மாநகராட்சி அலுவலகத்தின் முன் தர்ணா – ஒப்பந்ததாரர்களை நீக்க பங்களுர் துப்புரவு தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம்

தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக செயல்படுத்தக் கோரும் இணையதள மனுவில் கையெழுத்திடவும் : Change.org petition to the Chief Minister of Karnataka about violations on pourakarmika workers by contractors

பங்களுரில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடியதன் விளைவாக, ஜுன் மாதத்தில் கர்னாடகா அரசு துப்புரவுப் பணிகளில் ஒப்பந்ததாரர் முறையை ஒழித்து தொழிலாளர்களுக்கு நேரடியாக ஊதியம் கொடுக்கப் பணிந்தது(http://tnlabour.in/news/5867). ஆனால் மாநில அரசின் ஆணையை மீறி BBMP மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை ஈடுபடுத்துவதால், தொழிலாளர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.

ஒப்பந்த முறையை ஒழிக்கும் அரசாணையை எதிர்த்து ஒப்பந்ததாரர்கள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர். ஆனால் இவ்வேலை நிறுத்தங்களையும் ஒப்பந்ததாரர்களின் மிரட்டல்களையும் புறக்கணித்து தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு அடாவடி வேலைகளை செய்த ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து துப்புரவு தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். ஆனால் ஒப்பந்ததாரர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல், மாநில அரசு எஸ்மா சட்டத்தை பிரயோகித்து தொழிலாளர்களின் போராட்டங்களை கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது!

மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே உள்ள கூட்டு சதி உறவால், தொழிலாளர்களை சுரண்டும் ஒப்பந்த முறை நீடித்து வருகிறது. கடந்த பல மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் தரப்படுவதில்லை, ஆனால் அவர்கள் வருடந்தோறும் ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் பணி செய்ய நேரிடுகிறது. தங்களை கேட்பதற்கு யாரும் இல்லை என்ற திமிரில் ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களை மிரட்டியும், தாக்கியும், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியும் வருகின்றனர்.

அக்டோபர் 12 அன்று கே.ஆர்.புரத்தில் (வார்ட் ந. 55), தொழிலாளர்கள் மூன்று மாத ஊதிய பாக்கியை கோரிய போது, ‘என்னுடைய பான்டில் இருந்து ஊதிய பாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள்’ என நாகேஷ் எனும் ஒப்பந்ததாரர் தொழிலாளர்களிடம் தரக்குறைவாக பேசியுள்ளார். தன் மீது பல வழக்குகள் இருந்த போதும் யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும், தன்னை எதிர்க்கும் தொழிலாளர்களை பலாத்காரம் செய்ய தயங்கமாட்டேன் என்றும் மிரட்டியுள்ளார். இது குறித்து BBMPயின் பாலியல் துன்புறுத்தல் புகார் குழுவிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தன் மீது புகார் கொடுக்கப்பட்டதை அறிந்த ஒப்பந்ததாரர், அக்டோபர் 19 அன்று 37 பெண் தொழிலாளர்களை அழைத்து இரு பெண்களை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். மேலும் அவர்களுடைய பெண் உறுப்பில் இரும்புக் கம்பியை நுழைத்து வாய் வழியே எடுக்கப் போவதாக மிரட்டியுள்ளார். தொழிலாளர்களை சாதிரீதியாக பேசியது மட்டுமல்லாமல் அவர்கள் முன் தன்னுடைய உடைகளை கழட்டியுள்ளார்! ஏற்கனவே பாதி ஊதியம் கொடுத்த போது தொழிலாளர்களின் பாஸ் புத்தகங்களையும், ஏடிஎம் கார்டுகளையும் இவர் வாங்கி வைத்துள்ளார்.

இது குறித்து தொழிலாளர்களும் தொழிற்சங்கமும் பலமுறை போராடிய பின்னரே, எஸ்சிஃஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1989 மற்றும் மனிதக்கழிவுகளை அகற்றும் தொழில்களை தடுக்கும் 2013 சட்டம் ஆகியவற்றின் கீழும், தொழிலாளர்களின் ஏடிஎம் கார்டுகளை பிடுங்கி அவர்களை ஏமாற்ற முற்பட்டதற்கான குற்றங்களுக்கும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் காவல்துறை இது வரை ஒப்பந்ததாரரை இன்னும் கைது செய்யவில்லை. அவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.

தான் ஒரு கிரிமினல் என்று பறைசாற்றிக் கொள்ளும் நாகேசுக்கு ஒப்பந்தப் பணியை BBMP அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது. BBMP தேர்ந்தெடுத்துள்ள பல ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வேண்டியவர்கள். அவர்களில் பலர் மேல் குற்ற வழக்குகள் உள்ளன. ஆனாலும் அவர்களை குப்பை எடுப்பதற்கு ஒப்பந்தங்களை மாநகராட்சி அளித்து வருகிறது. மாநகராட்சியின் ஊழல் மிகுந்த அதிகாரத்துவத்தை இது வெளிப்படுத்துகிறது.

முக்கியமாக சமீப காலத்தில் ஒப்பந்ததாரர்களால் தொழிலாளர்கள் தாக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏப்ரல் மாதத்திலும் பீன்யா பகுதியில் இரு தொழிலாளர்கள் ஊதியம் கேட்டதற்காக தாக்கப்பட்டனர். இது வரை இந்த வழக்கு மீது காவல்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாநகராட்சியும் ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை.

தலித் பெண் தொழிலாளர்களின் மேல் ஒப்பந்த முறை வன்முறையை ஏவுகின்றது என்பதற்கு இந்நிகழ்வுகள் சாட்சி. ஆண் தொழிலாளர்களும் சாதிரீதியான பேச்சுகளுக்கு ஆளாகின்றனர். சுரண்டல்மிக்க ஒப்பந்தமுறையை அழிக்காமல், துப்புரவு தொழிலாளர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் சாத்தியமில்லை.

BBMP குட்டிகே பௌரகார்மீகா சங்கா(BBMP மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கம்) ஒப்பந்த முறையை எதிர்த்து வருகிறது. தொழிலாளர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்குமாறு அவர்கள் கோரி வருகின்றனர். கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 25 அன்று அவர்கள் BBMP தலைமை அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்தினர்.
• வன்கொடுமையை தூண்டும் சுரண்டல் மிக்க ஒப்பந்தமுறையை நீக்கி தொழிலாளர்களுக்கு நேரடி ஊதியம் வழங்கவேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்.
• பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளை செயல்படுத்தப்படவேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களின் புகார்கள் மீது விசாரணை நடத்தி பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
• ஒப்பந்ததாரர் நாகேசின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து அவர் மாநிலத்தின் ஒப்பந்த முறையில் ஈடுபடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகேஷிற்கு எவ்வாறு ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரண நடத்தப்பட வேண்டும்.
• தொழிலாளர்களின் புகார்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்து தண்டனை உறுதிப்படுத்தப்படவேண்டும்;.
• துப்புரவுத் தொழிலாளர்களின் ஊதிய பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களை வன்கொடுமை மற்றும் சுரண்டல் முறைக்கு தள்ளியதற்கு, மாநகராட்சி பொது மன்னிப்பு கோர வேண்டும்.
• துப்புரவுத் தொழிலாளர்கள் மீது போடப்பட்டுள்ள எஸ்மா சட்டத்தை நீக்க வேண்டும்.

This entry was posted in Contract Workers, Sanitation Workers, Women Workers, Workers Struggles and tagged , , , , , , , . Bookmark the permalink.