பிரான்சில் நடக்கும் சமூக எழுச்சி குறித்து பிரெஞ்சு தோழர்களின் பதிவு

இந்த கட்டுரை ஆங்கிலத்தில் இருந்து சுருக்கி மொழி பெயர்ப்பு செய்யபட்டுள்ளது. முழுமையான கட்டுரை ஆங்கிலத்தில் உள்ளது.

1. தற்போது நடக்கும் வேலைநிறுத்தங்களின் பிண்ணனியான ஹோலன்டே அரசின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் குறித்து..

‘நான் எதிர்கொண்டுள்ள போரில் என்னுடைய எதிரிக்கு பெயர் கிடையாது, முகம் கிடையாது, ஒரு கட்சியை சார்ந்தவர் அல்ல. என்னுடைய உண்மையான எதிரி உலக நிதி அமைப்பாகும்’ …… 2012ல் பிரான்ஸ் அதிபர் வலதுசாரி நிக்கோலஸ் சர்கோஸியை எதிர்த்து நின்ற சோசலிஸ கட்சியின் வேட்பாளர் பிரான்சுவா ஹோலன்டே கூறிய வார்த்தைகள் இவை. கடும் நெருக்கடியில் உள்ள பொருளாதாரத்தை மீட்க வங்கி மற்றும் வர்த்தக நிதி அமைப்புகளை சீர்திருத்தம் செய்வதாக கூறி தேர்தலை வென்றார் ஹோலன்டே. ஆனால் அதிபரான சில மாதங்களிலேயே வாக்குறுதிகளை தூக்கி வீசி விட்டார். அவர் கூறிய எதிரிகளே அவருக்கு நண்பர்களாகினர். நாட்டில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மையை காரணம் காட்டி தொழில் நிறுவனங்களுக்கு 40பில்லியன் யூரோ வரிவிலக்கு அளித்தார் ஆனாலும் வேலை வாய்ப்பின்மை கூடி தற்போது 10சத மக்கள் வேலையில்லாமல் உள்ளனர். 2012ல் 51.6சத மக்கள் அவருக்கு வாக்களித்தனர். தற்போது அவருக்கு 14சத ஆதரவே இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அவருடைய பிரதம மந்திரி மேனுவல் வால்ஸ் அரசை நவீனமாக்குகிறோம் என்ற பெயரில் இளைய தலைமுறையைச் சார்ந்த பலரை முக்கிய மந்திரி பதவியில் அமர்த்தியுள்ளார். இதில் குறிப்பாக பொருளாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் வங்கி நிறுவனர் இமானுவல் மேக்ரன் பொருளதார சீர்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர்களின் நலன்களை அழிக்கும் பொருளாதாரச் சட்டத்தை அறிமுகம் செய்தார். அதற்கு பலத்த எதிர்ப்பு வந்ததால், பாராளுமன்றத்தை புறக்கணித்து நேரடியாக சீர்திருத்தங்களை அமல்படுத்த பிரான்ஸ் அரசு முனைந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரியில் நியமிக்கப்பட்ட மிரியம் எல் கோம்ரி தொழிலாளர் சீர்திருத்தங்களை கொண்ட சட்டங்களை பாராளுமன்றத்தில் இயற்ற முயற்சித்து வருகிறார். 100 வருடங்களாக போராடி பெற்ற தொழிலாளர் வர்க்க உரிமைகளை இச்சட்டங்கள் மூலம் இந்த அரசு பறிக்க முனைந்துள்ளது. குறிப்பாக தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்க நிறுவனங்களுக்கு உரிமை வழங்க உள்ளது. உலக பொருளாதார சந்தையில் போட்டியிட மலிவான, சுரண்டலுக்கு ஏதுவான, இலகுவாக மாற்றக் கூடிய தொழிலாளர்கள் சக்தியை தருவதே சீர்திருத்தங்களின் நோக்கம்.

அதற்கு ஏதுவாக சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் தொழிலாளர்களுக்கு தரப்படும் நலன்களை பறிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக குடும்ப நலன்கள், ஓய்வூதியம், வேலையின்மை ஊதியம் மற்றும் சமூகநலப் பாதுகாப்புகள் குறைக்கப்படுகின்றன. இவற்றை குறைப்பதன் மூலம் எந்த வேலை கிடைத்தாலும் ஏற்கும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப் படுகின்றனர். குறைந்த ஊதியத்தில் நிலையற்ற பாதுகாப்பற்ற வேலை வாய்ப்புகளை இக்கொள்கைகள் அதிகரிக்கின்றன. தொழிலாளர்கள் பாதுகாப்பு அதிகம் உள்ள நாடுகளில் தொழிலாளர்களின் நலன்களை பறிப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் நிலையற்ற வேலை நிலைமைகளை உருவாக்குவதற்கு முதலாளிகள் முயற்சித்து வருpகின்றனர். இவைகளை முறியடிக்கா விட்டால் ஐரோப்பிய யூனியனில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

2. தற்போதைய வேலை நிறுத்தங்கள் எவ்வாறு ஆரம்பித்தன? இதில் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்கு எவ்வாறாக உள்ளது?

