நலநிதிச் சட்டங்களைத் திரும்பப் பெற்றதன் மூலம் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பைப் பிடுங்கப் பார்க்கிறது மோடி அரசு!

நவதாராளவாதத்தின் கீழ் உலகெங்கும் உள்ள தொழிலாளர்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள் மீது தாக்குதல் நடக்கிறது. இந்தியாவில் அதனைச் செய்வதென்று மோடி அரசு முடிவு செய்ததில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. பற்பல அமைப்பாகத் துறைகளில் உழைக்கும் தொழிலாளர்களுக்கு நல்வாழ்வுத் திட்டங்களை அளிக்கும் சட்டங்கள் பலவற்றை ஜூலை 2016ல் மத்திய அரசு ஓசையெழுப்பாமல் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டது. மைக்கா சுரங்கத் தொழிலாளர் நலச் சட்டம் (1946), உப்பு நலநிதிச் சட்டம் (1953), சுண்ணாம்புக் கல் மற்றும் கார்பனேட் கனிமத் (Dolomite) தொழிலாளர்கள் நல நிதிச் சட்டம் (1972), இரும்பு- மக்னீசியம்- மற்றும் குரோமிய தாது சுரங்கத் தொழிலாளர்கள் நல நிதி சட்டம் (1976) சினிமாத் தொழிலாளர்கள் நல நிதிச் சட்டம் (1981) உள்ளிட்ட சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதன் காரணமாக லட்சக் கணக்கான தொழிலாளர்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள். குறைவான கூலிக்காக, மிகக் கொடூரமான நிலைமைகளில் உழைக்கின்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அற்ப சமூகப் பாதுகாப்பும் பறிக்கப்பட்டு விட்டது.

தொழில் நடத்துபவர்களுக்கு பளுவைக் குறைப்பதும், தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புக்காக முதலாளிகள் செலவழிக்க வேண்டிய சுமையை நீக்குவதும் தான் இந்த நடவடிக்கையின் சாரம் என்று அமைப்பாகாத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றும் தொழிற்சங்கங்கள் கருதுகின்றன. மேலும், கட்டுமானம், பீடித் தொழில் போன்றவற்றில் நல்ல பலன் தரும் வகையில் வசூலிக்கப்படும் நல நிதிகளை அகற்றுவதற்கான முன்னோட்டம் இது என்றும் தொழிற்சங்கங்கள் கருதுகின்றன. GST மசோதாவிற்கும் நலநிதி ஒழிப்புக்கும் எதிரான கூட்டு நடவடிக்கை குழு ஒன்று தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறது. அமைப்பாகத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பைத் திரும்பத் பெறுவதற்கு எதிரான பிரச்சாரத்தை அது கட்டமைக்க உள்ளது. தமிழ்நாட்டின் AITUC, CITU, AICCTU, UWF, INTUC, LPF, HMS உள்ளிட்ட மைய தொழிற்சங்கங்களும் துறைவாரியான சங்கங்களும் இப்பிரச்சார இயக்கத்தில் அங்கம் வகிக்கும்.

வளரும் தொழில் வருமானம்! வளராத நல நிதி!

நலநிதியைத் திரும்பப் பெற்றது சவப்பெட்டியின் மீது அடிக்கப்பட்ட கடைசி ஆணி போன்றது. நலநிதிகளை அகற்றுவதற்கான முயற்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. உதாரணமாக, வெகுவேகமாக வளரும் சினிமாத் தொழிலை எடுத்துக்கொள்ளுங்கள். மிகப்பெரும் அளவில், ஏறக்குறைய 60 லட்சம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சினிமாத் தொழிலில் பணியாற்றுகின்றனர். கிடைக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், இத்தொழிலின் ஆண்டு வருமானம் 13,800 கோடி ரூபாய். இந்த வருமானம் ஆண்டுதோறும் 9 சதம் அதிகரித்து வருகிறது. 2020ல் இத்தொழிலின் ஆண்டு வருமானம் ரூபாய் 20000 கோடியாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்படுகிறது. இருந்தபோதும், கடந்த மூன்று ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட நலநிதி 4 கோடி ரூபாயைத் தாண்டவில்லை. இது ஆண்டு வருமானத்தில் வெறும் 0.03 சதம் மட்டும்தான். அதாவது ஒரு தொழிலாளிக்கு ஆண்டுக்கு ரூபாய் 4 மட்டுமே! சினிமா வருமானத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நலநிதி வரி போடப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு படத் தயாரிப்புக்கு ரூபாய் 1000 முதல் ரூபாய் 20,000 வரை நலநிதி வரியாக வசூலிக்கப்பட வேண்டும் என்று சினிமாத் தொழிலாளர்கள் நலநிதி விதி கூறுகின்றது. இன்றைய சினிமாவின் வளர்ச்சியை, மல்டி பிளக்ஸ்களின் அடிப்படையிலான வளர்ச்சியை, சினிமாத் தொழிலின் மற்றொரு வளர்ச்சியான தொலைக்காட்சி சார்ந்த பொழுதுபோக்கை மேற்படி விதிகள் கணக்கில் கொள்ளவில்லை.

