குறைந்த பட்ச ஊதியச் சட்டம் குறித்த விளக்கவுரை

முன்னுரை

ஒரு தொழிலாளருக்கு முறையான ஊதியம் என்பது அடிப்படை கோரிக்கையாகும். இந்தியாவில் அமைப்புசார்ந்த தொழில்களில் அல்லது பொதுத் துறைகளில் 8சதத் தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். தங்களுடைய ஊதியத்தை உயர்த்துவதற்கு கூட்டு பேர ஊதியம், சங்கம் அமைத்தல் போன்ற உரிமைகள் மற்றும் சாதனங்கள் இவர்களுக்கு உள்ளன. அமைப்புசாராத் தொழில்களில் ஈடுபடும் 92சதத் தொழிலாளர்களுக்கு, தங்களுக்கென்று முறையான ஊதியம் கோருவதற்கு சட்டரீதியாக எந்த அமைப்பும் இல்லை. முறையான ஊதியம் எவ்வாறு கணக்கிடுவது என்பது விவாதத்திலேயே உள்ளது.

பல நாடுகளை போல, இந்தியாவிலும் ஊதியக் கணக்கீடு என்பது இரண்டு வகைப்படுகிறது: வாழ்க்கைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் ஊதியம்(லிவிங் வேஜ்), மற்றும் குறைந்த பட்ச ஊதியம்(மினிமம் வேஜ்). ஒரு தொழிலாளர் தனது குடும்பத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமில்லாமல், கல்வி,சுகாதாரத் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய அளவு பெறுவது லிவிங் வேஜ் ஆகும். உணவு, உடை மற்றும் தங்கும் வசதி என அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பிழைப்பாதார ஊதியம் குறைந்த பட்ச ஊதியம் ஆகும். 1948ல் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய குறைந்த பட்ச ஊதியச் சட்டம் இயற்றப்பட்டது. ‘விவசாயம், அமைப்பு சார்ந்த அல்லது வேறு வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களும், போதிய தரத்துடன் வாழ்வு மற்றும் ஓய்வு, சமூக, கலாச்சார சந்தர்ப்பங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் ஜுவனுள்ள ஊதியம் பெறுவதற்கு, சட்டரீதியாக அல்லது பொருளாதார அமைப்பு மூலம் அரசு முயற்சி செய்யவேண்டும்’ என்ற இந்திய அரசியலமைப்பு பகுதி 23 வாழ்க்கைக்கு தகுதியான ஊதியத்தை தொழிலாளர்களுக்கு உறுதி செய்கிறது. 1948ன் குறைந்த பட்ச ஊதிய சட்டம் இதை அடிப்படையாக கொண்டதாகும்.

குறைந்த பட்ச ஊதியத்தின் கீழ், பட்டியலிட்ட தொழில்களில் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யவும், மாற்றவும், மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு. தொழில் பட்டியல் என்பது மத்திய அரசு பட்டியலாக இருக்கலாம், அல்லது மாநில அரசு பட்டியலாக இருக்கலாம். ஒரு தொழிலில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தால், சம்பந்தபட்ட அரசு அதை பட்டியலில் இணைக்கலாம். குறிப்பாக ஒரு மாநிலத்தில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு தொழிலில் ஈடுபட்டால், அந்த மாநிலம் அந்த துறையில் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யலாம். தற்போது மத்திய தொழில் பட்டியலில் 45 தொழில்களும் மாநில பட்டியல்களில் ஏறத்தாழ 1600 தொழில்களும் இடம் பெற்றுள்ளன. இத்தனை தொழில்கள் பட்டியலில் இருந்தும் பல மாநிலங்களில் வீட்டு வேலை போன்ற அமைப்புசாரா தொழில்கள் இடம் பெறவில்லை. இது குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தின் குறைபாடாகும். இந்தியாவின் 60சத தொழிலாளர்களுக்கே குறைந்த பட்ச ஊதியச் சட்டம் பாதுகாப்பு தருகிறது.