ஹோலன்டே அரசின் உழைக்கும் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து பிப்ரவரியில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்கங்களுக்கு முன்னரே மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் தாமாகவே வந்து போராட ஆரம்பித்தனர். அமைப்பு ரீதியான கூட்டமைப்பின் பங்குகள் இல்லாமல் இந்த போராட்டம் முதலில் சோஷியல் மீடியாக்களில் ஆரம்பித்து வீதிக்கு வந்தது. அதற்கு பின்னர் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களின் மூலம் தொழிலாளர்கள் குறிப்பாக ட்ரக் ட்ரைவர்கள், ரயில்வே தொழிலாளர்கள், பெட்ரோல் ரிஃபைனரி தொழிலாளர்கள் மத்தியில் போராட்டம் பரவ ஆரம்பித்தது. தற்போது பலதரப்பட்ட மக்களை இந்த போராட்டம் ஈர்த்துள்ளது.

ஹோலன்டே ஜனநாயகபாணிக்கு புரம்பாக செயல்படுவதால், அதை மீண்டும் வென்றெடுக்கும் செயலாக ‘நுவி டுபுவா'(எங்கள் கால்கள் அடியில் இரவு’) போராட்டம் அமைந்துள்ளது. மார்ச் 31ல் பாரீஸில் ஆரம்பித்து மற்ற நகரங்களுக்கும் பரவியுள்ளது. ஆக்குப்பை, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் நகரத்தில் வெடித்துள்ள போராட்டங்களை தழுவி தாமாகவே வெளிப்பட்டுள்ள போராட்டம் இது. ஒவ்வொரு நாளும் மக்கள் இரவுகளில் கூடி அரசியல், வேலை. ஜனநாயகம் குறித்து விவாதிக்கும் தளமாகவும் மாறியுள்ளது. இவ்விவாதங்கள் மூலம் பலதரப்பட்ட போராட்டங்களை இணைப்பதற்கு நம்பிக்கை உருவாகியுள்ளது.

3. ஆக்குப்பு வால் ஸ்ட்ரீட் போன்று நுவி துபுவா போராட்டம் பத்திரிக்கைகளில் பேசப்படுகிறது? அதை பற்றி இன்னும் கூறமுடியுமா?

நுவி டுபுவாவின் போராட்டம் மக்களின் கோபத்தில் இருந்து ஆரம்பித்தது. அதை வழிகாட்டும் விதமாக சில நடவடிக்கைகள் அமைந்தன. குறிப்பாக இடதுசாரி நாளிதழ் ஃபகிர் உருவாக்கிய ‘மெர்சி பேட்ரன்’ (நன்றி முதலாளி’) எனும் ஆவணப்படம் மக்களை கவர்ந்தது. வட பிரான்சின் ஒரு உழைக்கும் வர்க்க குடும்பம் பிரான்சின் முக்கிய கோடீஸ்வரரான பெர்னார்ட் அர்னால்டை எதிர்;ப்பதை இந்த ஆவணப்படம் பதிவு செய்கிறது. இதைப் பார்த்து மக்கள் ‘நாமும் வெல்லலாம். நாம் நினைப்பதை விட நமக்கு சக்தி உள்ளது. நாம் நினைப்பதை விட முதலாளிகள் பலவீனமானவர்கள்’ என்று உணர்ந்தனர் எனப் படத் தயாரிப்பாளர் பதிவு செய்துள்ளார். மக்கள் கூட்டு;ப் போராட்டங்களை நம்ப ஆரம்பித்தனர். ‘ல மான்டே டிப்ளமேட்டிக்’ என்ற நாளிதழில் எழுதிய அறிவுஜீவி பிரெடரிக் டார்டனும் புரட்சியை தூண்டி எழுதியுள்ளார். அதுவும் மக்களை ஈர்த்துள்ளது.

நுவி டுபுவா பலதரப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை இன்னும் சென்றடையாத போதிலும், பல போராட்டங்களை இணைக்கும் ஜனநாயக தளமாக செயல்பட்டு வருகிறது. அவ்வப்போது போராட்டங்களின் மத்தியில் விவாதங்கள் வாயிலாக போராட்டத்தை கொண்டு செல்லும் பொது தளமாக செயல்படுகிறது.

