கடந்த காலத்திலிருந்து கற்போம்: உழைக்கும் வர்க்கத்தின் போராட்ட யுக்திகள், தலைமை, உழைக்கும் வர்க்கத்தின் எதிர்காலம் குறித்து தோழர் தங்கப்பனிடம் நடத்திய நேர்காணல்

தோழர் தங்கப்பன் 50 ஆண்டுகால தொழிற்சங்க அனுபவம் உள்ளவர். மூலதனத்திற்கு எதிராக தொழிலாளர்களை அமைப்பாக்கியவர். இந்திய உழைக்கும் வர்க்கத்தின் போராட்ட நிகழ்வுகள் குறித்த களஞ்சியமாக அவர் இருக்கிறார். 1950களின் முதல் 1980களில் வரை பம்பாயை திணறடித்த வர்க்கப் போராட்டத்தில் அவர் ஆற்றிய தொழிற்சங்கப் பணி மகத்தானது. உழைக்கும் வர்க்கத்தின் போராட்ட தந்திரங்களில் அவர் சிறந்த அறிஞர். ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் கோரி இளைய தலைமுறை தொழிற்சங்கத்தினர் அணுகும் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவராக அவர் இருக்கிறார். 2016ல் மும்பையில் நடைபெற்ற அனைவருக்குமான உலக மாநாட்டின் போது தோழர் தங்கப்பனைச் சந்தித்து தொழிலாளர் கூடம் உரையாடல் நடத்தியது. உழைக்கும் வர்க்கப் போராட்டம், அதில் தலைமையின் பாத்திரம், முன்னேறிச் செல்லும் வழி போன்ற தலைப்புகளில் கடந்த காலத்தின் போராட்ட அனுபவங்களின் அடிப்படையில் அவர் பேசினார். அந்த நேர்காணலின் சாரமான பகுதிகளை உங்களுடன் பகிர்கிறோம்.

உழைக்கும் வர்க்கப் போராட்டத்தின்  யுக்திகள்
பம்பாயில் மிகவும் மூத்த தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் R.J மேத்தா. அவர் சுதந்திர தொழிற்சங்கத் தலைவர். அந்த காலத்தின் தொழிற்சங்க மையங்களில் இணையாமல் இருந்தார். 1960ல், கார் தொழிலாளர்கள் மிகப் பெரும் போராட்டத்தைக் கட்டமைத்தனர். பம்பாயின் உழைக்கும் வர்க்கம் முழுவதும் அவர்களுக்கு ஆதரவாகத் திரண்டது. இருந்தபோதும் அந்தப் போராட்டம் தோல்வியடைந்தது.

அதன்பின், அந்த அனுபவத்தின் காரணமாகவோ அல்லது விரக்தியின் காரணமாகவோ, அவர் அனைத்து ஒருமைப்பாடு போராட்டங்களில் இருந்தும் விலக ஆரம்பித்தார். சட்டப்பூர்வமான போராட்டங்களை நோக்கி நகர்ந்தார். அது தொழிற்சங்கத்தில் இருந்த தொழிலாளர்களை அவருக்கு அடிமைப்பட்டவர்கள் போல ஆக்கிவிட்டது. ஒரே கோரிக்கைப் பட்டியலை உருவாக்குவதன் மூலம் ஒரு தொழிற்சாலைக்குள் உள்ள தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதைக் கூட செய்யமாட்டார். ஊழியர்களுக்கு ஓர் கோரிக்கைப் பட்டியலையும், ஒரு கோரிக்கைப் பட்டியலை தொழிலாளர்களுக்கும், மற்ற ஒன்றை மற்ற பிறருக்கும் உருவாக்குவார். இப்படிச் செய்வதால் ஒரு பிரச்னையும் முடிவுக்கு வராது. தொழிலாளர்கள் என்றைக்கும் அவரைச் சார்ந்தே இருக்க வேண்டியிருக்கும்.

