கீழ்வெண்மணி படுகொலை – 50 ஆண்டுகள் நிறைவு

Source: Sunday Indian Magazine

விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சிமிக்க காலமது. 50 வருடங்களுக்கு முன்னர் தஞ்சையில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் தலித் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை கோர ஒருங்கிணைந்தனர். விவசாயமே அவர்களின் வாழ்வாதாரம், ஆனால் உழைப்பு திறனைக் கொண்டிருந்த அவர்களுக்கு உழைப்பு கருவிகள் – நிலம், விதைகள், மூலதனம் – எதுவும் இல்லை. அவை எல்லாம் உயர்சாதியினரிடம் இருந்தன. விளைவு பலர் பண்ணை அடிமைகளாக வாழ்நாள் முழுதும் பணிபுரியும் கொடுமை, மற்றவர்களுக்கோ குறைவான கூலி. இந்நிலையில் தான் தலித் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து கூலி உயர்வு உட்பட பல உரிமைகளை கோர ஆரம்பித்தனர்.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை கோருவதை கண்டு வெகுந்த பண்ணையாளர்கள் அரசின் கட்டமைப்புகளை தொழிலாளர்கள் மீது ஏவினர். ஆனால் அதற்கும் தயாராக இருந்தனர் தொழிலாளர்கள். தஞ்சையில் ஒரு கிராமத்தில் 12 போலிஸ் வேன்களை தொழிலாளர்கள் தங்கள் கையில் இருந்த ஆயுதங்களை கொண்டு(கத்தி,கம்பு) மடக்கி கைது செய்யப்பட்டிருந்த தங்கள் தொழிலாளர் தோழர்களை விடுவித்தனர் என தோழர் மைதிலி சிவராமன் பதிவு செய்கிறார்.

கூலி உயர்வில்லாமல் அறுவடை செய்ய மட்டோம் எனத் தொழிலாளர்கள் உறுதி பூண்டனர். அவர்கள் கேட்டதெல்லாம் களத்திற்கு கூடுதல் அரைப்படி நெல். ஆனால் அதை கொடுக்க மறுத்த முதலாளிகள், மற்ற மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்களை இறக்கினர். விடவில்லை தொழிலாளர்கள், மாறாக தாங்களே அறுவடை செய்து நெல்லை முதலாளிகளிடம் கொடுக்க மறுத்தார்கள். கோபத்தின் உச்சத்திற்கே சென்றனர் பண்ணையார்கள். தொழிற்சங்க பிரதிநிதி ஒருவரை பிடித்து துவம்சம் செய்தனர். தொழிலாளர்கள் முற்றுகையிட்டு அவரை விடுவித்தனர். அப்போது நடந்த கைகலப்பில் பண்ணையார் தரப்பில் ஒருவர் இறந்தார்.

அன்று இரவு, 1968 டிசம்பர் 25ஆம் நாள், தொழிலாளர்களின் வீடுகளை சுற்றி வளைத்து பண்ணையார்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் என 44 பேர் தப்பி ஓடி ராமையா என்பவரின் குடிசையில் புகுந்தனர். அவர்களை அங்கே வைத்துப் பூட்டி, தீ வைத்தனர் பண்ணையார் ஆட்கள். ஒருவரைக் கூட வெளியே விடவில்லை. அவர்கள் அனைவரும் செத்து மடியும் வரை தீயை மூட்டினராம். அவர்களுடைய கோபம், தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டதனால் மட்டும் இல்லை, தங்களுடைய ஆதிக்கத்தை கேள்வி கேட்க தாழ்த்தப்பட்டசாதி தொழிலாளர்கள் தயாராகி விட்டார்கள் என்பதே! அதன் உச்சகட்டமே அவர்கள் தொழிலாளர்கள் மீது நடத்திய மூர்க்கமான தாக்குதல் ஆகும்.

கீழ்வெண்மணி படுகொலை நடந்து 50வருடங்களாகிறது. அன்று ஆட்சியில் இருந்த திமுக அரசும் தொழிலாளர்களுக்கு நடந்த அநீதிக்கு நீதி தேடவில்லை. ஆட்சிக்கு முன்னர் சோசலிச கொள்கையை வலியுறுத்தி வந்த திமுக கட்சி, தொழிலாளர் எழுச்சியின் போது, முதலாளிகளுக்கே துணை சென்றது. நீதிமன்றமோ ஒருபடி மேலே போய், தலித்துகளை தீண்ட விரும்பாத ஒரு உயர்சாதிக்காரர் கொன்றிருப்பார் என்று நம்பமுடியவில்லை என முதல் குற்றவாளியான கோபாலகிருஷ்ணன் நாயுடுவை விடுதலை செய்தது. கீழ்வெண்மணி படுகொலையை பற்றி ஊடகங்கள் இரு தொழிலாளர் அமைப்புகளுக்குள் நடைபெற்ற பிரச்சனை என எழுதின.

இன்றும் முதலாளித்துவ சக்திகளின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சான்மீனா தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டால், நான் பார்த்து போட்டு கொடுக்கிறேன் அல்லவா? நீங்கள் கேட்காதீர்கள் என்று தொழிற்சாலை மேலாளர் சொல்கிறார். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கோரும் செவிலியர்களை ஊதியம் போதவில்லை என்றால் வேலையை விட்டு செல்லுங்கள் என்று உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி கூறகிறார். பிணை கொடுத்தால் அன்னிய முதலீடு குறைந்து விடும் என நீதிமன்றம் 147 மாருதி தொழிலாளர்களுக்கு பிணை மறுத்தது. இவர்களில் பெரும்பாலானோர் குற்றம் செய்யவில்லை என விடுவிக்கப்பட்டனர். தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து உரிமையைக் கோரத் தொடங்கினால், அது அவர்களின் அதிகாரத்தில் அடிக்கப்படும் ஆணி என்று ஆதிக்கவர்க்கத்திற்கு தெரியும். அதைக் கட்டுப்படுத்த அவர்கள் கொலையும் செய்ய தயங்க மாட்டார்கள்.

தொழிலாளர் வர்க்கத்திற்கு இருப்பது ஒரே வழி! தங்கள் வர்க்க உணர்வை புரிந்து கொண்டு தோழருக்கு தோழராக குரல் கொடுப்பது, தோல் கொடுப்பதே! கீழ்வெண்மணி தியாகிகளின் 50 வருட நினைவு தினத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வர்க்க உணர்வுடன் போராட்ட களத்தில் இறங்குவோம்!

This entry was posted in Working Class History, தமிழ் and tagged . Bookmark the permalink.