ஈரோ போட்டிகள் தற்போது நடைபெற இருப்பதால், தொழிற்சங்கங்கள் மின் நிலையங்களையும், எரிபொருள் விநியோக டிப்போகளையும் குறி வைத்து வேலை நிறுத்தங்களை மேற்கொண்டுள்ளன. முக்கிய ரெயில் நிலையம் SNCF மற்றும் ஏர் பிரான்சின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

4. நுவி துபாவா போராட்டவாதிகளின் அரசியல் அணுகுமுறை குறித்து சொல்லுங்கள்?

நுவி துபுவா வின் போராட்டவாதிகளின் அணுகுமுறை பழைய அரசியல் தலைவர்களின் அணுகுமுறையில் இருந்து மாறுபட்டதாக உள்ளது. மார்க்சிய சித்தாந்தங்களை ஒதுக்கும் இவர்கள் பெண்ணியம், குடி பெயரும் மக்கள் ஆகிய தாராளவாத சித்தாந்தங்களிலேயே ஈடுபடுகின்றனர். பொருளாதாரத்தை பொறுத்தவரையில் கீனிசியன் அணுகுமுறையை கையாளுகின்றனர். இவ்வாறு ஒரு சித்தாந்தத்தை அடிப்படையாக கொள்ளாமல் போராட்டம் செய்யும் முறை பலரை கவர்ந்தாலும், ஒடுக்குமுறையை செயல்படுத்தும் ஆதிக்க கட்டமைப்புகள் குறித்து -முக்கியத்துவம் கொடுப்பதிலும் அதை எதிர்ப்பதிலும் – அறியாமையே உள்ளது.

இது குறித்து பிரெடரிக் டார்டன் ‘அரசியல் குறிக்கோளுடன் செயல்படாத எந்த ஒரு போராட்டமும் விரைவில் சிதைந்து விடும். ஒன்று கூட்டாக வருவதனால் ஏற்படும் மகிழ்ச்சி மறைந்து விடும் அல்லது தேர்தல் அரசியலை நோக்கி சென்று விடும்’ எனக் கூறுகிறார். குறிப்பாக அவர் பொது வேலை நிறுத்தத்தை அறிவிக்க கோருகிறார். ஆனால் கட்சிகளும், போராட்டவாதிகளும் இதற்கு தயாராக இல்லை.

நுவி துபுவாவின் இன்னொரு குறைபாடு நகர்புறங்களில் உள்ள சிறுபான்மை இளைஞர்களை சென்றடையாதது. குறிப்பாக 2005ல் நகர்புற சிறுபான்மையினர் எழுச்சியடைந்த போது, இடதுசாரிகள் அவர்களை கண்டுகொள்ளவில்லை. அதனால், சிறுபான்மையினர் இ;டதுசாரிகளுடன் அடையாளப்படுத்தி கொள்வதில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் நுவி துபுவா போராட்டவாதிகள் பிரஞ்சு உழைக்கும் வர்க்கத்தினரிடையே உள்ள இனப்பிரச்சனைகளில் கவனம் செலத்துவதில்லை. அவர்கள் குடிபெயர்ந்த சிறுபான்மையினரையோ, சட்டத்திற்கு புறம்பாக இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் மேல் உள்ள ஒடுக்குமுறை கட்டமைப்பு குறித்து அவர்கள் போதிய கவனம் செலுத்தவில்லை. இந்த இனவெறி பிரான்ஸ் நாட்டின் கல்வி அமைப்பில் வேரூன்றி உள்ளது: குடிபெயர்ந்த சிறுபான்மையினரை தனிமைப்படுத்தி, கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடை குறைத்து, சிறுபான்மையினரை ஒரு சில யாரும் செய்ய விரும்பாத வேலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.
இனவெறி மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ள மனப்பான்மை குறித்து தொழிற்சங்கங்கள் தெளிவாக நிலைபாடு கொள்ளாததால் இவர்கள் தொழிற்சங்கங்களில் இணைவதில்லை. இனவெறிக்கு எதிரான ரிபப்ளிக்ஸ் நேட்டிவ் மற்றும் ஆன்டி-நெக்ரோபோபியா பிரிகேட் அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டன. நுவி துபுவா மற்றும் பிரஞ்சு இ;டதுசாரிகள், பிரான்ஸ் நாட்டின் பின் காலனித்துவ கட்டமைப்புகள் குறித்து ஒரு வரலாற்று சிந்தனையுடன் அணுகவேண்டியுள்ளது. இன்று நவீன-பாசிச தேசிய முண்ணனி கட்சிக்கு இருக்கும் தொழிலாளர் ஆதரவையும் அவர்கள் ஆராய வேண்டியுள்ளது.

5. போராட்டத்தில் பிரான்ஸ் நாட்டின் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்கு என்ன?

