தமிழ் இலக்கியங்களில் சாதியும் வர்க்கமும்: வ. கீதாவுடன் உரையாடல்

பெண்ணியவாதி, வரலாற்றாசிரியர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் என்று பன்முகங்களைக் கொண்டவர் வ.கீதா. Towards a Non Brahmin Millenium”, “Gender”, “Patriarchy” உட்பட பல்வேறு நூல்களை அவர் இயற்றியும் தொகுத்தும் ள்ளார். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பட நூல்கள் வெளியிடும் தாரா புக்ஸ் எனும் சிறு தன்னிச்சையான பதிப்பகத்தின் தோற்றுனர்களில் ஒருவர். இந்தியாவில் நிலவும் உயர்குடி வர்க்கத்தால் வரையறுக்கப்பட்ட அழகியலைக் கேள்விக்குட்படுத்தும் அவர்களின் நூல்கள், பழங்குடி கலைஞர்களின் படைப்புகளை ஊக்குவிக்கின்றன. பயிற்சிப்பட்டறைகள் மூலமாகவும் கல்வித் திட்டங்கள் மூலமாகவும் குழந்தைகளிடம் கலையையும் கைவினையையும் கொண்டு செல்லும் பணிகளையும் தாரா புக்ஸ் மேற்கொள்கிறது. தமிழ் இலக்கியத்தில் நிலவும் சாதி, வர்க்கம் குறித்தும் இந்தியாவில் நிலவும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டின் இன்றைய நிலை குறித்தும் வ.கீதாவிடம் தொழிலாளர் கூடம் நேற்காணல் நடத்தியது.

தொ.கூ: இந்தியக் கல்வி முறையில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன?

கீ : இந்தியக் கல்வித்திட்டம் சொற்களைச்சார்ந்தும் நினைவுத்திறனைச் சார்ந்தும் இயங்குகிறது. உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகள் எழுத்தறிவு பின்புலம் அல்லாதவர்கள். எனவே அவர்களுக்குப் பக்கம் பக்கமாக இருக்கும் உரைநடை தடையாக உள்ளது. அதே சமயம்,கலை மற்றும் கைவினைப் பயிற்சிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால், அதில் திறம்பட செயலாற்ற வாய்ப்புள்ளது. செயல்வழிக் கல்வித்திட்டத்தில் அவர்கள் மேம்பட செயலாற்றுவார்கள். ஆனால் கெடுவாய்ப்பாக செயலாற்றுவதைநம் கலாச்சாரம் மதிப்பற்றதாக்கிவிடுகிறது. மூளை உழைப்பையும் உடல் உழைப்பையும் பாகுபடுத்தும் வன்செயலை சாதி அமைப்பு மேற்கொள்கிறது.

தொ.கூ: சாதியமைப்பு வரலாறு மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் உலகமயமாக்கலின் சக்திகளும் செயலாற்றுதலையும்” “கைவினைகளையும்மதிப்பிழக்கச் செய்கின்றன அல்லவா ?

கீ: இத்தகைய பாரம்பரிய மற்றும் நவீன சக்திகள் சிக்கலான முறையில் கலந்துள்ளன. உதாரணத்திற்கு, நாங்கள் (தாரா புக்ஸ்) சீனாவில் பதிப்பிக்கிறோம். அதன் தளவாடங்கள் சிக்கலாக இருப்பினும், அதன் செயல்முறை இந்தியாவில் பதிப்பதைக் காட்டிலும் எளிதாகவும் பாராட்டத்தக்கதாகவும், மலிவானதாகவும் உள்ளது. ஹைதராபாத், தில்லி, சென்னை போன்ற நகரங்களில் பதிப்பிக்கக் கடந்த காலங்களில் முயன்றுள்ளோம். இந்த இடங்களில் விலைமதிப்புமிக்க இயந்திரங்கள் இருந்தும், தொழிலாளிகளின் தொழில்சார்ந்த திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளை அளிப்பதற்கான கட்டமைப்புகள் தொழிற்சாலையில் இல்லை.. பணியில் ஈடுபடும்பொழுதே தொழிலாளர்கள் வேலையை கற்றுக் கொள்கிறார்கள். திறன் மேம்பாட்டிற்கான திட்டமோ, தொழில் புலமையை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்போ இல்லை. லட்சக்கணக்கில் மதிப்புடைய இயந்திரங்கள் கொண்டு இயங்கும் தொழில்களில் செயல்வழிக்கற்றலின் மூலம் தொழிலாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமாகாது. அச்சுத் தொழில் நுட்பம் மிகவும் வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளது. ஆனால் அதற்கான செயலறிவு தொழிலாளர்களுடன் பகிர்நது கொள்ளப்படுவதில்லை அல்லது வேலை செயல்பாடுகளில் உட்கொள்ளப்படுவதில்லை. அங்கு உள்ள கண்காணிப்பாளர்களுக்கோ அல்லது ஃபோர்மேன்களுக்கோ தெரிந்திருக்கலாம் ஆனால் வேலை செய்யும் தொழிலாளர்களை இந்த செயலறிவுக்குள் கொண்டு வருவதில்லை.

