ஒரு பிஎஸ்என்எல் பெண் தொழிலாளி உடன் கலந்துரையாடல்

பிஎஸ்என்எல் பொதுத்துறையில் உள்ள வேலை நிலைமைகள், தொழிற் சங்கவாதம் மற்றும் பெண் தலைவர்கள் இல்லாமை குறித்து பிஎஸ்என்எல் தொழிலாளர் ஒருவருடன் கலந்துரையாடல். (English version)

தொழிற்சங்க வேலைகள் குறித்து

கடந்த 35 வருடங்களாக நான் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். நான் 20 வயதில் வேலைக்கு வந்த முதல் நாளே, வேலை நிலைமை குறித்து ஒரு மதிய நேர போராட்டம் நடைபெற்றது. என்னுடைய பகுதியில் இருந்து பல பெண்கள் போராட்டத்திற்கு செல்லவில்லை. இது எங்களுடைய நலனை குறித்த போராட்டம் என்பதால் நான் கலந்து கொண்டேன். அது சங்கத் தலைவர்கள் மத்தியில் ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இரண்டு தொழிற்சங்கங்கள் இருந்தன – என்எஃப்பிடியி – அஞ்சல் மற்றும் தொலைதொடர்பு தொழிலாளர்களின் தேசிய கூட்டமைப்பு, ஏஐடியுசி, சிஐடியு இடதுசாரி சங்கங்களின் ஆதரவுடன் செயல்பட்டுவந்தது. இன்னொரு தொழிற்சங்கம் எஃப்என்பிடியி – தேசிய அஞ்சல் மற்றும் தொலைதொடர்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பு – ஐஎன்டியுசி ஆதரவுடன் செயல்பட்டது. போராட்டத்தை நடத்திய இடதுசாரி சங்கமான என்எஃப்பிடியி சங்கத்தில் நான் இணைந்தேன்.

எஃப்என்பிடியி உடன் ஒப்பிட்டு பார்த்தால் எங்களது சங்க நடவடிக்கைகள் மாறுபட்டு இருந்தன. பல்வேறு கோரிக்கைகள் குறித்து சங்கம் சங்க வகுப்பகள் நடத்துவார்கள். வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்களுக்கு வேலை ஒதுக்கீடு, வேலை மாற்றம் ஆகியவற்றை பொருத்தவரையில் எஃப்என்படியி நிர்வாகத்தின் போக்கையே கடைபிடிக்கும் எங்கள் சங்கம் தொழிலாளர்களுக்காக சண்டை போடும், ஆனால் ஒரு எல்லையை மீறாது. இந்த எல்லையை கடந்தவுடன், மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்தாமல், எங்களை சமரசம் செய்துவிடுவார்கள். இவ்வாறு சமரசம் செய்வதை நாங்கள் கேள்வி கேட்டால் நீங்கள் கருத்தியல்ரீதியாக கேள்வி கேட்கின்றீர்கள் சில இடங்களில் சமரசம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். சமரசம் தான் செய்ய வேண்டும் என்றால் ஏன் கேள்வி ஏன் போராட்டங்கள் நடத்த வேண்டும்?

நம்முடைய உரிமைகளுக்காக சங்கம் போராடும் என்ற ஒரு நம்பிக்கையுடன் நாம் சங்கத்தில் இணைகிறோம். உள்ளே சென்று பார்த்தால் தான் பல கேள்விகள் வேறுபாடுகள் எழுகின்றன. தொழிலாளர் உறுப்பினர்களுக்காக ஒரு நல்ல தலைவர் போராடுவார் என்று நாம் நினைத்தால் பல நேரம் நிர்வாகம் நம்மை சமாதானம் படுத்துவோது போல்தான் தலைவர்களும் நடந்து கொள்கின்றனர். இது குறித்து கேள்வி எழுப்புபவர்கள் ஒதுக்கப்பட்டு விடுகின்றனர்.

