லத்தீன் அமெரிக்கா உருகுவே நாட்டின் தொழிற்சங்க அமைப்பு – பி.ஐ.டி-சி.என்.டி தொழிற்சங்க செயலாளர் கேப்ரியல் மொலினாவுடன் உரையாடல்

Source: www.studentnewsdaily.com

Source: www.studentnewsdaily.com

உருகுவே நாட்டின் தொழிற்சங்க அமைப்பு, புதுமையானதாகவும், மாறுபட்டதாகவும் உள்ளது. அங்கு உள்ள 10 லட்சம் தொழிலாளர்களில் 4.5 லட்ச தொழிலாளர்கள் பி.ஐ.டி-சி.என்.டி தொழிற்சங்கத்தில் உள்ளனர். இடதுசாரி கொள்கைகளை கொண்ட இந்த தொழிற்சங்கம் எந்த கட்சியை சார்ந்தது அல்ல. கடந்த 10 வருடங்களாக பலமாய் வளர்ந்து வரும் இந்த தொழிற்சங்கம், உருகுவே சமூக மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. தொழிற் சங்க வரலாறு, அதனுடைய கட்டமைப்பு, வெற்றிகள், எதிர்கொள்ளும் பிரச்சனைகள், உருகுவே தொழிலாளர் வர்க்கத்தின் இன்றைய நிலை குறித்து தொழிற்சங்கத்தின் மோதல்-பிரச்சார செயலாளர் தோழர் கேப்ரியல் மோலினா பதில் அளிக்கிறார்.

பி.ஐ.டி-சி.என்.டி தொழிற்சங்கத்தின் வரலாறு குறித்து கூறுங்கள்..
நான் முதலில் என்ன கூற விரும்புகிறேன் என்றால் என்னுடைய கணிப்பில், நாங்கள் ஒரு உலகிலேயே தனித்துவமான சங்கம் வைத்துள்ளோம். லத்தீன் அமெரிக்காவை பொறுத்தவரை இது சரியான கூற்று. உதாரணமாக, பிரேசிலில் 5 பெரிய சங்கங்கள் உள்ளன, தற்போது இன்னும் ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
உருகுவேயில் தொழிற் சங்க வரலாறு நீளமானது. 1920வது வரை அனார்க்கிவாதிகள், சோசலிசவாதிகள், கம்யூனிஸ்டுகள் கீழ் 3 சங்கங்கள் இருந்தன.

1920க்கு பின்னர் சோசிலச சங்கம் இரண்டாக பிளவு பட்டு 1964 வரை இந்த நிலைமையே நீடித்தது. தத்துவரீதியாக இந்த தொழிற்சங்கங்களுக்கு இடையே நிறைய சச்சரவுகள் ஏற்பட்டன. அப்போது தான் இந்த சங்கங்களின் தொழிலாளர்கள் உறுப்பினர்கள் தங்களுடைய பிரச்சனைகள் ஒன்றுதான் என்றும் கருத்தியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நாம் வேலை செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்தனர். இதன் விளைவாக, 1964ல் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று இணைவதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 1965 மே 1ஆம் தேதி அதற்கான முதல் கட்ட முயற்சியாக ஒரு கூட்டு அறிக்கை விட்டனர் மேலும் தொழிற்சங்கத்தின் கூட்டு முயற்சிக்கு ஒரே பரப்பாளர் என்ற முடிவையும் முன் வைத்தனர். இந்த முயற்சிகளின் வழியாக 1966ல் சங்கங்கள் ஒன்றாக இணைந்தனர்.

தொழிலாளர் வர்க்க நலனுக்கு இது ஒரு நன்மையாக விளைந்தது. 1966 முதல் 1973 வரை பவ போராட்டங்கள் எடுத்து செல்ல பட்டன. 1973ல் சங்கம் தடை செய்யபட்டு அதன் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 1983ல் தலைவர்கள் விடுதலை செய்யபட்ட பின்னர் மீண்டும் சங்கத்தை வேறு பெயரில் ஆரம்பித்து செயல்பட்டனர்(பழைய பெயர் இன்னும் தடை செய்யபட்டே உள்ளது). 1983ல் பி.ஐ.டி என்ற பெயரில் இருந்த சங்கம் 1985ல் பி.ஐ.டி-சி.என்.டி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