தொழிலாளர்களை சங்கத்தில் ஒருங்கிணைப்பதில் பிரான்ஸ் நாடு பலவீனமாகவே உள்ளது(2010ல் 8சதத் தொழிலாளர்களே சங்கத்தில் இருந்தனர். இவர்களில் 34சதம் தொழிலாளர் பொது கூட்டமைப்பு – சிஜிடியில் உள்ளனர்). ஆனால் சமூகப்பாதுகாப்பு, 2008ல் 93 சத மக்களை அடைந்துள்ளது(இங்கு 2 வருடங்கள் வேலை செய்தால் ஒருவர் முழு வேலையின்மை இழப்பீடுக்கு தகுதி பெறுவார். 25 வருடங்களுக்கு ஓய்வூதியத்தில் பணம் செலுத்தினால், சாகும் வரை அவரது கடைசி ஊதியத்தில் 80சதத்தை அவர் பெறுவார்). இதற்கு காரணம் தொழிற்சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை அனைத்து தொழிலாளர்களுக்கும் வென்றெடுத்தனர்.

தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதில் பல தொழிற்சங்கங்களும், கட்சிகளும் ஈடுபட்டு வருகி;ன்றனர். கடந்த இரண்டு வருடங்களாக தங்களது கருத்தியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஆதிக்க சக்திகளை எதிர்த்து ஒரு பொது மேடையை அமைப்பதில் அவர்கள் முயற்சி செய்தும் தோல்வியே அடைந்துள்ளனர். பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகள், அரசின் சிக்கன நடவடிக்கைகள், குடிபெயரும் தொழிலாளர்களின் நலன் ஆகியவற்றில் சோசலிசக் கட்சியின் வலதுசாரி போக்கை எதிர்ப்பதில் அவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். தற்போதைய தொழிலாளர் சீர்திருத்தங்களை எதிர்கொள்வதில் உள்ள ஒற்றுமை இதனால் வரவேற்கத்தக்கது. ஆனால் கருத்தியல் ரீதியாக உள்ள வேற்றுமைகளை மீறி அவர்கள் இந்த ஒற்றுமையை பலப்படுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக இடதுசாரிகளின் தேசியவாதப் பேச்சுகளும், வழிபாட்டுமரபு கட்சி நிலைபாடுகளையும் கலைய வேண்டியுள்ளது. 2009ல் புதிய ஆன்டிகேபிடலிஸ்ட் கட்சி (NPA) மார்கிசிய போராளிகளையும் அனார்கிஸ்டுகளையும் இணைக்கும் வேலையில் ஈடுபட்டது. குறிப்பாக 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் இவர்களை இணைந்து ஆற்றிய வேலைகளை அடையாளம் காட்டி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒலிவியேர் பெசன்ஸ்நாட் இந்த முயற்சியை எடுத்தார்.

ஆனால் தொழிற்சங்கங்களின் வாயிலாக அரசியல் கட்சிகளின் வேலைகள் பொருளாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்துவதாக மட்டுமே உள்ளன. குறிப்பாக வால்டர் பெஞ்சமின் மற்றும் ரோசா லக்சம்பர்க் கின் பொது வேலை நிறுத்தத்தின் புரட்சி பிண்ணனிக்கு பதிலாக பொது வேலை நிறுத்தங்கள் ஒரு அரசியல் அடையாளங்களாகவே கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த போராட்டங்களில் அமைப்புசார்ந்த போராட்டங்கள் நடைபெறும் போது வெளிப்படும் அதிகார மையங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தொழற்சங்க பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவது அதிகரிப்பதனால் சிஜிடி போன்ற தொழிற்சங்கங்களில் உறுப்பினர்கள் குறைந்து வருகின்றனர். இதன் விளைவாக சிஜிடி போன்ற தொழிற்சங்கங்கள் கம்யூனிஸ்ட் விரோதப் போக்கை மேற்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் கலவரங்களில் அவர்கள் பிரெஞ்ச் காவல்துறையுடன் சமரசம் செய்வது வெளியாகி உள்ளது. தங்களது உறுப்பினர்களை பாதுகாக்க போராட்டங்களில் ஈடுபடும் இளைஞர்களை அவர்கள் காவல்துறையிடம் பலியாடாக்குகின்றனர். குறிப்பாக மாணவர் போராளிகள் மேல் காவல்துறை ஒடுக்குமுறை அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கு தொழிற்சங்கங்களும் மற்ற அமைப்புகளும் எந்த சட்டரீதியான பாதுகாப்பையும் தருவதில்லை. பிரான்ஸ் அரசும் மாணவர்களையும் தொழிலாளர்களையும் பிரித்து கையாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது.

