செவிடனுக்கும் ஒலிக்கச்செய்வோம்:

பகத்சிங், ராஜ்குரு, மற்றும் சுகதேவ்க்கு செவ்வணக்கம்

பொது பாதுகாப்புச் மசோதா, மற்றும் தொழில் தகராறு சட்டம்  என்ற  சட்டங்களை  1928 மார்ச்சில்  அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம், காலனிய இந்தியாவின் சட்ட மன்றத்தில் கொண்டுவந்தது. சமூகத்திற்கு ஆபத்தானவர் என்று கருதப்படும் ஒருவரை, எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல், 2 ஆண்டுகள் வரை சிறையிலடைக்கும்  முன்னெப்போதும் இல்லாத அதிகாரத்தை  காவல்துறைக்கு பொது பாதுகாப்புச் சட்டம் அளித்தது. (ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில், பொதுப் பாதுகாப்புச் சட்டம்  இன்றும் கூட நடப்பில் இருக்கிறது.)

முன்னதாக, 1926ல்  இங்கிலாந்தில் நிகழ்ந்த மிகப் பெரும் தொழிலாளர் வேலை நிறுத்தத்தினை எதிர்கொள்ள, இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் தொழில் தகராறு சட்டம். அது, தொழிலாளர் விரோத சீர்திருத்தத்திற்கான சட்டமாகும். வேலை நிறுத்தம் செய்வதற்கான தொழிலாளர்களின் உரிமையை அச்சட்டம் பறித்தது. சட்டமன்றத்தில் இரண்டு சட்ட மசோதாக்கள் மீதும் அனல் பறக்கும் விவாதம் நடந்தது. சட்டமன்றத்தில் பொதுப் பாதுகாப்புச் சட்டம் 62க்கு 61 என்று ஒரு  வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. தொழில் தகராறு சட்டத்தை  அவசரச் சட்டமா நிறைவேற்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முயற்சித்தார்கள். (இன்றைய மத்திய அரசாங்கத்தின் விருப்பத்திற்குரிய வழியாக இன்றும் கூட அவசரச் சட்டம் இயற்றுவது இருக்கிறது.) அந்த அவசரச் சட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, பகத்சிங்கும், B.K.தத்தும் ஆபத்து ஏற்படுத்தாத  குண்டுகள் இரண்டை சட்டமன்றத்தில் போட்டார்கள்அந்த குண்டுகள்  வெறுமையாக இருந்த அறையின் மையத்தில் போடப்பட்டன. குண்டுகளைப் போட்டதற்கான காரணம் யாரையும் கொல்வதில்லை. மாறாக, ”செவிடர்கள் கேட்பதற்காகஅக்குண்டுகள் போடப்பட்டன. ஆறு நபர்களுக்கு சிறு காயங்கள்  தவிர யாருக்கும் ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை.

அதனைத் தொடர்ந்த குழப்பத்தில் தப்பித்துச் செல்வதற்கு மாறாகஅந்த இரண்டு புரட்சிகர இளைஞர்களும், உறுதியாக நின்றார்கள். மக்கள் விரோத சீர்திருத்தத்தைக் கண்டித்து  துண்டு பிரசுரங்களை வீசினார்கள். அவ்வாறு  வீசப்பட்ட துண்டறிக்கை சிவப்புத் துண்டறிக்கை என்று அறியப்பட்டது. நவ தாராளவாத கொள்கைகள்பாசிசத்தின் வளர்ச்சிக் காலமாகிய இன்று, சிவப்புத் துண்டறிக்கையின் ஒரு  அம்சம் கூட தனது பொருத்தப்பாட்டை இழந்துவிடவில்லை.

பகத்சிங், மற்றும் அவரின் தோழர்கள் நினைவாக, அந்த துண்டறிக்கையைக் கீழே தருகிறோம்.

 இந்துஸ்தான் சோசலிச குடியரசுப் படை (துண்டறிக்கை)

தியாகியான வேலியன்ட் என்ற பிரான்சு நாட்டைச் சேர்ந்த அராஜகவாதி இதே போன்ற சூழலில் உச்சரித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி எங்களுடைய இந்த செயல்பாட்டை நியாயப்படுத்துகிறோம்.  வாலியன்டின் வார்த்தைகள் இவைதான்.. ”செவிடர்களைக் கேட்க வைப்பதற்கு உரத்த குரல் வேண்டும்”.

