இந்திய பீடித் தொழிலாளர்கள் குறித்த ஆய்வு

புது டெல்லியை மையமாகக் கொண்டு தொழிலாளர்கள் மேலாண்மைக்கான மையம் சுற்றுக்கு விட்ட அறிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டது.

தொழிலாளர்கள் மேலாண்மைக்கான மையம் (Centre for Workers’ Management-CWM ), கர்நாடகா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் என்ற நான்கு மாநிலங்களில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வின் நோக்கங்கள் மூன்று:

  1. வீட்டிலிருந்து பீடி சுற்றுவதன் காரணமாக, அவர்கள் குறைந்தபட்ச கூலி உள்ளிட்ட சட்டப் பலன்களைப் பெறுவது எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை மதிப்பிடுவது;
  2. தொழிலாளர்கள் போராட்டங்களின் போது, உற்பத்தியை நிறுத்திவிட்டு வேறு மாநிலங்களுக்குப் போய்விடுவோம் என்ற நிர்வாகத்தின் அச்சுறுத்தல் உண்மையில் செயல்படுத்த இயலுமா என்று மதிப்பிடுவது;
  3. இத்தொழிலில் லாபம் சரிந்து கொண்டிருக்கிறது என்ற நிர்வாகங்களின் கூற்றைச் சரி பார்ப்பது.

சுருக்கமான குறிப்பு

2015ல் செய்யப்பட்ட மதிப்பீட்டின்படி 15 முதல் 69 வயது வரையிலான புகை பிடிப்போரில், பீடியைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 69 மில்லியன். அதாவது, 6.9 கோடி. அதே வயதுப் பிரிவில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை 61 மில்லியன். அதாவது 6.1 கோடி.

இந்தியாவில், பீடித் தொழிலில் 50 லட்சம்(5 மில்லியன் ) தொழிலாளர்கள் உழைக்கிறார்கள். அவர்களில் 90 சதத்தினர் பெண்கள். பீடி சுற்றுதல் வீட்டிலிருந்துகொண்டு செய்யப்படுகிறது என்பதாலும், தொழிற்சாலை சூழல் ஏற்படுத்தும் நேர நெருக்கடி இல்லை என்பதாலும் குறைந்த கூலி கொடுக்கப்பட்ட போதும், பெண்கள் இத்தொழிலில் அதிகமாக ஈடுபடுகின்றனர். ஆனால், தொழிற்சாலைக்குள் செய்யப்படும் வேலை இல்லை என்பதால், தொழில் உறவு அல்லது பணி நிலைமைகள் ஓழுங்குபடுத்தப்படாத நிலை உள்ளது.

ஆய்வு செய்யப்பட்ட நான்கு மாநிலங்களில் நாட்டின் முக்கிய பீடி முதலாளிகள் உற்பத்தி செய்கின்றனர்அந்தக் கம்பெனிகளின் பெயர்கள்:

  • கர்நாடகத்தில் மங்களூர் கணேஷ் பீடியும், பாரத் பீடி கம்பெனியும்.
  • மேற்கு வங்கத்தில் ஷியாம் டுபாக்கோவும், சிஜே டுபாக்கோவும், படக்பீரீசும்.
  • மகாராஷ்டிரத்தில் சீஜே டுபாக்கோவும் வாக்ஹிரியும்.
  • மத்தியப் பிரதேசத்தில் பாபு தாஸ் பீடிக் கம்பெனி.

சட்டரீதியாக குறைந்தபட்ச ஊதியம், விடுமுறை ஊதியம், வருங்கால வைப்பு நிதி, போனஸ் பீடித் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். இவற்றுடன், உற்பத்தியாளர்களிடமிருந்து வசூல் செய்யப்படும் தீர்வையினால் (Cess) இயங்கும் பீடித் தொழிலாளர்கள் நல நிதி வாரியத்தின் வழியாகக் கிடைக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவை பீடித் தொழிலாளர்களின் உரிமைகள் ஆகும்.