நீண்ட தாமதம், விரக்தி நிலை, தத்தா சமந்தின் எழுச்சிக்கும், அவர் பாணியிலான வெளிப்படைத்தன்மை கொண்ட, போர்க்குணமிக்க போராட்டங்களுக்கு இட்டுச் சென்றது. தத்தா சமந்த் சட்ட விளையாட்டுகளை விளையாட மறுத்தார். அது பயனற்றது, ஏனென்றால், வெகு நீண்ட தூரம் இழுக்கப்படுவதால் தொழிலாளர்கள் சோர்வடைந்துவிடுவார்கள் என்று அவர் சொன்னார். சட்டப் போராட்டத்திற்கு மாறாக, உரிய காலத்தில் தொழிலாளர்களுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ளும்படி கம்பெனிகளை நிர்ப்பந்தம் செய்யுங்கள் என்றார். நீதிமன்றங்கள் தாமதங்களை ஏற்படுத்தும். ஒருவேளை நீதிமன்றத்தில் தொழிலாளர்கள் ஜெயித்தால் கூட, தொழிலாளர்கள் அரியர் பணம் கிடைக்காது. முதலாளிகள் எப்போதும் லாபத்தை மூட்டைக் கட்டுவார்கள், என்ற தத்தா சமந்த் நிலையெடுத்தார். அவர் தொழிற்சாலை வாசலுக்கு முன்பு வேலை நிறுத்தங்களையும் போராட்டங்களையும் கட்டமைத்தார். போராட்டங்கள் மிகுந்த போர்க்குணம் கொண்டவையாக இருந்தன. இந்த போராட்ட கலாச்சாரம் 10 ஆண்டுகள் நீண்டது. அவசரகாலத்தின் போதும் நீடித்தது. ஜவுளித் தொழிலாளர்கள் போராட்டம் வரை அது நீடித்தது. இந்தப் போராட்டங்களின் காரணமாகத்தான் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

சட்ட வாதம் போராட்டம்- என்ன செலவு வேறுபாடு?
1960களில், நாங்கள் வழக்குகள் நடத்தியபோது, அவற்றில் சில உச்ச நீதிமன்றத்திலும் நடந்தன, வழக்குச் செலவு மிகக் குறைவானதாக இருந்தது. உதாரணமாக கமானி மெட்டல் கம்பெனியின் வழக்கைச் சொல்லலாம். அந்த வழக்கு ஒரு முன்மாதிரி வழக்காக பின்னால் ஆனது. உச்ச நீதிமன்ற மேல்முறையீடு உட்பட, அந்த வழக்கிற்கு அப்போது 1 லட்ச ரூபாய் செலவானது. ஆனால், இப்போது நிலைமை வேறு. ஒரு வழக்கறிஞர், தொழிற்சங்கத்திற்கான தள்ளுபடி அளித்த பின்னர் கூட, வழக்கிற்காக ஒரு முறை நீதிமன்றம் வருவதற்கு ரூபாய் 40 ஆயிரம் கேட்கிறார். இப்போதெல்லாம் எல்லாம் விலையேறிவிட்டன.

முன்பெல்லாம் நாங்களே தொழிலாளர் நீதிமன்றங்களிலும் பிற கீழமை நீதிமன்றங்களிலும் வழக்காடுவோம். கம்பெனிகள் பெரிய வழக்கறிஞர்களை அழைத்து வருவார்கள். ஆனால், தொழிற் சங்க உறுப்பினர் ஒருவரே தொழிலாளர்களுக்காக ஆஜர் ஆவார். ஆனால், தொழிலாளர் நீதிமன்றங்கள், வழக்கறிஞர் அல்லாத தொழிற்சங்க உறுப்பினரை வாதாட அனுமதிக்கும் என்றாலும், இன்றைக்கு அது பொதுவான வழக்கமாக இல்லை. அந்த நாட்களில் எண்ணற்ற இளம் வழக்கறிஞர்கள் தொழிலாளர்களுக்காகவும், தொழிற்சங்கங்களுக்காகவும் வழக்காடுவதற்கு விருப்பத்துடன் இருந்தனர். இப்போது, அது போன்ற வழக்கறிஞர்கள் குறைந்துவிட்டார்கள். மேலும், ஒரு வழக்கு முடிவதற்கு நீண்ட காலம் ஆவதையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே, சட்டப் போராட்டத்திற்கு செலவு பிடிக்காது என்று நாம் சொல்ல முடியாது.
வேலைநிறுத்தம் நடக்கும்போது, அரசோ அல்லது கம்பெனி நிர்வாகமோ பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டால், அதனை எதிர்கொள்வதும் மிகவும் செலவு பிடிக்கும் ஒன்றுதான். கடந்த நூற்றாண்டில் தொழிலாளர்கள் பிரதானமான கோரிக்கைகளை போராட்டங்களின் மூலம் வென்றெடுத்தார்கள். சம்பள உயர்வு, பணி நிலைமைகளில் முன்னேற்றம், பணிக்கொடை, பஞ்சப்படி ஆகியவை சட்டப் போராட்டங்களால் பெறப்பட்டவை அல்ல. மாறாக, போராட்டங்களாலும், தியாகங்களாலும் வெல்லப்பட்டவை. 1940களில் ஸ்டீல் தொழிலிலும், ஜவுளித் தொழிலிலும் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றன. அவைதான் பஞ்சப்படி என்ற விஷயத்தை இந்தியாவிற்குக் கொண்டுவந்தன. காலனி நாடுகளாக இருந்த பிற நாடுகளில் இது இருக்கிறதா? அங்கெல்லாம், கூலி அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால், விலையேற்றத்தைச் சரி செய்யும் பஞ்சப்படி இல்லை. இந்த மாறுதலைக் கொண்டுவந்த முன்னோடி பம்பாய்தான்.