அனைத்து மாநிலங்களில் அனைத்து தொழிலாளர்களுக்கும்(1000க்கும் குறைவாக இருந்தாலும்) குறைந்த பட்ச ஊதியத்தை உறுதி செய்யும் சீர்திருத்தச் சட்டம் 2008ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்ட சீர்திருத்தம் அமலுக்கு வந்தால் வீட்டு வேலை உட்பட அனைத்து தொழிலாளர்களும் இந்த சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெறுவர். இந்த சட்டம் தார்மீக அடிப்படையில் அமைக்கபட்டது, பொருளாதார அடிப்படையில் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது. இந்த சட்டம் தொழிலாளர்களின் திறன்களையோ அல்லது முதலாளிகள் எவ்வளவு ஊதியம் கொடுக்க முடியும் என்ற அடிப்படையில் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப் படுவதில்லை. தொழிலாளரை ஈடுபடுத்த விரும்பும் எந்த நிறுவனமும் தர வேண்டிய குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்கிறது. அமைப்பு சாரா தொழில்களில் பட்டினி ஊதியம் பெற்று கடுமையான சுரண்டல்களுக்கு ஆளாகும் தொழிலாளர்களை பாதுகாக்க முயற்சிக்கின்றது.

குறைந்த பட்ச ஊதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது
குறைந்த பட்ச ஊதியத்தை சம்பந்தபட்ட அரசுகள் நிர்ணயிக்கும் விதிமுறைகள் 1957ல் முடிவு செய்யப்பட்டன. உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் இருந்து இந்த விதிமுறைகளில் 1991ல் (கீழே கொடுக்கப்பட்டுள்ள (அ) மற்றும் (ஆ)) மற்ற செலவுகளை உள்ளடக்கி 2 விதிமுறைகள் சேர்க்கப்பட்டன. குறைந்த பட்ச ஊதிய கணக்கீடு முறையான ஊதியத்தை கொடுப்பதற்கான முயற்சியாகும் இது. விதிமுறைகள் வருமாறு:

1. ஒரு குடும்பத்தில் உள்ள வயது வந்த மூன்று உறுப்பினர்களுக்கு தேவையான உணவு அளிக்கக் கூடிய அளவிற்கு குறைந்த பட்ச ஊதியம் இருக்க வேண்டும். ஒருவருக்கு 2700 கலோரிகள் கிடைப்பது குறைந்த பட்ச உணவுத் தேவையாக நிர்ணயம் செய்யபட்டுள்ளது.
2. தொழிலாளர் குடும்பத்திற்கு 72 யார்ட் துணி வாங்கும் அளவு குறைந்த பட்ச ஊதியம் இருக்க வேண்டும். (இந்த விதியில் குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் என்பது தெளிவாக்கப்படவில்லை)
3. தொழிலாளர் குடும்பத்திற்கு தேவையான இருப்பிட வசதியை பூர்த்தி செய்யும் அளவிற்கு குறைந்த பட்ச ஊதியம் இருக்க வேண்டும். இருப்பிட வசதிக்கான குறைந்த பட்ச ஏரியா அளவையும் அதற்கான வாடகையையும் அரசின் தொழில் வீட்டு வசதி திட்டம் நிர்ணயம் செய்யும். ஒரு குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் என்பதை இந்த விதியும் தெளிவாக்கவில்லை.
4. குறைந்த பட்ச ஊதியத்தில் 20சதம் எரிபொருள்,மின்சாரம் மற்றும் மற்ற வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
(அ) குறைந்த பட்ச ஊதியத்தில் 25சதம் குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவுகள், பண்டிகை மற்றும் இதர பொழுது போக்கு செலவுகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
(ஆ) குறைந்த பட்ச ஊதியத்தை மாற்றும் போது பாதகமான காலநிலை போன்ற உள்ளுர் நிலவரங்கள் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.

தொழிலாளர்கள் மணி நேரக் கணக்கில் வேலை செய்தாலும் சரி(அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வேலை செய்வது) அல்லது பீஸ் ரேட்டில் வேலை செய்தாலும் சரி (அதாவது ஒரு குறிப்பிட்ட வேலையை முடித்தால் அதற்கு ஒரு ஊதியம்), கொடுக்கப்படும் ஊதியம். குறைந்த பட்ச ஊதியத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