இத்தகைய சூழ் நிலையில் தான் சாதி மனப்பான்மை வேலை செய்கிறது. ஒரு பணியைச் செய்து முடிப்பதில் தொழிலாளர்களின் பங்கை நாம் மதிப்பதில்லை. அவர்களுக்குக் குறைவாக சம்பளம் தருவதால் மட்டுமல்லாமல், கலாச்சார ரீதியிலும் நாம் உடலுழைப்பை குறைவாகவே மதிப்பிடுகிறோம். தொழிலாளர்களின் தேவைகளை நாம் கண்டுகொள்வதில்லை. இந்த தொழில் நுட்பம் கற்றுக்கொள்ள எளிது, விண்வெளி அறிவியல் அல்ல. எதற்காக ஒரு பணி மேற்கொள்ளப் படுகிறது என்பதைக் குறித்துத் தொழிலாளர்களிடம் தெரிவிக்கப்படாமல் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது என்பது மட்டுமே அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப் படுகிறது.

24 மணி நேரமும் அச்சிடும் பட்டறை ஒன்றை திரு.ஆறுமுகம் தலைமையில் தாரா புக்ஸ் நடத்துகிறது. ஆறுமுகத்தின் அணுகுமுறை முற்றிலும் எதிர்மறையானது. அவரது பட்டறையில் எடுக்கப்படும் முடிவுகளில் தொழிலாளர்களுக்கும் பங்கு உண்டு. உதாரணத்திற்கு, அரை தானியங்கி பிரிவு ஒன்று உண்டு, அங்கு தொழிலாளர்களின் தேவைக்கு ஏற்ப இயந்திரங்களை அவர்களே வடிவமைத்துக் கொள்வார்கள். ஒரு முறை, மழைக்காலத்தில், கையால் தயாரிக்கப்படும் காகிதம் ஈரத்தை உரிஞ்சியதால் பிரச்சனை ஏற்பட்டது. அப்பொழுது தொழிலாளர்கள் தாங்களே ஈரப்பதமூட்டி (humidifier)தயாரிப்பாளர் ஒருவரைச் சந்தித்துப் பேசி, தொழிற்சாலையில் பயன்படுத்தும் வகையிலான ஈரப்பதமூட்டியைக் கண்டுபிடித்தனர். பணியைப் புரிந்து கொள்வதற்கும் எளிமைப் படுத்துவதற்குமான வாய்ப்பைத் தொழிலாளர்களுக்கு வழங்கினால், அவர்கள் ஆர்வமிழக்கமாட்டார்கள். முடிவுகளைத் தீர்மானிப்பதற்கான மையப் புள்ளியாக தொழிலாளி இருக்க வேண்டும்.

தொ.கூ: இலக்கியத்தை நோக்கி நகர்வோமானால், தமிழ் இலக்கியத்தில் உள்ள வர்க்க உணர்வு நிலையைப் பற்றி பேச முடியுமா?

கீ: வர்க்க கேள்விகளை மையப்படுத்திபெரும் திரளான படைப்புகள் உள்ளன. கட்சியைச் சார்ந்த படைப்புகளுக்கு அப்பாற்பட்டு பரந்த இடது கலாச்சாரத்தோடு இணைந்த ஒன்றாக உள்ளன. வேளாண்மை, நூற்பு, நெசவு, தோட்ட வேலை, சிறிய வணிகர்கள், மற்றும் உத்தியோகம் போன்றவற்றை அடிப்படையாக பல படைப்புகள் எழுதப்பட்டுள்ளன. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் விவசாய அல்லது தொழிற்சங்க பின்புலத்தை கொண்டவர்கள். 70களுக்கு பின்னர் குறிப்பாக 90களில் தலித் எழுத்தாளர்கள் தங்களுடைய தொழில்ரீதியான வாழ்வுகளை இதுவரை கண்டிராத துல்லியத்துடன் பதிவு செய்துள்ளனர். தங்களுடைய சுயசரிதைகளிடமிருந்து இந்த அனுபவங்களின் அடிப்படைகளில் அவர்களுடைய படைப்புகள் வெளிப்படுகின்றன.

