வாழ்வையும் தேசத்தையும் காக்க, வேறு என்ன வழி!!

எஸ். கண்ணன்

உப்புக்கு வரி விதித்த ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டம், விடுதலை தாகத்தையும், அதற்கான போராட்ட வேகத்தையும் தீவிரப் படுத்தியது. காலணியாதிக்கத்தின் கொள்ளையாக, உப்புக்கு விதித்த வரியை, அன்றைய தேசியத் தலைவர்கள் கருதினர். ஆகவே தான் இந்திய விடுதலைப் போரில் உப்புச் சத்தியாகிரகம் மிகமுக்கியமானது. இன்று உப்புக்கு மட்டும் விலை ஏறவில்லை. எல்லாவற்றிற்கும் விலை ரெக்கை கட்டி பறந்து உயரே சென்று கொண்டு இருக்கிறது. கட்டுப் படுத்தும் மந்திர சக்தி எங்கள் வசம் இல்லை என, பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள், எரியும் தீயில் எண்ணை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல அனைத்து விதப் பொருள்களின் விலையேற்றத்திற்கும் உதவிடும் வகையில் சிறு வணிகத்திலும் அந்நிய நேரடி முதலீட்டிற்கு பட்டுக் கம்பளம் விரித்துள்ளனர். இந்தியாவின் இன்றைய ஆட்சியாளர்கள் தங்களின் கொள்கை மூலம் புதிய காலணியாதிக்கத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். எண்ணெய் விலையைத் தீர்மாணிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கி இருப்பது, மக்களுக்கு பல வகைத் தொல்லைகளைக் கொண்டு வந்து சேர்ப்பதாகவே அமையும். சுதந்திரம் இரவில்  வாங்கியதால் தானோ என்னவோ, இரவுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏற்றப் படுகிறது.

விற்பனைச் சந்தையில் ஒரு கிலோ அளவிற்கு ஒரு பொருளை வாங்கும் போது உள்ள விலை, மொத்தமாக கொள்முதல் செய்யும் போது குறைகிறது. இது வர்த்தகர்கள் பின்பற்றும் நியாயம். ஆனால் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, மொத்தமாக டீசல் வாங்கினால், 11 ரூபாய் அளவிற்கு விலையேற்றம் செய்யப் படும் என்று அறிவித்துள்ளது. ஒரு லிட்டர் மட்டும் வாங்கினால் 50 பைசா விலையேற்றம் என அறிவித்துள்ளது. இதில் சந்தை அணுகு முறை மற்றும் சேவை அணுகுமுறை ஆகிய இரண்டுமே பின்பற்றப் படவில்லை. இதனால் பயணிகளுக்கான கட்டணம் பல மடங்கு உயருமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. எனவே விலை உயர்வுக்கு எதிரான குரல்கள் ஒன்று சேர்வதும், போராடுவதும் தவிர்க்க இயலாது.

தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மையினர், விடுதலைப் போராட்ட காலத்தில் தங்கள் வேலை சார்ந்த பிரச்சனைகளுடன், தேச விடுதலை குறித்தும் கவலை கொண்டிருந்தனர். அதன் விளைவு தான், காந்தி விடுத்த போராட்ட அறைகூவல்களான உப்புச் சத்தியாகிரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் மக்கள் சக்தி ஆர்ந்தெழுந்த வரலாறு ஆகும். பாலகங்காதர திலகர், லாலா லஜபதி ராய், பிபின் சந்திர பால் துவங்கி, வ.உ.சிதம்பரனார் வரையிலான எண்ணற்ற தலைவர்கள் கண்ட சுதேசி இயக்கம், வெகுமக்களை தேசப் பற்று கொள்ளவும், தொழில் துறையில் இந்தியர்கள் பங்கு கொண்டு வெற்றி பெற வேண்டும், என்ற தேசீய எண்ணத்தை வளர்க்கவும் உதவியது.