சில விஷயங்களுக்கு என்ன செலவு? என்ன லாபம் என்று நம்மால் பார்க்க முடியாது. தொழிலாளர்கள் குறிப்பிடத்தக்க தியாகத்தைச் செய்துதான் ஆக வேண்டும். உதாரணத்திற்கு கமானி சங்கம் அல்லது புளூ ஸ்டாரை எடுத்துக்கொள்வோம். வேலையைக் காப்பாற்றிக்கொள்வது பற்றி தொழிலாளர்கள் கவலைப்பட்டிருந்தார்கள் என்றால், தொழிலாளர்கள் போராடியிருக்க மாட்டார்கள். இன்றைக்கு வரைக்கும் பொருத்தமானதாக இருக்கும் (சட்டங்களுக்கு நீதிமன்றங்கள் அளித்த விளக்கங்களையும் சட்ட வழிகாட்டுதலாக கொள்ளும்) case laws நடைமுறைக்கு வந்திருக்காது. நாம் எதனையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். நாம் வேலையை இழக்கலாம். ஆனாலும் போராட வேண்டும். இதற்குத் தொழிலாளர்கள் முன்வர வேண்டும். எட்டு மணி நேர வேலை வேண்டும் என்பதற்காக சிகாகோ தொழிலாளர்கள் சாக வேண்டிவந்தது. ஆனால், இப்போதோ, நாம் நீதிமன்றத் செல்லக் கூட அஞ்சுகிறோம்.

ஆனால்,போராட்டங்கள் சட்டத்தை ஒத்துப்போகச் செய்யும் நிலையை (legality) உருவாக்கிய பின்புதான் நீதிமன்றமும், பிறவும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக வந்து நிற்கும். பணிக்கொடைச் சட்டம் 1972ல் வந்தது. ஆனால், அதற்கு முன்பே பல போராட்டங்களை நடத்திய பம்பாய் தொழிலாளர்கள் அதனை 1972க்கு முன்பே பெற்றுவந்தனர். பம்பாய் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாகவே போனஸ் பெறப்பட்டது. சட்டப் போராட்டங்களின் வழியே அது பெறப்படவில்லை.

புதிய தந்திரங்களை மேற்கொள்ளுதல்
முன்பெல்லாம் தொழிலாளர்கள் கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்தார்கள். பிரச்சனை வரும்போது ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர். அருகாமையில் வாழ்பவர்கள் கூட உங்களுக்கு உதவி செய்வார்கள். அதுபோல தொழிற்சங்கமும் கூட உதவி செய்யலாம். சில சமயம் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்று வாழ்க்கையைத் தொடர்வார்கள். ஆனால், அதுபோன்ற வாய்ப்புகள் இன்று இல்லை.

உதாரணமாக, பிள்ளைகளின் படிப்புச் செலவு இன்று மிக அதிகமானதாக ஆகிவிட்டது. மாதாந்திரச் செலவும் கூடுதலாக இருக்கிறது. தொழிலாளிக்கு ஒரு மாதச் சம்பளம் கிடைக்கவில்லை என்றால் கூட சமாளிப்பது மிகவும் சிரமம். அவர்கள் அருகாமையில் கடன் வாங்குவார்கள். ஆனால், அவற்றைத் திரும்பச் செலுத்தியாக வேண்டும். எனவே, நீடித்த போராட்டங்களைத் தொழிலாளர்கள் நடத்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவானதாக இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருக்கும் சூழல், அந்த இடம், எந்த விஷயங்கள் மீது தொழிலாளர்கள் பொதுவான கருத்துக்கு வர முடியும் என்பனவற்றிலிருந்துதான் போராட்ட வடிவங்கள் உருவாகின்றன. உதாரணமாக, 1960களில் மேற்கு வங்கத்தின் உருவான முற்றுகைப் போராட்டம் எந்த ஒரு தொழிலாளர் தலைவரின் மூளையிலோ உதித்த ஒன்றல்ல. அந்த காலத்தில் நிலவிய சூழலின் உருவாக்கம்தான் முற்றுகைப் போராட்டம். காலவரையற்ற வேலை நிறுத்தங்களும், கதவடைப்புகளும் 70களில் பரவலான போராட்ட வடிவங்களாக இருந்தன. ஆனால், அவற்றை முறியடிப்பதற்கான வழிமுறைகளை முதலாளிகள் கண்டுபிடித்துவிட்டார்கள்.