ஆண்டு வசூல் செய்யப்பட்ட நல நிதி (கோடிகளில்) செலவு செய்யப்பட்ட நல நிதி (கோடிகளில்)
சினிமாத் தொழிலாளர் நல நிதி 2012-2013* 1.63 1.5303
2013-2014* 1.78 1.1862
2014-2015** 3.83 1.73

* http://www.labour.nic.in/sites/default/files/Annual_report_2013-14.pdf

**https://www.newslaundry.com/2016/01/05/more-than-a-quarter-of-cess-collected-remains-unutilised

ஒருவேளை உற்பத்தியோடு நலநிதி இணைக்கப்பட்டிருந்தால் அந்த தொழிலில், நலநிதி வசூலிப்பு மேம்பட்டிருக்கிறதா? இல்லை. அப்போதும் கூட, நலநிதி வசூலிப்பு உற்பத்திக்கு இணையானதாக இல்லை! உதாரணமாக, உப்பு உற்பத்தித் தொழிலை எடுத்துக்கொள்வோம். பற்பல வழிகளில், ஏற்றுமதிக்கான உப்பு உற்பத்தி வரை, நலநிதி விலக்கப்பட்டுள்ளதாக ஆகிவிடுகிறது. கூட்டுறவு சங்கங்களுக்கு நலநிதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதுபோன்ற பிற உற்பத்தி அமைப்புகளைக் காப்பதற்கான விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், ஏற்றுமதிக்கான உப்பு உற்பத்திக்கு விலக்கு அளிக்கப்படுவதில் எந்தப் பொருளும் இல்லை. ஏனென்றால், இத்துறையில் ஏற்றுமதியின் பங்கு அதிகரித்தபடி இருக்கிறது.

ஆண்டு உப்பு உற்பத்தி (லட்சம் டன்கள்)*** நலநிதி* நலநிதி வசூல்**
2011-12 186 75.02 விவரம் கிடைக்கவில்லை
2012-13 221 91.44 ரூ 348
2013-14 245 38.13 ரூ 330
2014-15 230 11.63 ரூ 424
2015-16 9.49 25.80

*http://dipp.nic.in/English/Publications/Annual_Reports/AnnualReport_Eng_2016-17.pdf

** Various Annual Reports from Salt Department (http://saltcomindia.gov.in/salt-ar-2015a.pdf)

***http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=103387 and Annual Reports from Salt Department

தொழிலாளர்களைச் சென்று சேராத நல நிதி!

தொழிலகங்களிடமிருந்து அடையாளத்துக்காக வசூல் செய்யப்பட்ட இந்த தொகை கூட உருப்படியான வகையில் தொழிலாளர்களைச் சென்று சேரவில்லை. அமைப்பான தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சமூகப் பாதுகாப்பு போல, அமைப்பாகத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு வரையறை செய்யப்படவில்லை. ESI சட்டம், PF சட்டம் , பணிக்கொடை சட்டம் போன்ற சட்டங்கள், அமைப்பான தொழில் செய்யும் ஒரு முதலாளி தனது தொழிலாளிக்கு அளிக்க வேண்டிய சமூகப் பாதுகாப்புகளை வரையறுத்துச் சொல்கின்றன. ஆனால், அமைப்பாகாத் துறை தொழிலாளர்களுக்கான சட்டங்களில் இப்படி வரையறுத்துச் சொல்வது, பளிச்செனத் தெரியும் வகையில், இல்லாமல் இருக்கிறது.