இந்த வரலாறு இன்று வரை விளக்காக இருந்து இந்திய மக்களைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. நேரு மற்றும் அம்பேத்கர், வ. உ. சிதம்பரனார் உள்ளிட்ட தேச விடுதலைக்குப் போராடிய தலைவர்கள், தொழிற்சங்க பொறுப்பு வகித்துள்ளனர். அவர்கள் நடத்திய வேலைநிறுத்த போராட்டங்கள், தொழில் பாதுகாப்பு மற்றும் தேச விடுதலை என்பதாக இருந்தது. தூத்துக்குடி கோரல் ஆலை, மும்பை பஞ்சாலைகள் ஆகிய இடங்களில் இருந்த தொழிலாளர்களை, ”தேச விடுதலையுடன் இணைந்தது, இந்தியத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், அடிமை இந்தியாவில் அல்ல” என்பதை வேலை நிறுத்தங்கள் மூலம் உணரச் செய்தனர்.  சுதேசி இயக்கத்தின் போது திலகர் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டார், அதை எதிர்த்த போராட்டங்களும், வ.உ.சி. இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டதற்கு எதிராகவும் நடந்த போராட்டங்களும் தொழிலாளர்களின் பங்கேற்பைப் பிரபலப் படுத்தின.

வ.உ.சி க்கு விதிக்கப் பட்ட இரட்டை ஆயுள் தண்டனைக்கு எதிராகப் போராடிய தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களைக் காவல் துறை கொண்டு தாக்கினர். குறிப்பாக வெளிமாவட்டங்களில் இருந்து காவலர்களை வரவழைத்துத் தாக்கினர். இச்செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு. சவரம் செய்யவும், சலவை செய்யவும், நகரைத் தூய்மை செய்யவும் தொழிலாளர்கள் மறுத்தனர். சேவைத் தொழில்கள் நிறுத்தப் பட்டது, விடுதலைப் போரில் பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்க உதவியது, என மகாகவி பாரதி ஆசிரியராக இருந்த இந்தியா பத்திரிக்கை பதிவு செய்துள்ளது.

சைமன் கமிஷன் மூலம் சில சீர்திருத்தங்களை செய்து, தங்கள் மீதான அதிருப்தியைத் திசை திருப்ப அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முயற்சித்தனர். எங்களுக்குத் தேவை பூரண சுதந்தரம், சீர்திருத்தங்கள் அல்ல என்ற முழக்கத்தை சில காங்கிரஸ்  தலைவர்களும், இடதுசாரிகளும் முன்வைத்தனர். மும்பை நகரில் பிரிட்டிஷ் நிறுவனங்களாக இருந்த பஞ்சாலைகளில் தொழிலாளர்களை ஒன்றினைத்து, அதன் மூலம் சைமன் குழுவிற்கு எதிரான போராட்டமான, விடுதலைப் போருடன் இணைத்தனர். அதைத் தொடர்ந்து 1929ல் நடந்த லாகூர் காங்கிரஸில் பூரண சுதந்திரம், என்ற முழக்கத்தை முன் வைத்தது மட்டுமல்லாமல், அதை அடைவதற்காக சத்தியா கிரகப் போராட்டங்களையும் அறிவித்தது. இந்த வரலாறு இன்றைய காங்கிரஸ் தலைமைக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. அதனால் தான் தேசத்தை மீண்டும் அடிமையாக்கும் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.

1930, ஃபிப் 22 ல் சோலாப்பூர் நகருக்கு காங்கிரஸ் பணியாக சென்ற ராஜகோபாலாச்சாரி, அவர் கலந்து கொண்ட கூட்டத்தில், ஏராளமான ரயில்வேத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து பங்கேற்று இருப்பதை அறிந்தார். சோலாப்பூர் நகர மக்கள் அவர்களின் வேலை நிறுத்தம் வெற்றி பெறுவதற்கு உதவ வேண்டும் என்ற வேண்டுகோளை அக்கூட்டத்தில் முன் வைத்தார். அதே ஆண்டில் காந்தி கைது செய்யப் பட்ட போது, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து பல்லாயிரக் கணக்கில் பேரணிகள் நடந்தது. காந்தியின் விடுதலையும் துரிதமானது. சிறையில் இருக்க அவர் அஞ்சவில்லை என்றாலும், தொழிலாளர்களின் போராட்டம், அநீதியான கைதை அம்பலப் படுத்தியது என்று தான் அன்றைய தலைவர்கள் புரிந்து கொண்டனர்.

