தொழிலாளர் போராட்டங்களும் சுயநிர்ணய உரிமைகளும் – உழைக்கும் வர்க்க பார்வையில் காஷ்மீர் போராட்டம்

காஷ்மீர் மாநிலம் இந்திய அரசு மற்றும் அதன் இயந்திரங்களின் மிருகத்தனமான இடைவிடாத ஒடுக்குமுறையின் போதிலும், 150 க்கும் மேலான நாட்கள் எழுச்சியை கண்டது. இந்திய அரசானது ஒரு புறம் மோதலின் ஒவ்வொரு கட்டத்திலும் பாகிஸ்தானை முன்னிலை படுத்தியும் மறுபுறம் காஷ்மீரி எதிர்ப்பாளர்களை கொடூரமாக நடத்தியும் இந்த எழுச்சிக்கு உட்குறிப்பாக ஒரு இனவாத நிறம் கொடுக்க முயற்சிக்கிறது. இச்செயல்பாடுகள் ஜாட் இனத்தினர் தங்களின் இதைவிட வன்முறையான எழுச்சியின் பொழுதும் படேல் இனத்தினர் தங்கள் நீண்ட கால போராட்டத்தின் பொழுதும் அனுபவித்ததைவிட மிகவும் வேறுபட்ட ஒன்றாக இருந்தது.

இந்த மோதல்களுக்கும் காஷ்மீர் உழைக்கும் வர்க்கத்திற்கும் இருக்கும் தொடர்பு என்னவென்று எண்ணத் தோன்றுகிறது. கடந்த 26 வருடங்களில் காஷ்மீரின் பொருளாதாரம் அழிக்கப்பட்டு, ராணுவமயமாக்கப்படல் மற்றும் வன்முறை ஆகியவற்றால் பொருளாதாரத்தின் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத் துறை போன்றவை பாதிப்படைந்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெரும் எண்ணிக்கையில் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், ஆட்சி பணியாளர்கள் போன்ற உழைக்கும் வர்க்கத்தினரை கொண்டுள்ளது.இன்றைக்கு அவர்களின் குரல்கள் எங்கே? சுய நிர்ணய போராட்டத்தினை சுமந்திருந்த  உழைக்கும் வர்க்கங்களாகிய அவர்களின் போராட்டம் தான் இன்று எங்கே? இந்த பிரச்சனைகளை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள நாம் காஷ்மீரின் வரலாற்றை அறிய வேண்டியதாய் இருக்கிறது. மிக சில, அதேசமயம் முக்கிய புத்தகங்களும் கட்டுரைகளும் தொழிற்சங்க வரலாற்றினைக் குறித்து எழுதப்பட்டுள்ளன.

நந்திதா ஹஸ்க்கர் சமீபத்தில் எழுதிய புத்தகத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீரின், தொழிற்சங்க இயக்கத்தின் வரலாறு ஆவணப்படுத்தப்பட்டது. இது ஒரு விலைமதிப்பில்லா படைப்பாதாரமாகும். இந்த புத்தகத்தின் முக்கிய பாத்திரம்  அனுபவமிக்க தொழிற்சங்கவாதி தோழர்.சம்பத் பிரகாஷ் ஆவார். அவர் தொழிற்சங்க போராட்டத்தினை பற்றி நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர்களின் படைப்புகளிருந்து உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்களில் உக்கிரமான அரசியல் மற்றும் மதங்களின் பாதிப்புகளை எடுத்து தந்துள்ளோம்.