இன்றைய குறைந்த பட்ச ஊதிய நிர்ணயங்களை நாம் ஆராய்ந்தால், இதற்கான கணக்கு யார் செய்கின்றார்கள் என்ற கேள்வி எழுகிறது. வயதுக்கு வந்தவர்கள் மூன்று பேர் 2700 கலோரிகளை ஒரு நாளைக்கு ரூ200க்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என்றால், இன்றைய பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும் முடியாது. ‘2014ல் தில்லி, மும்பய், சென்னை, கொல்கத்தா, பேங்களுர், புவனேஷ்வர், திருவனந்தபுரம் ஆகிய ஏழு இடங்களில் அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விலைகளை நாங்கள் கணக்கிலிட்டோம். அதற்கான செலவு மாதம் ரூ20861 வருகிறது. அதாவது ஒரு நாளைக்கு 802ரூ’ என்று சிஐடியுவின் துணைத் தலைவர் தபன் சென் கூறுகிறார் (3). ஆக மேலே உள்ள விதிகளின் உண்மையான நிலவரத்தை குறைந்த பட்ச ஊதியங்கள் பிரதிபலிப்பதில்லை. மேலும், தொழிலாளர்களின் இனைறைய வாழ்க்கை தேவைகளையும் அது பிரதிபலிப்பதில்லை. உதாரணமாக, இன்று வேலைக்கு வெகுதூரம் செல்லும் நிலைமையில் அதற்கான போக்குவரத்து செலவு, வேலை தேடுவதற்கு தேவையான தொலை தொடர்பு செலவுகள் ஆகியவை குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வதில் கணக்கில் எடுத்து கொள்ளப்படுவதில்லை.

அதனால் தான் மாநில அளவிலும் சரி, மத்திய அளவிலும் சரி குறைந்த பட்ச ஊதியங்களை நிர்ணயம் செய்யக் கூடிய அமைப்புகளில் தொழிற்சங்க பிரதிநிதித்துவம் தேவை. தொழிற்சங்கத்தின் பங்கு இல்லாமல், குறைந்த பட்ச ஊதியம் முறையான ஊதியத்தை எட்டுவதற்கு சாத்தியமில்லை.

குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யும், மாற்றும் கால முறைகள்
குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசுகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் குறைந்த பட்ச ஊதியத்தை பரிசீலனை செய்து மாற்ற வேண்டும். இந்த இடைவெளி 5 வருடங்களுக்கு மேலாக இருக்கக் கூடாது. குறைந்த பட்ச ஊதியத்தை மாற்றுவதற்கு இரண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதற்கான குழு ஒன்று குறைந்த பட்ச ஊதியத்தை பரிசீலனை செய்து அதற்கான மாற்றங்களை அரசுகளுக்கு பரிந்துரை செய்யும். பின்னர் இவை அரசு கெஸட்டுகளில் அறிவிக்கப்படும். அறிவிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்கு பின்னர் அவை செயலாக்கப்படும். தமிழ்நாட்டில், 5 வருடத்திற்கு ஒரு முறை குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும், நுகர்வோர் விலை குறியீட்டின்(CPI) அடிப்படையில் அகவிலைப் படி நிர்ணயிக்கப்படுகிறது.

வேலை நேரங்களும் குறைந்த பட்ச ஊதியமும்

குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தின் பகுதி 13ன் கீழ், அரசு ஒரு சராசரி வேலை நேரத்தை கணக்கில் எடுத்து கொண்டு அதற்குத் தகுந்தவாறு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. இந்த சராசரி வேலை நேரத்தில் குறைந்த பட்சம் ஒரு இடைவேளை இருக்க வேண்டும். மேலும் 7 நாட்களுக்கு ஒரு நாள் விடுமுறையும் அதற்கு சேர்த்து குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அவசரமான வேலை அல்லது குறிப்பிட்ட வேலையில் செய்ய வேண்டிய வேலை , அவ்வப்போது செய்யப்பட வேண்டிய வேலை அல்லது அன்றைக்கு முடிக்கப்படாத வேலைகளை தவிர்த்து விடுமுறை நாட்களில் ஒரு தொழிலாளர் வேலை செய்ய நேர்ந்தால் அதற்கு ஓவர்டைம் ஊதியம் தரப்பட வேண்டும். சட்டத்தில் அவசரமான வேலை, குறிப்பிட்ட வேலையில் செய்ய வேண்டிய வேலை , அவ்வப்போது செய்யப்பட வேண்டிய வேலை என்பது குறித்து தெளிவாக்கப்படவில்லை என்பது முக்கிய கருத்தாகும். இவற்றின் மூலம் ஓவர்டைம் தொழிலாளர்கள் செய்வதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் பகுதி 15 படி, ஒரு தொழிலாளர் ஒரு நாளைக்கு சராசரி வேலை நேரத்தை விட குறைவான நேரம் வேலை செய்தால், அவருக்கு அதற்கேற்ப ஊதியம் தரப்படவேண்டும். விதியில் சில விலக்குகளும் தரப்பட்டுள்ளன. (1) ஒரு தொழிலாளர் வேலை செய்ய மறுத்தால், (2) வேறு சில சந்தர்ப்பங்களால் இந்த விதிகள் பொருந்தாது. ஆனால் மற்ற விலக்குகள் போல, இவையும் தெளிவில்லாமல் உள்ளன மேலும் எவ்வாறு உண்மை உறுதி செய்யபடும் என்பதும் கூறப்படவில்லை.

