கிருஷ்ணவேணி பஞ்சாலை – பற்றிக்கொண்டது நெருப்பு இல்லை, ஒரு நல்ல படத்தின் தீப்பொறிகள் :)

 தொழிற்சங்கம் என்றாலே கெட்ட வார்த்தை என்று அந்நிய உள்நாட்டு பெரு முதலைகள் முடிவெடுத்து தொழிலாளிகளை கொத்தடிமைகளாக நடத்தும் இன்றைய வேதனையான  சூழலில் அரை நூற்றாண்டுக்கு முந்தைய நிலையை கண் முன் காட்டுகிறது  இந்த பஞ்சாலை..
    கூடவே அக்காலக்கட்டத்தில் பேயாட்டம் போட்ட ஜாதி வெறி பயமுறுத்துகிறது.ஆனால் ஜாதி என்ற பெயரில் கௌரவ கொலைகள் இன்றும் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன என்பது கசப்பான உண்மை.
    ஒரு தொழில்சாலையின்  தொடக்கம் ,அதன் வளர்ச்சி,வீழ்ச்சி மற்றும் அதை சார்ந்து இருக்கும் மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை இது வரை எந்த தமிழ் படத்திலும் இவ்வளவு இயல்பாக பார்த்ததில்லை. டைரக்டர் வாழ்க. “நமது கட்சியின் உன்னதமே நமது தவறுகளை நாமே வெளிப்படையாக ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்வது தான்” என்று பஞ்சாலையில் தொழிற்சங்கம் அமைத்து தவறான முடிவுகளினால் அவநம்பிக்கைக்கு உள்ளாகும் Communist தலைவர் ஞாபகப்படுத்தும் காட்சி அருமை. 
      பருப்பு இல்லாத கல்யாணமா? கான்டீன் இல்லா தொழிற்சாலையா? கான்டீன் நடத்துபவராக m .s .பாஸ்கர் கலக்குகிறார்.அப்புறம் பெண்களை சீண்டும் ஒரு supervisor (.பெண்கள் வேலை செய்யும் இடத்தில ஜொள்ளர்கள் இல்லாமல் இருப்பார்களா?)
        கதை கரு காலம் காலமாக எல்லா தொழிற்சாலைகளிலும் நடப்பதே.
          கொடுத்தால் கடவுள், குறைத்தால் எதிரி என்று முதலாளியை தொழிலாளி பார்ப்பதும் , “லாபம் வந்த போது கேட்டதற்கு மேலேயே  போனஸ் கொடுத்தேனே இப்பொழுது நஷ்டம் வந்தால் குறைக்க ஒத்துகொள்ள மறுக்கிறார்களே, factory shutdown செய்கிறேன் – பட்டால் தான் புத்தி வரும்” என்று முதலாளி ஆவேச படுவதும் மிகவும் யதார்த்தம்  ( முதலாளியின் costume மற்றும் வயோதிக தோற்றம்’ குரு’ அம்பானியை  நினைவு படுத்தி, சிறு தொழில் பூதாகாரமான பல் நாட்டு corporation ஆக வளர்வது இப்படி தானோ என்று உலுக்கி எடுக்கிறது). கூலி தரும் மனிதனே முதலாளி, அந்த முதலாளியே கதி – இப்படி ஒரு பிரம்மாண்ட வணிக வலையில் சிக்கி கொண்டிருக்கிறோமே, நமக்கு நாமே அமைத்து கொண்டிருக்கும் இந்த சமூக கோட்பாடுகள் எவ்வளவு அருமையானவை! தட்டிக்கொடுத்து கொள்ள மனசாட்சி அனுமதித்தால் சரி.  
கொள்ளை அடித்து, மனித உரிமை, சுய மரியாதை, வாழ்வாதாரம் என்று capitalism கொஞ்சம் கூட மதிக்காத எல்லா அடிப்படைகளையும் இரும்புப்பிடியால் நசுக்க பார்க்கும் அந்நிய முதலீட்டு சுறாக்களை எதிர்க்கிறோமே, அப்பொழுது உள்நாட்டு எஜமான்கள் நமது கூட்டாளிகளா என்ன? படம் பார்க்கும்போது திணறடிக்கிறது மனசுக்குள் இந்த கேள்வி.
 ஆண்டு முழுவதும் சம்பாதித்தாலும் மிஞ்சுவது போனஸ் மட்டுமே என்று தொழிலாளிகள் ஒரு பக்கம். வங்கியில் வாங்கிய கடனை கட்ட திணறும் முதலாளி ஒரு பக்கம்.எங்கே தவறு? மனிதநேயத்திற்கே அப்பாற்பட்ட வங்கிகளின் பண சுழற்சிக்குள் போவதற்கு படத்தில் நேரமில்லை, இடமும் இல்லை. 
    முதலாளி குவித்து வைத்த சொத்தை மட்டும் தான் இழக்கிறான்..தொழிலாளி அன்றாட உணவுக்கு அல்லாடுகிறான். போனஸ்-ஐ நம்பி நகை வாங்கும் கனவு நசுங்கி , மளிகை சாமான் கூட கடனுக்கு வாங்க முடியாத நிலை.தொழிற்சாலை என்று திறக்கும் என்று எதிர் பார்த்து பூட்டிய  கேட் இன் வெளியே  புத்தி பேதலித்து  காத்து கிடக்கும் பெண்ணின் துயரம் போல் இன்னும் எத்தனையோ எதிர்மறைகள்.
     இப்படி பல விடை தெரியா கேளிவிகளுடன் கிருஷ்ணவேணி இடம் இருந்து விடை பெறுகிறோம். முதலாளி,தொழிலாளி  பேதமில்லா ஒரு ‘கனவு தொழிற்சாலை’க்கு  மனம் ஏங்குகிறது. இங்கிலாந்த்-இன் Chartist புரட்சி, Syndicalism போன்ற வடிவங்களுக்கு மறுப்பிறவி கிடையாதா என்று சிந்தனை பாய்கிறது. 

This entry was posted in Art & Life, தமிழ். Bookmark the permalink.