தொழிலாளர்கள் உரிமைகளை பாதுகாக்க OECD வழிகாட்டு நெறிமுறைகள் உதவுமா?

பிரகதிஷீல் சிமென்ட் தொழிலாளர்கள் சங்கம் (Pragatisheel Cement Shramik Sangh -PCSS) என்பது சத்தீஷ்கார் விடுதலை முன்னணியுடன் (Chattisgarh Mukti Morcha) இணைக்கப்பட்ட தொழிற்சங்கம் ஆகும். அந்த தொழிற்சங்கம் லாபோர்ஜ்ஹோல்சிம் என்ற சிமென்ட் உற்பத்தி செய்யும் சுவிஸ் நாட்டின் மிகப் பெரும் உலக நிறுவனத்துடன், ஜனவரி 22, 2016 அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டது.

சத்தீஷ்கார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நான்கு சிமென்ட் ஆலைகளின் ஒப்பந்தத் தொழிலாளர்களின் அமைப்பாக PCSS உள்ளது. அவர்களின் போராட்டம் முதலில் துவங்கியது 25 ஆண்டுகளுக்கு முன்பு. இருந்தபோதும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கான OECD வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் நடைபெற்ற சர்வதேச மூன்றாம் தரப்பு ஒன்றின் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மூலமே, இப்போதுதான் தீர்வு எட்டப்பட்டது.

PCSS 1989 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதனை அமைப்பதற்கு வரலாற்றுப் புகழ்பெற்ற சங்கர் குஹா நியோகி உதவியாக இருந்தார். சிமென்ட் ஆலைகளின் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாகவும், அவர்களுக்கான கூலி, மேம்பட்ட வேலை நிலைமைக்காகவும் போராடுவதற்கு நியோகி உதவியாக இருந்தார். நியோகி சில ஆண்டுகளுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டார். ஆனாலும், போராட்டம் தொடர்ந்தது. அப்போதெல்லாம் ஆலைகளை இயக்கி வந்தது அம்புஜா, ஏசிசி அல்லது அக்கம்பெனிகளின் முந்தைய அவதாரங்கள்தான். அம்புஜாவும் ஏசிசியும் போலியான ஒப்பந்த முறையின் மூலம் வேலை அளித்து வந்தனர். தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவதைத் தவிர்ப்பதே அவர்களின் நோக்கம். ஆனால், இறுதியாக, 2006ல் PCSS க்கு ஆதரவாக தொழில்துறை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், வலுக்கட்டாயப்படுத்தி சுய விருப்பத்தின்படி ஓய்வுபெற வைக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும் என்று தீர்ப்பு சொன்னது. 2006ல் ஹோல்சிம் ஆலைகளை விலைக்கு வாங்கியது. (2015ல் லாபோர்ஜ்உடன் இணைப்பு நடந்த போது கம்பெனியின் பெயர் லாபோர்ஜ்ஹோல்சிம் என்று மாறியது.) 2006 கம்பெனி கை மாறிய பின்னர் போராட்டத்தைக் கையாள வேண்டிய நிலையில் ஹோல்சிம் இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் கம்பெனி நிர்வாகம் வன்முறைமிக்க, குரூரமான வழிமுறைகளைப் பயன்படுத்தி தொழில் தாவாவைக் கையாண்டது. ஆலைக்குள்ளும் நீதிமன்றத்திலும் PCSS போராட்டம் நடத்தி வந்தது. போராட்டத்தின் சுருக்கமான வரலாற்றைப் படிக்க பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்

தொழிலாளர்களின் கருத்தைக் கேட்கவும் பேச்சுவார்த்தை நடத்தவும் நிர்வாகம் மறுத்துவந்ததால், 2012ல் சுவிட்சர்லாந்தில் உள்ள தேசிய தொடர்பு மையத்தை (National Contact Point -NCP) தொழிலாளர்கள் அணுகினார்கள். NCP என்பது பேச்சுவார்த்தை நடத்துவதற்கான மூன்றாம் தரப்பு நடுவர் அல்லது குறை தீர்ப்பாயம் (ombudsman) ஆகும். இந்த NCP என்பது OECD என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டது. OECD என்றால் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு Organisation for Economic Co-operation and Development என்று பொருளாகும். இந்த அமைப்பின் விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட கம்பெனிகள் மீதான புகார்களைக் கையாளுவதுதான் NCP யின் வேலையாகும்.