குறைந்தபட்ச சட்டக் கூலியும் இதர பலன்களும்

கர்நாடகா: குறைந்தபட்ச கூலிச் சட்டம் 1948ன் கீழ் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த போதும், கர்நாடகத்தின் பீடி நிறுவனங்கள், உச்ச நீதிமன்றம் வரை வழக்குத் தொடுத்து கொடுக்க வேண்டிய சட்டக் கூலியை அளிக்கவில்லை. வழக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக நீண்டது. இடைக்காலத்தில், பல தொழிற்சங்கங்களுடன், சட்டப்படியான குறைந்தபட்ச கூலிக்குக் குறைவான தொகைக்கு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். குறைந்த பட்ச கூலி நிர்ணயத்தை கொடுக்காமல் இருக்க தொழிற்சங்கங்களுடன் போடப்பட்ட ஒப்பந்த ஊதியத்தை அவர்கள் காரணம் காட்டினார்கள்.

குறைந்தபட்ச கூலி அளிப்பது தங்களுக்கு நிதி ரீதியான அழிவைக் கொண்டுவரும் என்றும் தொழிலை விட்டு தாங்கள் விலக வேண்டியிருக்கும் என்றும் முதலாளிகள் வாதிட்டனர். இந்த வாதம் தவறானது என்று இரண்டு காரணங்களின் அடிப்படையில் CWM சுட்டிக்காட்டுகிறது:

  1. குறைந்தபட்ச சட்டக் கூலிக்குக் குறைவாக முதலாளி கூலி ஒப்பந்தம் செய்துகொள்வதற்குச் சட்டத்தில் இடம் இல்லை.
  2. வெறும் குறைந்தபட்ச கூலியைக் கூட கொடுக்க வாய்ப்பில்லை என்றால், அந்த தொழில் நாட்டில் இருப்பதற்கு தேவையே இல்லை. ”, என்று உச்சநீதிமன்ற நீதிபதி கஜேந்திர கட்கார் பளிச்சென்று சொல்லியிருக்கிறார்.

கடைசியில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவேயில்லை. 2007ல், குறைந்தபட்ச கூலியை வழங்க முதலாளிகள் ஒப்புக்கொண்டதுதான் அதற்கான காரணம். ஆனால், கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், பல பத்தாண்டுகள் நடந்த சுரண்டலுக்குப் பதிலாக வெறும் ரூபாய் 4500யை மட்டும் முதலாளிகள் அளித்தார்கள்.

மத்தியப் பிரதேசம்: இந்த மாநிலத்தில் 50 ஆண்டு காலமாக குறைந்தபட்ச கூலியை மாற்றியமைக்கும் அமைப்பு முறை உருவாக்கப்படவில்லை. விளைவாக, அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலி நடைமுறையில் குறைந்துகொண்டே சென்றது. 2014ல் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச சட்ட கூலி, 1966 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கூலியோடு நடைமுறை விலையில் ஒப்பிட்டுப் பார்த்தால், 1966 கூலியை விட 23 சதம் குறைவாக இருந்தது.. இறுதியாக 2014ஆம் ஆண்டு, 1000 பீடிகளுக்கு ரூபாய் 92 என்று சட்டக் கூலி மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், குறைந்தபட்ச உற்பத்தியுடன் அது பிணைக்கப்பட்டு இருப்பதால், குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் நோக்கத்திற்கும், அடிப்படைக்கும் முரண்பட்டதாக உள்ளது.

மேற்கு வங்கம்: இந்த மாநிலத்தில் 1000 பீடிகளுக்கு ரூபாய் 190 கூலி என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அறிவிக்கப்பட்ட தொகையில் மூன்றில் 2 பங்குதான், அதாவது ஆயிரம் பீடிகளுக்கு ரூபாய் 126தான் வழங்கப்படுகிறது. முர்ஷிபாத்தில், சங்கங்களும் முதலாளிகளும் இந்தத் தொகையை நிர்ணயம் செய்தனர். பின்னர், மற்ற மாவட்டங்களும் இதனைப் பின்பற்றத் துவங்கினர். இந்த கூலி பற்றிய ஆலோசனையில் தொழிலாளர் துறை கலந்துகொள்ளவில்லை. வருங்கால வைப்பு நிதி தவிர வேறு எந்ததொழிலாளர் நலனையும் ஊதிய ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்கள் சேர்க்கவில்லை..