பி.ஐ.டி-சி.என்.டி கட்டமைப்பு பற்றி கூற முடியுமா?
பி.ஐ.டி-சி.என்.டி சங்கம் 45 சங்கங்கள்-கூட்டமைப்புகள்-சின்டிகேட்டுகளை கொண்டுள்ளது. அது ஒரு செங்குத்தான கட்டமைப்பை கொண்டுள்ளது. அதன் உச்சத்தில் காங்கிரஸ் உள்ளது. அதற்கு கீழே 45 பிரதிநிதிகள்(சங்கம் மற்றும் சின்டிகேட்டுகளிலிருந்து) உள்ளனர். அதற்கு கீழ் நிதிக் குழுவும், அதற்கும் கீழே பிராந்திய துறைகள்(சிறிய காங்கிரஸ் என்று கூறுகிறோம் இவற்றை) உள்ளன. இவற்றிற்கு கீழே பிராந்திய நிர்வாகிகள் குழு அந்தந்த பகுதிகளில் உள்ள சங்கங்களின் நலன்களை கவனிக்கின்றது, மேலும் பிராந்திய நிதிக் குழு தேசிய நிதிக் குழுவிற்கு உதவி செய்கிறது.

ஒவ்வொரு 3 வருடங்களுக்கு ஒரு மாநாடு நடத்துகிறோம். இவற்றில் 45 சங்கங்களில் இருந்து வரும் பிரதிநிதகள் 15 நிர்வாகி செயலாளர்களை தேர்ந்தெடுக்கிறோம் இவர்கள் காங்கிரஸில் அங்கம் வகிக்கின்றனர். எங்களுடைய சாசனத்தின்படி 15 நிர்வாகிகள் சோசலிசம், கம்யூனிசம், கிருஸ்துவம் ஆகிய 3 கருத்தியலை சமமாக பிரதிபலிக்க வேண்டும். இதன் மூலம் பல்வேறு கருத்தியல் குழுக்களின் பார்வைகளை மேல்நிறுத்தாமல் நாங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை வளர்க்க முடிகிறது.

எங்கள் அமைப்பில் கட்டிடம், உற்பத்தி, தொலை தொடர்பு என்று 29 அடிப்படை உற்பத்தி வேலைகளின் சங்கங்கள் உள்ளன.

பி.ஐ.டி-சி.என்.டி சங்கம் எந்த கட்சியை சார்ந்து உள்ளதா?
இல்லவே இல்லை. நாங்கள் இடது சாரி வாதிகள். இடதுசாரி கட்சிகளுக்கு அரசுக்கு சாதமாக இருக்கிறோம். அதே போல் அவர்களும் எங்களுடைய சங்கத்திற்கு துணை நிற்கின்றனர். ஆனால் நாங்கள் எந்த கட்சியுடனும் இணையவில்லை. எங்களுடைய சாசனத்தின் படி பி.ஐ.டி-சி.என்.டி காங்கிரஸ் உறுப்பினர் பாராளுமன்ற தேர்தலில் நிற்க வேண்டும் என்றால் சங்கத்திலிருந்து விலக வேண்டும்.

தற்போது உருகுவேயில் இடதுசாரிகளின் கூட்டமைப்பு மூன்றாவது முறையாக ஆட்சியில் உள்ளது? அதனால் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?
பல வழிகளில் மாற்றம் ஏற்பட்டு உள்ளன. 2004 வரை எங்கள் சங்கத்தில் 90000 உறுப்பினர்களே இருந்தனர். தொழிற்சாலைகளில் சங்கம் அமைப்பதையும் வேலை செய்வதையும் வலது சாரிகளின் பழமைவாத அரசு பல்வேறு வகைகளில் தடுத்து வந்தது. இடதுசாரிகளின் கூட்டமைப்பு சின்டிகேட்டுகள் அமைப்பதற்கான உரிமை ஒரு புது சட்டம் கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிற்சங்கங்கள் எங்கு வேண்டுமானாலும் உருவாகலாம்(பிஐடி-சிஎன்டி கீழே தான் இருக்க வேண்டும் என்பதில்லை). சங்கம் அமைப்பதற்கு எத்தனை தொழிலாளர்கள் வேண்டுமானாலும் சேர்ந்து அமைக்கலாம். இத்தனை தொழிலாளர்கள் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. சங்கம் அமைப்பதற்கான கோரிக்கைக்கும் அதற்கு தொழிலாளர் துறை அனுமதி கொடுப்பதற்கும் தாமதம் கிடையாது. இதனால் எங்கள் சங்கத்தில் தற்போது 4.5 லட்சத் தொழிலாளர்கள் உள்ளனர். இது ஒரு பெரிய மாற்றம்.