உப்பு நலநிதிச் சட்டத்தைச் சற்று ஆய்வு செய்வோம். தொழிலாளர் நலன் என்பது ஒற்றை வரியில், இச்சட்டத்தில், குறிப்பிடப்படுகிறது. தொழிலாளிக்கான உரிமை என்ன என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. உப்புத் துறையைக் கண்காணிக்கும் தொழில் கொள்கை மற்றும் தொழில் மேம்பாடு துறையின் ஆண்டறிக்கையில், மருத்துவப் பரிசோதனை, கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டதையும், கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டதையும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டதையும் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் என்று குறிப்பிடப்படுகிறது! “2014-15 நிதியாண்டில் 23 மருத்துவ முகாம்களும், 9 விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அங்கீகரித்த திட்டங்களின்படி, 2015-16 காலத்தில், உப்புத் தொழிலாளர்களின் பள்ளி மாணவர்களில் கல்வித் திறன்மிக்க 1255 பேருக்கு ரூபாய் 16.73 லட்சம் அளிக்கப்பட்டது. இவர்களில் பாதி பேர் பெண் மாணவர்கள் ஆவர். 2015-16 காலத்தில் உப்புத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக, பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம்கள் ஒன்பதும், மூன்று விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன“, என்று தொழில் கொள்கை மற்றும் தொழில் மேம்பாடு துறையின் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.

தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பின் அடிப்படைகளான, ஓய்வூதியம், மருத்துவம், போனஸ் போன்றவை நலநிதி என்று கருத்தாக்கத்திற்குள் கொஞ்சம் கூட இல்லை. இதுபோன்ற அற்பமான உதவிகள் கூட தொழிலாளர்களுக்கு சிறு ஆறுதலாக இருக்கும் என்பதைச் சமீபத்தில் ஆங்கில இந்துவில் வெளிவந்த ஓர் ஆவணம் காட்டுகிறது. (Hindu.)

கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நலநிதி போன்றவற்றில், வசூல் சிறப்பாக நடைபெறுகிறது. ஆனால், அதுபோன்றவற்றில் கூட, தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகளை மறுப்பதற்கான வேலைகள் நடைபெறுகின்றனவே தவிர, அவர்களின் உழைப்பின் பலனை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. கட்டுமானத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக, கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் நல நிதிச் சட்டம் (1996) இயற்றப்பட்டது. மாநில அரசுகள் தொழிலாளர் நல வாரியங்களை அமைக்க வேண்டும் என்றும் 10 லட்சம் ரூபாய் மதிப்புக்கு மேலான கட்டிடங்களைக் கட்டும்போது, கட்டிட மதிப்பில், 1 சதம் முதல் 2 சதம் வரையிலான தொகையை நலநிதியாக வசூலிக்க வேண்டும் என்றும் அச்சட்டம் நிர்ணயம் செய்தது. (இருந்தபோதும், தமிழ்நாட்டில் 0.3 சதம் மட்டுமே நலநிதியாக வசூல் செய்யப்படுகிறது.) இவ்வாறு வசூல் செய்யப்படும் தொகை, திருமண உதவி, பேறுகால உதவி, ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை, வீடு கட்ட உதவி, மருத்துவ உதவி என்று தொழிலாளர்களுக்கு அளிக்கப்படுகிறது.