தற்போதைய போராட்டத்தில் ஒரு பக்கம் பியோரக்கரசி மிகுந்த சீர்திருத்தவாதிகள் மிகுந்த தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இன்னொரு பக்கம், சுயமாக அரசியலாக்கப்படாத இளைஞர் கூட்டமும் ஈடுபட்டு வருகின்றன. பிரான்ஸ் அரசிடமிருந்து பெரும் சலுகைகளை வாங்கும் தொழிற்சங்கங்கள் தங்களுடைய பொருள் நலன்களை காத்து கொள்ள காவல்துறைக்கு உதவி செய்கின்றனர். ஆனால் தொழிலாளர்கள் மத்தியில் அரசுக்கு எதிராக வெளிப்படுத்தும் குரலாக தங்களை காட்டி கொள்கின்றனர்.

6. தொழிலாளர் சீர்திருத்தங்களில் சிஜிடியின் நிலைபாடு என்ன? ஒரு பக்கம் வேலை நிறுத்தப் போராட்டங்களை அறிவித்துள்ளனர்? இனனொரு பக்கம் சோசலிச கட்சியும் சமரசம் பேசுகின்றனர் என்ன செய்தியும் கேள்விப்படுகிறோம்.

மே 19ல் இருந்து பெட்ரோலிய நிறுத்தங்களும், பொருள்களை நிறுத்துவதும் அதிகரித்து கொண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும், ரிஃபைனரிகள் நிறுத்தப்படுவதையும், ரோடுகள் அடைக்கப்படுவது குறித்தும். ஏடிஎம்கள் நொறுக்கப்படுவதை குறித்தும் பத்திரிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. சிஜிடியினால் நாட்டை நிற்பாட்டும் அளவிற்கு சக்தி உள்ளதாக பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன. சோசிலசக் கட்சியின் தலைவர் சீர்திருத்தங்களில் சமரசத்திற்கு கோரினார் ஆனால் சிஜிடி தலைவர் மைல்லி அதற்கு மறுப்பு கூறியவுடன் சிஜிடி உறுப்பினர் அரசிடமிருந்து அச்சுறுத்தல்கள் வந்ததாக கூறியுள்ளார்.

சிஜிடி ஒரு கூட்டமைப்பாக உள்ளதால் அதற்கு பலமுகங்கள் உள்ளன – ஒரு பக்கம் மார்செல்லில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஏசும் சிஜிடியும் உள்ளது, இன்னொரு பக்கம், ஹாவ்ரேயில் சோசலிச கட்சியின் அலுவலகத்தை உடைத்ததும் சிஜிடியின் உறுப்பினர்கள் தான். ஹாட்-லோரில் தொலைபேசி லைன்களை உடைத்தனர், தேசிய மின்சார நிறுவனம் இடிஎஃப் பின் லட்சக்கணக்கான நுகர்வோர்களின் பில்களை குறைத்தனர். அதே சமயம் அரசுடன் ஒரு சின்ன சலுகைக்ககாவும் சமரசம் பேசுகின்றனர். பல இடங்களில் காவல்துறைக்கு இணையாக போராட்டங்களை கட்டுப்படுத்துகின்றனர். அதே சமயம் பல இடங்களில் சிஜிடியின் உறுப்பினர்கள் மற்றவர் போராட்டங்களிலும் கலந்து கொண்டு வருகின்றனர்.

சிஜிடி உறுப்பினர்களுக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை இது சுட்டிக்காட்டுகிறது. மீடியாக்களும், அரசியல்வாதிகளும், சமூக வல்லனர்களும், வன்முறையின் வடிவத்தை அடையாளம் கொண்டு வருவதை விட்டுவிட்டு ஏன் இவ்வாறான வன்முறைக்கு ஆதரவு ஏற்படுகிறது என்பதை ஆராய வேண்டும்.

7. அமைப்புசார்ந்த தொழிலாளர்கள் தவிர மற்ற தொழிலாளர்களின் பங்கு குறித்து கூறுங்கள்? பிரான்சில் ‘எக்ஸ்ட்ரா’ என்ற ஒரு தொழிலாளர் வகுப்பு உள்ளது என்று கேள்விப்படுகிறோம். அது என்ன?

உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட நிலையான வேலைவாய்ப்பையும், சமூகப் பாதுகாப்புகளையும் புதிய தொழிலாளர் சட்டங்கள் பறிக்கின்றன. இதுவரை நடந்த சங்க ஒருங்கிணைப்பு இன்று உள்ள தொழிலாளர் சட்டங்களால் பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்களை நோக்கியே இருந்தது. நிலையான உறுதியற்ற வேலைவாய்ப்பிற்கு அப்பால் (சுரண்டலுக்குட்பட்ட) பல வேலை ஒப்பந்தங்கள் உள்ளன. இன்றைய போராட்டங்களை வழிநடத்தும் தொழிலாளர் வர்க்கம், இவ்வாறு ஒருங்கணைக்கப்படாத வேலை வாய்ப்புகளை அடையாளம் கோரி நடத்துப்படுவதாக உள்ளது. போராட்டங்களை வழிநடத்துபவர்கள் தனிநபர் சொத்துரிமையை எதிர்ப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
குறிப்பாக மாணவர்கள், பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், நகர்புற இளைஞர்கள், தன்னாட்சி குழுக்களை சார்ந்தவர்கள், ஓரளவு இடம் பெயர்ந்த மக்கள் பெருமளவு பங்கு பெற்றுள்ளனர். இன்றைய வேலை நிலைமைகள், மற்றும் பல வருடங்களாக தாங்கள் அனுபவித்து வந்த தொழிலாளர் உரிமைகளை விட்டு தர இந்த அனைத்து தரப்புகளும் தயாராக இ;ல்லை. தற்போதைய இஸ்லாமிய போரில் நவம்பர் 13ன் கொலைகளின் பிண்ணனியில் பிரான்சில் ராணுவமயமாக்கல், மக்களின் மீது அதிகரித்துள்ள ஏவு பார்த்தல் என்ற கட்டமைப்பில் தொழிலாளர் வர்க்கம் இந்த போராட்டத்தை கையில் எடுத்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

8. பிரான்சின் போராட்ட அலைக்கும் முதலாளித்துவத்தின் தற்போதைய நெருக்கடிக்கும் சம்பந்தம் உள்ளதா?

உலக அளவில், சமூகப் பொருளாதார தோல்விகளை முதலாளித்துவ கட்டமைப்பு எதிர்கொண்டுள்ளது : பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது, உலக உற்பத்தி தேக்கம் அடைந்துள்ளது, வேலையின்மை அதிகரித்து வருகிறது, இளைஞர்கள் மத்தியில் அதிக வேலையின்மை, தொழிலாளர்கள் இடம் பெயர்தல் அதிகரித்துள்ளது. உற்பத்தியையும் லாபத்தையும் அதிகரிக்க தொழிலாளர் சீர்திருத்தங்களே வழி என அரசு-முதலாளி இயந்திர அமைப்பை முடுக்கி வருகிறது. இதன் வழியாக மலிவான நெறிபடுத்தப்பட்ட உழைப்பு சக்தியை உருவாக்க முயற்சிக்கிறது. உற்பத்தி திறனை வளர்க்கவும், போட்டியை உருவாக்குவதற்கும் சீர்திருத்தங்கள் தேவை என்ற கருத்துகளை முதலாளி வர்க்கம் உருவாக்கி வருகிறது. முதலாளி வர்க்கத்திற்காக உலகில் அனைத்து அரசு இயந்திரங்களும் அமைதியாகவோ அல்லது கட்டாயப்படுத்தியோ இவற்றை செயல்படுத்தி வருகின்றன. இன்றைய சமூக பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு ஏற்படுத்தப்படும் சமூக ஒப்பந்தத்தில் அதாவது ஏன் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும், தொழிலாளர் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கேள்விகளில், அதிகார வர்க்கத்தின் மனப்பான்மையில் உலக மயமாக்கல் கொள்கைகளே ஓங்கியுள்ளன.

தொழிலாளர் வர்க்க போராட்டங்களில் தொழிற்சங்கத்தின் பங்கு குறித்து எதிர்மறை கருத்துகள் உருவாக்கப்பட்ட போதிலும், உழைப்பு-முதலீடுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை கலைவதல் தொழிலாளர்கள் இவற்றையே நாடுகின்றனர். இந்த முரண்பாடுகளின் கட்டமைப்பில் தொழிலாளர்கள் போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை.

9. போராட்டங்களை நடத்தி வரும் இயக்கத்தை நீங்கள் எவ்வாறு வகைப்படுத்துகிறீர்கள்? உழைக்கும் வர்க்கத்தை சுற்றி ஒருங்கிணைந்த போராட்டம் உருவாக வாய்ப்புள்ளதா?

எங்களுடைய பார்வையில், தற்போது வர்க்கங்களுக்கு இடையே ஒற்றுமையுடன் கூடிய ‘சமூக இயக்கம்’ இருப்பதாக நாங்கள் கருதவில்லை. கடந்த மூன்று மாதங்களாக நாட்டில் நடக்கும் போராட்டங்களில் வலுவான அரசியல் பார்வை இல்லாமல் உள்ளது. அதே சமயம் மக்களின் மனப்பான்மை சட்டத்தை எதிர்ப்பதாக மட்டும் இல்லை. ஆளுமையையும் எதிர்ப்பதாக உள்ளது. இன்று வலதுசாரியின் அரசியலும் சரி இடதுசாரியின் அரசியலும் சரி ஒரு நாடகத்தை போல் ஆகிவிட்டது. ஒரு பனிப்பாறையை நோக்கி செல்லும் கப்பலில் இருப்பது போல் நாம் இருக்கிறோம். இந்த (கெட்ட) நாடகத்திலிருந்து மீண்டு முக்கிய தீர்வுகளுக்கு செல்ல வேண்டும் என்பதே தீவிர இடதுசாரிகளின் விருப்பமாக உள்ளது.