காஷ்மீர் மாநிலமானது  தொழிலாள வர்க்க இயக்கத்திற்கான ஒரு நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது. நாம், கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலக்கட்டத்தை பின் நோக்கிப் பார்த்தால், 1865 ஆம் ஆண்டு, ‘சால்வை நெசவாளர்களால்’ ஓர் கண்டன பேரணி நடத்தப்பட்டது தெரியவரும்.  காஷ்மீரி சால்வைகள் அக்காலக்கட்டத்தில் ஐரோப்பாவிற்கு பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட போதிலும், நெசவாளர்களின் நிலைமை என்னவோ வெகு மோசமானதாகவே இருந்தது.  ஒவ்வொரு நெசவாளரும் தங்களது ஆண்டு வருமானமான வெறும் 84 ரூபாயிலிருந்து,  ஆண்டிற்கு 40 ரூபாய் வரி செலுத்த வேண்டிய அவல நிலையில் இருந்தனர். இவ்வாறு தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட அற்ப சம்பளத்தில் பாதி பணமானது மாநில நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட சால்வை துறையால் சுரண்டி எடுக்கப்பட்டது. நெசவாளர்கள் மற்றும்  அத்தொழில் பயில்பவர்கள் அனைவரும் இணைந்து 1865 ஏப்ரல் 29ஆம் தேதி, கவர்னரின்  அரண்மனை நோக்கி  ஒரு அமைதி ஊர்வலம் செல்ல முடிவெடுத்தனர். அங்கு கோஷங்கள் எழுப்பி கவர்னரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அப்போதைய மாநில அரசின் பதிலானது, இப்போதைய இந்திய அரசின் பதில் போன்றதாகவே இருந்தது. போராடிய நெசவாளர்கள் நோக்கி வெற்று வரம்பில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. மேலும் கூர் ஆயுதங்களால் தாக்குதல்களும் அரங்கேறியது.  பல தொழிலாளர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள  வேறு வழியின்றி அங்கிருந்த பாலத்தில் இருந்து  குதித்தனர்.

காஷ்மீரி தொழிலாளர்கள் சுரண்டப்படுவது 20 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. 1932ஆம் ஆண்டில் திரு.ஷேக் அப்துல்லா தயாரித்த ஒர் அறிக்கையில் மாநில பட்டு தொழிற்சாலையில்  உள்ள தொழிலாளர்களின் நிலை மற்றும் அவர்கள் தங்கள் மேலாளர்களால்  எவ்வாறு இழிவாக நடத்தப்பட்டனர் என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலாளர்களில் வெகு சிலரே பிரிட்டிஷ்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  1944 ம் ஆண்டு (ஷேக் அப்துல்லா தலைமையில்) தேசிய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட  ‘புதிய காஷ்மீர் கொள்கை அறிக்கையானது’  CPI உடன் இணைந்த கம்யூனிஸ்டுகளால் வரையப்பட்டதாகும். இதில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கான சாசனம் சேர்க்கப்பட்டுள்ளது. [1]

காஷ்மீரில் கம்யூனிஸ்டுகள் இருந்ததே, காஷ்மீர் தொழிற்சங்க இயக்கங்கள் (குறிப்பாக ஐம்பதுகளில்) தோன்றுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 1950 களின், கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் இலக்கியம் மற்றும் இதழ்கள் பள்ளத்தாக்கில் எந்தவித தங்குத்தடையுமின்றி வெளியிடப்பட்டன.  அக்காலக்கட்டத்தில் எந்தவொரு அமைப்பிலிருந்தும் இதுபோன்ற இலக்கியங்களுக்கு ஆட்சேபணையோ எதிர்ப்போ வந்ததில்லை.  கம்யூனிச எதிர்ப்பு அமைப்பான ஜன் சங்கம் (1952-ல் நிறுவப்பட்டது)  தழைத்தோங்கிய  காலமே ஜம்முவில் தொழிற்சங்க நடவடிக்கைகளை கடினமாக ஆக்கியது. காஷ்மீரிலோ இடது கட்சிகளுடன் இணைந்திருந்த பல தொழிற்சங்கவாதிகள் வளர்ச்சியை கண்டனர்.