கட்டுமானத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றும் சங்கங்கள், நலநிதித் தொகை மிகவும் குறைவு என்றும், குறைந்தபட்சம் 3 சதம் நலநிதியாக வசூல் செய்யப்பட வேண்டும் என்றும் சொல்கின்றன. ஆனால், ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கும் செய்தி ஒன்று உள்ளது. வசூல் செய்யப்படும் நலநிதியில், 22 சதம் மட்டுமே தொழிலாளர்களுக்கு அளிக்கப்படுகிறது! மாநிலங்கள் வசூல் செய்ய 28 ஆயிரம் கோடியில் 7 ஆயிரம் கோடியை மட்டுமே மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு அளித்துள்ளன. 20 ஆயிரம் கோடிக்கு மேலான தொகை மாநில அரசுகளின் பிடியில் உள்ளது! தொழிலாளர்களுக்குக் கூடுதலான நலநிதி வினியோகம் செய்யும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. இம்மாநிலத்தில் 40 சதத்துக்கு அதிகமான தொகை தொழிலாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதுபோன்ற மாநிலங்களில் கூட நலநிதியைப் பெறுவது மிகவும் சிக்கலான வேலையாக உள்ளது. தொழிற்சங்கங்களின் பாத்திரத்தை மறுப்பதாக செயல்முறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. விளைவாக, தங்களுக்கான பலன்களை பெற வேண்டும் என்ற நோக்கம் தொழிலாளர்கள் மத்தியில் குறைந்துவருகிறது. ஆண்டுக் கணக்கில் லட்சக் கணக்கான கேட்பு மனுக்கள் நிலுவையில் இருப்பதாகவும், மாவட்டத்திற்கு மாவட்டம் செயல்முறைகள் மாறுவதாகவும், தற்காலிகத்தனம் அதிகரிப்பதாகவும் இப்பிரச்சனையில் செயல்படும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சொல்கின்றனர். அற்பக் காரணங்களுக்காக கேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தொழிற்சங்கத்தினர் சொல்கின்றனர். முன்பெல்லாம், கேட்பு மனு எந்த கட்டத்தில் இருக்கிறது என்ற அஞ்சல் அட்டை அனுப்பப்படும் நடைமுறை இருந்தது. ஆனால், இப்போது, துறையில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது தொழிலாளியின் பொறுப்பாக்கப்பட்டுவிட்டது. விளைவாக, தனக்கான சேவையைப் பெறுவதற்காக, தொழிலாளி செய்யும் செலவு அதிகரித்துக்கொண்டே போகிறது, விளைவாக தொழிலாளர்கள் பலன்கள் வேண்டாம் என்று விலகிச் செல்வது அதிகரிக்கிறது என்றும் தொழிற்சங்கத்தினர் சொல்கின்றனர். மேலும், இன்றைய நிலையில், கட்டுமானத் துறையில், அதிகரித்துவரும் புலம்பெயரும் தொழிலாளர்களை உள்ளடக்கிக் கொள்வதாக நலநிதி நிர்வாக முறை இல்லை.

அரசுமூலதனத்தின் கள்ளக் கூட்டின் வெளிப்பாடே அரசின் பின்வாங்கல்!

தொழிலாளியின் நலனுக்காகச் செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாவும் கூட, கைப்பற்றப்பட வேண்டிய பணம்தான் என்ற மூலதனம் கருதுகிறது. எனவே, நலநிதியைத் திரும்பப்பெற வேண்டும் என்று காந்தியின் பெயரைப் பயன்படுத்தி ஒரு கட்டுரை ( articles )வந்ததில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. GST வருகை தந்த பின்னர் நலநிதியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற குரல் அதிகரிக்கத் துவங்கிவிட்டது. தொழிலாளர்களுக்கான பலன்கள் சென்று சேர்வதில் உள்ள பிரச்சனைகளைக் களைய வேண்டிய, நடைமுறைப்படுத்துவதை மேம்படுத்த வேண்டிய அரசு, அதாவது தொழிலாளர்களின் நலன்களைக் காக்க வேண்டிய அரசு, நலநிதியை ஒழித்துக்கட்ட செய்ய வேண்டிய அனைத்தையும் செய்கிறது. ஒவ்வொரு மாநிலமும் தனது தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளத்தையும், சமூகப் பாதுகாப்பையும் அளிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதுதான் கூட்டமைப்பு முறையாகும். (உதாரணமாக, டெல்லி மாநிலம் சிலத் திட்டங்களில் மேம்பட்டு செயல்படுகிறது. நலநிதியிலிருந்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி செய்து தருகிறது. மருத்துவ உதவி செய்கிறது. குறைந்தபட்ச சட்டக் கூலியைக் கணிசமாக உயர்த்தி அறிவித்திருக்கிறது.) கூட்டமைப்பு முறையை பலப்படுத்துவதற்குப் பதிலாக, பலவீனப்படுத்துவதை மத்திய அரசு செய்து வருகிறது. மத்திய அரசு முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தன் கையில் குவித்துக்கொண்டிருக்கிறது என்பதை GST விவகாரத்திலும், தொழிலாளர் சீர்திருத்தத்திலும் பார்த்து வருகிறோம்.

