மீட்டெடுப்போம் வேலை நிறுத்த உரிமையை – எஸ்.சம்பத்

இந்திய தொழிலாளி வர்க்கம் கடுமையான சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரமிது. மத்தியில் ஆளுகின்ற பிஜேபி மோடி அரசு தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிற்சாலை சட்டங்கள், தொழிற்சங்க சட்டம் போன்ற பல சட்டங்களில் பெரிய அளவிலான திருத்தங்களை மேற்கொண்டு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக நாற்பதிற்கும் மேலான சட்டங்களை நான்கைந்து சட்டங்களுக்குள் சுருக்கி அமைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

எட்டாக்கனியான பணி நிரந்தரம்

தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த முறை பணி என்பது தற்போது மத்திய, மாநில அரசு பொதுத் துறைகளுக்கும் பரவிவிட்டது. ரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்துப் பணிகளை சிறு சிறு பகுதிகளாக பிரித்து ஒப்பந்த பணிகளாக தனியார்களிடம் விடும் நடவடிக்கை என்பது அதிகரித்துள்ளது. அதன் காரணமாக பணி நிரந்தரம் என்றால் என்ன என்ற கேள்வி எழும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

போராடும் உரிமை முடக்கப்படுகிறதா?

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஊதிய ஒப்பந்தம் முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் புதிய ஒப்பந்தத்தை வலியுறுத்தியும், 3 ஆண்டுகளாக நிலுைவயிருக்கும் பணிமுடிவு பயன்களை உடனடியாக தீர்க்க வலியுறுத்தியும், சட்ட நடைமுறைகளுக்குட்பட்டு பல்வேறு போராட்டங்கள், இயக்கங்கள் நடத்தியபின்னரும் தீர்வு வராத நிலையில், பெரும்பான்மை தொழிலாளர்களை கொண்டிருக்கிற தொழிற்சங்க சம்மேளனங்களின் கூட்டமைப்பு சார்பில், தொழிற் தாவாச் சட்டத்தின் கீழ் முறையான முன்னறிவிப்பு கொடுத்து கடந்த மே 15, 16 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.

உடனடியாக வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு முன்பாக பொது நல வழக்கு ஒன்று தொடர்ந்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டுமெனவும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்திரவிடவும் வேண்டினார். (இந்த இடத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும். எஸ்மா என்பது மத்திய பாராளுமன்றம் இயற்றிய சட்டம், அதை மாநிலத்தில் பிரயோகிக்க வேண்டுமெனில் 6 மாதத்திற்கொருமுறை சட்டமன்ற அனுமதிபெற்று அதற்கான அதிகாரத்தை மாநில அரசு புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறிருக்க ஒருபுறம் தொ.தா.சட்ட விதிகளுக்கிணங்க முறையான முன்னறிவிப்பு கொடுத்து, சமரச அலுவலர் தலையிடாத சூழலில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளும் தொழிற்தாவாச் சட்ட வரம்பினுள் இருக்கும் தொழிலாளர் மீது எஸ்மா சட்டத்தை பிரயோகிக்க முடியுமா? என்ற கேள்வியும், தனியொரு நபர் தனக்கோ, மற்றவர்களுக்கோபொதுவாகவோ தேவைப்படும் நிவாரணத்தை கோருவதை விடுத்து, குறிப்பிட்ட சட்டத்தை பிரயோகப்படுத்து என அரசிற்கு உத்திரவிடு என நீதிமன்றத்திடம் வேண்டுகை வைக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது. தனிநபர் சட்டமன்ற அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறாரா? நிர்வாக அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறாரா? என்கிற விவாதத்திற்குரிய கேள்வியும் எழுகிறது.)

இரண்டாம் நாள் வேலை நிறுத்தத்தின் போது ஒருபுறம் 3 தமிழக அமைச்சர்கள் தலைமையில் தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடந்தது. மறுபுறம் மேற்சொன்ன வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இரண்டு, மூன்று சுற்றுகள் பேச்சு வார்த்தைக்கு பிறகு அரசு தரப்பில் முதல் கட்டமாக ஓய்வு பெற்றவர்கள் நிலுவைகளை தீர்க்க 1250 கோடி ஒதுக்குவதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதன் நடுவில் உயர்நீதிமன்றமும் வேலை நிறுத்தமும் அடுத்த நாள் தொடரா வண்ணம் தடை பிறப்பித்ததோடு, ஏன் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தனர்.