பொதுவாக இடதுசாரி அரசியலில் இருந்து தொழிலாளர் வர்க்க படைப்புகள் வெளியாகி உள்ளன. தமிழக இடதுசாரி வரலாற்றை பார்ப்போமேயானால், 40களிலும் 50களிலும் நடந்த வேளாண் போராட்டங்களில்தான் அவர்கள் பெரும் வெற்றியைக் கண்டுள்ளனர். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், லெதர் தொழிலாளர்கள் மத்தியில் சங்கங்கள் அமைத்தனர்.

பின்னர் சிஐடியு தலைமையிலான போராட்டம் மிக்க தொழிற்சங்கங்கள் தொழிற்சாலைகளில் உருவாகின. விவசாயப் பிண்ணனியில் 1960களில் மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தின் அடிப்படையில் இடதுசாரி போராளிகள் வளர்ந்தனர். 1980களில் இருந்து அவர்கள் புதுவகையான போராட்டம் மிக்க தொழிற்சங்க பணிகளிலும் ஈடுபட்டனர். அவர்களின் வரலாறை எழுத்தாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் சிலர் தலித்துகளாக இருந்தாலும் தங்களை அவர்கள் தலித்துகளாக அடையாளப்படுத்தவில்லை. 80களின் கடைசியிலும் 90களிலும் தலித எழுத்தாளர்கள் தனி அடையாளத்துடன் எழுத ஆரம்பித்தனர்.

தொ.கூ: வீட்டு வேலை செய்பவர்கள் குறித்து?

கீ: எனக்கு தெரிந்து இல்லை. ஆனால் உழைப்பாளர்களைக் குறித்து எழுதிய ஒன்றிரண்டு பெண் எழுத்தாளர்கள் உண்டு. அவர்களுள் ஒருவர், மிகவும் பிரபலமான எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளோடு பயணித்தவர் பல காலம் அக்கட்சியுடன் இருந்தவர். மற்ற பெண் எழுத்தாளர்களிடம் அவரை வேறுபடுத்திக் காட்டுவது என்னவென்றால், அவர் பெண்களைக் குறித்து மட்டுமே எழுதவில்லை. அவரது கணவர் அடிக்கடி மாறுதல் ஏற்படும் பணியில் இருந்ததால், இவரும் அவருடனேயே பயணித்தார். அந்த கண்ணோட்டத்திலேயே அவர் வாழ்க்கையைக் குறித்து எழுதினார். அவரது கணவர் மின் துறையில் வேலையில் இருந்ததால், அவர் கர்னாடகாவில் இருந்த குந்தா மின் ஆலைக்குச் சென்றார். இதனால், இவர் உள்ளுர் மக்களின் இடப்பெயர்வுகள் குறித்து எழுதினார். பின்னால் அவர் அனல் மின் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அவர், மீனவர்களைக் குறித்து எழுதினார். உழைக்கும் வர்க்கத்தைக் குறித்துப் பரவலாக எழுதியுள்ளார். அவரது சில எழுத்துக்கள், புதினத்தின் வடிவில் அறிக்கையைத் தாக்கல் செய்வது போலவே உள்ளன. அவற்றுள் சில பாராட்டுதலுக்குரியது.
அவர் புதினங்களைத் தாண்டி, உரை நடைகளும் எழுதியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று,40 50 களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் வேலை பார்த்த பார்ப்பன விதவையான மணலூர் மணியம்மாள் என்னும் அற்புதமான பெண்ணின் சரிதை ஆகும். மணியம்மாள் தலித் விவசாய கூலிகளின் நலனுக்காக வேலை செய்தவர். ஆணைப் போல உடை தரித்து, எல்லா இடங்களுக்கும் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். காவிரி டெல்டா மக்களால் வாஞ்சையுடன் நினைவுகொள்ளப் படுபவர்.

மற்றுமொருவர் கடந்த 10-15 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர் தமிழ்செல்வி. விருதாச்சலத்தில் வசிப்பவர். அவர் உழைக்கும் பெண்களின் வாழ்வைக் குறித்து அற்புதமான புதினங்கள் எழுதுகிறார். இதுவரை இலக்கியங்களில் பார்க்கப்படாத பெண் கதாப்பாத்திரங்களை இவரது எழுத்துக்களில் காணலாம்ஆண்களுடனான முரண்பட்ட உறவுகளில் வாழும் காமப் பொருட்களாக அல்லாமல், உழைக்கும் சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருப்பவர்கள்எங்கு திருமணம், உழைப்பு, இனவிருத்தி காமம் அனைத்துமே பின்னிப் பிணைந்து இருக்கும்.