மூலதனத்திற்கு ஆதரவாக அரசு செயல்படுவதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. அதற்கு மாறாக, இந்தக் கட்டளைகளை அமலாக்கம் செய்யும் தன்னறிவின்றிச் செயல்படுகின்றவர்களைப் பற்றித் தொழிற்சங்கங்கள் தங்களுக்குள் விவாதிக்க வேண்டும். நாம் இப்போது குறிப்பிடுவது பொதுத்துறை ஊழியர்களைத்தான். தொழிலாளர் துறையிலும், தொழிலாளர் நலத் துறையிலும் செயல்படும் பொதுத்துறைத் தொழிலாளர்களைப் பற்றித்தான் இங்கே குறிப்பிடுகிறோம். அவர்கள் தங்களின் சுய விருப்பத்துடன் தங்கள் சக தொழிலாளர்களின் நலன்களை அடகு வைக்கின்றனர்*. அவர்கள் செய்த காரியம் அவர்களையே திருப்பித் தாக்கியது. உப்பு தொழிலாளர் நலநிதி சட்டம் திரும்பப் பெறப்பட்ட பின்னர் உப்புத் துறையே மூடப்பட்டது. கொல்கத்தாவில், அந்தத் துறையில் பணியாற்றிய பொதுத்துறை தொழிலாளர்கள் துறை மூடப்பட்டதற்கு எதிராகப் போராட வேண்டி வந்தது. அந்தத்துறை இயங்கிய காலம் முழுவதும், அந்தத் துறையில் பணியாற்றிய அதிகார மனப்பாங்கு உள்ளவர்கள் தொழிலாளர்களுடன் கரம் கோர்க்க ஒரு நாளும் முயன்றதில்லை. இன்று தங்கள் வேலை என்ற போது அவர்கள் தனிப்பட்டு நிற்கின்றனர்.

நலநிதியைக் கோரும் தொழிலாளர்கள் அதற்கு உரிமை உள்ளவர்கள் என்று பார்க்காமல் இலவசத்தைத் தேடும் நபர்கள் என்றுதான் பொதுத்துறைத் தொழிலாளர்கள் கருதி வந்தனர். இந்த பார்வை நிலை தொழிலாளர்களின் பொதுவான கருத்தாக்கத்திலும் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். அமைப்பாகத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள், தாங்கள் தொழிலாளர்கள்தான் என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பின்றி இருக்கிறார்கள் என்பதை அமைப்பான தொழிலாளர்கள் புரிந்துகொள்வதற்கான சிறு முயற்சி கூட நடக்கவில்லை. வானத்தின் கீழ் உள்ள அனைத்தையும் தனியாருக்குத் தாரை வார்க்கத் துடிப்பதால், தங்களின் பாதுகாப்பையும் அரசு தகர்த்துவிடும் என்பதை பொதுத்துறைத் தொழிலாளர்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை பிற தொழிலாளர்களுக்கும் இருக்கிறது என்பதை மறுக்கும் அவர்களின் போக்கு, பிற தொழிலாளர்களிடமிருந்து அவர்களைத் தனிமைப் படுத்திவிடும். பொதுத்துறை தொழிலாளர்களின் சங்கத்தினர், தாங்கள் யாருக்காகப் பணியாற்றுகிறார்களோ அந்த தொழிலாளர்களை அணுகிக் கிடைக்கும் பலன்கள் பற்றியும், பிரச்சனைகள் பற்றியும், தீர்வுகள் குறித்தும் விரிவாகப் பேசுவது இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாக இருக்கும்.

