ரஷ்ய புரட்சிக்கு வித்திட்ட சர்வ தேச உழைக்கும் பெண்கள் தினம் – தொடரும் உழைக்கும் பெண்களின் போராட்டம்

வரலாற்று ஆய்வாளர் ஜின்டி நெல்சனின் கூற்றுப்படி, சர்வதேச உழைக்கும் பெண்களின் தினம் ‘உலகளாவிய, சோசலிச, பெண்ணிய’ கொள்கைகளை அடிப்படையாக கொண்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1909 பிப்ரவரி 23 அன்று தேசிய பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. 1908ல் அங்கு நடந்த ஆயுத்த ஆடை தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை கொண்டாடவே இந்த தினம் அனுசரிக்கப்பட்டதாக ஐநா சபை உட்பட பல அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் அதற்கான ஆதாரம் இதுவரை எங்கும் பதிவு செய்யப்படவில்லை. பெண்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடி வந்த பெண்ணியவாதிகளுக்கும் பொருளாதார உரிமைகளுக்கு போராடிய சோசலிசவாதிகளுக்கும் இடையே ஒரு ஒற்றுமையின் ஆரம்பமாக பெண்கள் தினம் விளங்கியது.

ஐரோப்பாவில் கிளாரா ஜெட்கினின் தலைமையில் பெண் சோசலிசப் போராளிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அவர்கள் 1911 மார்ச் 18 அன்று முதல் சர்வதேச பெண்கள் தினத்தை நடத்தனார்கள். இவர்களின் முயற்சிகளினால் ஐரோப்பாவில் சோசலிச இயக்கங்கள் பெண்கள் வாக்களிக்கும் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் முதல் உலகப் போர் துவங்கியதும் இச்சமூக சீர்திருத்தங்கள் அனைத்தும் பின் தள்ளப்பட்டன.

சர்வ தேசப் பெண்கள் தினத்திற்கும் ரஷ்ய புரட்சிக்கும் இடையே தொடர்பு உண்டு. டெம்மா கப்லான் இதை அழகாக பதிவு செய்துள்ளார். பிப்ரவரி 25(1917) அன்று சர்வ தேச பெண்கள் தினம் முடிந்து இரண்டு நாள் கழித்து, பெண்கள் புரட்சியை நசுக்குமாறு பெட்ரோகார்ட் மிலிடரியைச் சார்ந்த ஜெனரல் கபாலாவிற்கு ரஷ்யாவின் அன்றைய ட்சார் ஆணையிடுகிறார். இது குறித்து கபாலாவ் இவ்வாறு பதிவு செய்கிறார்: பெண்கள் எங்களுக்கு பிரட் தாருங்கள் என்று கோரும் போது நாங்கள் அவர்களுக்கு பிரட் கொடுத்து அவர்களை அடக்கி விடலாம். ஆனால் அவர்கள் ஏதேச்சதிகாரத்தை வீழ்த்துவோம் என்று முழக்கமிடும் போது நாங்கள் அவர்களுக்கு பிரட் கொடுத்து அடக்க முடியாது. ரஷ்யாவில் பிப்ரவரி புரட்சி இவ்வாறே ஆரம்பித்தது.

கிளாரா ஜெட்கின் மற்றும் லெனினின் முயற்சியால் 1922ல் சர்வ தேச பெண்கள் தினம் கம்யூனிஸ்ட் ரஷ்யாவில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. சைனா மற்றும் ஸ்பெயின் நாட்டு கம்யூனிஸ்ட் அரசுகளும் சர்வ தேச தினததை கொண்டாடின. 1970களில் வரை இது கம்யூனிஸட் நாடுகளால் மட்டும் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஐநா சபையின் முயற்சியால் உலகமெங்கும் கொண்டாடப்படுகின்றன.