அவருடைய எழுத்துக்களில் மிகவும் சுவாரசியமானது கற்றாழை“. ஒரே ஒரு பயிர்வகையை மட்டும் பயிர் செய்வதால் , காவிரிப் பிரச்சனை தொடங்கியது முதல், நிறைய விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வேலை இல்லாமல் போனது. அதனால் பலர் தற்காலிக பருவகால வேலைகளைத் தேடியும் உள்ளாடை நிறுவங்களில் வேலை செய்வதற்காகவும் திருப்பூருக்கு இடம்பெயர்கிறார்கள். இந்த கணத்தை அவரது நாவல்கள் படம் பிடிக்கின்றன. இவர்கள் பெரும்பாலும் தலித் அல்லாதவரான கள்ளர் சாதியைச் சார்ந்தவர்களாக இருப்பர். இந்நாவலின் மையக் கதாப்பாத்திரமான பெண் வயல்களில் வேலை செய்கிறார், திருமணம் செய்து கொள்கிறார், பின்னால் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் உறவு உள்ளது எனக் கண்டுபிடிக்கிறார். ஆனால் அவருடைய மையப் பிரச்சனைகள் எல்லாம் வேலை, பணம், குழந்தையின் வாழ்க்கை சுற்றியே உள்ளன. திருப்பூரில் வாழும் பெண்கள் வாழ்க்கையின் சிறு பகுதியை இந்நாவல் படைக்கிறது. அது பெண்களே கம்யூன்கள் அமைத்துக் கொள்வதைப் போன்ற கற்பனைவாதத்துடன் முடிகிறது.
குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களின் விளைவாக மலேசியா செல்லும் இடம்பெயர் தொழிலாளியான ஒரு தலித் பெண்ணைப் பற்றிய சுவாரசியமான நாவல் ஒன்றையும் தமிழ்செல்வி எழுதியுள்ளார். அவர் பெண் ஆடு மேய்ப்பாளர்களைப் பற்றியும் சுயதேவை விவசாயிகளைப் பற்றியும் எழுதியுள்ளார். பஞ்சம், வெள்ளம் காரணமாக தஞ்சாவூரில் இருந்து மலேசியாவிற்கு இடம் பெயர்வது அதிகமாக உள்ள சூழ் நிலையில் உழைப்பாளிகளின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள தமிழ் செல்வியின் எழுத்துக்கள் முக்கியமான தகவல்களை அளிக்கின்றன.

பாமா எனும் மற்றொரு எழுத்தாளர், தலித் பெண்களின் உரிமைகளைக் குறித்து எழுதியுள்ளார். அவருடைய எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றோடு, பல ஆண் எழுத்தாளர்களும் உழைக்கும் பெண்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ளனர்.

தொ.கூ:தலித் எழுத்துக்களைப் பற்றி கூறுங்கள்.

கீ: தலித் எழுத்து என்பது கிட்டத்தட்ட உழைக்கும் வர்க்கத்தின் எழுத்தாகத் தான் உள்ளது. நிறைய தலித் எழுத்துக்கள், குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் இருந்து தான் தோன்றியுள்ளன..அவர்கள் தம்மை தலித் எழுத்தாளர்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை. இருப்பினும் 90களுக்குப் பிறகு பலர் தங்களை தலித் எழுத்தாளர்களாக அடையாளம் காட்டிக்கொண்டனர். 90களுக்கு பின்னால் அம்பேத்கரின் மகத்துவமான சக்தி மிகுந்த அரசியிலில் வெளிப்பட்ட தலித் இயக்கத்தை சார்ந்த தலித எழுத்தாளர்கள் உருவாகியுள்ளனர். சாதி வர்க்கப் பிணைப்பை வலிமையாக முக்கிய பெண் கதாபாத்திரங்களை இமயம் போன்ற தலித் எழுத்தாளர்கள் சித்திரித்துள்ளனர். அவற்றை வேறுவிதமாக ஓசை குறைந்த பாணியில் அழகிய பெரியவன் எழுதியுள்ளார்.

தொ.கூ: தலித் இயக்கங்களுக்கும் உழைக்கும் வர்க்க இயக்கங்களுக்கும் இடையிலான உறவு என்ன?