அவர்களில் சிலர், கிசான் மஸ்தூர் சபா என்னும் விவசாய அமைப்பில் தீவிரமாக ஈடுப்பட்டிருந்தனர். 1950 களில் பட்டு தொழிலாளர்கள் சங்கம், தந்தி ஊழியர்கள் சங்கம், பேருந்து ஓட்டுனர் சங்கம் போன்று தொழிற்சங்கங்களை துறை வாரியாக  அமைத்தனர்.  எனினும் ஐம்பதுகளின் இறுதியிலும் அறுபதுகளின் தொடக்கத்திலும் இருந்த காலக்கட்டத்தில் இருந்த தொழிலாளர்கள் பலர், பல்வேறு அரசு துறையை சார்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் அரசாங்கத்தால் பல்வேறு வழிகளில் சுரண்டப்பட்டனர்.  அவர்களின் அதிகாரிகளினால் பண்ணை அடிமைகளைப் போன்று அவர்கள் நடத்தப்பட்டனர். எவ்வளவு உழைத்தும்  அவர்களின் மாத ஊதியம் குடும்பத்தினை நடத்த , இரண்டு வாரங்களுக்கு கூட போதுமானதாய் இல்லை. செம்மறி மற்றும் கால்நடை வளர்ப்பு துறை போன்ற சில துறைகளில், நியாயமற்ற முறையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது அடிக்கடி நிகழும் ஒன்றாக இருந்தது.

1964 ல், ‘குறைந்த ஊதிய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு’ என்று ஒரு தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது. அச்சங்கம்  காஷ்மீரின் அப்போதைய பிரதமரான, குலாம் முகமது சாதிக் மூலம் உருவாக்கப்பட்டது. எனினும் இத்தொழிற்சங்கம் செயலிழந்தே இருந்தது. பின்னர் கம்யூனிஸ்டுகளின் வரவால், புத்துயிர் பெற்றது. இந்த புத்துயிர்ச்சிக்கு தோழர்கள் சாரப், சேத்தி மற்றும் சம்பத் ஆகியோரின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.  இந்த மறுமலர்ச்சியானது ஜம்மு காஷ்மீரில் உள்ள (1966 ஆம் ஆண்டு முதல் சுமார் 1975 வரை நீடித்தது) தொழிற்சங்க இயக்கங்களில் எழுச்சிக்கு வித்திட்டு பொற்காலமாய் விளங்கியது. பல்வேறு அரசு துறைகளில் உள்ள தனிப்பட்ட தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து தொடர்பு கொள்ள இக்கூட்டமைப்பு  வழிவகுத்தது .

அனைவராலும் அறியப்பட்ட1967 ஆண்டு வேலை நிறுத்தப் போராட்டமே இந்த தொழிற்சங்கத்திற்கு கிடைத்த உண்மையான முதல் வெற்றியாக கருதப்படுகின்றது. டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த வேலைநிறுத்தத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீரை சேர்ந்த பல்வேறு துறைகளை சார்ந்த அரசு ஊழியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பங்கேற்று போராடினர்.  இந்த வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு வேலைகளின் போது  ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய இரு பகுதிகளில் உள்ள இருபதிற்கும்  மேற்பட்ட துறைகளை சார்ந்த ஊழியர்களை திரட்டினர்.  (ஜம்முவில் ஜனசங்கம் என்னும் வலுவான பிரிவினைவாத அமைப்பு,ஊழியர்களை இனவாதரீதியாக பிரிக்க முயற்சித்தது).  ஊழியர்கள் கோஷம் கூறவும் அணிவகுப்பில் நடக்கவும் தயார் செய்யப்பட்டனர். இந்த வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்பு வேலை கிட்டத்தட்ட ஒரு வருடம் சென்றதாம்!  வேலைநிறுத்தத்தின் மூலம் இரண்டு  முக்கியஅடிப்படை கோரிக்கைகள் வைத்தனர்.  பணிகளை நிரந்தரப்படுத்துதல் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு  இணையான அக விலைப்படி பெறுதல் . வேலைநிறுத்தம் கிட்டத்தட்ட ஒரு மாதம் நீடித்தது . முதற்கட்ட போராட்டத்தில், ஊழியர்கள் தங்கள்  அலுவலகங்களுக்கு சென்று, அங்கிருந்து வேலை செய்ய மறுத்தனர். பின்னர் அலுவலகத்திற்கு செல்லாமல் போராட முடிவெடுத்த பொழுது வேலைநிறுத்தம் தோல்வி கண்டது. எனினும் வேலை நிறுத்தத்தின் போது செயல்பட்ட இயக்க பணியாளர்கள்,  அரசாங்க தொழிற் சங்கம் உண்மையிலேயே தோன்றியிருந்தன என்பதை சுட்டிக்காட்டுகின்றது.

