பெண் முன்னேறிச் செல்லும் பொழுது எந்த ஆணும் பின் செல்வதில்லை**

சமூகக் கருத்துடன் படமாக்கப்பட்டதால் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட Salt Of the Earth திரைப்படத்தின் விமர்சனம்

எஸ்பெரன்ஸா என்பதற்கு ஸ்பானிஷ் மொழியில் நம்பிக்கை என்று பொருள். இருண்ட நாட்களில் கூட, நம்பிக்கை தனக்கான வழியைத் தேடிக் கொள்ளும்; மனச்சிதைவில் இருந்து நம்மை மீட்டு, இன்னல்களுக்கெதிரான போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும்; வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும்.

பல சமயங்களில், நாம் நமது போராட்டங்ககளைக் கூட லாப நஷ்ட ரீதியில் தான் எடை போடுகிறோம். போராட்டங்களினால் பெறும் பொருள் ஆதாயத்தை தான் நாம் மதிக்கிறோம். அந்நேரத்தில், ஒரு குழுவாக நாம் இவ்வுலகை மனிதத்தன்மை நிறைந்த சமூகமாக மாற்றுகிறோமா என்பதைப் பார்க்கத் தவறிவிடுகிறோம்.

சால்ட் ஆஃப் தி யர்த்(1954) என்னும் ஹாலிவுட் திரைப்படத்தின் கதாநாயகியான எஸ்பெரன்ஸா ஒரு சுரங்கத் தொழிலாளியின் மனைவி. ஒரு போராட்டத்தினூடாக உழைக்கும் வர்க்கம் பெறும் பொருளாதார வசதிகளைத் தாண்டி, அவர்கள் கற்றுக்கொள்ளும் அறங்களை வைத்தே அப்போராட்டத்தை அளவிட வேண்டும் என்பதையே இப்படத்தின் மூலம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறாள். அமெரிக்காவின் நியு மெக்சிகோ மாநிலத்தில் 1951 ஆம் வருடம் நடைபெற்ற சுரங்கத் தொழிலாளிகளின் போராட்டம் இப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Sanitation Not Discrimination

கம்யூனிச எதிர்ப்பு அலை அஅமெரிக்க அதிகார வர்க்கத்தில் உச்ச கட்டத்தில் இருந்த காலம் அது. அதனால் இப்படத்தின் சமூக பார்வையை மக்களுக்கு கொண்டு செல்வதை தடுக்க, அமெரிக்காவின் எந்த திரையரங்கிலும் இப்படம் வெளியிடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால் காலப்போக்கில், பெண்ணிய அரசியலை வர்க்கப் போராட்டத்துடன் இணைத்துப் பேசிய இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மெக்கார்த்தியின் ஆட்சிகாலத்தைத் துணிச்சலாகத் தோலுரித்துக் காட்டியதனால் அக்காலகட்டத்தின் மிக முக்கியமான படமாகக் கருதப்படுகிறது.

சமத்துவமும் மரியாதையும்

சமத்துவம் இல்லாத இடத்தில் ஒடுக்கப்படுபவர்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்குபவர்களுக்கும் மதிப்பு இருக்காது. சுரங்கத் தொழிலாளியான க்விண்டெரோவின் மனைவி எஸ்பெரன்ஸா, மூன்று குழந்தைகளின் தாய். சுரங்க முதலாளிக்கு எதிராக சமத்துவமும் மதிப்பும் வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் க்விண்டெரோ, தன் மனைவியான அவளுக்கு அவற்றை வழங்குகிறானா என்பதை அவன் மறுபரிசீலனை செய்து பார்க்க வேண்டும் என்று கேட்கிறாள். இக்காட்சியே படத்தின் இறுதிக்காட்சிகளுக்கான அடித்தளத்தை அமைக்கிறது.

Esperanza Challenges Quintero

ஸின்க் நகரத்து ஆண்கள் ஆபத்தான சூழ்நிலையில் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, அந்நகரத்துப் பெண்களோ வீட்டு வேலைகளில் ஈடுபடுகின்றனர். தொழிலாளர்களில் பெரும்பகுதியினரான மெக்ஸிக அமெரிக்கர்கள், ஆங்கிலேய அமெரிக்கர்களைக் காட்டிலும் ஆபத்தான மற்றும் கடினமான பணி சூழல்களில் வேலை செய்கிறார்கள். இத்தகைய ஆபத்து நிறைந்த பணி சூழலில் வேலை செய்தும், மெக்ஸிக அமெரிக்கர்கள் குறைவான ஊதியத்தையே பெற்றனர்.
குடியிருப்புப் பகுதிகளில் நீர் மற்றும் சுகாதார வசதி குறைவாக இருப்பதாகப் பெண்களும் முறையிடுகின்றனர். கழிவுநீர் தூற்வாரப்பட வேண்டும் என்று பெண்கள் வைக்கும் கோரிக்கை, தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளால் ஓரங்கட்டப்பட்டுக் கொண்டே வந்தன. அவர்களுக்கு, பணியிடத்துக் கோரிக்கைகள் மட்டுமே பிரதானம்.

பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தினால் ஒரு தொழிலாளி இறந்துவிட, உலக சம்மேளனத்தின் ஆதரவுடன் மற்ற தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்ததில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக, பெண்களும் ஒரு ஆதரவுக் குழு அமைக்க முடிவெடுக்கின்றனர்.
பல எச்சரிக்கைகளுக்குப் பின்னர் இறுதியாக, தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என்னும் ஆணையை நீதிமன்றத்திடம் இருந்து நிறுவனம் பெற்றது. இதன் மூலம், வேலை நிறுத்தத்தில் இருந்து விலகிக் கொள்ளும் தொழிலாளர்களை நிறுவனம் வேலையில் அமர்த்திக் கொள்ளலாம்,

ஆனால் பெண்கள் இப்போராட்டத்தைத் தொடர முடிவு எடுக்கின்றனர். இதனால் ஆண்கள் எரிச்சலும் அவமானமும் அடைகின்றனர். இத்தகைய போராட்டக் குழுவில் பெண்களுக்கு இடமில்லை என்பதாக ஆண்கள் உணர்ந்தாலும், வேறு வழி இல்லாத காரணத்தால் இம்முடிவிற்கு உடன்படுகின்றனர்.
பெண்கள் குழு போராட்டத்தில் ஈடுபட்டிருக்க, வீட்டு வேலைகளிலும் குழந்தைகளின் பராமரிப்பிலும் ஆண்கள் ஈடுபடுகின்றனர். அப்பொழுதுதான் கழிவுநீரைத் தூற்வார வேண்டும் என்று பெண்கள் வைத்த கோரிக்கை எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்கின்றனர்.

இப்போரட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நிறுவனமும் காவல் துறையினரும் கூட்டாக முயல்கின்றனர். அதன் பொருட்டு, நிறுவனத்தின் கடைகளில் கிடைக்கும் சலுகை மறுக்கப்படுகிறது, நிறுவன மருத்துவரின் சேவை பறிக்கப்படுகிறது, பலர் கைது செய்யப்படுகின்றனர், நிறுவனத்தின் தொழிலாளர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப் படுகின்றனர். அனைத்திற்குப் பின்னும், பெண்கள் பின்வாங்கவில்லை.

15 மாத போராட்டத்திற்குப் பின், தொழிலாளிகளின் கோரிக்கைகளுக்கு நிறுவனம் செவி சாய்த்தது. குடியிருப்புப் பகுதியின் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது. இப்போராட்டம், பல நூற்றாண்டு காலமாக, பெண்களுக்கென்று வகுக்கப்பட்ட பாத்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. வீடுகளைத் தாண்டிய அவர்களின் பணியை ஏற்றுக்கொண்டது. பெண்களின் ஆற்றல் என்ன என்பதை அவர்களுக்கு உணர்த்தியது, மேலும் வீட்டு வேலைகளின் மகத்துவத்தை ஆண்களுக்குப் புரியச் செய்தது. குடும்பத்திற்குள் பெண்களுக்கான மதிப்பையும், அதன் காரணமாக பணியிடங்களில் ஆண்களுக்கான மதிப்பையும் பெற்றுத் தந்ததே, இப்போராட்டத்தின் முக்கியமான வெற்றிகள் ஆகும்.

மற்ற அடையாளங்களைப் போல் அல்லாமல், உழைக்கும் வர்க்க அடையாளம் என்பது பலவற்றை உள்ளடக்கிய ஒன்றே ஆகும். நம்மை ஒரு வர்க்கமாக ஒன்று சேர்ப்பது நமது பிறப்பல்ல, மாறாக, உழைப்பதற்குத் தயாராக இருக்கும் நமது மனப்பான்மையே ஆகும். இருப்பினும், நாம் நம்மைச் சுற்றி தடுப்புச் சுவர்களையே எழுப்பியுள்ளோம். பால், இனம், சாதி என்று நமக்குள்ளேயே நிலவும் வேறுபாடுகளால், நம்மை நாமே வலுவிழக்கச் செய்கிறோம்.