 கீ: பாகுபாடு, ஒடுக்குமுறை, அவமானம் போன்ற பிரச்சனைகளை தலித் இயக்கம் எதிர் கொண்டு வருகிறது. அவர்களுடைய தொகுதியான உழைக்கும் ஏழைகளுக்கு வர்க்கம், ஏழ்மை, நிலமின்மை போன்ற பிரச்சனைகள் மட்டுமல்ல, வாழ்முழுதும் உழைப்பை செலுத்தியும் அதற்கான விகிதத்தை பெறாமல் தங்கள் வாழ்க்கை வீழ்ந்து கொண்டே செல்கின்றன. ஆனால் அவர்களுடன் இணைவதில் பாரம்பரிய இடதுசாரிகள் புதுமையான அரசியல் மதிநுட்பத்துடன் செயல்படவில்லை. ஒரு பக்கம் சோசலிசம், பங்கீடு நீதிகளை குறித்து தலித் இயக்கங்களுக்கு ஈடுபாடு இருந்தாலும் இன்னொரு பக்கம் சமூக ஜனநாயகரீதியில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். சமூக ஜனநாயகத்தை ஒரு முக்கிய அரசியல் பார்வையாக இடதுசாரிகள் கருதவில்லை.

சாதி – வர்க்கம் இரண்டையும் ஒன்றாக எடுக்கும் போது தான் இடதுசாரி இயக்கங்கள் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளன. கிழக்கு தஞ்சாவூர் பகுதிகளில் உள்ள விவசாயத் தொழிலாளர்களின் இயக்கம் ஒரு மாபெரும் உதாரணம். அதே போல லெதர் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்களின் மத்தியிலும் இடதுசாரிகள் ஓங்கி இருந்தனர். இந்த தொழிலாளர் வர்க்கம் பெரும்பாலும் தலித்துகள், அரசியல், சமூகம், பொருளாதாரம் என்ற அனைத்து அமைப்பிலும் ஒடுக்குமுறையை சந்தித்தனர். கம்யூனிஸ்ட் படைப்புகளிலும், உணர்வுகளிலும் பிரதிபலித்த அரசியலில் இருந்து நடைமுறை அரசியல் வேறுவகையாக இருந்தது. இடதுசாரிகளின் வெற்றி கொண்டாட்ட பிரச்சாரம் வாழ்க்கை அனுபவத்தை புறக்கணித்துள்ளது.

கம்யூனிஸ்ட் படைப்புகளில் வெறும் தலித் ஒடுக்குமுறை மட்டும் புறக்கணிக்கப் படவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். டாக்டர் அம்பேத்கர் கூறியபடி தொழில்களை சாதி பிரிக்கவில்லை தொழிலாளர்களை பிரிக்கின்றது. அதனால் ஒரு பக்கம் நாம் சாதி மற்றும் உழைப்பிற்கு இடையே உள்ள உறவை அலச வேண்டும் இன்னொரு பக்கம் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை குழைக்கும் சாதியின் கூற்றுக்களையும் ஆராய வேண்டும். அதாவது நாம் வரலாற்று ரீதியாக பிற்படுத்தோர் வர்க்கங்களின் வாழ்வியலையும் சேர்ந்து பார்க்க வேண்டும். இடதுசாரி வர்க்க ஒருங்கிணைப்புக்கு இது முக்கியமானாலும் இடதுசாரி அரசியல் பார்வைகளில் காணப்படுவதில்லை.

தொ.கூ: அத்தகைய சமூகங்களைப் பற்றியும் அவர்களது இலக்கியங்கள் குறித்தும் பேச முடியுமா?

 கீ: பகுதிகளுக்கு ஏற்ப இந்த சாதிகளின் நிலைப்பாடு மாறும். எடுத்துக்காட்டாக, கோயம்புத்தூர் பகுதி பிற்படுத்தப்பட்டவர்களான கவுண்டர்களின் ஆதிக்கம் நிறைந்தது. பாரம்பரியமாக, அவர்கள் உழவு சமுதாயம். அவர்கள் வேளாண் மூலதனத்தைப் பயன்படுத்தி உழவு வாழ்க்கையில் இருந்து தொழில்துறை வாழ்விற்கு மாறியுள்ளனர். இருப்பினும், எல்லோருமே உழவுத் தொழிலை விட்டுவிடவில்லை. ஒரு சிறு பகுதியினர் இன்னும் தொலைந்துவரும் வேளாண் பொருளாதாரத்தில் தங்கிவிட்டனர். இன்னும், ஈர நில உழவர்களுக்கும் வறண்ட நில உழவர்களுக்கும் இடையிலான பாகுபாடு உள்ளது. வறண்ட நில உழவர்கள் சமூக மற்றும் பொருளாதார வளம் இல்லாத சிறு நிலங்களில் விவசாயம் செய்கின்றனர் பெருமாள் முருகனுடைய எழுத்துக்கள் அவ்வுலகத்தைப் பற்றியே உள்ளது. கடுமையான இவ்வுலகில், வேலையும் மிகவும் கடினமானது. வணிகம், ஏற்றுமதியில் ஈடுபடுவோரும் மாநகரங்களுக்கு இடம் பெயரும் கவுண்டர்களும் உண்டு. கவுண்டர்களைப் பற்றிய நல்ல எழுத்துக்களும் உண்டு. பெருமாள் முருகனுக்கு முன்னால், 1950களில் சண்முகன் சுந்தர் இவ்வுலகின் வாழ்க்கை முறையைக் குறித்து எழுதினார். பெருமாள் முருகனின் முனைவர் பட்ட ஆய்வறிக்கை இவரது எழுத்தக்களைப் பற்றியதே ஆகும்.