தொழிற்சங்கத்தில் பெண் தலைவர்கள் நிலைமை குறித்து

தொலைதொடர்பு துறையில் 80 சதத் தொழிலாளர்கள் பெண் தொழிலாளர்கள் ஆவர். 1967 புகழ்வாய்ந்த ரயில் வேலைநிறுத்தத்தில், எங்களுடைய எக்ஸ்சேஞ்ச் அலுவலகத்தில் உள்ள அனைத்து பெண் தொழிலாளர்களும் பங்கு பெற்று கைது செய்யப்பட்டனர். இவ்வாறு பல பெண் தொழிலாளர்கள் தொழிலாளர் தளத்தில் சங்க வேலைகளில் ஈடுபட்டாலும், அவர்களுக்கு தலைமை பொறுப்புகள் கொடுக்கப்படுவதில்லை. சங்க வேலைகளில் அனைத்து பெண் தொழிலாளர்களும் ஈடுபடவேண்டும் என்ற எதிர்பார்ப்புள் உண்டு ஆனால் பெண்களுக்கு தரப்படுவது துணைத் தலைவர் அல்லது பொருளாளர் பதவிகள் தான். இவை அனைத்து வெறும் மேம்போக்கான பிரதிநிதித்துவம் தான். சங்க வேலைபாடுகளிலோ, நிர்வாகத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படுவதில்லை.

வேலை நிலைமைகளில் உள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து, வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் மனப்பக்குவத்தை ஆராய்ந்து அவர்களை போராட்டங்களில் ஈடுபடுத்தத் தயார் செய்வதே ஒரு சங்கத்தின் அடிப்படை பண்பாகும். பொதுவாகவே பெண்களுக்கு போராடும் குணம் அதிகம் என்று நான் கருதுகிறேன் நாங்கள் ஒவ்வொரு வருடமும் 5-6 போராட்டங்கள் நடத்துகிறோம். தற்போது உணா(குஜராத்) மற்றும் வெமுலா(ராதிகா) ஆகிய போராட்டங்களில் பெண்கள் தலைமை எடுத்து செயல்படும் போது, ஏன் தொழிற்சங்கங்களில் மட்டும் பெண் தலைவர்களை அடையாளப்படுத்த முடிவதில்லை. தேசிய அளவில் பார்த்தால் 20 தலைமை பொறுப்புகள் இருந்தால் அதில் 1-2 பொறுப்புகளில் மட்டும் பெண்கள் இருப்பார்கள். அதுவும் துணைப் பொருளாளர், பொருளாளர், அமைப்புச் செயலாளர் என்றப் பதவிகள் தான் பெண்களுக்கு கொடுப்பார்கள். சில சமயம், பெண்கள் பொறுப்பி;ல் இருக்க வேண்டும் என்று ஆடிட்டர் பதவிகள் கொடுத்திருக்கிறார்கள். இன்றும் இ;டதுசாரி கட்சிகளில் பெண்கள் தலைமைப் பதவிகளுக்கு வந்துள்ளனர் என்றால, அவர்கள் ஏற்கனவே உள்ளத் தலைவர்களின் சொந்தங்களாக இருப்பார்கள். தரைதளத்தில் இருந்து பெண் தொழிலாளர்களை ஊக்குவிப்பது தொழிற்சங்கங்களில் காணப்படுவதில்லை.

பெண் தொழிலாளர்கள் பிரச்சனைகளை பொறுத்தவலை தொழிற்சங்கத்தில் உழைக்கும் பெண்கள் குழுவை ஏற்படுத்தி விடுகின்றனர். பெண் தொழிலாளர்கள் பிரச்சனைகள் அனைத்து இக்குழுவின் பொறுப்பாகும். பெண்கள் பிரச்சனைகளை களைவது பெண்களின் பொறுப்பாக மட்டுமே தொழிற்சங்கங்கள் அணுகுகின்றன. ஒவ்வொரு வருடமும் இக்குழு மாநாடுகள் நடத்தும் மற்றும் உழைக்கும் பெண்கள் தினத்தை கொண்டாடும் அப்போது பெண்களை புகழ்ந்து தள்ளுவார்கள் மற்ற நேரங்களில் பெண் தொழிலாளர்கள் வெறும் உறுப்பினர்கள் மட்டுமே. ஒரு காலத்தில் பெண் தொழிலாளர்களுக்காக நாங்கள் குழந்தை காப்பகங்கள் கோரி வெற்றியும் கண்டோம் ஆனால் தற்போது எங்கேயும் காப்பகங்கள் இல்லை. அதற்கு பதிலாக குழந்தை நல விடுமுறை தரப்படுகிறது. ஆனால் ஒரு பக்கம் நிர்வாகம் வேலை பளுவை ஏற்றி வரும் நிலையில் பெண்களால் விடுமுறை எடுக்கமுடிவதில்லை.