மகாராஷ்டிரம்: மேற்சொன்னது போலவே, 1000 பீடிகளுக்கு ரூபாய் 210 என்பதற்குப் பதிலாக, ரூபாய் 140தான் மகாராஷ்டிரத்தில் வழங்கப்படுகிறது. மிகப் பெரிய பீடி உற்பத்தி மையமான சோலாப்பூரில், முதலாளிகளுக்கும் சங்கங்களுக்கும் இடையில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்தத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. அதனை மாநிலத்தின் மற்ற பகுதிகளும் பின்பற்றத் துவங்கின. வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள் நடைபெற்ற பின்னரே நிர்வாகங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. குறைந்தபட்ச சட்டக் கூலியோடு பிணைக்கப்பட்ட கூலி உயர்வு ஒரு போதும் கொடுக்கப்படுவதில்லை.

மேற்கு வங்கத்திலும், மகாராஷ்டிரத்திலும், இந்தத் தொழிலின் கூலி ஒழுங்கமைவில் உள்ள பிரதான பிரச்சனை, சட்டத்தை மீறியதற்கான தண்டனை பற்றி எவ்வித அச்சமும் இன்றி குறைந்தபட்ச கூலிச் சட்டம் மீறப்படுவதுதான்”, என்று CWM அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும், மாறுபடும் பஞ்சப்படிக்கும் நுகர்வோர் விலைவாசி குறியீட்டுக்கும் பிணைப்பு இல்லாதிருப்பதன் காரணமாக, தொழிலாளிகள் பெறும் உண்மை கூலி குறைந்து போகிறது. சில சமயங்களில் 25 சதம் வரை உண்மை கூலி குறைந்து போகிறது.

வருங்கால வைப்பு நிதி: தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதன் மூலம், வருங்கால வைப்பு நிதி விதிகளை முதலாளிகள் பலரும் மீறுகின்றனர். ஆனால், உற்பத்தியின் அளவையும், சராசரி தொழிலாளியின் திறனையும் ஒப்பிட்டு, தொழிலாளர்களின் எண்ணிக்கை என்னவென்று கணக்கிட்டுவிட முடியும். மத்தியப் பிரதேசத்தின் பீடித் தொழிலாளர்களில் 96 சதம் முதலாளிகளின் பதிவேடுகளில் பதிவு செய்யப்படாதவர்கள் என்று ஒரு மதிப்பீடு சொல்கிறது. மேற்கு வங்கம் போன்ற சில பகுதிகளில் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி பற்றி தெரிந்திருக்கிறது. அது ஒரு முக்கியமான சேமிப்பு வசதி என்று அவர்கள் கருதுகிறார்கள். மற்ற பல பகுதிகளில் தொழிலாளர்களுக்கு அது பற்றி எதுவும் தெரியாது. 25 ஆயிரம் பீடித் தொழிலாளர்களில் 1500 பேர் மட்டும் பதிவேடுகளில் பதியப்பட்டிருக்கின்றனர் என்று பெங்களூருவின் பீடி உற்பத்தியாளர் ஒருவர் சொல்கிறார். வருங்கால வைப்பு நிதியைப் பொறுத்தவரை பல தொழிற்சாலைகள், ‘’எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை’’, என்ற மனநிலையில் இருக்கிறார்கள். ‘’தொழிலாளர்களுக்குப் பணம் போய் சேர்வதைப் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒப்பந்தக்காரரின் வேலை’’, என்று அவர்கள் சொல்கிறார்கள்.

விடுமுறைச் சம்பளம்: தொழிலாளர்கள் அனேகருக்கு, தங்களின் உரிமைகளில் ஒன்று கூலியுடன் கூடிய விடுப்பு என்பது தெரிந்திருக்கவில்லை. அது தரும் பலன் என்னவென்றும் அவர்களுக்குத் தெளிவில்லை.

போனஸ்: பல இடங்களில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது என்றாலும் கூட, அவர்களுக்கு எவ்வளவு போனஸ் வர வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளும் வழி ஏதும் தொழிலாளர்களுக்கு இல்லை என்பதுடன், தங்களுக்குச் சரியான போனஸ்தான் அளிக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளும் வழியும் இல்லை.