திருப்பூர் நகரைப் பற்றிய சுவாரசியமான நாவல் மணல்கடிகைஐந்து நண்பர்கள் விலகி செல்லும் பாதைகளையும் அவர்கள் திரும்பி வந்தபின்னர் வாழ்க்கை அவர்களை எங்கு கொண்டு சென்றுள்ளது என்பதை அவர்கள் விவாதிப்பது போன்ற உருவகத்தைப் படைத்துள்ளது. வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த வெவ்வேறு வர்க்கங்களைச் சார்ந்த ஐவரும் எப்படி திருப்பூர் எனும் நகரத்திற்குள் குவிகிறார்கள்? அதை நாவல் காட்சிப்படுத்துகிறது. தொழிலாளர் பிரச்சனைகள், தொழிற்சாலைப் பிரச்சனைகள், பாலின சிக்கல்கள்அனைத்துமே நாவலில் வருகின்றன. நூலாசிரியரான எம்.கோபாலகிருஷ்ணன் அவரே நெசவாளச் சமுதாயத்தைச் சார்ந்தவராக இருக்கலாம்.

தெற்கில், தேவர்களும் நாடார்களும் இரு பெரும் சாதிகள். நாடார்களிடமும் வளமான இலக்கிய இயக்கம் உள்ளது. ஹெப்ஸிபா ஜேசுதாஸ் எனும் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர் பெண்களின் வாழ்வைக் குறித்துக் கொஞ்சம் எழுதியுள்ளார். பொன்னீலன் எனும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மற்றுமொரு எழுத்தாளர் பெரிய பெரிய நாவல்களை எழுதியுள்ளார். அவருடைய எழுத்துகளில் ஒன்று, இந்துத்துவ சக்திகளுக்கும் கத்தோலிக்க மீனவர்களுக்கும் இடையே நடந்த மண்டைக்காடு கலகங்களைப் புரிந்து கொள்வதற்கான முயற்சியாகும். இந்துத்துவ சக்திகள் நாடர்களை இந்து சாம்ராஜியத்திற்குள் கொண்டு வருவதைக் குறித்து அவர் கதையைப் பின்னியுள்ளார். 19ஆம் நூற்றாண்டில் தீண்டப்படாதவர்களாகக் கருதப்பட்ட நாடார்கள் தமது கடினமான உழைப்பின் மூலமும் கிருத்துவ மதத்திற்கு மாறியதன்மூலமும் தங்களை மேம்படுத்திக் கொண்டனர். இந்தியாவிலேயே தீண்டப்படாத நிலையில் இருந்து தீண்டத்தக்கவர்களாக மாறிய ஒரே சமூகம் இவர்கள் மட்டும் தான். மதங்களுக்கிடையிலான திருமணங்களை நாடார்கள் மேற்கொள்கிறார்கள்ஒரே குடும்பத்திற்குள் இந்துக்களும் கிருத்தவர்களும் இருப்பர், ஆனால் அவர்கள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். வணிக, தொழிற் சம்பந்தபட்ட வாழ்நிலையில் திருமணம் என்பது வளங்களின் மீதான ஆதிக்கத்தைச் செலுத்துவதாக பிணைக்கப்பட்டுள்ளது. பட்டாசு தொழிற்சாலைகளும் தீப்பட்டி தொழிற்சாலைகளும் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கின்றன. ஸ்பிலிண்ட் உருவாக்கும் மரங்கள் கொண்ட எஸ்டேட்டிகளையும் பாஸ்பரஸ் தயாரிக்கும் ரசாயன ஆலைகளையும் தம்மிடமே வைத்துக் கொண்டு ஒரு பின்னோக்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இன்று நாடார்களின் ஆதிக்கம் கல்வி (.கா: ஷிவ் நாடார் பல்கலைக் கழகம்) மருத்துவத் துறை, தொழில் நுட்பம் (HCL)என்று பரந்து விரிந்துள்ளது.ஏன், சட்டிஸ்கரில் நிலத்தில் முதலீடு கூட செய்துள்ளார்கள். மற்ற பிற்படுத்தப்பவர்களைப் போல் அல்லாமல், நாடார்கள் நேரடியாக தலித் எதிர்ப்பாளர்கள் அல்ல. வணிக சமூகத்தைச் சேர்ந்த அவர்கள், அனைத்துத் தரப்பினரிடமும் சுமூகமாக இருக்கவே முயல்கின்றனர். அவர்களைப் பற்றி நிறைய எழுத்துக்கள் உண்டு, ஆனால் அனைத்துமே உழைப்பைப் பற்றி அல்ல. ஆனால் சாதி எங்கு முடிகிறது, உழைப்பு எங்கு தொடங்குகிறது? அதற்குப் படிப்படியாகத் தான் விடை காண முடியும்.

