ஒப்பந்த தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்

-து. அரிபரந்தாமன்
நீதிபதி (ஓய்வு) – சென்னை உயர்நீதிமன்றம்

1970க்கு முந்தய நிலை:

1970க்கு முன்னர், அத்திபூத்தாற் போல சில நிறுவனங்கள் சில பணிகளில் மட்டும் ஒப்பந்த தொழிலாளர் முறையை புகுத்தின.

இதை அந்நிறுவன நிரந்தர தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் போராடி தடுத்து நிறுத்தின. சில இடங்களில் இந்த ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்யக்கோரி, நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் தொழிற் சங்கங்கள் மூலமாக நீதிமன்றத்தை அணுகின. அந்த வழக்குகளை விசாரித்த, தொழிலாளர் நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள், ஒப்பந்த தொழிலாளர் முறையில் தொழிலாளர்கள் அதிகமான சுரண்டலுக்கு உள்ளாகின்றனர் என்று கூறியது; ஒப்பந்த தொழிலாளர் முறை தொழிலாளர் நலன்களுக்கு விரோதமானது என்றது. ஒப்பந்த தொழிலாளர்முறையை ரத்து செய்தது.

Omax workers in protest for dismissing contract worker – Feb 2017

மத்திய அரசு முதலாளிகளின் அழுத்தத்திற்கு பணிந்தது:

இந்நிலையில், முதலாளிகள் பேரழுத்தம் கொடுத்ததன் விளைவாக, 1970ல் பாராளுமன்றம் ஒப்பந்த தொழிலாளர் முறையை முறைப்படுத்தல் மற்றும் ஒழித்தல் சட்டம் கொண்டுவந்தது.

இச்சட்டம், நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிந்த இடங்களில் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை முதலாளிகள் நியமித்து தொழில் செய்வதை சட்டபூர்வமாக அங்கீகரிக்கிறது.

மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள், மாநில அரசின் தொழில் நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்பந்த தொழிலாளர் முறை கொண்டு வரப்பட்டது.

இப்படித்தான் தொழிலாளர்களுக்கிடையே புதிய முறையில் தொழில் வருணாசிரமம் கொண்டுவரப்பட்டது. நிரந்தர தொழிலாளர்களுக்கான கேன்டீன், ஓய்வறை, மருத்துவமனை, குடியிருப்பு, நிர்வாகத்தின் வாகனத்தில் பயணித்தல் உட்பட எதிலும் ஒப்பந்த தொழிலாளர்களை அனுமதிப்பதில்லை. அதாவது, நவீன தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது.

முதலாளிகள் மின்கட்டணம், கச்சா பொருளுக்கான செலவு, கலால் வரி போன்ற மற்ற வரிகள் ஆகியவற்றில் ஒன்றும் செய்ய முடியாது. எனவே, தொழிலாளர்களுக்கு எவ்வளவு குறைந்த கூலி கொடுக்க முடியுமோ, அப்படி கொடுத்து மிகுந்த லாபம் அடைவதே முதலாளிகள் தேர்ந்தெடுக்கும் வழி.

இன்று ஒப்பந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை மிகுதியாகவும், நிறுவனங்களின் நேரடி தொழிலாளர் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. சில நிறுவனங்களில், அனைத்து தொழிலாளர்களுமே ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தில் பெரும் அளவில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரியும் நிலையை நேரடி தொழிலாளர்கள் அனுமதித்ததன் விளைவாக அவர்களின் பேரம் பேசும் சக்தி மிகவும் குறைந்து விட்டது.

நேரடி தொழிலாளர்களிலும் தினக்கூலி, காசுவல், டெம்ப்ரரி, பதிலி, பயிற்சியாளர் என பிரித்து குறைந்த கூலி அளித்து முதலாளிகள் கொள்ளை லாபம் பெறுகின்றனர். இந்த தொழிலாளர்களை தொழிற்சங்கத்தில் சேர்ப்பதில்லை. தொழிற்சங்கத்தில் சேர்ந்தால், இவர்களின் வேலை காலியாகிவிடும். எனவே சமவேலைக்கு சம ஊதியம், 480 நாள் பணிமுடித்தால் நிரந்தரம் என்று சட்டம் கூறினாலும், சம ஊதியமும் நிரந்தரமும், நேரடி தொழிலாளர்களுக்கும் எட்டாக்கனியாகவே நடைமுறையில் உள்ளது.