வேலை நிறுத்தத்தின் போது 37 தொழிலாளர்கள் ஜம்மு-ல் கைது செய்யப்பட்டனர். காஷ்மீரில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். காஷ்மீரிலிருந்து (சம்பத் பிரகாஷ் போன்ற) தொழிற்சங்கவாதிகள் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்களை சந்தித்து, சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு திரட்டினர். இந்த காலக்கட்டத்தில் தான்  இந்தியாவில் உள்ள தொழிற்சங்க இயக்கங்கள் காஷ்மீர் தொழிலாளர்களுடன் ஆதரவு கொடுத்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து தலைவர்கள் மற்றும்  இடதுசாரி மத்திய தொழிற்சங்கங்கத்தினர், காஷ்மீர் சென்று   2 நாள்  உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் விடுவிக்கப்படாவிட்டால்  தேசிய அளவிலான பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்படும் என்று அரசிற்கு தெரிவித்தனர். அனைத்துப் பக்கங்களிலும் ஏற்பட்ட இந்த அழுத்தத்தின் காரணமாக இறுதியாக கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை  காஷ்மீர் அரசு விடுதலை செய்தது.

1970 ஆம் ஆண்டிற்குள்,  ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க ஊழியர்கள் பங்குகொள்ளுமாறு பல சுயாதீன சங்கங்களை உருவாக்க முயற்சி நடந்து கொண்டிருந்தது. காஷ்மீரில் 1970ஆம்  ஆண்டு  மே  தினத்தன்று ஒவ்வொரு சங்கமும் தங்கள் சொந்த கொடி மற்றும் பேனர்களுடன்  ஸ்ரீநகர் தெருக்களில் அணிவகுத்துச் சென்றனர். அங்கு  அது ஒரு முதல் மாபெரும் மே தினமாக கொண்டாடப்பட்டது.

1971 ஆம் ஆண்டில், கூட்டமைப்பானது  ஜம்மு அத்துடன் காஷ்மீர் ஆகிய இரு பகுதிகளிலும் ஒரு குறிப்பிடத்தக்க வகையில் இயக்க பணியாளர்களை ஒன்று திரட்டியது. மேலும்  ஜவுளி ஆலை தொழிற்சங்கம் போன்ற மற்ற தொழிற்சங்கங்களுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்தது. குறிப்பிடத்தக்க வேலைநிறுத்தங்கள் மற்றும் வெற்றிகரமான பிரச்சாரங்கள் அடுத்த சில ஆண்டுகளில் நடந்தது.

