பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்க கோரி மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு

பத்திரிக்கை செய்தி

26 மே, 2015 அன்று நடந்த தேசிய மாநாட்டில், மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து செப்டம்பர் 2 அன்று தேசிய பொது வேலை நிறுத்தம் செய்ய தொழிலாளர் பிரதிநிதிகள்  அழைப்பு விடுத்திருந்தனர். இதனை அடுத்து, 26, 27 ஆகஸ்டு 2015 அன்று மத்திய அரசின் அமைச்சர் குழு மத்திய தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லியின் தலைமையின் கீழ், தொழிற்சங்கங்களின் 12 கோரிக்கைகளின் மேல் விவாதம் நடைபெற்றது. இதன் பிண்ணனியில், மத்திய அரசு பொதுநிறுத்தத்தை வாபஸ் பெற கோரி கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசுடன் நடந்த விவாதங்களில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், பொது வேலை நிறுத்தத்தை தொடர்வது என மத்திய தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன. கடந்த 2010 முதல், வெவ்வேறு அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசுடன் நடந்த விவாதத்தில் எந்த ஒரு கோரிக்கைகளிலும் மத்திய அரசு சரியான தீர்வை வைக்கவில்லை. ஆனால், இது குறித்து கொடுக்கப்பட்ட பத்திரிக்கை செய்திகளில், அரசு கோரிக்கைகளில் முன்னேற்றம் ஏறபட்டுள்ளதாக கோரியுள்ளது.

1. ‘விதிமுறைகளின் அடிப்படையில் குறைந்த பட்ச ஊதியத்தை முடிவு செய்து அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியத்தை உறுதி செய்வதற்கான சட்டங்கள் இயற்றப்படும்” என முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது உண்மையல்ல. 15வது தேசிய தொழிலாளர் மாநாட்டில் முடிவு செய்த விதிமுறையை ஏற்க தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. உச்ச நீதி மன்றம், இந்த விதிமுறையி;ன் மேல் 25சதம் ஊதியத்தை உயர்த்த வேண்டும் எனக் கூறியுள்ளது. 2015ல் நடந்த 45வது தேசிய தொழிலாளர் மாநாட்டிலும் இதுவே வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் பார்த்தால், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூ20000 ஆகும். தொழிற்சங்கங்கள் மாத குறைந்த பட்ச ஊதியமாக ரூ15000ஆக கோரியுள்ளன. ஆனால், மத்திய அரசின் குழு, தேசிய குறைந்த பட்ச ஊதியமாக ரூ7100 ஆக நிர்ணயம் செய்வதாக பரிந்துரைத்துள்ளது. இதுவும், அனைவருடனும் பேச்சுவார்த்தைக்கு பின்னரே சட்டமாக்கப்படும்.

2. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படும் என மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. இன்றைக்கு நடைமுறையில் உள்ள சட்டங்களின் படி குறைந்த பட்ச ஊதியம் அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். தொழிற்சங்கங்கள், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு உள்ள அதே ஊதியம் மற்றும் பயன்கள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் எனக் கோரி வருகிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு இது பொருந்தும். இதை மத்திய அரசு ஏற்று கொள்ளவில்லை. அரசின் உத்தரவாதம், இன்றைய சட்டங்களுக்கு முறண்பட்டதாகும்.

3. நாட்டின் முக்கால்பங்கு (70சதத்திற்கும் மேற்பட்ட) தொழிலாளர்களை தொழிலாளர் சட்டப் பாதுகாப்பிலிருந்து நீக்குவதற்கு அரசின் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் வழிவகை செய்துள்ளன. மத்திய அரசு மட்டுமன்றி மாநில அரசுகளும் தொழிலாளர் சட்டங்களை மாற்றி தொழிலாளர்கள் உரிமைகளை பறித்து வருகின்றன. மத்திய பிரதமர் அலுவலகம் மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்களை மாற்றி குடியரசுத்தலைவர் அனுமதி பெறுவதற்கு அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது. தொழிற்சங்கங்கள் சட்டங்களை மாற்றுவதற்கு முத்தரப்பு வாரியங்கள் மூலம் தொழிற்சங்கங்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்பதை அரசு நிராகரிக்கின்றது. முத்தரப்பு வாரியங்களை கூட்டுவோம் எனக் கூறும் அரசு, வாரியம் முடிவெடுக்கும் வரை தொழிலாளர் சட்டங்களை மாற்றக் கூடாது என்பதை ஏற்று கொள்ளவில்லை.

4. அங்கன்வாடி, மதிய உணவு தயாரித்தல், ஆஷா, பகுதி ஆசிரியர்கள் போன்ற அரசு திட்டங்களில் வேலை செய்பவர்களை தொழிலாளர்கள் என அங்கீகரிக்க வேண்டும் என்பதை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், சமூகப்பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற 45வது தேசிய மாநாட்டின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்து உள்ளது. இத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகளையும் வெகுவாக அரசு குறைத்துள்ளது.

5. நிறுவனங்கள் பெறும் லாபத்தில் எந்த ஒரு உச்சவரம்பை வைக்காத அரசு தொழிலாளர்கள் பெறும் போனஸில் மட்டும் ஏன் உச்சவரம்பை நிர்ணயிக்க வேண்டும்?. போனஸ் நிர்ணயிக்கும் விதிகள் மற்றும் போனஸில் உள்ள உச்சவரம்புகளை நீக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோருகின்றன. இவற்றை மாற்றுவதற்கு அரசு முன்வரவில்லை.

6. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைந்து விட்டதாக மத்திய அரசு கூறுகிறது.ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை. அத்தியாவசிய பொருட்களின் மீதான பங்கு சந்தையின் சூதாட்ட வர்த்தக முறைகளை தடை செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அரசு நிராகரித்துள்ளது.

7. வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு சரியான திட்டங்களை அரசு தெளிவு படுத்தவில்லை.

8. பொது நிறுவனங்களை தனியார்மயப்படுத்துதல், மற்றும் அன்னிய முதலீடுகளை முக்கிய துறைகளில் அனுமதித்தல் போன்றவற்றை செய்யவில்லை என அரசு கூறினாலும் நடைமுறையில் இதை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசு இவ்வாறு தொழிலாளர் மற்றும் மக்கள் விரோதப் போக்குகளை கடைபிடிக்கும் நிலையில் தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்தை மேற்கொள்வதை தவிர வேறுவழியில்லை. அனைத்து தொழிலாளர்களும் இந்த பொது வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவும், வேலை நிறுத்தத்தை பி.எம்.எஸ் எதிர்க்க வேண்டாம் என தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்கின்றன.

INTUC AITUC HMS CITU AIUTUC

TUCC SEWA AICCTU UTUC LPF

This entry was posted in labour reforms, Press Releases, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , . Bookmark the permalink.