இங்கு ஒப்பந்த தொழிலாளர்களின் நிலை என்ன? அவர்கள் பி.ஐ.டி-சி.என்.டி சங்கத்தில் சேரலாமா?
கட்டாயமாக சேரலாம். நான் எஸ்யுடெல் என்ற தொலைதொடர்பு சங்கத்தில் இருக்கிறேன். இங்கு 2500 நிரந்தரத் தொழிலாளர்கள் உள்ளனர் மேலும் 400 ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். அவர்ளை நிரந்தரப்படுத்தி வருகிறோம். இன்னும் சில மாதங்களில் இது முடிந்து விடும் என்று நம்புகிறோம். கட்டிட வேலைகளில் அனைத்து தொழிலாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு கட்டிட வேலைக்கும் ஒப்பந்த அடிப்படையில் மாறுகின்றனர். இதற்கிடையில் அவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாகவே உள்ளனர். அதனால் அவர்களுக்கு பாதுகாப்பு இருப்பதாக உணர்கின்றனர்.

ஒரு செங்குத்துவ கட்டமைப்பை கொண்டு தொழிலாளர்களுக்கு எவ்வாறு ஜனநாயக சுதந்திரத்தை கொடுக்க முடிகிறது?
இது ஒரு நல்ல கேள்வி. எங்கள் அமைப்பு ஒரு செங்குத்துவ கட்டமைப்பை கொண்டதாக இருந்தாலும் தொழிலாளர்களுக்கு தங்கள் போராட்டங்களை நடத்துவதற்கு சுதந்திரங்கள் உள்ளன. அவர்கள் காங்கிரஸின் அனுமதியை நாடத் தேவையில்லை. எங்களுடைய சாசன வழிகாட்டுதலில் எந்த உறுப்பினர் சங்கமும் வேலை நிறுத்தம் செய்யலாம் அதற்கு பி.ஐ.டி-சி.என்.டியின் ஆதரவு உண்டு. எங்களுடைய வழிகாட்டுதல்கள் மிகவும் அடிப்படை வழிகாட்டுதல்களாகவே உள்ளன. உதாரணமாக தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்பது ஒரு வழிகாட்டுதல் ஆகும். உறுப்பினர் சங்கத்தில் பிரச்சனைகள் தீர்வு ஏற்படாத போதே, அமைப்பு உள்ளே நுழைகிறது. இதனால் தான் நாங்கள் ஒரு தனித்துவமான அமைப்பாக உள்ளோம் என்று நான் நினைக்கிறேன்.

தொழிலாளர் வர்க்கத்தின் இன்றைய நிலை என்ன? உதாரணமாக கடந்த சில வருடங்களில் எத்தனை வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்துள்ளன?
அது அந்த வருடத்தின் சூழலை பொறுத்துள்ளது. குறிப்பாக பட்ஜெட் நடக்கும் வருடத்தில் வேலை நிறுத்தம் 10 மடங்கு அதிகரிக்கும். நாட்டை பொறுத்தவரை வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. சங்கம் அமைக்கும் உரிமையுடன் தொழிலாளர்கள் வெகுவாக ஒன்று கூடியுள்ளனர். தேசிய பட்ஜெட்டில் நடக்கும் போராட்டங்கள் குறிப்பாக ஊதியத்தை அதிகரிக்கும் போராட்டங்களாக உள்ளன.

பிஐடி-சிஎன்டி எந்த பிரச்சனைகளை இன்று எதிர் கொண்டுள்ளது?
சில துறைகளில் ஊதியம் குறைந்த பட்ச ஊதியத்தை விட சிறிதே அதிகமாக உள்ளது. கட்டிடத் துறையில் தொழிலாளர் பாதுகாப்பு குறைவாக உள்ளது. மேலும் தொழிலாளர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்யாமல் ஏஜன்சிகள் மூலம் ஒப்பந்தம் செய்யும் முறை அதிகரித்துள்ளது. இது இன்னும் ஊன்றி விடாமல் முலையிலேயே கிள்ளி விடுவதற்காக நாங்கள் போராட வேண்டியுள்ளது. தற்போது பாராளுமன்றத்தில் இதை தடை செய்வதற்கான சட்டம் ஏற்படுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. சுவாரஸ்யமாக இது பொதுத் துறையில் அதிகமாக கடைபிடிக்கப் படுகிறது. தற்போது இடதுசாரிகள் ஆட்சியில் உள்ளதால் நாங்கள் இதை கொஞ்சம் எளிதாக போராட முடிகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியத்தை வலியுறுத்தி போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.

உருகுவேயில் பெண் தொழிலாளர்கள் நிலை என்ன?
உருகுவேயில் வேலைநிலைமை 58.8 சதமாக உள்ளது. இதில் 2015ன் படி ஆண்கள் 68.2 சதமாகவும், பெண்கள் 50.2 சதமாகவும் பங்கேற்கின்றனர். பெண்களின் பங்கேற்பில் முன்னேற்றம் தேவையுள்ளது. ஊதிய வேற்றுமை குறைந்துள்ளது ஆனால் இன்னும் உள்ளது. சம ஊதியத்திற்காக நாங்கள் போராடுகிறோம். முதலாளித்துவ ஆணாதிக்க சமுதாயத்தில் பாலின வேறுபாடு என்பது அடிப்படையானது. இந்த அமைப்புகளை களையாதொலிய பாலின சமத்துவமின்மை மறையாது.