(1)  சஃபாய் கரம்ச்சாரி என்னும் நகராட்சியால்  நியமிக்கப்படும்   துப்புரவாளர்கள், 1973 ஆம் ஆண்டு  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த துப்புரவு தொழிலாளர்கள் இந்துக்களால்  தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டனர். முஸ்லிம்களும் இவர்களை புறக்கணித்தனர். அவர்கள் ஒதுக்கப்பட்ட இழிவான நிலையில் தள்ளப்பட்டனர்.  அவர்களின் தொழில் ஆபத்துமிக்கதாய் இருந்ததால், அவர்களுடைய கோரிக்கை ‘சிறப்பு ஆபத்து கொடுப்பனவாக’ ( Special Risk Allowance) இருந்தது. பல அதிகாரிகள் அந்நாட்களில் உலர் கழிப்பறைகளை உபயோகித்ததால், தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் உடனடி விளைவை பெற்றுத் தந்தது. அதிலும் துப்புரவு தொழிலாள பெண்கள் வித்தியாசமான முறையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது ஒரு மறக்கமுடியாத சம்பவமாக திகழ்ந்தது . அவர்கள் தலைமை செயலாளர் அலுவலகத்திற்கு அணிவகுத்துச் சென்று,  அங்கு தங்கள் குழந்தைகளை கிடத்தி விட்டு சென்றனர். மேலும் அது பருவமழை காலம்  வேறு, தொழிலாளர்கள், அனைத்து சாக்கடைகளையும் அடைத்தனர். இந்த நடவடிக்கைகள் அனைத்திற்கும் பெரிய விளைவு  இருந்தது.  9 நாட்கள் மட்டுமே நடந்த வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றியை தந்தது. தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் மற்றும் நிரந்தர வேலை கிடைத்தது. பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு கொடுக்கப்பட்டது.  துப்புரவு தொழிலாளர்கள் சங்கமானது அடுத்துவந்த ஆண்டுகளில் அரசாங்க ஊழியர் சங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாக உருபெற்றது.

(2)  தோட்டங்கள் மற்றும் பூங்காக்கள் துறையை சார்ந்த ஊழியர்களின்  வெற்றிகரமான வேலைநிறுத்தமும் அக்காலக்கட்டத்தில்  நடைபெற்றது. காஷ்மீரி தோட்டங்கள் முக்கிய சுற்றுலா மையமாக அமைந்ததற்கு இந்த ஊழியர்களின் பங்கு மிகமுக்கிய காரணம் ஆகும். எனினும், இவர்களின்  சொந்த நிலைமை பரிதாபத்திற்குரியதாகவே இருந்தன. அவர்களுக்கென்று முறையான வரையறுக்கப்பட்ட பணி நேரங்கள் இல்லை. பெரும்பாலும் வழக்கத்திற்கு அதிகமான நேரங்களில் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர்.சீருடைகள் இல்லை. முறையான ஒப்பந்தங்களும் இல்லை. மேலும் அதிகாரிகளின் சொந்த தோட்டங்களை சம்பளமின்றி பராமரித்தும் இவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது. சங்கத்தின் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து 1973 ஆம் ஆண்டில் கருப்பு கொடி ஏந்தி தங்கள் உரிமைகளுக்காக போராடினர். அவர்களின் வேலைநிறுத்த போராட்டம் பெரும் வெற்றியாக திகழ்ந்தது. முறையான பணி நேரம், சீருடைகள்,  ஒருமணி நேர மதிய உணவு இடைவேளை மற்றும் சம்பளத்துடன் கூடிய மிகை நேரப்பணி என இந்த வேலைநிறுத்தத்திற்கு சிறந்த விளைவுகளே கிட்டியது.

(3) தோழர் சம்பத் பிரகாஷ் அவர்களின் தலைமையின் கீழ், சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று கருதப்படுகிற கூலித்தொழிலாளர்கள் ஒன்றிணைந்தனர். ஊதியம் இல்லாமல் தங்கள் வீட்டு வேலைகளை செய்ய பொறியாளர்கள் அவர்களை பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அக்டோபர் 1973 இல் தொடங்கிய வேலைநிறுத்தம் ஒரு வாரம் மட்டும நீடித்தது, ஆனால் அதன் பிறகு அவ்ர்களின்  நீண்ட பிரச்சாரம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இறுதியில் 1978 ஆம் ஆண்டில், பிரச்சாரம்  பலனைக் கண்டது. அவர்களின் வேலை முறைப்படுத்தப்பட்டது , நான்காம் நிலை  அந்தஸ்து அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அத்துடன்  பணி உபகாரம்  மற்றும் ஓய்வூதியமும் தரப்பட்டது