போக்குவரத்துத் தொழிலாளியின் பொது நல வழக்கு

இந்த நிகழ்வுகள் செய்தித்தாள்களில் செய்தியாக வந்ததை பார்த்த, பல வருடங்களுக்கு முன்பாக போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு மாயாண்டி சேர்வை என்பவர், மேற்சொன்ன வழக்கை விசாரித்த நீதிபதிகள் இருவரின் பெயரையும் முகவரியில் குறிப்பிட்டு அஞ்சல் அட்டை ஒன்றை எழுதி உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார். அதில் 24 மணி நேர சுழற்சியில் மழை, வெயில் என பாராது பேருந்து பணியாற்றும் தொழிலாளியை நோக்கி எஸ்மா சட்டம் பாயும் என தெரிவிக்கும் நீதிமன்றம், ஓய்வு பெற்ற பின் அந்த தொழிலாளி எந்த பணமும் கிடைக்காமல் சாகச் சொல்கிறதா? அவனுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது, ஏன் ஓய்வு கால பணப் பயன்கள் பட்டுவாடா செய்யப்படவில்லை? என நிர்வாகத்தை அல்லவா கேள்வி கேட்டிருக்க வேண்டும் என்கிற தொனியில் அவரது கடிதம் அமைந்திருந்தது.

அதைக் கண்டு துணுக்குற்ற நீதிமன்றம், அந்த அஞ்சல் அட்டையையே தாமாக முன்வந்து எடுத்துக் கொள்ளும் பொது நல வழக்காக எடுத்துக் கொண்டது. நீ.பே.(மஅ)எண் 10126/2017 என எண்ணிடப்பட்டு தொழிற்சங்கங்களையும் எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்ள நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியது. 10 தொழிற்சங்க சம்மேளனங்கள் அதில் எதிர் மனுதாரா்களாக இணைந்து கொண்டனர். 2 சுற்று விசாரணைக்குப் பிறகு வழக்கு சென்னை பிரதான அமர்விற்கு மாற்றப்பட்டது. அங்கு சுமார் 6 விசாரணைக்குப் பிறகு அரசு ஓய்வு பெற்றவர்களின் தொகைகளை 07/10/2017ற்குள் தீர்வு செய்ய வேண்டும் என்கிற இடைக்கால உத்திரவுடன் 22/09/2017ற்கு ஒத்தி வைத்துள்ளது.

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தமும், நீதிமன்ற தலையீடும்

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மற்றும் நீதிபதிகளுக்கு பழைய பென்சன் திட்டம் என்றிருக்கும் போது, 2003ற்கு பின்னர் சேர்ந்த பணியாளர்களுக்கு மட்டும் புதிய ஓய்வூதியத் திட்டமா? புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடு, 7 வது ஊதியக் குழு பரிந்துரையின்படி மாநில அரசு பணியாளர்களுக்கு சம்பளத்தை மாற்றியமை என்கிற கோரிக்கைகளின் மீது ஏறக்குறைய ஓராண்டிற்கும் மேலாக பல்வேறு இயக்கங்கள் நடத்தியும் பயனில்லாத நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்புகள் முடிவு செய்து கடந்த 08/09/2017 முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

உடனடியாக தற்போதும் மற்றொரு வழக்கறிஞர் ஒரு பொது நல வழக்கை தொடர்ந்ததில், உயர்நீதிமன்றம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்துள்ளது. அதன் பின்னரும் வேலை நிறுத்தம் தொடர்வதால், நீதிமன்ற அவமதிப்பு என ஏன் கருதக்கூடாது என தொழிற்சங்க தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, நீதிமன்றம் முன்பாக ஆஜராக உத்திரவிட்டது. நீதிமன்றம் முன்பாக ஆஜரான ஜாக்டோஜியோ கூட்டமைப்பு தலைவர்கள் அவர்கள் தரப்பு நியாயங்களை பட்டியலிட்டு பிரமாண உறுதியுரை தாக்கல் செய்த போதிலும், ஒருபுறம் அரசிடம் விளக்கம் கேட்டும், மறுபுறம் உடனடியாக வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என கடுமையாக உத்திரவிட்டதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இவற்றின் பின்னணியில் அரசியலமைப்புச் சட்ட உறுபு 19(1)(b)(c) அளித்துள்ள ஒன்று கூடி உரிமைகளை கோரும் உரிமை பறிக்கப்படுகிறதா? இதன் மீது அகில இந்திய தொழிற்சங்கங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கும் வகையில் சில கருத்துக்களை பார்ப்போம்.

பொதுவாக அனைத்து தொழிற்சாலைகள் சார்ந்த தொழிலாளர்கள் தொழிற் தாவாச் சட்ட வரம்பிற்கு உட்பட்டு வருவார்கள். அரசு ஊழியர்கள் அரசின் பணிவிதிகளின் கீழ் கட்டுப்பட்டவர்கள் என்ற வைகயில் வைக்கப்படுவார்கள். வேலை நிறுத்தம் என்பது சட்டப்படியான உரிமை என அரசு ஊழியர்களுக்கு சொல்லப்படவில்லை என்ற போதிலும் தார்மீக ரீதியாகவும், சமத்துவ அடிப்படையிலும் எவ்வித உரிமையும் கிடையாது என டி.கே.ரெங்கராஜன் மற்றும் சிலர் தமிழ்நாடு அரசு என்ற (இனிமேல் டி.கே.ரெங்கராஜன் வழக்கு என சுருக்கமாக குறிப்பிடப்படும்) வழக்கு தீர்வில் சொல்லப்பட்டதும் விவாதத்திற்குரிய ஒன்றாகும்.