1970களில், என் நினைவு சரியென்றால், ஏறக்குறைய அந்த காலத்தில் ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் கதவடைப்பு செய்தது. கதவடைப்பு மிக நீண்ட காலம் நீடித்தது. ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு மேல் போனது. அந்தப் போராட்டத்தில் பெற்ற படிப்பினை, ஜவுளித் தொழிலாளர்கள் போராட்டம் போல, மிக முக்கியமானது. அந்த தொழிற்சாலை பல மாதங்கள் மூடியிருந்த போதும் மிகப் பெரும் லாபம் பெற்றதாக அறிவித்தது.

ஜவுளித் தொழிலாளர்கள் போராட்டம் 18 மாதங்களுக்கு மேல் நீடித்தது. உலகத்திலேயே மிகப் பெரும் போராட்டம் அதுதான். 2.5 லட்சம் தொழிலாளர்கள் அதில் பங்கெடுத்தனர். அப்போது பம்பாய் ஜவுளி உற்பத்தி மையம் என்பது என் மதிப்பீடு. வெகு நீண்ட காலம் உற்பத்தி முடங்கிக் கிடந்தால், சந்தையில் போதுமான ஜவுளிப் பொருட்கள் கிடைக்காது. அதன் காரணமாக தொழிற்சாலையைத் திறக்க வேண்டிய நெருக்கடி முதலாளிகளுக்கு ஏற்படும் என்று எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால், அது போன்ற ஒன்று நடக்கவில்லை. இந்துஸ்தான் லீவரும், ஜவுளி ஆலைகளும் ஒரே இடத்தில் உற்பத்தியை நிகழ்த்தும் ஒருங்கிணைந்த உற்பத்தி கூடங்களில் இருந்து, ஈரோடு, கோவை போன்ற இடங்களில் உள்ள பவர் லூம் போன்ற,சிறுவீத உற்பத்தி ஆலைகளுக்கு, உற்பத்தியை மாற்றிக்கொண்டார்கள். துணியைப் பெற்று தங்கள் முத்திரையைப் பதித்து விற்பனைக்கு அனுப்பினார்கள்.

அதுபோலவே, இந்துஸ்தான் லீவர் உற்பத்தி செய்யும் சலவைப் பொருட்கள் அனைத்தும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உழைக்கும் சிறு ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்டன. இந்துஸ்தான் லீவர் லாபம் சம்பாதித்தது. கம்பெனிகளுக்கு அவர்களின் நிலத்திலிருந்தும் லாபம் கிடைத்தது. ஆலைகள் இருந்த நிலம் பல நூற்றுக் கணக்கான கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அது லாபமாக உருவெடுத்தது. ஆனால், அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உற்பத்தி செய்திருந்தாலும் பெற முடியாத லாபத்தை முதலாளிகள் பெற்றார்கள். முதலாளிகள் மிகப் பெரும் படிப்பினையைப் பெற்றார்கள். நாமும் கூட கற்றுக்கொள்ள வேண்டும். முதலாளிகள், தொழிலாளிகளை நசுக்கிக்கொண்டே, தங்களின் உற்பத்தி இடத்தை மாற்றிக்கொண்டு தொடர்ந்து லாபம் சம்பாதிக்க முடியும் என்ற பாடத்தைப் படித்துக்கொள்ள வேண்டும்.

நாம் புதியனவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். முதலாளிகளைப் பணியச் செய்யும் புது தந்திரங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால், நீண்ட வேலைநிறுத்தங்களைத் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு தொழிற்சங்கத்திடம் பண பலம் இருக்க வேண்டும். அது சாத்தியமானதில்லை. இதுபோன்ற விவாதங்களை நாம் நடத்த வேண்டும். நமது தந்திரங்களை உருவாக்க நம் மத்தியில் இதுபோன்ற விவாதங்கள் நடக்க வேண்டும்.