நந்திதா ஹஸ்கர் குறிப்பிடுவதாவது,  ‘தொழிற்சங்த்தின் சாதனைகள் அரசு ஊழியர்களுக்கு பெரிய உந்துதலாய் இருந்தது. பலர் பேரணிகளிலும் போராட்டங்களிலும் கூடுகைகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.பொதுத்துறை நிறுவனங்களின் உள்ள ஆசிரியர்கள், குமாஸ்தாக்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட நாற்பது லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலை நிலை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தது’

அதே சமயம் காஷ்மீர் தொழிற்சங்க இயக்கம் மற்றொரு போரினைப் போராடத் தொடங்கி இருந்ததை நாம் கவனிக்க வேண்டும்.  ஜம்மு மற்றும் காஷ்மீர் இரண்டிலும் இக்காலக்கட்டத்தில் வகுப்புவாத சக்திகளின் வலிமை அதிகரித்து வந்தது.  ஒருபுறம் ஜம்முவில், தொழிற்சங்கத்தினரை சீன ஏஜண்டுகளாக RSS சித்தரித்துக் கொண்டிருக்க, மறுபுறம் காஷ்மீரிலோ ஜமாத் இ இஸ்லாமி என்னும் இனவாத இயக்கம் தங்கள் இருப்பை அதிகரித்து கொண்டிருந்தது. அந்த காலத்தில் தொழிற்சங்கத்தினரின் சாட்சிகள் தெளிவாக ஒன்றை குறிப்பிடுகின்றனர். அதாவது, அரசு ஊழியர்கள் கூட்டமைப்பானது, தொடர்ந்து  தொழிலாளர்கள் மத்தியில் மதச்சார்பற்ற அரசியல் விவாதங்களை கொண்டு சென்றதன் மூலம் இனவாத சக்திகளை எதிர்க்க முயற்சித்ததாம். அந்த காலத்தில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்கத்தினர் பலரின் சாட்சியங்களும் அவர்கள் காஷ்மீரின்  சுயநிர்ணய  உரிமைக்காய் குரல்கொடுத்து  நின்றனர் என்பதை தெளிவாக்குகிறது. 1974 இல் ஷேக் அப்துல்லா இந்திரா காந்திக்கு இடையேயான ஒப்பந்ததின் மூலம் காஷ்மீர், இந்திய  அரசியல் பிரிவின் கீழ்  அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தொழிற்சங்கவாதிகள் சீற்றம் கொண்டனர். மேலும் ஷேக் அப்துல்லாவை பகிரங்கமாக விமர்சித்தனர்.

இந்தியாவில் மீதமுள்ள பகுதிகளில் அவசர நிலை  பிரகடனப்படுத்தப்பட்ட போது காஷ்மீரிலும் ஷேக் அப்துல்லா அதை கொண்டு வந்தார்.  தொழிற்சங்கவாதிகள் ஒன்று தலைமறைவாகி  இருந்தனர் அல்லது கைது செய்யப்பட்டனர். இயக்கம், பலத்த பாதிப்பினை சந்தித்தது. மாநில அரசு, தொழிற்சங்க ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர்களை குறிவைத்து தாக்கியது. அவசரநிலை காலத்தில், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் சிறை கம்பிகளுக்கு பின்னால் தள்ளப்பட்டனர்.  சேவைகளில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும்  விசாரணை மையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