Salt of the earth முதல் காட்சியிலிருந்தே இந்த முரண்பாட்டை படம் பதிவு செய்கிறது. வீட்டு வேலைப் பிரிவினையில் உள்ள ஆண்-பெண் வேறுபாடுகள் தொடங்கி, நம் தோல் நிறம் மற்றும் பிறப்பு சார்ந்த வேறுபாடுகள் வரை நாம் ஏற்படுத்தியுள்ள பிரிவினைகளால், நம்மை சிறை படுத்தியுள்ள அமைப்பு முறைகளுக்குள்ளேயே நாம் மீண்டும் மீண்டும் சென்று விழுகிறோம். 1951 சுரங்கத் தொழிலாளிகள் போராட்டத்தின் புனைவான இப்படம், திண்ணிய போராட்டங்கள் எப்படி சமூக படிநிலைகளைத் தகர்த்தெறிய உதவும் என்பதைக் காட்டுகிறது.

ஒரு கருத்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தும் போது

Herbert J Beiberman – Director

Rosaura Revueltas – Esperanza

 

 

 

 

 

 

 

 

புது மெக்ஸிகோவின் எம்பையர் ஸின்க் சுரங்கத் தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தின் பின்னணியில் உண்மைச் சம்பவங்களைக் காட்சிப் படுத்தியுள்ளதால், இப்படம் நாடக பாணியிலான ஆவணப் படமாகக் (docu-drama) கருதப்படுகிறது. எஸ்பெரன்ஸோ என்னும் கதாப்பாத்திரம் வாயிலாக, வேலை நிறுத்த நிகழ்வுகளையும், அதில் பெண்களின் பங்களிப்பையும், அவர்கள் கைது செய்யப்படுவதையும், இந்நிகழ்வுகள் இட்டுச் செல்லும் வெற்றியையும் படம் பிடித்துள்ளது.

நான்கு பிரதானக் கதாப்பாத்திரங்களைத் தவிர மற்ற அனைத்தும் சுரங்கத் தொழிலாளர்களாலேயே நடிக்கப்பட்டது. கம்யூனிச சிந்தனை உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு, இயக்குனர் ஹெர்பெர்ட் பீபர்மன், திரைக்கதை ஆசிரியர் மைக்கேல் வில்சன் மற்றும் தயாரிப்பாளர் அனைவரும் ஹாலிவுட் ஸ்டுடியோக்களால் (Hollywood 10) தடை பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அமெரிக்க அரசின் முதலீடுகளால் இயங்கிய ஸ்டுடியோக்களாலும் இப்படம் சோவியத்தின் கொள்கை பரப்பு என்று முத்திரை குத்தப்பட்டது. அவர்களும் தடை பட்டியலில் இதை இணைத்தனர். தடை பட்டியல் என்பது யாதெனில், தயாரிப்பிற்குப் பின்னான பணிகள், படத்தொகுப்பு முதலியவற்றிற்கான கூடங்களோ திரையிடுவதற்கான திரையரங்குகளோ அனைத்தும் மறுக்கப்படும். சுமார் 10 வருட காலம் இத்திரைப்படம் அமெரிக்க திரையரங்குகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக, படத் தயாரிப்பாளர்கள் பயங்கரமான மன அழுத்தத்திற்கும் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகினர். எஸ்பெரன்ஸாவாக நடித்த ரொஸெளரோ அமெரிக்கப் படங்களில் நடிக்க முடியாத வகையில், மெக்ஸிகோவிற்கு நாடு கடத்தப் பட்டார்.

ஆனால் இப்படம் சங்கங்கள், பெண்கள் குழுக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் மக்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இப்படம் யூரோப்பில் திரையிடப்பட்டபோது பெரும் வரவேற்பைப் பெற்றது. அரிஸோனாவில் ‘சால்ட் ஆஃப் தி யர்த் தொழிலாளர் கல்லூரி’ என்னும் குழுமம் தொடங்குவதற்கு விதையாக அமைந்தது. தேசிய திரைப்பட காப்பகத்தினுள் பின்னாளில் இடம்பிடித்தது. இப்பொழுது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கிடைக்கக்கூடிய இப்படம், ஹாலிவுட்டின் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த காலம் இறந்துவிடவில்லை
அமெரிக்கக் கண்டத்திலிருந்து வெகு தொலைவில் வாழும் நாம், படம் வெளியான 60 வருடங்களுக்குப் பின், இக்கதையின் நிகழ்வுகள் அனைத்தும் கடந்த காலத்தைச் சேர்ந்தவை என்று கருதலாம். ஆனால் இப்பொழுது மட்டும் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது? எந்த வகையில் நமது அரசு வேறுபட்டுள்ளது? சாதி, அடையாளம், பாலினம் சார்ந்து மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதில் எந்த ரீதியில் நாம் மாறுபட்டுள்ளோம்?