தொழிலாளர்களை அமைப்பாக்குவதிலும், திரட்டுவதிலும் தலைவர்களின் பங்கு
இது நடந்தது 40 வருடங்களுக்கு முன்பு. என் சகத் தோழர் ஒருவர் ஒரு சிறு குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிரா சிறையில் அடைக்கப்பட்டார். அந்தப் பெண் தோழர் இல்லாத நிலையில் பொதுச்செயலாளர் பொறுப்பை நான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரினர். மேலும், அவர் தலைமை தாங்கி நடத்திய மற்றொரு தொழிற்சங்கத்தையும் நான் நடத்த வேண்டும் என்றனர். அது ஒரு கட்டுமானக் கம்பெனி. அதன் நிர்வாகம் அந்த தோழர் சிறையில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டது. உடனடியாக, 500 தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்தினர். கட்டுமானம் நடந்த இடத்தில்தான் தொழிலாளர்கள் முகாம் அமைத்துத் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு போவது எளிதாக இல்லை. இருந்தபோதும் நாங்கள் இரவில் முகாமிற்குள் நுழைந்து கூட்டம் நடத்தினோம். கூட்டம் இரவு 11 மணி வரை போனது. அங்கு நான் போனபோது எந்தத் தயாரிப்பும் செய்துகொள்ளவில்லை. நாங்கள் எந்த நோட்டீசும் கொடுத்திருக்கவும் இல்லை. என் கையில் தொழிற்சங்கத்தின் கொடியும் இல்லை. அவர்கள் எதற்கும் உடன்படவில்லை. தொழிலாளர்களில் ஒரு பகுதி வங்காளிகள். மற்றொரு பிரிவு தென்னிந்தியர்கள். அந்த இரண்டு பிரிவு கடுமையான போர்க்குணம் உள்ளவர்கள். அப்போது என் வயது 21. வேலை நிறுத்தத்தைத் தள்ளி வைப்பதற்காக அவர்களுடன் இரண்டு- மூன்று மணி நேரம் பேசிப் பார்த்தேன். குறைந்தது ஒரு நாள் அவகாசம் எடுத்து நோட்டீஸ் கொடுக்கலாம். கொடிகளையும் பதாகைகளையும் தயார் செய்துகொள்ளலாம் என்று சொல்லிப் பார்த்தேன். அவர்கள் கேட்பதாக இல்லை. கடைசியா, நாளையே ஏன் வேலைநிறுத்தம் என்று அடம்பிடிக்கிறீர்கள் என்று கேட்டேன். பிரான்ஸ் நாட்டின் ஆலோசகர்கள் அந்த இடத்தைப் பார்வையிட வருகிறார்கள் என்றும், கூட்டமொன்றை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்றும் தொழிலாளர்கள் சொன்னார்கள். அதனால், உடனடியாக வேலைநிறுத்தம் செய்தால் நிர்வாகம் பணியும் என்றும் சொன்னார்கள்.

அதன்பின்தான் நான் விஷயத்தைப் புரிந்துகொண்டேன். ஒப்புக்கொண்டேன். காலையில் ஓர் ஆளை அனுப்பி லெட்டர் ஹெட் எடுத்து வரலாம், கொடிகளையும் பேனரையும் கொண்டு வந்துவிடலாம் என்றும் வேலையை காலை 6 மணிக்கு ஆரம்பித்து 8 மணிக்கு வேலைநிறுத்தக் கடிதத்தைக் கொடுத்துவிடலாம் என்றும் சொன்னேன். நான் திரும்பவும் காலை 5.45 மணிக்கு அங்கே சென்றுவிட்டேன். காலை 6 மணிக்கே வேலை நிறுத்தம் துவங்கிவிட்டது நாங்கள் கடிதத்தையும், கொடியையும் தயார் செய்வதற்கு முன்பே பிரச்சனை தீர்வுக்கு வந்துவிட்டது. வேலை நீக்கம் செய்யப்பட்ட மூன்று நாட்களுக்கான சம்பளத்துடன் அனைத்துத் தொழிலாளர்களும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். தலைவர்களைக் காட்டிலும் சிறப்பான வகையில் தொழிலாளர்கள் நிலைமையை மதிப்பிடுவார்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதும், என்ன செய்யக் கூடாது என்பதும் தெரியும். தலைவரின் புத்திசாலித்தனம் அல்ல, தொழிலாளர்களின் கூட்டுப் பலமும், அறிவுக் கூர்மையும்தான் வெற்றியைக் கொண்டுவருகிறது என்பதை எந்த தொழிலாளர் தலைவரும் மறந்துவிடக் கூடாது. தொழிலாளர்களின் கோரிக்கையை அவர்களே உருவாக்க வேண்டும் என்றும், கோரிக்கை மற்றவர்களிடமிருந்து வந்தால் தொழிலாளர்கள் போராடத் தயாராக இருக்கமாட்டார்கள் என்றும் நான் அந்தப் போராட்டத்தில் கற்றுக்கொண்டேன்.