நல வாரியம்: பீடித் தொழிலாளர்கள் நல்வாழ்வு நிதியச் சட்டத்தின் மூலம் பீடித் தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி பீடி உற்பத்தியாளர்களிடம் பெறப்படும் தீர்வை ( cess) மூலம் திரட்டப்படுகிறது. தற்போது, 1000 பீடிகளுக்கு ரூபாய் 5 என்பதாக தீர்வை உள்ளது. குறிப்பாக மங்களூரில் பீடித் தொழிலாளர்கள் தங்களுக்கான நல வாரியம் குறித்து அறிந்து வைத்திருக்கின்றனர். அவர்கள் தங்களின் பிள்ளைகள் படித்து, பீடிச் சுற்றும் தொழிலுக்கு வெளியே வேலை செய்துகொள்ளும் திறன் பெறுவதற்கு வாரியத்தின் வழியே கிடைக்கும் பிள்ளைகளுக்கான கல்வி உதவித் தொகையைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், பெங்களூருவில் நல வாரியத்திற்கும் பீடித் தொழிலாளர்களுக்கும் இடையில் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, ஒரே மாநிலத்திற்குள், சங்கங்களின் பலம், தொழிலாளர்களின் கூட்டுப் பேர வலிமைக்கு ஏற்ப நல வாரியப் பலன் கிடைப்பது மாறுபடுகிறது. சங்கமாதல் மிக அதிகமாக உள்ள சோலாப்பூரில் (மகாராஷ்டிரம்) நல வாரியத்தை அணுகி கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவி பெறுவதாகச் சொல்கிறார்கள். வீடுகள் கூட கட்டப்பட்டுள்ளன.

பீடித் தொழிலின் அரசியல் பொருளாதாரம்

குஜராத்திலிருந்தும், வடக்குக் கர்நாடகத்திலிருந்தும் புகையிலை வருகிறது. தெண்டு இலைகள் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசாவிலிருந்து வருகின்றன. தரத்தை உறுதி செய்வதற்காக கொள்முதல் மையப்படுத்தப்பட்ட முறையில் செய்யப்பட்டு பின்னர் பீடி சுற்றும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மிகப் பெரும் அளவில் பீடி உற்பத்தி செய்யும் பல நிறுவனங்களும், அவர்களின் சந்தையின் பெரும்பகுதி வட இந்தியாவில் இருக்கும் போதும், (குறைவான கூலி நிலைமையைப் பயன்படுத்திக்கொள்வதற்காக) தங்களின் உற்பத்தியை பல மாநிலங்களில் நடத்துகின்றனர்.

ஒவ்வொரு பிராண்டின் தனித் தன்மைக்கு ஏற்றாற்போல முன்னமேயே கலவை செய்யப்பட்ட புகையிலை உற்பத்தி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருக்கும் ஒப்பந்தக்காரர்கள், புகையிலையையும் தெண்டு இலைகளையும் வினியோகம் செய்கிறார்கள். பீடித் தொழிலாளர்கள் அவற்றை பீடியாக சுற்றிய பின்னர், மீண்டும் உற்பத்தி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் பீடிகள் வாட்டியெடுக்கப்பட்டு, சிப்பம் கட்டப்படுகின்றன. இந்த வேலை முடிந்த பின்னர் சந்தைக்கு அனுப்பப்படுகிறது.

ஒப்பந்தக்காரர்களுக்கு அளிக்கப்படும் கமிஷன் தொகை அவர்களுக்குப் போதுமானதாக இல்லை என்பது அவர்களுடன் பேசிய போது புரிந்தது. எனவே, கமிஷனுக்கும் மேலாகச் சம்பாதிப்பதற்காக, தொழிலாளர்களின் கூலியில் கை வைக்கின்றனர். அல்லது பீடியின் ஒரு பகுதியைத் தங்களுக்கு ஒதுக்கிக்கொண்டு வெளிச் சந்தையில் விற்கின்றனர். சில ஒப்பந்தக்காரர்கள் தொழிலாளிகளுக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய புகையிலை, இலையின் அளவைக் குறைத்து, மிச்சமானதை பிற இடங்களில் பயன்படுத்திக்கொள்கின்றனர். ”இப்படித்தான் நாங்கள் லாபம் சம்பாதிக்க முடியும். இதுபோன்ற செயல்படுவது இந்த தொழிலில் எழுதப்படாத சட்டம். உண்மைதான்.. நாங்கள் திருடத்தான் செய்கிறோம். நாங்களே எங்களைத் திருடிக் கொள்கிறோம். பெரிய கம்பெனிகள் எங்கள் உழைப்பைத் திருடுகிறார்கள். அதனால், நாங்கள் திருடர்கள் ஆகிறோம்”, என்று ஒரு பீடி ஒப்பந்தக்காரர் சொன்னார்.