சமவேலைக்கு சம ஊதியம்:

சமவே

Women Workers are often under paid

லைக்கு சமஊதியம் என்று 1970-ஆம் ஆண்டின் ஒப்பந்த தொழிலாளர் சட்டம் கூறுகின்ற போதிலும், நிரந்தர தொழிலாளருக்கு வழங்கப்படும் ஊதியத்தை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எந்த நிறுவனமும் வழங்குவதில்லை.

ஒப்பந்த முறையை தடுக்கும் அதிகாரம் அரசுக்கே:

மேற்சொன்ன 1970 ஆம் ஆண்டு சட்டப்படி, ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர் முறையை தடை செய்வது பற்றிய முடிவை சம்பந்தப்பட்ட அரசாங்கம்தான் – மத்திய அரசோ, மாநில அரசோ – எடுக்க வேண்டும். நீதிமன்றங்களுக்கு இதற்கான அதிகாரம் இல்லை என்கிறது இந்தச் சட்டம்.

ஒப்பந்த முறைக்கு ஆதரவாக மாறிய உச்சநீதிமன்றம்:

தமிழக அரசின் தொழிலாளர் இலாக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் துப்பரவு மற்றும் கழிவறை சுத்தம் செய்யும் பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது என்று தமிழக அரசு போட்ட உத்தரவினை உச்சநீதிமன்றம் 2001இல் ரத்து செய்தது.

ஒப்பந்த தொழிலாளர் முறை, தொழிலாளர்களை மிகவும் சுரண்டும் முறை என்று முன்னர் கூறிய உச்சநீதிமன்றத்தின் போக்கில் இது ஒரு பின்னடைவு ஆகும்.

1970 ஆம் ஆண்டு சட்டத்திற்குப்பின், உச்ச நீதிமன்றத்தின் நிலைபாடு மாறிவிட்டது. ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒரு குறிப்பிட்ட பணியில் அரசு ஒழித்து உத்தரவு போட்டாலும் , அந்த உத்தரவை ரத்து செய்து, ஒப்பந்த தொழிலாளர் முறையை ஊக்குவிக்கும் நிலைக்கு வந்தது.

தமிழக அரசு ஒப்பந்த முறையை ஊக்குவிக்கிறது:

இன்றைய தேதியில், சிமெண்ட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில், சிமெண்டை பைகளில் நிரப்பும் பணியிலும், அப்பைகளை அச்சிடும் பணியிலும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிக்கு நியமிக்க தடை விதித்து அளித்த உத்தரவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சில பணிகள் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்து போட்ட உத்தரவும் தவிர, வேறெந்த நிறுவனங்களிலும் ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு தமிழக அரசு தடைவிதிக்கவில்லை.

Migrant Workers in contract work have increased in TN

அதாவது, சிமெண்ட் தொழிற்சாலையில் மேற்சொன்ன பணிகளை தவிர, தமிழக அரசின் தொழிலாளர் இலாக்காவின் கீழ் வரும் அனைத்துத் தொழிற்சாலைகளிலும், ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை நியமித்து, கொள்ளை லாபம் பெற சட்டப்படி தடை ஏதும் இல்லை. எனவே, இன்று இந்த சட்ட நிலையை பயன்படுத்தி – அதாவது 1970 ஆம் ஆண்டின் சட்டத்தை பயன்படுத்தி – நிறுவனங்கள் அனைத்து பணிகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கின்றன.

இச்சட்டத்தின் கீழ், தமிழக அரசிற்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, நிரந்தரமான பணிகளில் எந்த நிறுவனமும் ஒப்பந்த தொழிலாளர் முறையில் தொழிலாளர்களை பணிக்கு வைத்துக் கொள்ளக்கூடாது என்று தடை விதித்து உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.

அப்படி தமிழக அரசு பிறப்பித்தாலும் முதலாளிகள் அந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் சென்றால், அந்த உத்தரவை இந்த நீதிமன்றங்கள் ரத்து செய்ய மறுத்து உறுதி செய்யுமா என்பது ஐயமே.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒப்பந்த முறையை உறுதி செய்வதில் முடிந்தது:

1976 ஆம் ஆண்டில் துப்புரவுப் பணி, சுத்தம் செய்யும்பணி, காவலர் பணி ஆகிய பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்களை மத்திய அரசின் தொழிலாளர் இலாக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் பணி அமர்த்துதல் கூடாது என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.