குறைந்த பட்ச ஊதிய விதிமீறல்களுக்கான தண்டனை

குறைந்த பட்ச ஊதிய விதிமீறல்களை கண்காணிப்பதற்காக மத்திய அரசும் மாநில அரசும் தொழிலாளர் கண்காணிப்பாளர்களை உபயோகிக்க வேண்டும். ஒரு முதலாளி தனது தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை தரவில்லை என்றால், அவருக்கு 6 மாத சிறை வாசம் அல்லது 500ரூபாய் அபராதம், அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனை விதிக்கப்படும். முதலாளியின் முதலீடுக்கு ஏற்ப தண்டனை விதிக்கப்படாமல் வெறும் 500ரூ தண்டனை என்பது சட்டத்தை முதலாளிகள் ஏய்க்கவே உதவும்.

குறைந்த பட்ச ஊதியம் கொடுக்கபடுகின்றதா என்பதை தொழிலாளர் கண்காணிப்பாளர்கள் திடீர் சோதனை நடத்தி ஆய்வு செய்கின்றனர். இச்சட்டத்தை முறையாக செயலாக்க அவர்களின் பங்கு அத்தியாவசியமானது. இன்றைய தொழிலாளர் சட்ட சீரதிருத்தங்களின் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பாளர்களின் பங்கை குறைத்தல் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும்.

சட்டத்தில் உள்ள குறைபாடுகள்

தொழிலாளர்கள் உரிமைகளை வலியுறுத்துவதில் குறைந்த பட்ச ஊதியச் சடடம் வலுவாக இல்லை. பீஸ் ரேட், பகுதி நேர வேலை ஆகியவற்றை பற்றிய அதன் குறிப்புகளில் உள்ள தெளிவின்மை தொழிலாளர்களின் ஊதியத்தை குறைவாகவே வைக்கின்றது. இம்மாதிரியான தொழில்முறைகள் அமைப்புசாரா தொழில்களாகவே உள்ளன. மேலும் அமைப்புசாரா தொழில்களில் கண்காணிப்புகள் குறைவாகவே உள்ளன. அமைப்புசாரா துறைகளில் சிறிய முதலாளிகள்(சிறு வணிகர்கள்,வீட்டில் வேலைக்கு அமர்த்துபவர்கள், சிறிய உரிமையாளர்கள்) எண்ணிக்கையில் அதிகமாக பரவலாக உள்ளனர். பரவலாக வேலையிடங்களும், வேலை முறைகளும் உள்ள நிலையில், அதற்கு தகுந்த சட்டவிதிகள் இல்லாமல் தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகின்றனர். இது குறித்து அமைப்புசாரா துறையில் உள்ள நிறுவனங்களுக்கான தேசிய குழு(NCEUS), ஆகஸ்ட் 2007ல் ஒரு அறிக்கையை வெளியிட்டது (9) உலகமயத்தால் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்ததாகவும், இந்தியா மிளிர்கிறது என்று அரசும் ஊடகங்களும் பரைசாற்றி கொண்டிருந்த வேலையில் இந்தியாவின் 77சத மக்கள் ஒரு நாளைக்கு 20ரூபாய்க்கு கீழே வறுமையில் வாழ்க்கை நடத்துவதாக இந்த அறிக்கை கூறியுள்ளது. இதில் உள்ள ஏறத்தாழ 80 சதத் தொழிலாளர்கள் அமைப்புசாரா துறைகளில் வேலை செய்கின்றனர், அவர்கள் ஒரு நாளைக்கு 80ரூபாய்க்கு கீழே ஊதியம் வாங்குவதாகவும் அறிக்கை வெளியிட்டது. குறைந்த பட்ச ஊதிய சட்டத்தின் தாக்கம் அமைப்புசாரா துறைகளில் எவ்வாறாக இருந்தது என்பதை இந்த அறிக்கை தெளிவாக்குகிறது.