ஆண்டு ஒன்றுக்கு பீடிக் கம்பெனிகளின் ஒட்டு மொத்த வருமானம் ரூபாய் 16,300 கோடியாக இருக்கும் என்று CWM மதிப்பிட்டது. இவர்களில் ஆகப் பெரிய உற்பத்தியாளர்கள் ஒவ்வொருவரும் ரூபாய் 500 கோடி முதல் 900 கோடி வரை வருமானம் பெறுகின்றனர். சந்தையில் சிகரெட்டுகளின் பங்கு அதிகரித்து வருவதால், பீடியின் சந்தை சுருங்கிவருகிறது என்ற பல்லவி பொதுவாகப் பாடப்படுகிறது. பெரிய கம்பெனிகளின் லாபம் மற்றும் (பங்குதாரர்களுக்கு அளிக்கப்படும்) ஈவுத் தொகையைப் பார்க்கும்போது, பீடித் தொழில் கணிசமான லாபத்தை ஈட்டுவது தெரிகிறது. பல கம்பெனிகளின் நிதிநிலை அறிக்கையைப் பார்க்கும்போது வரிகளைக் கழித்த பின்னர், 10 சதத்தை விட கூடுதல் லாபத்தைப் பெறுகிறார்கள் என்பது தெரிகிறது. கம்பெனிகள் பொதுவாக குடும்ப கம்பெனிகளாக இருக்கின்றன. அதனால், நடத்தும் குடும்பத்து உறுப்பினர்களுக்கு சம்பளமாகவும் ஈவுத் தொகையாகவும் கோடிக் கணக்கான ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்படுகிறது.

உற்பத்தியை இடம் மாற்றுவது பற்றிய குறிப்பு

தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினாலோ அல்லது அரசு நெருக்கடிகள் கொடுத்தாலோ, உற்பத்தி செய்யும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்றிவிடுவோம் என்பதே நிர்வாகங்கள் விடுக்கும் வழக்கமான மிரட்டலாக இருக்கிறது. இப்படியொரு சம்பவம் 1968ல் நடந்தது. மங்களூர் பீடி கம்பெனி கேரளாவிலிருந்து அப்போது வெளியேறியது. ஆனால், அப்படியொன்று இன்று நடக்க வாய்ப்பில்லை என்று CWM நம்புகிறது. நுகர்வோரின் விருப்பத்திற்கு ஏற்ப சந்தையில் பகுதி வேறுபாடுகள் இருக்கின்றன. அதன் காரணமாக, கம்பெனிகள் விருப்பம் போல உற்பத்தி மையத்தை மாற்றிக்கொண்டுவிட முடியாது. மாநிலத்தை மாற்றிக்கொண்டால் கூட, VAT வரியும் தொழிலாளர் கூலியும் சேரும்போது, பணச் செலவு ஏறக்குறைய ஒன்றுபோல ஆகிவிட வாய்ப்பு அதிகம். எனவே, உற்பத்தி இடத்தை மாற்றுவதால் உண்மையான பொருளாதார லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. மிகவும் முக்கியமானது என்னவென்றால், ஒரு இடத்தில் உற்பத்திக்கான வலைப்பின்னல் அமைப்பை உருவாக்க அதிக காலமும், முதலீடும் தேவைப்படும். அவற்றை மற்றொரு இடத்தில் அப்படியே உருவாக்குவது அத்தனை எளிதான காரியம் அல்ல.

CWM இன்னமும் தனது அறிக்கையை வெளிப்படையாக வெளியிடவில்லை. தற்போது அதன் நகல் மட்டுமே சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களுடனும், தொழிலாளிகளுடனும் கலந்துகொண்டு அறிக்கையை மேலும் வலுப்படுத்த அது விரும்புகிறது. கம்பெனிகளின் கூற்றுகளை, குறிப்பாக, கம்பெனியின் நிதி நிலைமைஇடத்தை மாற்றுவோம் என்ற மிரட்டல், மறுத்துப் பேசுவதற்கு இந்த அறிக்கையில் உள்ள உண்மை விவரங்கள் பயனாகும்.

This entry was posted in Analysis & Opinions, Contract Workers, Informal sector, Unorganised sector, Women Workers, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.