இதனால் பலதொழில் நிறுவனங்களில் ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் இந்த பணிகளில் நியமனம் செய்யப்படுவது தடுக்கப்பட்டது.

இந்த உத்தரவையும் மீறி, ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கும் நிறுவனங்களை எதிர்த்து போராடுவதன் மூலமும், நீதிமன்றம் செல்வதன் மூலமும், ஒப்பந்த தொழிலாளர் முறையை இப்பணிகளில் புகுத்துவதை தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் தடுத்து நிறுத்தின.

ஆனால், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (Steel Authority of India) நிறுவனம் தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு, 2001 ஆம் ஆண்டில் மேற்சொன்ன 1976 ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ரத்து செய்ததின் விளைவாக, ஒப்பந்த தொழிலாளர் முறையை மேற்சொன்ன பணிகளில் மட்டுமன்றி, நேரடி உற்பத்தி பிரிவுகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களை நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு மோசமான சூழலை உண்டாக்கிவிட்டது.
மத்திய அரசின் தொழிலாளர் இலாக்காவின் கீழ் உள்ள சுரங்கங்களிலும் இன்னும் சில நிறுவனங்களிலும் சில பணிகளில் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்து உத்தரவுகள் போட்டிருப்பினும், மேற்சொன்ன தீர்ப்பிற்குப்பின் எல்லா பணிகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பது என்பதே நடைமுறையாகிவிட்டது.

இன்று அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் வித்தியாசமின்றி அனைத்து பணிகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களை மிக மிக குறைந்த கூலிக்கு வேலை வாங்குகிறது.

இவர்களுக்கு விடுப்புக்கான உரிமை கிடையாது. அகவிலைப்படி என்றால் என்ன? என்று இவர்கள் கேட்பர். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளத்தில் உயர்வு இருக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் ஒப்பந்தம் போடும் நிலையை இவர்கள் அறியமாட்டார்கள். இவர்களுக்கு போனஸ் உத்தரவாதம் கிடையாது. ஓய்வு பெற்றால், பணிக்கொடை கிடைப்பதற்கும் உத்தரவாதம் இல்லை. அதேபோல, வருங்கால சேம நல நிதியில் இந்த தொழிலாளர்களை பணியமர்த்தும் ஒப்பந்ததாரர்கள் நிர்வாக பங்கையும், இத்தொழிலாளர் பங்கையும் செலுத்துகின்றனரா என்பதும் ஒரு கேள்விக்குறியே.

ஒப்பந்த தொழிலாளர்களின் பாதுகாப்பும் கேளிவிக்குறியே, சமீபத்தில் எண்ணூர் காமராஜ் துறைமுகத்தில் கப்பல்கள் மோதி எண்ணெய் படலம் உண்டான விபத்தே இதற்கு சான்று. துறைமுக எல்லைக்குள் கப்பல் நுழைந்தவுடன், அதன் இயக்கம் முதல் அனைத்து பணிகளும் துறைமுக நிர்வாகத்தால் ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் செய்யப்படுகிறது.

அங்கு இங்கெனாதபடி இறைவன் இருக்கிறானோ இல்லையோ, ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லாத இடமில்லை.

இன்று ஒப்பந்த தொழிலாளர் முறை கட்டுப்படுத்த முடியாத அளவில் சுரண்டல் வேட்டைக்கான முறையாக மாறிவிட்டது.

மத்திய, மாநில அரசுகளின் முழு உதவியுடன் இந்த சுரண்டல் வேட்டை தொடர்கிறது. அரசும், நீதிமன்றமும் தொழிலாளர்களை காக்கும் நிறுவனங்களாக இல்லாமல், வேலியே பயிரை மேய்ந்த கதைதான் நடைபெறுகிறது.

எனது அனுபவங்கள்:

மத்திய அரசின், டெலிபோன் நிறுவனம் எனது வீட்டிற்கு சமீபத்தில் தொலைபேசி இணைப்பு அளித்தது. அந்த வேலையை செய்த தொழில் நுட்ப பணியாளர், அரசின் தொலைபேசி நிறுவன ஊழியர் அல்ல. அவர் ஒரு ஒப்பந்த தொழிலாளி.