கூட்டு நடவடிக்கை குழுவின் கோரிக்கைகள்

அமைப்பாகத் தொழிலாளர்களின் நலநிதியைப் பறிப்பதற்கு எதிராகவும், அமைப்பாகத் துறைத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் பல்வேறு மையத் தொழிற்சங்கங்களும், சுதந்திரத் தொழிற்சங்கங்களும் சேர்ந்து கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைத்துள்ளன. அந்த அமைப்பு கருத்தரங்குகளை நடத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளது. அந்த அமைப்பு பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:

1. இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் அறிக்கையின்படி, உப்பு, மைக்கா, நிலக்கரி, சுண்ணாம்புக்கல், சினிமா, கார்பனேட் கனிமம், இரும்புத் தாது, இன்ன பிற தொழில்களில் உள்ள தொழிலாளர்களுக்கான நலநிதி ஒழிக்கப்பட்டிருப்பது குறித்தும், அதனால், இந்தத் துறை தொழிலாளர்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள் பாதிப்புக்கு ஆளாகும் என்றும் அறிந்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். தொழிற்சங்கங்களைக் கலந்தாலோசனை செய்யாமலும், சம்மதம் பெறாமலும் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். மேலும், இந்தத் தொழிலாளர்களின் நலத்திட்டங்களுக்காக போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி தீர்மானம் இயற்றுகிறோம்.

2. GST மசோதா நாடாளுமன்றத்தில் உள்ள இந்த நிலையில், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் நல்வாழ்வு நிதி மற்றும் பீடித் தொழிலாளர்கள் நல்வாழ்வு நிதி ஆகியவைப் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், அவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும். அத்துடன், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டத்தின்படி வசூலிக்கப்படும் ஆட்டோ தொழிலாளர்கள் நலத் திட்டமும், கட்டுமானத்திற்காக வசூலிக்கப்படும் நல்வாழ்வு நிதியும் பாதுகாக்கப்பட்டவை ஆக்கப்பட வேண்டும்.

3. தமிழ்நாடு பட்ஜெட்டில் 3 சதமும், அனைத்து துறைகளிலும் நலநிதி வசூலிக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட அனைத்து நல வாரியங்களிலும் தொழிலாளர்களின் பங்களிப்பை வசூலிக்க வேண்டும் என்றும், முத்தரப்பு நல்வாழ்வு வாரியங்களில் அனைத்து மைய சங்கங்கள் மற்றும் சுதந்திரத் தொழிற்சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும், கிராம அலுவலர் குறுக்கீடு இல்லாமல் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், ஸ்மார்ட் கார்டுகள் அளிக்கப்பட வேண்டும் என்றும், ESI மருத்துவப் பலன்கள்ஓய்வூதியமாக ரூபாய் 3000 வழங்கப்பட வேண்டும் என்றும், அனைத்துப் பலன்களின் அளவையும் அதிகரித்து வழங்க வேண்டும் என்றும், குறைதீர்ப்பு அமைப்புகள், மேல்முறையீட்டுக்கான அமைப்பு, மழைக்கால உதவித் தொகை, வீட்டு வசதி, வங்கிக் கடன் மற்றும் பிற வழங்கப்பட வேண்டும் என்றும் கோருவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

4. தொழிலாளர் வர்க்க ஒற்றுமை, மற்றும் விழிப்புணர்வின் மூலம் மேற்கண்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதென்றும், தேசிய அளவில் டெல்லியிலும், தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

===================

* “டேனியல் பிளாக் என்ற நான்(‘I, Daniel Blake’) என்ற பிரிட்டன் படம் பொதுத்துறை அதிகார வர்க்கத்தின் மனோபாவம் என்ன என்பதை மிக அழகாகக் காட்டியது. ஒரு தொழிலாளியின் உடல் நலன் பாதிக்கப்பட்டதால் அவர் வேலை செய்யும் ஆற்றலை இழக்கிறார். அரசின் நல்வாழ்வுத் திட்டத்தைப் பெறுவதற்கு அவர் எடுக்கும் முயற்சிகளும் அவர் எதிர்கொள்ளும் அவமதிப்புகளும் இப்படத்தில் உணர்ச்சிகரமாகக் காட்சியாக்கப்பட்டுள்ளன.

This entry was posted in Contract Workers, Informal sector, Labour Laws, labour reforms, Public Sector workers, Unorganised sector, Working Class Vision, தமிழ் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.