சட்டத்தை மீறினால் விதிக்கப்படும் தண்டனை குறைவாக உள்ள பட்சத்தில், முதலாளிகள் மீறுவதையே வழக்கமாக கொள்வர். கார்மென்ட் தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதிய அரசு ஆணையை எதிர்த்து, கார்மென்ட் முதலாளிகள் தடையுத்தரவு வாங்கினர் (4). இந்த தடையுத்தரவு 10 வருடத்திற்கு குறைந்த பட்ச ஊதியத்தை தவிர்க்க முதலாளிகளுக்கு உதவியது. சங்கத்தின் வாயிலாக தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தினால் இந்த தடையுத்தரவை நீக்க முடிந்தது. தொழிலாளர்கள் கூட்டுபேர உரிமையை கோர முடிந்தது.

குறைந்த பட்ச ஊதியச் சட்டம், ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களிடம் பாகுபாடு காணவில்லை என்றாலும், தொழில்களில் பல்வேறு வேலைகளுக்கு வேறு வேறு ஊதியத்தை நிர்ணயிப்பதால், வேலையில் ஆண்-பெண் பாகுபாடு வரும் நிலை ஏற்படுகிறது. மேலும் பெண்கள் அதிகமாக ஈடுபடும் வீட்டு வேலைத் தொழிலில் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கு, தொழிலாளர்களும் சங்கங்களும் நெடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா போன்ற சில மாநிலங்களே வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்துள்ளன. வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கான உலக தொழிலாளர் அமைப்பு(ILO)வின் உடன்படிக்கையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கான கொள்கையை தொழிலாளர் துறை பரிசீலித்து வருகிறது. கொள்கையில் ‘மிகுந்த திறன்’ உள்ள வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ9000 நிரணயம் செய்யபட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன (3). அப்போது எண்ணிக்கையில் அதிகம் உள்ள பயிற்சி பெறாத திறன் குறைந்த வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு எவ்வளவு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது?

குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தை மீறுவது அமைப்புசாரா தொழில்களும் மட்டுமல்ல அமைப்புசார்ந்த துறைகளிலும், பொதுத் துறைகளிலும் நடக்கின்ற ஒன்றுதான். தனியார் நிறுவனங்கள் மேலும் மேலும் ஒப்பந்த தொழிலாளர்களையும், தற்காலிகத் தொழிலாளர்களையும் ஈடுபடுத்தி வருகின்றன. அதே வேலையை செய்தாலும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஊதியம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. ஹரியானாவில் திறன் மிகுந்த மற்றும் திறன் அற்ற தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம் அண்மையில் மாற்றப்பட்டது. அதற்கு பதிலாக முதலாளிகள் நிரந்தரத் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி அவர்களை குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த தொழில்முறைக்கு மாற்றுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன (5).

குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தை தவிர்க்க அமைப்புசார்ந்த துறைகள் கையாளும் இன்னொரு முறை, தொழிலாளர்களை பயிற்சியாளர்களாக அறிவிப்பது. பயிற்சியாளர்களுக்கு ஊதியம் கொடுக்கத் தேவையில்லை, ஊக்கத் தொகை கொடுத்தால் போதும். அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியச் சட்டம் பொருந்தாது. பொதுத் துறையிலும் இதே முறையில், அங்கன்வாடித் தொழிலாளர்கள், சுகாதாரத் தொழிலாளர்களை தன்னார்வாலர்களாக குறிப்பிட்டு குறைந்த பட்ச ஊதியத்திற்கு பதிலாக குறைவான ஊக்கத் தொகையே தருகின்றனர். இது குறித்து தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டும் பயனில்லை. வருடக்கணக்காக இந்த வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன. மேலும் முறையிட்ட தொழிலாளர்களை பழிவாங்க நிறுவனங்களும் அரசும் தயங்குவதில்லை. (6).