நான் ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு வழக்கு என்முன் விசாரணைக்கு வந்தது. சென்னை மாநகராட்சி, ஒப்பந்த முறையில் பல் மருத்துவரை ஒப்பந்த தொழிலாளியாக நியமித்தது. அதற்கு நான் தடைவிதித்தேன். பின்னர் என்ன நிகழ்ந்தது என்று தெரியாது.

ஒரு நகராட்சியில், துப்புரவு பணியை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒப்பந்த முறையில் அளித்ததாக நகராட்சியும், நகராட்சியின் நேரடி தொழிலாளர்கள் என்று துப்புரவு தொழிலாளர்களும் என் முன் வாதிட்டனர். அந்த மகளிர் சுய உதவிக்குழுக்களின் பெயர் – ரோஜா மலர், வாடாமல்லி. அந்த துப்புரவு பெண் தொழிலாளர்கள் நகராட்சியின் நேரடி தொழிலாளர்கள் என்று நான் இறுதி தீர்ப்பு அளித்தேன். பின்னர் என்ன நிகழ்ந்தது என்று தெரியாது.

பன்னாட்டு நிறுவனங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள்:

பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கம் செயல்படவே அனுமதிப்பது கிடையாது. எந்த சட்டமும் இவர்களை தீண்டாது. தொழிலாளர் இலாக்கா இந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுசரணையாக நடந்துக்கொள்ளும். பன்னாட்டு நிறுவனங்களில் ஒப்பந்த தொழிலாளர்களே பெருமளவில் பணிபுரிகின்றனர்.

உதாரணத்திற்கு, சென்னைக்கு அருகில் உள்ள ஹூண்டாய் (Hundai) கார் கம்பெனியில், இரண்டு ஆண்டுக்கு முன் வந்த பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர் பற்றிய விவரத்தை கீழே தருகிறேன்.

பிரிவு தொழிலாளர்களின் எண்ணிக்கை மாத சம்பளம் (ரூ.)
நிரந்தர தொழிலாளர் 1550 28000
ஒரு வருட பயிற்சியாளர் 250 10500
மூன்று வருட பயிற்சியாளர் 350 5400
கம்பெனி அப்ரண்டிஸ் 1250 4500
கவர்மெண்ட் அப்ரண்டிஸ் 2550 2600
ஒப்பந்த தொழிலாளர் 4600 3100

பன்னாட்டு முதலாளிகள் எப்படி குறைந்த கூலி கொடுத்து கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர் என்பதை இது தெளிவாக்கும்.

இந்து பத்திரிக்கையின் இரு கட்டுரைகள்:

இந்து பத்திரிகையில் திரு. சம்பத் என்பவர் எழுதிய கட்டுரையில் பன்னாட்டு நிறுவனமான மாருதி கார் கம்பெனியில் மார்ச் 2012 இல் ஒரு தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது என்றும், இதனை ஒட்டி நிறுவனத்தின் 546 நேரடி தொழிலாளர்களையும், 1800 ஒப்பந்த தொழிலாளர்களையும் இந்த நிறுவனம் வேலை நீக்கம் செய்தது என்றும், இச்சூழலில் ஒரு தொழில் தகராறில் ஒரு மேலாளர் இறக்கவும், 40 அதிகாரிகள் காயமடைந்த வன்முறை நிகழ்ச்சி 2012 ஜூலையில் நடந்தது என்றும், அதில் 147 தொழிலாளர்களை குற்றவாளிகளாக காண்பித்து அரியானா அரசு அத்தொழிலாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தது என்றும், அதில் 113 தொழிலாளர்கள் இரண்டு ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் பிணையில் வந்தார்கள் என்றும், மற்ற 34 தொழிலாளர்களுக்கு இதுவரை பிணை கிடைக்காமல் சிறையில் இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இந்த குற்ற வழக்கை நடத்துவதற்காக திரு. துள்சி என்ற பிரபல வழக்குரைஞரை, அரசு சிறப்பு வழக்குரைஞராக அரியானா அரசு ரூபாய் 5.5 கோடி செலவில் நியமித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திரு. சம்பத் அவர்கள் மற்றொரு கட்டுரையில், ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் (Honda motor cycles and scooters) தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் உள்ள 3000 தொழிலாளர்களில், 466 தொழிலாளர்கள் மட்டுமே நிரந்தர தொழிலாளர்கள் என்றும், மற்றவர்கள் மிக குறைந்த கூலிக்கு பணியில் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என்றும் பதிவு செய்து உள்ளார்.