சுவிட்சர்லாந்தில் உள்ள NCP க்கு தங்களின் பிரச்சனையை விளக்கி PCSS கடிதம் ஒன்றை எழுதியது. தொழிலாளர்கள் தங்களைச் சங்கமாக்கிக் கொள்ளும் உரிமையை ஹோல்சிம் மறுத்ததாகவும், கூட்டுப் பேர பேச்சுவார்த்தைக்குள் நுழைந்து ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள மறுத்ததாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் வேறுபட்ட ஊதியங்களை அளிப்பதாகவும், ஆலைகளைச் சுற்றியுள்ள மக்களின் மனித உரிமைகளை மீறுவதாகவும் ஹோல்சிம் மீது அந்தப் புகார் கடிதம் குற்றம் சாட்டியது. (அவர்களின் முழுக் கடிதத்தையும் படிக்க பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்) இதற்கு முன்பு குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு அம்சமும் OECDயால் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதலை மீறுவதாகும்.

பிரச்சனை NCPக்குச் சென்ற பின்னர்தான் கம்பெனியின் மேல்மட்டத்தினர் தொழிற்சங்கத்துடன் பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதன்பின்னர்தான் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்”, என்று PCSS யின் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் சொன்னார். ”NCPக்கான புகாரை எழுதியபின்தான் ஹோல்சிம் எங்களுடன் பேசத் தயார் ஆனது. அதற்கு முன்பு அவர்கள் எங்களைக் கண்டுகொள்ளவே இல்லை, என்றும் அவர் சொன்னார்.

தொழிற்சங்கத்திற்கும் ஹோல்சிம்முக்கும் இடையிலான கூட்டம் ஒன்றை NCP ஏற்பாடு செய்தது. PCSSயின் சட்ட ஆலோசகரும் செயல்வீரருமான ஷாலினி ஜெரா சுவிட்சர்லாந்தின் ஊடகங்களின் கவனத்திற்குப் பிரச்சனையை எடுத்துச் செல்ல பணியாற்றினார். சுவிட்சர்லாந்தின் தொழிற்சங்கமாகிய UNIA, சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு பணியாற்றும் மனித உரிமை அமைப்பான MultiWatch, ஒருமைப்பாடு அமைப்பான Solifonds, இப்போது IndustriALL என்ற அமைப்பாக இணைந்திருக்கின்ற BWI மற்றும் ICEM ஆகியவற்றுடன் இணைந்து PCSS பல்வேறு வழிமுறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இப்படிச் செய்வது ஹோல்சிம்முக்குப் பிடிக்கவில்லை. இருந்தபோதும், NCP நடத்துகின்ற பேச்சுவார்த்தைகள் முறைசாரா வகையிலும், தனிமையிலும் நடத்தப்பட்டதால் ஹொல்சிம் கலந்துகொண்டது. நிர்வாகம் எதிர்மறையான பத்திரிகை செய்திகளைத் தவிர்க்க மட்டும் முயற்சிசெய்தது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் PCSS கலந்துகொள்வதற்கான செலவை IndustriALL ஏற்றுக்கொண்டது.

ஆனால், NCP ஏற்பாடு செய்யும் சமரசப் பேச்சுகளில் என்ன விளைவு ஏற்படும் என்பதற்கு NCP உத்திரவாதம் தராது. இரண்டு கூட்டங்கள் முடிந்த பின்னரும் எந்தவித தெளிவான விளைவும் கிடைக்கவில்லை. முதன்முறை புகார் அளித்த பின்னர், சுவிட்சர்லாந்தின் IndustriALLலும், சத்தீஸ்கரில் PCSS ம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அப்போதும் கூட, தொழிற்சங்கத் தலைவர்களைத் துன்புறுத்துவதும், சிறையில் தள்ளுவதும், வழக்கம் போல, தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.