தேசிய குறைந்த பட்ச ஊதியம்

ஒரு மாநிலத்திற்கும் இன்னொரு மாநிலத்திற்கும் வாழ்க்கை செலவுகள் மற்றும் இதர நிலைமைகள் வேறுபடுவதால் மாநிலங்களுக்கு இடையே குறைந்த பட்ச ஊதியம் வேறுபடுகிறது. இந்த வேறுபாடை குறைப்பதற்கு, 1991ல் ஊரக தொழிலாளர்களுக்காக தேசிய குழு, தேசிய குறைந்த பட்ச ஊதியத்தை பரிந்துரைத்தது. தற்போது மத்திய அரசு தேசிய குறைந்த பட்ச ஊதியத்தை அறிவித்தாலும், அது சட்டபூர்வமாக்கப்படவில்லை. நுகர்வோர் விலை குறியீட்டின் படி நிர்ணயிக்கப்படும் தேசிய குறைந்த பட்ச ஊதியம் தற்போது ஒரு நாளைக்கு ரூ160ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் தேசிய குறைந்த பட்ச ஊதியம் இவ்வளவு குறைவாக நிர்ணயம் செய்யப்படுவது கண்டிக்கதக்கது, மறு பக்கம், மனிதக் கழிவுகளை அகற்றுதல், துப்புரவு போன்ற தொழில்களில் இவ்வளவு குறைந்த ஊதியம் கூட கொடுக்கப்படுகிறதா என்பது சந்தேகமே.

பட்டியிலிட்ட தொழில்களில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் தேசிய குறைந்த பட்ச ஊதியத்தின் கீழ் பாதுகாக்கும் மாற்றத்தை தொழிலாளர் சீர்திருத்த கோரிக்கைகளாக மத்திய அரசு அறிவத்துள்ளது. ஆனால் இந்த கோரிக்கைகள் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகவே உள்ளது. உதாரணமாக, தற்போது 3 பேருக்கு உணவுக்கு மத்திய அரசு ஒரு நாளைக்கு ரூ211 தேவை என்று கணக்கிட்டுள்ளது. வீட்டுக்கு மாத வாடகையாக ரூ390 எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் அடிப்படையாக குறைந்த பட்ச ஊதியமாக ரூ7100 என அறிவித்துள்ளது (மத்திய தொழிற்சங்கங்கள் குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ20000 ஆக கோரிக்கை வைத்துள்ளன.). கடந்த வருடம் செப்டம்பர் 2 அன்று தொழிலாளர்கள் மாபெரும் தேசிய பொது வேலை நிறுத்தம் செய்த போது இதையே மத்திய அரசு அறிவித்தது. (7). ஹரியானா(ரூ7600), தில்லி(ரூ9000) போன்ற இடங்களில் தற்போது உள்ள குறைந்த பட்ச ஊதியத்தை விட இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்களின் உண்மையான தேவைகளை பூர்த்தி செய்யாத தேசிய குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வது அதன் உண்மையான நோக்கத்தை தோற்கடிப்பதாகும்.

தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தொழில் நிறுவனங்களை கலந்து ஆலோசித்து தான் இந்த குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ததாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் உண்மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வந்த பிறகு குறைந்த பட்ச ஊதியத்திற்கான மத்திய ஆலோசனைக் குழு கூட்டப்படவே இல்லை. அவை கூட்டப்பட்டாலும் இதில் இடம் பெறுவது முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் கட்சி தொழிற்சங்கங்களே. அவை தொழிலாளர்களின் நலனுக்காக செயல்பட போவதில்லை.