தொழிற்சங்கத்தில் நேர்ந்துள்ள பின்னடைவு

1983, 84 களில் இந்திரா காந்தியின் தலைமையில் பிஎஸ்என்எல் துறையில் வேலை வாய்ப்புகள் தடை செய்யப்பட்டது. பின்னர் ராஜீவ் காந்தியும் தொலைதொடர்பு குழு சாம் பிட்ரோடாவும் இந்தியாவில் உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளை புகுத்திய போது தொலைதொடர்பு துறையில் இயந்திரமயத்தை நவீனமயத்தையும் புகுத்தினர். ஒரு பக்கம் இதனால் தொழிலாளர்கள் குறைக்கப்பட இன்னொரு பக்கம் புதிய வேலை வாய்ப்புகள் தடைசெய்யப்பட இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் மேல் வேலை பளு அதிகரித்தது. தொழிலாளர்களின் சுகாதாரம் அவர்களுக்கான விடுமுறைகளை அளித்தல் ஆகியவற்றைப் பற்றி நிர்வாகம் கவலைப்படவில்லை. இவ்வாறு வேலை நிலைமைகளும் வேலை கலாச்சாராங்களும் மாற்றப்பட்ட வேலையில் தொழிற்சங்கத்தில் வேலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன.

அஞ்சல் மற்றும் தொலை தொடர்புத் துறைகளை இரண்டாக பிரித்த போது தொலைதொடர்பு குறிப்பாக டெலிகிராம் சேவை திட்டமிட்டு செயல் இழக்கப்பட்டது. ஒரு பக்கம் சேவைக்கான செலவுகள் அதிகரிக்க இன்னொரு பக்கம் டெலிகிராம் கட்டணம் மாற்றப்படவில்லை. இதனால் டெலிகிராம் சேவையை நடத்துவது சாத்தியமாகமல் போய்விட்டது. டெலிகிராம் சேவையை முழுவதுமாக மூடியபோது அங்குள்ள தொழிலாளர்களை மற்ற வேலைகளுக்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தங்களுடைய தொழிலாளர்களுக்கு நல்ல வேலைகளில் மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கினர். முக்கியப் பிரச்சனையான டெலிகிராம் சேவையை மூடுவது குறித்து போராடாமல் தங்களது தொழிலாளர்களுக்கான வேலைகளில் பேரம் பேசும் முயற்சியில் தலைவர்கள் இறங்கினர்.

பலகாலங்களாக குறிப்பாக கடந்த 5-6 வருடங்களாக தொழிற்சங்கப் போராட்டக் கலாச்சாரம் குறைந்து விட்டது. இதை நிர்வாகமும் திட்டமிட்டு ஊக்குவிக்கிறது. முன்னர் நாங்கள் போராட்டங்களில் ஈடுபடும் போது ஒரு நாள் ஊதியத்தை இழக்க நேரிடும். சிலசமயம் எஃப்ஆர்17ஏ விதிகளின் கீழ் எங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இவ்விதியின் கீழ் நடவடிக்கை எடுப்பவர்கள் ஊதிய உயர்வு, சீனியாரிட்டி, பென்ஷன் எனப் பலவகைகளில் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது எங்கள் மீது எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. தற்போது தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்தால், தொழிலாளர்கள் உடனே மெடிக்கல் விடுமுறை எடுத்து விடுகின்றனர். நாங்கள் அனைவரும் ஒரே மெடிக்கல் அலுவலரிடம் இருந்து சான்றிதழ் கொடுத்தாலும் நிர்வாகம் எதையும் கேட்காது. சங்கத்தில் மிகுந்த ஈடுபாடுடன் வேலை செய்யும் சிலர் அலுவலக வாயில் அருகே நின்று கொள்வோம். யாராவது வேலைக்கு வந்தால் அவர்களை வேலை நிறுத்தம் செய்யக் கோருவோம். நிர்வாகம் வாயிலுக்கு சிறிது தூரத்தில் ஒரு நிர்வாகியை நிற்க வைத்து விடுவார்கள். வரும் தொழிலாளர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று விடுவார்கள். அவர்களுக்கு மருத்தவ விடுமுறையை எடுக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஆனால் தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் 100சதம் வெற்றி என்று அறிவித்துவிடுவார்கள். இவ்வாறான வேலை நிறுத்தத்தை எவ்வாறு முழுமையான வெற்றியாகக் கருத முடியும்? தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை உணர வைப்பதை விட்டு விட்டு நாம் வேலை நிறுத்தம் வெற்றியடைந்தாகக் கூறிக்கொள்கிறோம்.