சர்வ தேச பெண்கள் தினம் ஆரம்பித்து 100 ஆண்டுகள் ஆகியும் இந்தியாவில் பெண்கள் தங்கள் பொருளாதார உரிமைக்கும் அரசியல் உரிமைக்கும் இன்றும் போராட வேண்டியுள்ளது. 2015 செப்டம்பரில் முன்னார் தேயிலை தோட்டங்களில் வேலை செய்த பெரும்பாலும் பெண் தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராடினர். அவர்கள் ஊதிய உயர்வுக்கும் போனஸ் ஆகியவற்றிற்கும் மட்டும் போராடவில்லை தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளில் இருந்த ஆண் தலைவர்களுக்கும் எதிராகவும் போராடினர். போராடிய பெண் தொழிலாளர்களுக்கு 20சத போனஸ் கிடைத்தது. ஆனால் அவர்கள் கோரிய 100சத ஊதிய உயர்வு(தினக்கூலி ரூ500) கிடைக்கவில்லை. ஒரு மாதம் கழித்து மாநில அரசு உள்ளுர் தேர்தலை கணக்கில் கொண்டு ஊதியத்தை ரூ301ஆக உயர்த்தியது. அதன் பின்னர் பெண்கள் இயக்கம் பொம்பிளை ஒருமை என்ற பெயரில் அரசியல் அமைப்பாக மாறுவதற்கு முயற்சித்தது. ஆனால் கோஷ்டி மோதல்கள், தேர்தல்களில் தோல்வி ஆகியவற்றால் அரசியல் மாற்றுக்கான தேடல் முடிந்தது.

கேரளா அரசியலில் உள்ள பாலியல் சமத்துவமின்மையை இது கோடிட்டு காட்டுகிறது. இது குறித்து லீனா ரகுநாத் விரிவாக எழுதியுள்ளார். கேரளாவில் 1000 ஆண்களுக்கு 1084 பெண்கள் விகிதமாக இருந்தாலும், 140 சட்டசபை உறுப்பினர்களில் பெண்கள் பத்திற்கு மேல் தாண்டியதில்லை. அதிக கல்வியறிவு, நீண்ட ஆயுள், பெண்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஆகியவை கேரளாவில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் பெண்கள் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது. கேரளாவில் இருந்து 20 லோக் சபை பிரதிநிதிகளும், ராஜ்ய சபை பிரதிநிதிகளும் பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஒன்பது பெண்களே இரண்டு சபைகளுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவற்றை பார்க்கும் போது கேரளாவின் பாலியல் சமத்துவம் புள்ளியியல்களில் மட்டுமே காணப்படுகிறது என்று தோணுகிறது.

பெண்கள் தங்களுடைய பொருளாதார உரிமைகளுக்காக போராடும் போது, தொழிலாளர் வர்க்க உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. 2016 ஏப்ரல் மாதத்தில் வருங்கால வைப்பு நிதிகளை தொழிலாளர்கள் எடுப்பதற்கான விதிமுறைகளை தொழிலாளர்களுக்கு விரோதமாக மத்திய அரசு மாற்றிய போது பெங்களுர் ஆயுத்த ஆடைத் தொழிலாளர்கள் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினார்கள். சில ஊடகங்கள் 20000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியதாக கூறின. ஆனால் இதற்கும் மேலே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக மதிப்பிடப்படுகிறது. பெங்களுரில் 5-6 லட்சம் தொழிலாளர்கள் கார்மெண்ட் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். இதில் 90 சதம் பெண்கள். அவர்களுக்கு அவர்கள் ஊதியம் மட்டுமல்லாமல் வைப்பு நிதி முக்கிய ஆதாரமாகும். அவர்கள் வீதிக்கு இறங்கி போராடிய போது எழுந்த மக்கள் திரளை அரசால் புறக்கணிக்க முடியவில்லை. அரசு தனது கொள்கையை வாபஸ் வாங்கியது.

ஆனால் அவர்களுடைய வேலை என்பது சுரண்டல் மிகுந்ததாகவே உள்ளது. முறையான பாதுகாப்பு, சுகாதாரம், வேலை நிரந்தம் என்பது கிடையாது. பாலியல் கொடுமைகள் இங்கு ஏராளம். ஆனால் அமெரிக்க பத்திரிக்கை நியூயார்க் டைம்ஸ் கூறியபடி கிராமப்புறத்தில் வீழ்ந்து வரும் பொருளாதார நிலைமையில் இருந்து வரும் பெண்களுக்கு இம்மாதிரியான வேலைகளே காத்திருக்கின்றன. இக்கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது இன்று சமூகம் பெண்களுக்கு தரும் ஒரே பாதுகாப்பை அவர்கள் தக்க வைக்க அவர்கள் பாடுபட்டனர் என்று நாம் கணிக்க வேண்டியுள்ளது.

This entry was posted in Analysis & Opinions, Women Workers, தமிழ் and tagged . Bookmark the permalink.