தேவர்களுக்கும் சிக்கலான வரலாறு உண்டு. 1950களில் தொடங்கிய தலித் எதிர்ப்பு அரசியல் அவர்களைப் பிற்படுத்தட்டவர்களிடையே ஆதிக்க சாதியாக மாற்றியுள்ளது. அவர்களது அதிகாரம் நிலத்தில் இருந்தோ தொழிற்சாலைகளிலிருந்தோ வருவதில்லை. அப்படியென்றால் எங்கிருந்து வருகிறது? கவுண்டர்களுக்கு வணிகத்தில் இருந்தும் தொழிற்துறையில் இருந்தும் அதிகாரம் கிடைக்கிறது. நாடார்களோ தமது சமூக படி நிலையில் ஏற்படுத்திக் கொண்ட முன்னேற்றத்தினாலும் பரந்த வணிகத் தொடர்பு பின்னல்களாலும் தமது ஆதிக்கத்தைப் பெற்றுள்ளனர். அப்படியென்றால், தேவர்களுக்கு எங்கிருந்து அதிகாரம் வந்தது?1940களில் மூன்று சாதிகளிடையே ஏற்பட்ட ஒருங்கிணைப்பின் வெளிப்பாடே தேவர்கள் ஆவர். அவர்களுள் ஒரு பிரிவினரின்குற்றப் பரம்பரை என்று அழைக்கப்படும் சீர்மரபுப் பழங்குடியினரான கள்ளர்கள். 80களில் குறிப்பாக அதிமுகவின் ஆட்சியில் முதலமைச்சர் எம்ஜிஆர் தலைமையில் அரசியல் மூலதனத்தையும் ஊடகத்துறையையும் கையப்படுத்திக்கொண்டனர். வரலாற்று ரீதியாகப் பார்த்தால், அவர்கள் முழுமையான குடிமைப் பண்புகள் பெறவில்லை, பழங்குடி போன்ற பண்புகளைக் கொண்டிருந்தனர்.இது அவர்களது சாதியக் கலாச்சாரமாக மாறிவிட்டது.அதிமுக வால் வளர்த்தெடுக்கப்பட்ட இச்சமூகம் வேளாண் துறையிலும் தொழில்துறையிலும் சுரண்டலை மேற்கொள்ளவில்லை, மாறாக, பொது வாழ்க்கையில் தமது அதிகாரத்தைத் தக்கவைத்துள்ளனர். இவர்கள் காவல் துறையிலும்  நிர்வாகத்திலும் கீழ் நிலைகளில் பெரும் அளவில் உள்ளனர். கந்துவட்டிக்காரர்களாகவும் பயில்வான்களாகவும் உள்ளனர். சாதிப் பெருமையை அடையாளப்படுத்தி எழுப்பப்பட்ட வன்முறைகளின் அடிப்படையிலும் அவர்கள் வளர்ந்து வருகின்றனர்.

மற்றொரு பெரும் சமூகமாக வன்னியர்கள் உள்ளனர். கண்மணி குணசேகரன் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அருமையான எழுத்தாளர். நெய்வேலியைச் சேர்ந்த மாநில போக்குவரத்து கார்ப்பரேஷனின் மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்த்து வந்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். அவருடைய சமீபத்திய நாவல் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் வருகையினால் மாறிவரும் வாழ்க்கை, பொருளாதாரம், கலாச்சாரம் குறித்தது.