பிஎஸ்என்எல் வேலை முறையில் ஒப்பந்தத் தொழிலாளர் முறை அதிகரித்து வருகிறது. தூய்மைப் பணிகள், கட்டுமானப் பராமரிப்புத் தொழிலாளர்கள்(லைன்மென்) ஆகியோர் ஒப்பந்த முறையில் வேலை செய்து வருகின்றனர். சிலர் கடந்த 10-15 வருடங்களாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். அவர்களுக்கு முன்னர் மாதம் ரூ2800 ஊதியம் கிடைத்து வந்தது. தற்போது ரூ4000 ஊதியம வாங்குகின்றனர். கிளெரிக்கல் வேலைகளில் தொழிலாளர்கள் ஓய்வு பெற்று செல்லும் போது அவர்களின் வேலைகளில் புதியத் தொழிலாளர்கள் கொண்டுவரப்படுவதில்லை. ஏற்கனவே உள்ளத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கி விடுகின்றனர் அல்லது ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை வேலையில் அமர்த்துகின்றனர். ஒரு நிரந்தரத் தொழிலாளர் புதிதாக வேலைக்கு சேர்ந்;தால் அவருக்கு ரூ30000 ஊதியம் என்றால் ஒப்பந்த முறையில் ரூ8000 தான் கொடுக்கின்றனர். நாட்டில் நிறைய அளவில் படித்த இளைஞர்கள் அதிகரிக்கும் போது, அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் தொழிற்சங்கம் ஈடுபட வேண்டும். மாறாக தற்போதைய உறுப்பினர்களை பாதுகாக்கும் செயல்களில் தொழிற்சங்கம் ஈடுபட்டு வருகிறது. தற்போது நிர்வாகம் அரசுத் துறையைச் சார்ந்ததால் பொதுத்துறையை சரியான வழிநடத்தும் பாதைகளில் அவர்கள் ஈடுபடப்போவதில்லை. பொதுத்துறையை தனியாருக்கு மாற்றுவதை எதிர்த்தால் மட்டும் போதாது. அவற்றை சரியான வழியில் கொண்டு செல்லும் கோரிக்கைகளையும் தொழிற்சங்கம் வழிநடத்த வேண்டும்.

தொழிற்சங்கத்தை மீட்டெடுக்க..

தொழிற்சங்கத்தை மீண்டும் உயிர்த்தெழச் செய்யவேண்டும் என்றால், தொழிற்சங்கத் தலைவர்கள் ஒவ்வொருத் தொழிலாளருடனும் கலந்து உறவாடி அவர்களுடைய கருத்துகளை கண்டறிய வேண்டும். குறிப்பாகக் கிளைத் தலைவர்கள் ஒவ்வொருத் தொழிலாளரையும் அறிந்திருக்க வேண்டும். திமுக அதிமுக கட்சிகளில் ஒரு போராட்டம் என்றால் குடும்பங்களே அதற்கு ஆதரவு தரும் வகையி;ல் அனைத்துப் போராட்டங்களிலும் தொழிலாளர் குடும்பங்களை ஈடுபடுத்தவேண்டும். தொழிலாளர் குடும்ப உறுப்பினர்களுக்கு வர்க்கப் போராட்டங்களின் முக்கியத்துவத்தை விளக்க வேண்டும். இன்றைய நடைமுறையில் தொழிலாளர்களும் தொழிலாளர் குடும்பங்களும் கலந்து தொழிற்சங்கங்கள் பற்றி கற்றுக் கொள்வதற்கான கட்டுமான அமைப்புகள் இல்லை. தொழிற்சங்கப் போராட்ட கலாச்சாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்.

This entry was posted in Art & Life, Women Workers, தமிழ் and tagged , , . Bookmark the permalink.