சமூக நீதி – டாஸ்மாகில் புது சரக்கு … எல்லோருக்கும் ஒரு bottle சொல்லுங்கப்பா! – மதுபான கடை திரைப்பட விமர்சனம்

“படத்தில் கதை என்று ஒன்று தெரிந்தால் அது உங்கள் கற்பனையே” என்று
டைட்டில் இல் பார்த்தவுடனேயே வித்தியாசமான  ‘Elite’ சரக்குக்கு ரெடி ஆகி
விடுகிறோம்.

டாஸ்மாக் கடையை நெருங்கும் பொழுதே தலையை திருப்பி கொண்டு எட்டி நடை
போடும் குடி வெறுப்பாளர்களுக்கு தாங்கள் இது  வரை கண்டிராத  ஒரு வினோத
உலகை காணும் ஆச்சரியம். குடிக்காரர்களுக்கோ தன்னிலை மறந்து தள்ளாடும்
அந்த மயக்க நிமிடங்களை தெளிந்த நிலையில் (?) நோக்க ஒரு சந்தர்ப்பம்.
கதையை விட நிஜம் சுவாரஸ்யம் ஆகிறது, மனக்குடைஞ்சல் தருகிறது.

ஒரே களத்திற்குள், மக்காத பிளாஸ்டிக் ஆல் உண்டாகும் மண் வள சீர் கேடு
(அந்த பைத்தியக்காரன் பாத்திரம் சுற்று சூழல் ஆர்வலர்களுக்கு இந்த கதி
தான் என்று மறைமுகமாய் சொல்கிறதோ?), துப்புரவு பணியாளரின் ஆவேசம்,
தொழிற்சாலை விபத்தில் கையை ரணம் ஆக்கி வந்திருக்கும் ஊழியரின் துயரம்
,போதை நிலையிலேயும் ஜாதீயம் மறக்காத கேவலம், அங்கீகாரத்துக்காக அல்லாடும்
திருநங்கைகளின் ஆதங்கம், குடித்துவிட்டு பாடம் நடத்தும் கூறு கெட்ட
ஆசிரியன், பள்ளி சீருடையை கழற்றி விட்டு புட்டி வாங்க வரும் உஷார் மாணவன்
(நீங்கள் குடித்து விட்டு பாடம் நடத்தும் பொழுது அவர்கள் குடித்து விட்டு
பாடம் கேட்க கூடாதா? நாக்கை பிடுங்க வைக்கும் கேள்வி) என்று சமூகத்தின்
பல அவலங்களையும் தொட்டிருக்கிறது இயக்குனரின் ஆழ்ந்த புரிதல். குழந்தை
தொழிலாளியின் குமுறல் ஆகட்டும், தள்ளாடும் வயதில் திட்டு வாங்கி கொண்டே
குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும் பாட்டி ஆகட்டும், டாஸ்மாக்கை
நம்பினோர் கை விடப்படார் என வெட்கமே இல்லாமல் நம்பிக்கை தருகிறது.

“நாம தள்ளாடினால் தான் அரசு steady ஆக நிற்கும், நாம steady ஆகி
விட்டால் அரசு தள்ளாடி விடும்.”
ஒரு காலத்தில் தங்கள் குலசாமிக்கு படைத்து அருந்தி கொண்டிருந்த கள்ளை
கலாசார சீர்கேடாய் கரி தீட்டி இப்போது விமோசனமே இல்லாத பரம்பரை
குடிகாறர்களாய் மாற்றி இருக்கும் சமூக அடுக்கை பார்த்து ரௌத்திரத்துடன் ”
எதுக்கு குடிக்கிறோம்னே தெரியாமல் குடிப்பவர் மத்தியில் நாங்க வேலை செய்ய
வேண்டும் என்பதற்காக குடிக்கிறோம்” – அரசுக்கும் சமுதாயத்திற்கும் சாட்டை
சுழற்றும் வசனங்கள்.

இடம்,பொருள் ,ஏவல் அறியா காதல், மது பான கடையையும் விட்டு வைக்கவில்லை.
“போலி டாஸ்மாக் சரக்கை குடித்து விட்டு எவனும் சாகாம இருந்தா சரி” என்று
அலட்சியமாய் பதுக்கிவைக்கும் முதலாளி, லாபத்திலும் சரி, தன் மகள்
தன்னிடமே  வேலை செய்பவனை காதலித்து விட்டாளே என்ற வெறியிலும் சரி, மனித
உயிருக்கு தரும் மதிப்பு முதலாளிகளுக்கே உரியது.

செட்டிங்க்ஸ், லைட்டிங் ,இசை ,கேமரா அனைத்தும் இந்த கடையில்
சூப்பர் sidedishes .

petition மணி இன் கணீர் குரலில் பாடல் வரிகள் செவியில் தெளிவாய்
விழுகிறது.அதில் பொதிந்த தத்துவம் செவிட்டில் அறைகிறது. சிரிப்பிற்கும்
மேலும் சிந்தனைக்கும், வேலை இல்லா ஆங்கிலம் பேசும் வாலிபன் தெருக்களில்
சாமர்த்தியமாய் பணம் சுரண்டி ஓசி சரக்கடித்து மது கடையிலேயே வாழ்கையை
ஓட்டும் விதம் – அட, இப்படி எல்லாம் யோசிப்பாங்களா என தடுமாற வைக்கிறது!

படம் முழுவதும் குடி சகோதரர்கள் ரசித்து ருசித்து குடிப்பதை
காணும்போது முகம் சுளிக்கிற பகிரங்க காந்தியவாதிகளுக்கு கூட (அண்ணா
ஹஜாரே-யை வம்புக்கு இழுக்கலீங்கோ!) சிறிது குடித்து தான் பாக்கலாமோ என்று
ஆவல் எழலாம்.”கசக்குமா தம்பி?” என்று முதல் முறை முயற்சிப்பவன்
கேட்பதையும், ஓவர்-ஆ குடித்து வாந்தி எடுப்பவனையும் பார்த்து சுதாரித்து
கொள்கிறோம். ஆனாலும் ரெகுலர் குடிக்காரர்கள் கடையை நோக்கி ஓடி
விடுவார்களோ என்று பயம் தோன்றுகிறது (இண்டர்வல்-இல் டைரக்டர் என்னவோ டி
மட்டும் குடித்து விட்டு வாங்க என்று சொல்லி அனுப்புகிறார்).

“மேடையை போடுங்கடா! நாங்க மது அரசியல் பேசணும்” -ன்னு பலே பாடலுடன்
சர்ச்சைக்குரிய விவாதங்களை ஆரம்பித்து வைத்து விட்ட திருப்தியுடன் படம்
முடிகிறது.

இன்னொரு peg அடிக்கலாம்னு  நினைச்சா ஒரே வாரத்தில் கடையை தூக்கி விட்டார்கள்.

கோவை தெருக்களில் குடித்து திரிந்த கலகக்காரன் ஜான் ஆபிரகாமுக்கு இந்த
படம் சமர்ப்பணமாம்; இந்த விமர்சனம் உழைத்து நொந்து மாய்ந்து வரும்
பெரும்பான்மயினற்கு சமர்ப்பணம்.

This entry was posted in Art & Life, Uncategorized, தமிழ். Bookmark the permalink.