NCP இறுதி அறிக்கை ஒன்றை 2014 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அளித்தது. (அதனைப் பின்வரும் இணைப்பில் காணலாம்  இருந்தபோதும், NCP ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை சூழலைக் கண்காணித்து வந்தது. இறுதியாக, ஹோல்சிம்மும் லாபேர்ஜ்ம் இணைந்த பின்னர், கம்பெனியின் சர்வதேச நிர்வாகத்தில் மாறுதல் வந்த பின்னர், ஒப்பந்தம் ஒன்று 2016ல் கையெழுத்தானது. (அது பற்றிய விவரங்களை பின்வரும் இணைப்பில் பார்க்கவும்அந்த ஒப்பந்தத்தின்படி நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டார்கள். சம்பளம் அனுபவத்தின் அடிப்படையிலும் சிமென்ட் சம்பள வாரிய நிர்ணயங்களின் பேரிலும் மாற்றியமைக்கப்பட்டது.

இந்த வெற்றி இந்திய தொழில் தாவாக்களின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். OECDயின் குறை தீர்ப்பு முறைமையை, மேலும் அதிக தொழிற்சங்கங்கள் பயன்படுத்துவதற்கான கதவுகளை இது திறந்துவிட்டுள்ளது. பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கான முழுமையான வழிகாட்டு நெறிகளைப் படிக்க பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்

தாதுப்பொருட்கள், நிலத்திலிருந்து எடுக்கப்படும் மூலப்பொருட்கள் (Extractive), விவசாயம், ஆயத்த ஆடைகள் ஆகிய தொழில்களுக்கு அந்தந்த தொழிலுக்கே உரிய குறிப்பான வழிகாட்டு நெறிகள் இருக்கின்றன. ஒரு சர்வதேச தொழில் நிறுவனம் தங்களின் சர்வதேச உற்பத்தி சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியிலும் மேற்கொள்ள வேண்டிய, உரிய முன் ஜாக்கிரதை நடவடிக்கைகள் என்னவென்பதை தொழில் துறை மட்டத்திலான வழிகாட்டு நெறிகள் அளிக்கின்றன. உதாரணமாக, குழந்தை தொழிலாளர் முறை, பாலியல் துன்புறுத்தல், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகள் போன்றவற்றை ஆயத்த ஆடைகள் தொழிலில் முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிகள் உள்ளடக்கியுள்ளன.

OECD அமைப்பில் 35 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அனைத்து நாடுகளும், அவற்றுடன், வேறு 11 நாடுகளும் OECD வழிகாட்டு நெறிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு OECD வழிகாட்டு நெறிகள் பொருந்தும். நாடுகளின் முழுமையான பட்டியலைப் பார்க்க பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.

ஆனால், இது மிகவும் சரியான முறை, எப்போதும் உதவும் என்று கருதக் கூடாது. NCPக்கள் கம்பெனிகளின் சார்பாக செயல்பட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து கார்டியன் (Guardian) பத்திரிகை எழுதியிருக்கிறது. புகார்களைத் தள்ளுபடி செய்த, அல்லது OECD வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்படவில்லை என்று தீர்மானித்த நிகழ்வுகள் குறித்தும் எழுதியிருக்கிறது. ”இந்த ஒட்டுமொத்த நடைமுறையும் மரியாதைக்குரியதா என்ற கேள்வி எழும்பியிருக்கிறதுஎன்று கட்டுரையின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். எனவே, மிச்சலின் கம்பெனியை எதிர்கொண்ட தேர்வாய் கிராமத்து மக்களின் அனுபவத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும் போது தாவாக்களைத் தீர்ப்பதற்கான இந்த அமைப்பு முறை குறையுள்ளது என்றாலும் கூட எதிர்காலத்தில் நாம் முயற்சித்துப் பார்ப்பதற்கான வழிகளில் ஒன்று என்று மதிப்பிடலாம்(தேர்வாய் கிராம அனுபவத்தைப் படிக்க பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்

 

This entry was posted in Analysis & Opinions, Featured, தமிழ் and tagged . Bookmark the permalink.