டி.கே.ரெங்கராஜன் வழக்கு தீர்வானது தொழிற்தாவாச் சட்டம் 1947 மற்றும் தொழிற்சங்க சட்டம் 1926 ஆகியவற்றின் வகையங்களை முற்றிலும் புறந்தள்ளிய வகையில் அமைந்தது. மேலும் இது சர்வதேச தொழிலாளர் மாநாடுகளின் தீர்மானங்களையும் உடன்படிக்கைகளையும் புறந்தள்ளியதாக அமைந்தது. 2003ல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது சுமார் 1.5 லட்சம் பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பணியாளர்களை மீளப் பணியமர்த்திக் கொள்ள உத்திரவிட்ட போதிலும், இந்திய உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து அரசு ஊழியர்களுக்கு வேலை நிறுத்த உரிமையில்லை என்ற கருத்தை பதிவு செய்தது. முன்னதாக பல தீர்வுகளில் வேலை நிறுத்த உரிமை குறித்து இதே உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை தொழிலாளர்கள் தொடர்ந்து பல இயக்கங்கள் நடத்திய பின்னரும், அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், அவர்களின் கடைசி ஆயுதமாக வேலை நிறுத்தம் என்பது தவிர்க்க இயலாது என்பதும், அவர்களுக்கு தொழிலாளர் நலச் சட்டங்கள் அத்தகைய உள்ளார்ந்த அர்த்தம் பொதிந்த உரிமையை வழங்கியுள்ளது என பாங்க் ஆப் இந்தியா டி.எஸ்.கேலவாலா (1990 (4) SCC 744) என்ற வழக்குத் தீர்வில் உச்ச நீதிமன்ற அமர்வு தெளிவு படுத்தியுள்ளது.

பி.ஆர்.சிங் இந்திய அரசு (1990 Lab IC 389-396 SC) என்ற வழக்குத் தீர்வில் உச்ச நீதிமன்ற நீதியரசர் அஹ்மாதி கருத்து தெரிவிக்கையில், தனி தொழிலாளியை விட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்கமாக கோரிக்கை வைக்கிறபோது, கூட்டுப்பேர உரிமையில் அவர்கள் பலம் ஓங்கியிருக்கும். அதே சமயம் அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப்படி வேலை, மெதுவாக இயக்குதல், உள்ளிருப்பு வேலை நிறுத்தம், மற்றும் வேலை நிறுத்தம் போன்றவற்றை நிர்வாகம் தடைசெய்யுமானால், அவர்களின் கோரிக்கை மீதான சமரச பேச்சு வார்த்தையில் கூட்டுப் பேர உரிமையின் சக்தி குறைக்கப்பட்டதாக ஆகிவிடும் என தெரிவித்துள்ளார்.

குஜராத் ஸ்டீல் டியூப்ஸ் அதன் மஸ்தூர் சபா (AIR 1980 SC 1896) என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வினால் விசாரிக்கப்பட்டது. அதன் தீர்வில் நீதியரசர் பகவதி கருத்துத் தெரிவிக்கையில் வேலை நிறுத்த உரிமை என்பது தொழிலாளர்களின் கூட்டுப்பேர உரிமையுடன் உட்பொதிந்த உரிமையாகும் என்றார். மேலும் இந்த உரிமையானது தொழிற்தாவாச் சட்டங்களினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதுடன் ஒரு சமூக நீதிசார்ந்ததும் ஆகும் என்றார். இவ்வாறு 3 நீதிபதிகள் அமர்வில் சொல்லப்பட்ட தீர்வை 2 நீதிபதிகள் தீர்வு எவ்வாறு முற்றிலும் புறந்தள்ள முடியும் என்கிற கேள்வியும் எழுகிறது.