இப்போது விலையுயர்வு ஒரு பெரும் தாக்குதல் என்றால், மற்றொரு புறம், உங்கள் கையில் உங்கள் பணம் என்ற முழக்கம் ரேசன் கடைகளை எதிர் பார்த்து குடும்பம் நடத்தும், பெண்கள் மீது ஆகப் பெரும் தாக்குதலாக மாற இருக்கிறது. காங்கிரஸ் தனது தேர்தல் வெற்றிக்கு இந்த பணப்பட்டு வாடா முழக்கம் உதவி செய்யும் என நம்புகிறது. அதே நேரத்தில் இத்திட்டம் மக்களுக்கு அளிக்கும் தேன் தடவிய கொடிய விஷமருந்து என்பதை மக்களை உணரச் செய்ய வேண்டிய பொறுப்புடன் எதிர்க் கட்சிகளும், தொழிலாளர் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக இந்திய தொழிலாளர்களில் 92 சதமானோர் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் என்பதனால், ரேசன் கடைகள் மூலமான உணவுப் பொருள் விநியோகம் தொடர வேண்டிய தேவை இருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது, இந்திய விளை நிலங்களில் அவுரியும், இண்டிகோவும், பருத்தியும் அதிகமாக விளைவிக்கப் பட்டதால் இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு, பல லட்சம் மக்கள் மாண்டனர். குறிப்பாக மான்செஸ்டருக்கு ஏற்றுமதி செய்யப் பட்ட பருத்தி பேல்களின் எண்ணிக்கை, 1859ல் 5 லட்சத்தில் இருந்து, 1864ல் 14 லட்சமாக உயர்ந்தது. உணவு உற்பத்தி  குறைந்து, 85 சதம் பணப் பயிர் உற்பத்தி அதிகரித்தது. இதன் விளைவு மிகக் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. இது கடந்த கால வரலாறு. இன்று விவசாயம் இயற்கையாலும், இதர பிரச்சனைகளாலும் பாழ்பட்டு நிற்பதால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர், என்பதுடன் இணைந்து உங்கள் கையில் உங்கள் பணம் என்றத் திட்டத்தைப் பார்க்க வேண்டும்.

பென்சன் உள்ளிட்ட சேமிப்புகளிலும், இதர வாழ்வாதாரங்களிலும் அந்நிய முதலீட்டை அனுமதிக்கிற கொள்கையை வரவேற்க முடியாது. இத்தகைய அநீதிகளை தடுப்பதற்கு எதிர்ப்பியக்கங்கள் தவிர்க்க முடியாது. எதிர்க்கட்சி இல்லாத நாடாளுமன்றம் இருந்தால் நல்லது, என மன்மோகன் சிங் எதிர்பார்க்கலாம். தேசபக்தர்கள் எதிர்பார்க்க முடியாது. எனவே காங்கிரஸ் அரசையும் அதன் கொள்கைகளையும் வெகுமக்கள் ஒன்றாகத் திரண்டு எதிர்க்கும் வடிவமாகவே பொது வேலை நிறுத்தம் அமைகிறது. இன்று உலக நாடுகளில் குறிப்பிட்ட பிரச்சனைகளில் பொது வாக்கெடுப்பு நடத்தி அதன் பின் முடிவெடுக்கும் ஜனநாயகம் வளர்ந்துள்ளதை கவனிக்க வேண்டும். இன்றைய இந்தியா மக்கள் தொகையில் மட்டுமல்ல, இளைஞர்களை அதிகம் கொண்ட நாடும் கூட. இங்கு தேசப் பற்று கொண்ட சூழலை உருவாக்குவதில் அரசுக்கு மிகுந்த பொறுப்பு இருக்கிறது.

This entry was posted in Analysis & Opinions, Workers Struggles, Working Class Vision, தமிழ். Bookmark the permalink.

One Response to வாழ்வையும் தேசத்தையும் காக்க, வேறு என்ன வழி!!

  1. karuppasamy says:

    hi sir I read your topic.it was very interesting and very nice. and I request you sir I want the topic INDUSTRIAL REVOLUTION AND ITS IMPACT IN INDIA.Tamil or English it does not matter. pls send my mail id sundaram.karuppu@gmail.com. thank you

Comments are closed.