அவசர நிலைக்கு பின்னர் தொழிற்சங்கங்கள் ஒரு அரசியல் மாற்றத்தை கண்டது. அதுவரை இயக்கத்தின் இருந்த உயர்மட்ட தலைவர்கள், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சித்தாந்தம் கொண்டவர்களாய் இருந்திருந்தனர் மேலும் அவர்கள் தெளிவாக காஷ்மீர் சுயநிர்ணயத்தின் பக்கம் நின்றனர். அவசர நிலைக்கு பின்னர், தலைமையில் விரிசல் ஏற்பட்டது. அரசாங்க ஊழியர் கூட்டமைப்பானது சிபிஐ (எம்) உடன் இணைந்தது. (எனினும் அது அதே பெயரில் தான் தொடர்ந்து இயங்கியது). 1980 களில் கூட்டமைப்பு, காஷ்மீரின் பல்வேறு  பகுதிகளில் இருந்த தொழிலாளர்களை தொழிற்சங்கத்தில் தொடர்ந்து இணைத்தது. தொழிற்சங்கவாதிகளில் ஒருவரான பூனூ, லடாக் பகுதியில் கூட தொழிலாளர்களை வழி நடத்தி,  ஊதிய கமிஷனை அமல்படுத்த கோரி வேலைநிறுத்தங்களை நடத்தினார்.  பூனூவின் சாட்சி பகிர்தலின் படி, ‘ காஷ்மீர் தொழிலாளர்கள் மாதங்கள் மற்றும் ஆண்டுக்கணக்கில் நீடித்திருந்த கிளர்ச்சியின் மத்தியில் அயராது வேலை செய்து காஷ்மீரின் பொருளாதாரத்தை அழிவில் இருந்து மீட்டனர். இதற்கு கூட்டமைப்பின் பங்கு மிகப்பெரிதாகும்’  என்று குறிப்பிடுகின்றார்.

1980 களில், கிளர்ச்சிக்கு முன்னர், கூட்டமைப்பு,  ஊதிய கமிஷனை செயல்படுத்த தொடர்ந்து போராடியது. 1987இல்  MUFஇன் (முஸ்லீம் ஐக்கிய முன்னணி) செல்வாக்கு வளர்ந்தது. செல்வந்தரான முஸ்லிம்களைக் கொண்ட இந்த அமைப்பு தங்களுக்கென்று சொந்தமாக தொழிற்சங்கம் கூட அமைத்துக் கொண்டனர். அவர்களின் பேரணிகளில் இயல்பாகவே மதவாத தன்மை காணப்பட்டது.  ஊதியக்குழுவை செயல்படுத்த  MUF அமைப்பினர் எந்த நேரத்தில் பேரணிகள் ஏற்பாடு செய்தனரோ சரியாக அதே நேரத்தில் அரசாங்க ஊழியர் கூட்டமைப்பினரும் பேரணிகள் ஏற்பாடு செய்தனர். இவ்வாறாக கிளர்ச்சியின் வருகை வரை, தொழிற்சங்க கூட்டமைப்பு, காஷ்மீரில் வகுப்புவாதத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தது.

கிளர்ச்சி தொடங்கிய பின், காஷ்மீர் முன்பு எப்போதுமே கண்டிராத ராணுவமயமாக்குதலையும், இந்திய அரசின்  அடக்குமுறையையும் அலையெனக் கண்டது. அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றும் தப்பவில்லை.
1990 ஆம் ஆண்டில், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர் 72 நாட்களாக நீண்ட வேலை நிறுத்தம் செய்தனர். ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலிகளாகிய அனைத்து 24,000 ஊழியர்களும் இதில் கைது செய்யப்பட்டனர். காவல் காலம் 6 மாதங்கள் வரை இருந்திருந்தது.

90 -களில் அரசாங்க ஊழியர் சங்கத்தினரால், குறிப்பிடத்தக்க மற்ற வேலைநிறுத்தங்களும் நடைபெற்றன. 1991 ல் 42 நாள் வேலைநிறுத்தமும் ,  1999 ல் மற்றொரு 42 நாள் வேலைநிறுத்தமும், 1995ஆம் ஆண்டில் 23 நாள் வேலைநிறுத்தம் நிகழ்ந்தது. தொழிலாளர்கள் அனைவரும் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இவ்விதமான உரிமை மீறல், இன்றைய காலக்கட்டத்தில், நாட்டின் பிற பகுதிகளிலும் பரவி வருகிறதை காண முடிகின்றது.