குறைந்த பட்ச ஊதியத்தின் தாக்கம்

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் குறைந்த பட்ச ஊதியத்தை, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில்(NREGS) தொழிலாளர்களுக்கு உறுதி செய்ய வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது (8). இது ஒரு மாபெரும் வெற்றி என்றாலும் சட்டரீதியாக வெல்லப்பட்ட இவ்வாறான வெற்றிகள் மிகவும் குறைவே. குறைந்த பட்ச ஊதியமாக குறைவான ஊதியத்தை நிர்ணயம் செய்தல், சட்டத்தில் உள்ள ஓட்டைகள், குறைந்த தண்டனை மற்றும் நீதிமன்ற வழக்குகள் இழுத்தடிப்பு போன்ற நடவடிக்கைகளால் குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தின தாக்கம் குறைவாகவே உள்ளது. குறிப்பாக கடுமையான சுரண்டல்களுக்கு ஆளாகும் 92சத அமைப்புசாரா தொழிலாளர்களையும் அதிலும் பட்டினி ஊதியத்தில் வாழும் 80 சதத் தொழிலாளர்களையும் குறைந்த பட்ச ஊதியச் சட்டம் பாதுகாக்கத் தவறியுள்ளது.

ஆனால் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களின் வழியாக இந்த சிறிய நலன்களும் தாக்கப்படுகின்றன. குறிப்பாக ஊதியங்கள் குறித்த அனைத்து சட்டங்களையும் ஊதிய கோட்பாடுகள் சட்டத்தின்(Wages Code Bill) கீழ் கொண்டு வரப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் நிறுவனங்களின் மேல் உள்ள கண்காணிப்புகளை தளர்த்துவதே இந்த சட்டத்தின் நோக்கம். இந்த மாற்றத்தின் வழியாக, தொழிற்சாலைகளையும், மற்ற வேலையிடங்களையும் தொழிலாளர் துறை கண்காணிப்புகளிடம் இருந்து அரசு விலக்குகிறது. மாறாக கண்காணிப்பாளர் குறைந்த பட்ச ஊதியத்தை செயலாற்ற நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாக செயல்படுவர். குறைந்த பட்ச ஊதிய கோரிக்கையே தொழிலாளர்களின் குறுகிய கோரிக்கையாக உள்ள போது, தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் இவற்றையும் தொழிலாளர்களிடம் இருந்து பறிக்கின்றன.

தொழிலாளர்களின் முறையான ஊதியத்திற்கான போராட்டம், குறைந்த பட்ச ஊதியத்தை கோருவதிலும் அதை அமலாக்குவதிலும் மட்டும் நின்றுவிடக் கூடாது. தொழிலாளர்களின் புதிய உற்பத்தி முறைகள், தொழிலாளர்கள் என்ற தகுதிகளை பறிக்கும் நிலைமைக்கு தள்ளியுள்ளன. இன்றைய உற்பத்தி முறைகளில் பயிற்சியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், தற்காலிகத் தொழிலாளர்கள் ஆகியோரே மிகவும் உபயோகப் படுத்தப்படுகின்றனர். குறைந்த பட்ச ஊதியம் அமலாக்கப்படும் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் கூட அவுட்சோர்ஸ், சப்ளை செயின், பிரான்சைஸ் போன்ற உற்பத்தி முறைகளால் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர் வர்க்கத்தின் தொடர் போராட்டமே தொழிலாளர்களின் உரிமைகளை மீண்டும் நிலைநாட்டும்.

[1] http://www.global-labour-university.org/fileadmin/GLU_conference_2014/papers/uma_etal_minwages.pdf
[2] http://www.firstpost.com/india/govt-readies-domestic-workers-policy-proposes-rs-9000-minimum-pay-benefits-2395116.html
[3] http://scroll.in/article/766248/modi-governments-weird-maths-for-a-minimum-wage-rs-390-for-monthly-rent-rs-16-for-veggies
[4] http://tnlabour.in/?p=2523
[5] http://www.hindustantimes.com/gurgaon/industries-fire-workers-after-govt-hikes-wages/story-wOHOXhnDz1B2IAKHNZgtcJ.html
[6] http://tnlabour.in/?p=2600
[7] http://tnlabour.in/?p=2655
[8] http://www.downtoearth.org.in/news/mgnrega-wages-should-not-be-less-than-minimum-wage-of-a-state-expert-panel-45445
[9] Report on Conditions of Work and Promotions of Livelihood in the Unorganised Sector, National Commission for Enterprises in Unorganised Sector, Aug 2007

This entry was posted in Labour Laws, Resources, Unorganised sector, Working Class Vision, தமிழ் and tagged . Bookmark the permalink.