ஜோ டி குருஸ் மீனவச் சமூகத்தைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர். அவரது முதல் நாவல் 1905 சுதேசி இயக்கம் தொடங்கி 2000 வரையிலான நீண்ட காலகட்டத்தைச் சுற்றி சுழல்வது. இந்நாவல் தன்னிறைவு மீனவர்கள், சரக்குக் கப்பல் தொழிலாளிகள், வணிகத்திலும் கப்பல் துறையிலும் கோலோச்சுபவர்கள் என்று மீனவச் சமுதாயத்திற்குள் நிலவும் வர்க்க வேற்றுமையையும் , 20ஆம் நூற்றாண்டில் அவர்களுக்கு ஏற்படும் மாற்றங்களையும் குறித்து பேசுகிறது.

பிற்படுத்தோர் சமூக, பொருளாதார, அரசியல் விவரங்களை குறித்து நாம் இன்னும் பல வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. மேலே குறிப்பிட்டவை அனைத்து ஒரு மேலோட்டமான பார்வையே. நிலம், வளம், உழைப்பு மற்றும் சாதிக்கும் உள்ள உறவுகள் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை ஆராய நாம் பல கேள்விகளை முன்வைக்க வேண்டியுள்ளது: பிற்படுத்தப்பட்டோர்களுக்கு உபரி மதிப்பிற்கான ஆதாரம் உள்ளதா? இருந்தால் உபரி மதப்பை எவ்வாறு அபகரிக்கின்றனர்? சமூக, பொருளாதார, அரசியல் மூலதனங்களுடன் உள்ள உறவுகள் என்ன? அவர்களுக்குள்ளே வர்க்க வேறுபாடுகள் உள்ளனவா? இருந்தால் சாதி ஆதிக்கத்தையும் பெருமையையும் வர்க்க வேறுபாடுகள் குறைக்கின்றனவா? தலித் உழைப்பை ஆதிக்கம் செலுத்த வேண்டிய வன்முறையையும் தாண்டி வெளிப்படும் தலித் மேலான வன்முறையும் சாதிப் பெருமையும் எங்கிருந்து வருகி;ன்றன? தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் வரலாற்று துல்லியத்தில் இருந்து இவைகள் ஆராயப்பட வேண்டும். முக்கியமாக அரசியல்ரீதியாவும் கருத்துரீதியிலும் நாம் கேள்விகள் கேட்கவேண்டும்: உற்பத்தி சாதி உறவுகளை ஒழுங்குபடுத்தத் தேவையான ஆதிக்கத்திற்கு மேலாக ஏன் சாதிய கட்டமைப்புகளும் வன்முறைகளும் வளர்கின்றன? சாதிய வெறுப்புகளும், அது தூண்டும் மாபெரும் வன்முறைகளும் எங்கிருந்து வருகின்றன?

தொ.கூ இந்த இலக்கியங்கள் வெவ்வேறு பகுதிகளின் வரலாற்றைக் கூறுவதைப் போல் தோன்றுகின்றன

கீ: இந்த எழுத்துக்கள் இலக்கியங்களாகத் தான் வேலை செய்கின்றன, கருத்தியல்களாகவோ அரசியல் வாக்குமூலங்களாகவோ அல்ல. உதாரணத்திற்கு, குணசேகரின் நாவல்கள் சிறு விவசாயிகளின் வாழ்க்கையும் நிலத்துடனான அவர்களது பிணைப்பு, யார் மாற்றத்தை நோக்கி யார் விளைக்கிறார்கள் என்றெல்லாம் புரிந்துகொள்ளச் செய்கின்றனஇவையெல்லாம் குடும்ப உறவுகள், சாதிகளுக்குள் நிலவும் வர்க்க வேறுபாடுகள், வர்க்கப் பிரச்சனைகள் , பிற சிக்கல்களை உள்ளடக்கிய கதையில் பேசப்படுகின்றன. திருப்பூர் மாநகரைப் பற்றிய திருப்பூர்நாவலில் எப்படி வர்க்கம்,சாதி, பிற சிக்கல்கள் எல்லாம் பின்னிப் பிணைந்துள்ளன என்று எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்நாவல்கள் வெறும் அரசியல் வாக்குமூலங்களாகவோ இலக்கியங்களாகவோ மட்டும் பார்த்துவிட முடியாது. எதார்த்தத்தில், தமிழகத்தில் சமூகவியல் விஞ்ஞானிகள் செய்ய வேண்டிய பணிகளை இவை செய்து கொண்டிருக்கின்றன.

(Translated by Charu Niveda)

This entry was posted in Analysis & Opinions, Art & Life, Education Sector, Featured, Fiction, Political Economy, Working Class Vision, தமிழ். Bookmark the permalink.