தற்போது ஒரு குறிப்பிட்ட சட்டத்தை நோக்கி மேலோட்டமாக சென்று கொண்டிருக்கும் இந்த இயக்கத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதற்கான அறிகுறிகள் உள்ளன. இவை அடுத்த நாட்டின் தலைவர் தேர்தலுடன் நிற்கப் போவதில்லை. கடந்த சில மாதங்களாக தொழிற்சங்கங்களுக்கும் இன்றைய வாழ்வை பார்த்து சலித்த தொழிலாளர்களுக்கும் தங்களுடைய எதிர்காலத்தை பற்றி எந்த நம்பிக்கைகளும் இல்லாத மாணவர்களுக்கும் இடையே தொடர்புகள் ஆரம்பித்துள்ளன. இந்ந சுய தொடர்புகள் அதிகரித்து ஒன்றுபட்டு கொண்டு வருகின்றன.
இன்றைய பொருளாதார நிலையில், 40 வயதுக்கு குறைந்தவர்களுக்கு நிரந்தர வேலை கிடைப்பதில்லை. பொதுத் துறையில் கூட இன்று ஒப்பந்தங்கள் 3 வருடங்களுக்கு மேல் இல்லை. அனைவரும் சுழற்சி அடிப்படையில் அவ்வப்போது தற்காலிக வேலை(எக்ஸ்ட்ரா) செய்து கொண்டு வேலையில்லா தொழிலாளர் படையில் இருந்து கொண்டு வேலையின்மை சலுகையுடன் வாழ்ந்து வருகிறோம். இதனால் நமது போராட்டம் தொழிற்சாலை வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களில் மட்டும் இல்லை. பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், எரிபொருள் மற்றும் மின் நிலையங்கள், போக்குவரத்துகள் ஆகியவற்றை நிறுத்துவதில் உள்ளது. இவ்வாறான கூட்டு நடவடிக்கைகளே அரசுக்கு பெரும் தொல்லையை ஏற்படுத்துகின்றன.

பிரான்சில் ‘இடதுசாரியாக இருப்பது’ என்பது நல்லெண்ணம் கொண்ட ஆனால் தெளிவற்ற, கோழைத்தனமான வடிவத்தை கொண்டிருந்தது. சோசலிச ஆட்சியின் கீழ் இந்த இடதுசாரி வடிவத்தை கொண்டுசெல்வது முடியாததாக உள்ளது. இன்றைய கோபமும் உறுதியும் ‘இந்த இடதுசாரி வடிவத்தை’ உடைப்பதாக உள்ளது. பாராளுமன்ற தேர்தல் அணுகுமுறையை விட்டு புது தீவிர இடதுசாரிகள் வடிவம் பெறுவது இன்றைக்கு தேவையான ஒன்று.

10. போராட்டங்களை நடத்தும் போராளிகளை அரசு கைது செய்வதாகவும், குறிப்பாக பாசிச எதிர்;ப்பு அமைப்புகளை குறி வைப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இது உண்மையா?

கடந்த பல வருடங்களாக ஒரு சமூகப் போராட்டத்தில் இத்தனை பேர் காயப்பட்டிருந்ததாக சரித்திரம் இல்லை. கடந்த சில மாதங்களாக தொழிற்சங்கங்கள் நடத்திய வேலை நிறுத்தங்களிலும் போராட்டங்களிலும் மாபெரும் எண்ணிக்கையில் பங்கு பெற்ற மக்கள் மீது அரசு தடியடி, கண்ணீர்புகை, மற்றும் காவல் ஒடுக்குமுறையை ஏவியுள்ளது. ஜுன் 14 அன்று பாரீஸில் நடந்த தேசிய போராட்;டத்தில் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். ஏப்ரலில் ஃப்ளாஷ் பந்தால் சுடப்பட்ட ஒரு மாணவர் ஒரு கண்ணை இழந்துள்ளார். பாரீஸில் காவல்துறை கிரனேட் வீசியதில் பார்வையாளர் பலத்த காயம் அடைந்து 11 நாள் கோமாவில் இருந்தார். ரென்னேவில் ரயட் காவல் பத்திரிக்கையாளர் குழுவை தாக்கியது. பள்ளியின் முன் பிக்கட் போராட்டம் செய்த பள்ளி மாணவர்களை காவல்துறை தாக்கியதால் 11 மாணவர்கள் காயமடைந்தனர். ஒரு சில சிறுபான்மையினர் நடத்தும் வன்முறைகளைப் பற்றி மட்டுமே ஊடகங்கள் எழுதுகின்றன. காவல்துறை ஒடுக்குமுறைகளை பற்றி எதுவும் கூறுவதில்லை. மனித உரிமை அமைப்புகளும், காவல்துறையை கண்காணிக்கும் அமைப்புகளும் காவல்துறையின் அராஜகத்தை கண்டித்துள்ளனர்.