ஒப்பந்த தொழிலாளர்களை புறக்கணிக்கும் தொழிற்சங்க இயக்கம்:

நான் வழக்குரைஞராக இருந்தபொழுது, நிரந்தர தொழிலாளர்களுக்கு தலைமை தாங்கும் இடது சாரி கருத்துடைய தொழிற்சங்கங்களே அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலார்களுக்காக வீதிக்கு வந்து போராடவும் இல்லை, சட்ட ரீதியாகவும் போராடவில்லை என்ற வருத்தமான நிலையை பதிவு செய்ய விரும்புகிறேன். பெஸ்ட் & கிராம்டன் ஒப்பந்த தொழிலாளர்களும், இந்தியன் ஆயில் ஒப்பந்த தொழிலாளர்களும், காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்களும் நடத்திய சட்ட போராட்டத்தையே நான் இங்கு குறிப்பிடுகிறேன். இதற்கு நிரந்தர தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் எந்த ஆதரவும் தரவில்லை என்பதே உண்மை. அப்படியெனில், மற்ற தொழிற்சங்கங்களைப் பற்றி கூறுவதற்கு ஏதும் இல்லை.

சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம், சிம்சன் தொழிற்சங்க தேர்தலை நடத்தும் பணியை எனக்கு அளித்தது. என்னை சந்திக்க வந்த இரு தரப்பையும், தேர்தல் குழுவிடமும் விசாரித்ததில், நிரந்தர தொழிலாளர்கள் மட்டுமே சங்கத்தில் உறுப்பினர்கள் என்றும், நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கைக்கு இணையாக ஒப்பந்த தொழிலாளர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு மிகக் குறைந்த கூலிதான் கொடுக்கப்படுகிறது என்பதையும், அவர்களை சங்கத்தில் சேர்ப்பதில்லை என்றும் கூறினர். இதே நிலைதான் மற்ற அனைத்து நிறுவனங்களில் இருப்பதாக கூறினார்கள்.

எனவே, மேற்சொன்ன தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் குசேலர், அனைத்து தொழிற்சங்கங்களையும் கூட்டி ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய கோரி இந்த கருத்தரங்கை நடத்தப் போவதாகவும், அதில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியவுடனே அதனை ஒப்புக் கொண்டேன்.

மத்தியிலும் மாநிலத்திலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்கப்போவதில்லை. அவர்கள் 1970 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் ஏதேனும் சில பணிகளில் ஒப்பந்த தொழிலாளரை நியமிப்பதற்கு தடை விதித்து உத்தரவு போட்டாலும், நீதிமன்றங்கள் அந்த உத்தரவுகளுக்கு உடனே தடை கொடுத்து விடும் வாய்ப்பு உள்ளது.
எனவே, 1970 ஆம் ஆண்டு சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்றும், நிரந்தர வேலைகள் எதிலும் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை பணி நியமனம் செய்யக் கூடாது என்றும் கோரும் ஒரு மாபெரும் இயக்கமே இன்றயை தேவை.

மீத்தேன், கெயில், ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு எதிர்ப்பு போன்றவற்றில் வெற்றியை ஈட்டியது – மாபெரும் மக்கள் இயக்கங்களே. எந்த கட்சியும், ஆட்சியும் இந்த வெற்றிகளுக்கு உரிமை கொண்டாட முடியாது. அப்பாதையே தொழிலாளர்கள் முன்னிருக்கும் ஒரே பாதை.
நிரந்தர தொழிலாளர் ஒப்பந்த தொழிலாளர் என்ற வேறுபாடு இன்றி அனைத்து தொழிலாளர்களும் ஒரே அணியில் திரள்வதே ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க ஒரே வழி. இதை இந்த காலகட்டத்தில் செய்யத் தவறினால், நிரந்தரத் தொழிலாளர் என்ற பிரிவே இல்லாமல் போகும் நிலை உருவாகும்.

 

This entry was posted in Analysis & Opinions, Contract Workers, Featured, Labour Laws, labour reforms, Unorganised sector, Women Workers, Workers Struggles, தமிழ் and tagged , , . Bookmark the permalink.