அத்துடன் அரசு ஊழியர்கள் அப்போதைய காலத்தில் கொலையும் செய்யப்பட்டனர். தோழர் சம்பத் பிரகாஷின் கணித்தலின் படி, கிட்டதட்ட 400  தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், பாதுகாப்பு படை மற்றும் அடையாளம் தெரியாதவர்கள் மூலம் கொல்லப்பட்டதாக தெரிய வருகின்றது.  கடைசி 26 ஆண்டுகளில் இளைஞர்கள் காணாமல் போவதும், விசாரணை மையங்களில் சித்திரவதைகள் அரங்கேறுவதும் காஷ்மீர் மக்களின் வாழ்க்கையில்  ஒன்றிப்போன நிகழ்வாக மாறிவிட்டது. இது அரசு ஊழியர்களையும், தொழிலாளர்களையும் விட்டுவைக்கவில்லை. 300 ஊழியர்கள் காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் விசாரணை மையங்களில் சித்திரவதைக்கு உள்ளானனர்.

21 ஆம் நூற்றாண்டில் கூட காஷ்மீரி தொழிலாள வர்க்கம் நடத்திய வேலைநிறுத்தங்கள் அவர்களின் எதிர்ப்புக்களின் ஒரு புதிய அலையை காட்டுகின்றது. ஜம்மு காஷ்மீர் மாநில சாலை போக்குவரத்து கழகம் (JKSRTC),2008ஆம் ஆண்டில் போராட்டத்தை தொடங்கியது. ஒரு புறம்  அவர்களின் மேலாண்மை  அவர்களை VRS பெற்றுக்கொள்ள கோரி வற்புறுத்தி, மறுபுறம் ஊழியர்களின் வாழும் கொடுப்பனவு மற்றும் இதர பின் ஊதியங்கள் கொடுக்க மறுத்தபொழுது அவர்கள் போராட்டத்தை கையில் எடுத்தனர். தொழிற்சங்கங்கள் தலையிட்டபின், மேலாண்மை, ஊதியம் செலுத்தவதாக ஒரு தவறான வாக்குறுதி அளித்தது. பின் ஊதியம் பெறப்படாத நிலையில் 2009 ல், மீண்டும்  JKSRTC தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தது. இந்த நிகழ்வில் தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு குணத்தை கட்டுபடுத்தியதாக தொழிற்சங்கங்கள் மீது ஒரு கருத்து உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முறையான சம்பளம் மற்றும் வேலை நிரந்தரம் போன்ற கோரிக்கைகளுடன் பின் ஊதியம் கொடுக்கத் தவறியமையும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அன்றாட நிகழ்வாகி விட்டது. ஏப்ரல் 3, 2010 அன்று,  450,000 அரசாங்க ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். பள்ளிகள், பொதுப் போக்குவரத்து மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. 5 ஏப்ரல் அன்று, அரசாங்கம் தொழிலாளர்கள் மீது [ESMA] சட்டத்தினை செயல்படுத்தியது. அதாவது, வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால், அவர்கள் ஓராண்டு சிறை தண்டனை எதிர்கொள்ள வேண்டும். ஏப்ரல் 10 அன்று, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பதின்மூன்று தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யக் கோரி மற்ற தொழிலாளர்கள் ஊர்வலம் நடத்தினர். அதில் பங்கேற்ற  தொழிலாளர்களை போலீஸ் தடியடி நடத்தி  தாக்கினர். இது தொழிலாளர்களை திரும்ப தாக்க தூண்டியது.    தீவிரவாதத்தை மட்டும் வெளியிட்டு வரும் வெகுஜன செய்தி ஊடகங்கள் தொழிலாள வர்க்கம் மற்றும் மாநில இயந்திரத்திற்கும்  இடையே நடந்த மோதலை  வெளியிடுவதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

This entry was posted in Art & Life, Public Sector workers, Workers Struggles, Working class against communalism, Working Class Vision, தமிழ். Bookmark the permalink.