் இத்தகைய புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு தொகை செலுத்தியவர்கள் பணி ஓய்வு / தன்விருப்ப ஓய்வு / இறப்பு / பணிநீக்கம் / ராஜினாமா போன்ற எந்த வகையில் பணி முடிவு பெற்றாலும் அவர்களமிருந்து பிடித்தம் செய்த பங்குத் தொகையை மட்டும் (பென்சன் என்றில்லாமல்) தீா்வு செய்து வருகின்றன என்பது கூடுதலான வேதனைக்குரிய அம்சம்.

தவிர அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை அரசாணை 363, நாள் 23/08/13ல் உயிருடன் உள்ள ஓய்வூதியர்களுக்கு மட்டுமே சம்பளக் குழு படியான திருத்தியமைக்கப்படும் ஓய்வூதிய வித்தியாசத் தொகை வழங்கப்படும் என சொல்லியிருப்பது, பல்லாயிரக்கணக்கான குடும்ப ஓய்வூதியதாரர்களை பாதிப்பதாக உள்ளது, அதுவும் மாற்றப்பட வேண்டும் என அரசு ஓய்வூதியர்கள் தொடர்ந்து இயக்கங்கள் நடத்தி வருகின்றனர்.

பெங்களுரைச் சேர்ந்த பொருளாதார மாற்றத்திற்கான கொள்கை மையத்திலுள்ள கே.காயத்ரியின் ஆய்வறிக்கையில் மத்திய அரசின் ஓய்வூதிய செலவினம் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 0.51 சதமானமே. அதில் 0.26 சதமானம் ராணுவ சேவையில் உள்ளவர்களுக்கு செல்கிறது என சொல்லப் பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதிய நிதியைப் பார்த்து பெருமூச்சு விடும் நிதி அமைச்சகம் இதில் அந்நிய முதலீட்டை ஈர்க்கிறேன் என்றும், இந்த நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்யவும் நடவடிக்கை எடுப்பது காங்கிரஸ், பிஜேபி என எந்த அரசு மாறினாலும் தொடர்கதையாகவே உள்ளது. சந்தை என்பது ஏற்ற, இறக்கங்களை கொண்ட ஒரு மாயப்பிசாசு என்பதால், இத்தகைய முயற்சி முற்றிலும் இந்த நிதியை அழித்துவிடும் என்பது தொழிலாளர் தரப்பின்அச்சமாக உள்ளது.

இவை தவிர அமைப்பு சாரா தொழிலில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் சமபாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செயயும் வகையில் ஒரு விரிவான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதும் தொடர்ந்து இருந்து வருகிற ஒரு கோரிக்கை.

எனவே இந்த ஓய்வூதியர் தினத்தில் யாராக இருப்பினும் வயோதிகம் என்பது மதிக்கப்படவேண்டும். அவரவர் பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் தொகைகள் விகிதாச்சாரம் மாறலாம், ஆனால் விதிகளை அமுல்படுத்துவதில் முதன்மை அலுவலர் முதல் கடை நிலை ஊழியர் வரை,ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் யாராக இருப்பினும் ஒரே மாதிரித்தான் நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதிகளை ஸ்திரப்படுத்த தொழிற்சங்க சம்மேளனங்கள் தொடர்ந்து முனைப்புடன் செயலாற்ற இந்த ஓய்வூதியர் தினத்தில் உறுதியேற்க வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக உள்ளது.

எஸ்.சம்பத்
அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன நிர்வாகி(dss1961@gmail.com)

This entry was posted in Analysis & Opinions, Featured, தமிழ் and tagged , , . Bookmark the permalink.