கமானி மெட்டாலிக்கா என்பது 80 தொழிலாளர்கள் கொண்ட சிறிய நிறுவனம். ஆனால், அதன் லாபம் மிக அதிகம். 1964ல் போனஸ் அவசர சட்டம் வந்த பின்னர், அந்த நிறுவனம் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் லாபம் சம்பாதித்தது மட்டுமல்ல 20 சதம் போனசும் அளித்தது.அதன் பின்னரும் கூட அந்த கம்பெனி மிகப் பெரும் அளவு லாபம் சம்பாதித்தது. அப்போது போனஸ் உச்சவரம்பு 20 சதம் என்பதாக இருந்தது.

நான் அந்தக் கம்பெனியின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தேன். அதன்பின், அந்த ஆண்டுக்கு நாம் 40 சதம் போனஸ் கோரலாம் என்று முடிவு செய்தேன். அந்த முடிவை தொழிற்சங்க நிர்வாகிகள் முன்பு வைத்தேன். அதன்பின் சொந்த வேலைகளுக்காக நான் என் சொந்த ஊருக்குப் போக வேண்டி வந்தது. அந்த நேரத்தில் தொழிலாளர்களை அழைத்த நிர்வாகம் அவர்களுடன் பேசி, சட்டப்படி, 20 சதம் போனஸ் கொடுக்க உடனே ஒப்புக்கொண்டது. தொழிலாளர்களும் உடன்பட்டுவிட்டனர். நான் திரும்பி வந்தவுடன் நடந்ததைப் பற்றி தெரிந்துகொண்டேன். எனக்குப் பயங்கர ஏமாற்றம். போனஸ் விவகாரத்தில் ஏமாற்றமடைந்த ஒரே ஆள் நான்தான்.

நான் முன்வைத்த 40 சதம் போனசை ஏன் தொழிலாளர்கள் அங்கீகரிக்கவில்லை என்று நான் யோசித்துப் பார்த்தேன். அப்புறம்தான் புரிந்தது, நான் என் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டது தொழிற்சங்க நிர்வாகிகளிடம் மட்டும்தான். தொழிலாளர்களிடம் பகிரவில்லை.
அடுத்த ஆண்டு, பொதுப்பேரவையின் போது கம்பெனியின் வருவாய் பற்றி விரிவாக நான் முன்வைத்தேன். அவர்கள் எவ்வளவு லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பதைச் சொன்னேன். இந்த ஆண்டு கூடுதல் போனஸ் கேட்கலாம் என்று சொன்னேன். அந்த ஆண்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி 40 சதம் போனஸ் பெற்றார்கள். சட்டத்தில் சொல்லப்பட்டதை விட தொழிலாளர்கள் கூடுதல் போனஸ் பெற்றது அதுதான் முதல்முறை. தொழிலாளர்கள் ஒரு கோரிக்கைக்காகப் போராட வேண்டும் என்றால், கோரிக்கையை பரந்துபட்ட தொழிலாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன். அப்படி நடக்க வேண்டும் என்றால், நாம் கோரிக்கையை தொழிலாளர்களின் பரந்துபட்ட பிரிவினர் மத்தியில் அவர்கள் அதனைத் தங்கள் கோரிக்கையாக அவர்கள் உணரும் வகையில் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

நான் என்ன சொல்லியிருக்கிறேனோ, அவையெல்லாம் நான் என் அனுபவத்தில் கற்றுக்கொண்டவை. நான் பல மார்க்சிய வகுப்புகளிலும் தொழிலாளர் போராட்டம் பற்றிய கல்வி வகுப்புகளிலும் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், மிகச் சிறந்த கல்வி அனுபவத்திலிருந்துதான் கிடைக்கிறது. அதுதான் மிக மிக முக்கியமானது.

This entry was posted in Art & Life, Featured, Working Class Vision, தமிழ் and tagged , , . Bookmark the permalink.