பிஐடி-சிஎன்டி அமைப்பில் பெண்களின் பங்கேற்பு எவ்வாறாக உள்ளது? நிர்வாக செயலாளர்களில் எத்தனை பெண்கள் உள்ளனர்?
இது ஒரு பிரச்சனையாக தான் உள்ளது. கடந்த காங்கிரஸ் வரையில் ஒரு பெண் கூட பிரதிநிதியாக இல்லை என்பது தான் உண்மை. இதை மாற்றுவதற்கு நாங்கள் கடந்த காங்கிரஸில் முயற்சி எடுத்துள்ளோம். தற்போதுள்ள காங்கிரஸில் ஒரு பெண் நிரவாக பொறுப்பில் உள்ளார். இதற்கான முயற்சியை மேம்படுத்துவோம் என்று நம்புகிறோம். பிஐடி-சிஎன்டியில் பாலின சமத்துவத்திற்காக ஒரு மத்திய குழு என்றும் ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு நிர்வாக அதிகாரம் இல்லை என்றாலும் ஆண்-பெண் சமத்துவத்திற்கு எதிரான பிரச்சனைகளை காங்கிரஸ் முன் வைக்கின்றனர்.

உருகுவேயில் அன்னிய நேரடி முதலீட்டின் தன்மை எவ்வாறாக உள்ளது? இது குறித்து பிஐடி-சிஎன்டியின் நிலைபாடு என்ன?
என்னிடம் சரியான புள்ளி விவரங்கள் இல்லை என்றாலும் இங்கு அன்னிய நேரடி முதலீடு அதிகமாகவே உள்ளது. 2004க்கு முன்னர் பன்னாட்டு நிறுவனங்களும் அன்னிய நேரடி முதலீடுகளும் அதிக அளவில் வந்தனர், அவர்களுக்கு வேண்டியதை செய்தனர், பணம் வெகுவாக சம்பாதித்து சென்றனர். இடது சாரிகளின் அரசு இந்த நிறுவனங்களின் பொறுப்பற்ற செயலை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கின்றது. இதற்கான ஒரு சட்டமும் தற்போது பாராளுமன்றத்தில் விவாதத்தில் உள்ளது. கூடிய சீக்கிரத்தில் இது வாக்கெடுப்புக்கு வரும் நிலையில் உள்ளது. இதன் கீழ் இவ்வாறு வெளியேறும் நிறுவனங்களின் மேல் வெகுவாக அபராதங்கள் விதிக்கப்படும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒரு பாதுகாப்பை தரும்.

பிஐடி-சிஎன்டியில் உள்ள தொழிலாளர்களின் அரசியல் இணைப்பு எவ்வாறாக உள்ளது? அவர்களுக்கு அரசியல்ரீதியான கொள்கைகளை கற்பதற்கு வகை செய்ய பட்டுள்ளதா?
உருகுவேயில் தொழிலாளர்களின் ஒருங்கணைப்பு முதலில் வந்தது, அதற்கு பின்னர் இடது சாரிகளின் கூட்டமைப்பு வந்தது. அது மற்ற நாடுகளில் இருந்து மாறுபட்டது என்று நினைக்கிறேன். இடது சாரிகளின் முதல் கூட்டமைப்பு 1968ல் வந்தது. இது சங்கங்கள் ஒண்றான பின் இரண்டு வருடங்களுக்கு பின்னர் நடந்தது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் பகுதிவாரிகளாக அரசியல்ரீதியாகவும், ஒருங்கிணைக்கும் முயற்சிகளை பற்றியும் வகுப்புகள் நடத்துகிறோம். இந்த வகுப்புகள் கட்டாயமல்ல மேலும் கட்டணத்துக்குட் பட்டதும் அல்ல. அரசியல் ஒருவாக்கம், மார்க்சிஸம், முதலாளித்துவ வளர்ச்சியின் வரலாறு, போர்டிசம், டெய்லரிசம் போன்ற தலைப்புகளில் வகுப்புகள் நடைபெறுகின்றன. மேலும் எங்கள் சங்கத்தின் வரலாறு, தொழிலாளர்களுக்கு இடையே உள்ள இணைப்பு, சங்க நடவடிக்கைகள், முறைகள் பற்றியும் வகுப்புகள் எடுக்கிறோம்.

This entry was posted in Analysis & Opinions, Featured, Working Class Vision, தமிழ் and tagged , , . Bookmark the permalink.