நவம்பர் 2015 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியில் இந்த ஓடுக்குமுறைகள் நடைபெறுகின்றன. பயங்கரவாதிகள் மீது ஏவப்படும் அரசின் ஒடுக்குமுறையே சமூக இயக்கங்கள் மீதும் ஏவப்படுகின்றன. காவல்துறை தொழிலாளர்கள், நகர்புற இளைஞர்கள், சுயஅமைப்பு, தீவிர பாசிச எதர்ப்பு குழுக்களை குறி வைத்து தாக்கி வருகின்றன. பலர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

11. போராட்டத்திற்கு உலக அளவில் என்ன வரவேற்பு உள்ளது?

தற்போது இத்தாலி, இங்கிலாந்து, கிரீஸ்;, ஜெர்மனியில் இருந்து ஆதரவு வந்துள்ளது. பிரான்சில் தற்போது இருக்கும் போராட்டங்கள் புரட்சியை ஏற்படுத்திவிடும் என்ற ஒரு எதிர்பார்ப்பும், ஆசையும் வெளிப்படுகிறது. அதனால் சிலர் அடுத்த கட்டமாக தொழிலாளர் கவுன்சில்கள் போன்றவற்றின் வடிவத்தையும், உள்ளடக்கத்தையும் பற்றி பேச ஆரம்பித்து விட்டனர். ஆனால் பிரான்சில் அவ்வப்போது (2010, 2006, 2005, 1995, 1986..) சமூகப் போராட்டங்கள் வெடித்துள்ளன ஆனால் அவை சமூகப் புரட்சியாக மாறவில்லை. தற்போதைய போராட்டமும் அவ்வாறே செல்லும் என்று கூறவில்லை ஆனாலும் இதை கருத்தில் கொள்ள வேண்டும். இன்று தெற்கு ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் சைனாவில் நடக்கும் சமூகப் போராட்டங்களை பார்த்தால் புரட்சி வந்து கொண்டிருக்கிறது என்றே தோன்றுகின்றன. 1970களிலும், 80களிலும் இத்தாலியிலும், பிரிட்டனிலும் இன்னும் பெரிய அளவில் தொழிலாளர்கள் பங்கேற்புடனும் சமூகப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. ஆனாலும் அவற்றால் அப்போது ஆரம்பிக்கப்பட்ட நவீன தாராளமயத்தை வீழ்த்த முடியவில்லை.

தற்போதைய போராட்டங்கள் தினசரி வாழ்க்கையை வெகுவாக பாதிக்கவில்லை. மாணவர்கள் போராட்டங்களிடையே தங்களுடைய படிப்புகளை தொடர்கின்றனர். தொழிலாளர்களும் தங்களுடைய வேலைகளை செய்து கொண்டு வருகின்றனர். போராட்டங்கள் மெல்ல நடந்தாலும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவை புரட்சியாக மாறுமா அல்லது மறையுமா என்பது இனிமேல் தான் தெரியும். பிரஞ்சு பூர்ஜுவாக்கள் இதை அணைத்து விடுவதற்கு முயற்சிக்கின்றனர். அதே சமயம் ஐசிஸ் ஏதாவது செய்ய முனைந்தால், அதை செய்வதை அரசும் தடுக்கவில்லை என்றால், மக்களின் மனநிலை அரசின் சார்பாக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

இப்போராட்டங்களில் சில அனார்கிஸ்ட்ஸ் மற்றும் அடோனாமிஸ்ட்கள் இயக்கத்தில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் முரண்பாடுகளை குறைத்து மதிப்பிட்டும் புறக்கணித்தும் வருகி;ன்றனர். இம்முரண்பாடுகளை பற்றி விவாதிப்பது முக்கியமாகும். பிரிட்டனில் 80களில் தாட்சர் உழைக்கும் வர்க்கத்தின் மேல் தொடுத்த தாக்குதல்கள் தற்போது பிரான்சில் தொடுக்கப்படுகின்றன. இதற்கு எதிராக போராடுவதற்கு புதிய பாதையில் செல்லவேண்டியுள்ளது. அதை தவிர்த்தால் பிரஞ்ச் உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டும் அல்ல உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கு தாக்கம் ஏற்படும்.

This entry was posted in Analysis & Opinions, Featured, labour reforms, Workers Struggles, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.