(மாண்டேகு- செம்ஸ்போர்டு) சீர்திருத்தம் நடப்பில் இருந்த கடந்த பத்தாண்டுகளின் அவமானகரமான பத்தாண்டு வரலாற்றைத் திரும்பவும் ஒரு முறை சொல்லாமல், இந்திய நாடாளுமன்றம் என்று சொல்லப்படும் இந்த அவையின் மூலம் இந்திய தேசத்தின் மீது வீசப்பட்ட அவமதிப்புகளைக் குறிப்பிடாமல், பின்வரும் செய்திகளை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்:  சைமன் கமிஷனிடமிருந்து சில அற்ப சீர்திருத்தங்களை மக்கள் எதிர்பார்க்கும்போது, எதிர்பார்க்கப்பட்ட எலும்புத் துண்டுகளுக்காக  தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும்போது, பொதுப் பாதுகாப்பு மற்றும் தொழில் தகராறு மசோதா என்ற புதிய ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மக்கள் மீது அரசு திணிக்கிறது. அவையின் அடுத்த அமர்வில் பத்திரிகை தேசத் துரோக சட்டத்தை கொண்டுவருவதற்காக ஒதுக்கி  வைத்திருக்கிறது. வெளிப்படையாக வேலை செய்யும் தொழிலாளர் தலைவர்களைக் கண்மூடித்தனமாக கைது செய்வது, காற்று எந்த திசையை நோக்கி வீசுகிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

மிகுந்த  கோபத்தைத் தூண்டும் இந்த சூழலில், இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்கம், அனைத்து உள்ளார்ந்த  அக்கறையுடன், தங்களின் முழு பொறுப்புகளையும் உணர்ந்துகொண்டு, இந்த குறிப்பான செயலை (குண்டு போடுதலை) செய்யும்படி தனது படைக்குக் கட்டளையிட்டுள்ளது.  அவமானப்படுத்தும் கேலிக் கூத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக இச்செயல் செய்யப்படுகிறது. அன்னிய அதிகாரத்துவ சுரண்டல்காரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும், ஆனால், மக்களின் முன்னே அவர்கள் அம்மனமாக நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக இச்செயல் நிகழ்த்தப்படுகிறது.

மக்களின் பிரதிநிதிகள் தங்களின் தொகுதிகளுக்குத் திரும்பட்டும். வரவிருக்கும் புரட்சிக்காக மக்களை அவர்கள் தயார் செய்யட்டும். ஆனால், ஒன்றை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுப் பாதுகாப்பு மற்றும் தொழில் தகராறு மசோதாக்களுக்கு எதிராகவும், இரக்கமற்ற முறையில் லாலா லஜபதி ராய் கொலை செய்யப்பட்டதற்கு எதிராகவும், அனாதரவான இந்திய மக்களின் சார்பாகப் போராடுகின்ற நாங்கள், ஒரு  பாடத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விரும்புகிறோம்… வரலாறு திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுக்கும் பாடமது… ”தனி நபர்களைக் கொல்வது எளிது, ஆனால், நீங்கள் கருத்துகளைக் கொல்ல முடியாது” என்பதுதான் அந்தப் பாடம். கருத்துகள் உயிர்ப்புடன் எழுந்து நின்றபோது, மாபெரும் சாம்ராஜ்ஜியங்கள் சரிந்து போயின. பிற்போக்கு மன்னர்களும்  ஜார் சக்கரவர்த்திகளும் வீழ்ந்தே போனார்கள். ஆனால், அதேசமயத்தில்,   புரட்சி வெற்றிக் களிப்புடன் முன்னோக்கி நடைபோட்டது.

 

மனித உயிர்கள் மிகவும் புனிதமானவை என்று கருதும் நாங்கள்,  மானுடர்கள் முழு அமைதியையும், முழுமையான சுதந்திரத்தையும் அனுபவிக்கும் மிகப் பிரகாசமான எதிர்காலத்தை கனவு காணும் நாங்கள், மனித ரத்தத்தைச் சிந்த வைக்க நேர்ந்தமைக்காக வருத்தம் தெரிவிக்கிறோம். மானுடர்கள் அனைவருக்கும் சுதந்திரத்தைக் கொண்டுவருவதற்கான, மனிதனை மனிதன் சுரண்டுவதைச் சாத்தியமற்றதாக்கிவிடும்  ‘மாபெரும் புரட்சி’யின் பலி பீடத்தில் தனிமனிதர்கள் பலியாவது தவிர்க முடியாதது.

புரட்சி நீடூழி வாழ்க.

கையொப்பம்

(பால்ராஜ்) [C]

படைத் தளபதி

 

This entry was posted in Analysis & Opinions, Political Economy, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.