மேலும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமை என்பதே முதலாளிகள் தங்களின் உரிமை என கருதிக் கொள்கிற கதவடைப்பு என்பதிலிருந்து பிறந்தது என காயர்பிட்டா எஸ்டேட் ராஜமாணிக்கம் (1960 II LLJ 275 SC) என்ற வழக்குத் தீர்வில் நீதியரசர் கஜேந்திரகட்கர் தெரிவிக்கிறார். துரதிருஷ்டவசமாக தொழிலாளர்கள் வேலை நிறுத்த உரிமையை கடுமையாக சாடிய டி.கே.ரெங்கராஜன் வழக்குத் தீர்வில் கதவடைப்பு தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

தொழிற்தாவாச் சட்டம் 1947ல் 15 நாட்கள் முன்னறிவிப்பு கொடுத்து வேலை நிறுத்தம் மேற்கொள்ளலாம் என சொல்லப்பட்டுள்ளது. அதை தவிர தொழிற்சங்கச் சட்டம் 1926ன் பிரிவுகள் 18(xiii) மற்றும் 19(xiv) ஆகியவற்றில் தொழிலாளர்கள் தங்கள் சமூக பொறுப்பிலிருந்து விலகி நின்று வேலை நிறுத்தம் செய்வது பற்றி விவரிக்கிறது.

சர்வதேச உடன்படிக்கைகளின் படியான உரிமை

இவைகளுக்கு அப்பாற்பட்டு சர்வதேச தொழிலாளர் உடன்படிக்கையில் இந்தியாவும் பங்கேற்று ஒப்பமிட்ட நாடு என்ற அடிப்படையில், அதன் தீர்மானங்களுக்கு கட்டுப்பட வேண்டும். அந்த சர்வதேச பிரகடனத்தின் 87 வது சரத்தானது ஒன்று கூடும் உரிமை பற்றியும், உரிமையை பாதுகாக்க ஒருங்கிணப்பது பற்றியும் தெரிவிக்கிறது.

தவிர பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையின் உறுபு 8(1)(d)யில் அதில் பங்கேற்ற நாடுகள் அதன் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாக்கிற வகையில் செயல்பட வேண்டும் என தெரிவிக்கிறது.

முடிவுரை

2003ம் ஆண்டு சுமார் 1.5 லட்சம் அரசு ஊழியர்கள் பணிநீக்கத்தின் மீது உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவர்களை மீளப் பணியமர்த்திக் கொள்ள சொன்னவுடன் அப்போதைக்கு அதுவே மிகப்பெரிய நிவாரணம் என்கிற அடிப்படையில் அகில இந்திய தொழிற்சங்க சம்மேளனங்கள் டி.கே.ரெங்கராஜன் மற்றும் சிலர் தமிழ்நாடு அரசு என்ற (2003 SOL Case No.429) என்ற வழக்குத் தீர்வில் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் எம்.பி.ஷா மற்றும் .ஆர்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய அமர்வு வேலை நிறுத்தம் என்பது அடிப்படை உரிமை ஆகாது என தெரிவித்த தீர்வின் மீது சீராய்வு மனு அல்லது, தொழிலாளர் நலச் சட்டங்களை முன்னிறுத்தி அதன் மீதான அர்த்தம் கொள்வது (interpretation) குறித்து 3 அல்லது 5 நீதிபதிகள் அமர்வின் முன்பாக கொண்டு செல்ல தவறிவிட்டன என்றே சொல்ல வேண்டும்.

அதுதான் இன்றைக்கு முதலாளித்துவ நிலைப்பாட்டிற்கு மிக ஊக்கமளிப்பதாக அமைந்துவிட்டது என்பதுடன், தொழிலாளர்களின் ஒன்று கூடும் உரிமை, இயக்கங்கள் நடத்துவதற்கான உரிமைகள் மீதெல்லாம் கேள்வி எழுப்பும் நிலையை தோற்றுவித்துவிட்டது. சமீபத்தில் ஜே.கே.டயர்ஸ் நிறுவனத்தில் ஆலை முன்பாக தொழிலாளர்கள் அணிதிரள்வதையே நீதிமன்றம் தடை செய்திருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்ட உறுபு 13(2)ல் இந்த பாகத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள உரிமைகைள குறைக்கக் கூடிய அல்லது பறிக்கக் கூடிய எந்தச் சட்டத்தையும் அரசு உருவாக்கக் கூடாது. அப்படி மீறி உருவாக்கப்படும் சட்டம் எதுவும் செல்லத்தக்கதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளதை முன்னிறுத்தி அரசியலமைப்புச் சட்டம், தொழிற்தாவாச் சட்டம், தொழிற்சங்க சட்டம் ஆகியவை அளித்துள்ள குறைந்தபட்ச போராடும் உரிமையை மீட்டெடுக்க இந்திய உச்சநீதிமன்றத்தின் 3ற்கு மேற்பட்ட நீதியரசர்கள் அமர்வில் சீராய்வு கேட்டு அகில இந்திய தொழிற்சங்க சம்மேளனங்கள் மனுச் செய்ய வேண்டும்.

(கட்டுரையாளர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம் என்கிற அமைப்பின் மாநில நிர்வாகி)

This entry was posted in Analysis & Opinions, Featured, Public Sector workers, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , . Bookmark the permalink.