வளர்ச்சி என்னும் பெயரால், நம் ஆதிவாசிகள் சூறையாடப் படுகின்றனர். ஆழமான சுரங்கங்கள் வெட்டப்படுகின்றன, மலைகள் வெட்டியெடுக்கப்படுகின்றன, நீர் மாசு படுத்தப்படுகிறது, வனங்கள் அழிக்கப்படுகின்றன. சென்ற வருடம் மட்டும் எண்ணற்ற இந்திய சுரங்கத் தொழிலாளிகள் சுரங்க விபத்துகளில் இறந்தனர். பெரும்பகுதியினர் தலித் அல்லது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இத்தகைய ஆபத்து நிறைந்த பணிகளில் ஈடுபடுபவர்களைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல், அவர்கள் நிலங்களிலிருக்கும் கனிம வளங்களை சூறையாடியும், நுகர்ந்தும் வாழ்கிறோம்.

இப்பிரச்சனைகளை எதிர்த்தும் மக்களுக்கான நீதி வேண்டியும் போராடும் குழுக்கள் அனைத்தும் மாவோயிஸ்ட்டுகள் என்று முத்திரையிடப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்தியப் பெரு முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்துக் குரல் கொடுக்கும் ஜி.என்.சாய்பாபா, எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் மாவோயிஸ்ட் என்பதால் மட்டுமே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளார். நீதி விசாரணை மற்றும் பிணையில்லாமல் ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் சட்டிஸ்கர், ஒரிசா மற்றும் ஜார்க்கண்ட் சிறைகளில் அவதிப்பட்டு வருகின்றனர். நமது சகோதர சகோதரிகளின் இத்தகைய இன்னல்கள் குறித்த செய்தியை ஊடகங்கள் நம்மிடம் இருந்து மறைத்து வருகின்றன. ஜனநாயகம் குறித்த நமது கூற்றுகள் அனைத்தும் இத்தகைய நிகழ்வுகளால் தவிடுபொடியாகிவிடுகின்றன.

நமது உழைக்கும் வர்க்க இயக்கங்களும் வெகுவாக முன்னேறவில்லை. பெண்கள், இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் ஊதிய வேலையில் ஈடுபடும் நிலையில், உழைக்கும் வர்க்க இயக்கங்கள் ஆண்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் இன்னும் இருக்கின்றன.

பெண்கள் அதிகம் வேலை செய்யும் துறைகளில் கூட ஆண் தலைமைகளை நோக்கியே சங்கங்கள் செல்கின்றன. இவ்வாணாதிக்க சமூகம் பெண்கள் மேல் விதிக்கும் வரைமுறைகளை உணராமல், அவர்களும் ஆண்களைப் போல செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கு ஈடாக பெண்கள் வேலை செய்யவில்லை என்றால், அவர்கள் ‘பெண்கள்’ என்றப் பரிதாபப் பார்வையினை செலுத்துகிறோம். மாறாக, அவர்களது பங்களிப்பிற்கான வழிகளை ஆராய நாம் முயல்வதில்லை.
மூனார் தேயிலைத் தோட்டப் போராட்டமாகட்டும், பெங்களூரு நெடுஞ்சாலைகளில் நடந்த போராட்டமாகட்டும், பெண் தொழிலாளர்களின் போராட்டங்கள் அனைத்தும் மொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் நன்மையளித்துள்ளபோதும், நமது உழைக்கும் வர்க்க அமைப்புகளுக்குள்ளேயே நிலவும் படிநிலைகளுக்குத் தான் திரும்பச் செல்கிறோம்.

போராட்டங்களின் பழம்பெருமைகளை மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், உழைக்கும் வர்க்கம் கடந்தகாலத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறைகூவலையே ‘சால்ட் ஆஃப் தி யர்த்’ திரைப்படம் விடுக்கிறது. போராட்டங்கள் நம்மை எப்படி மாற்றுகின்றன, நாம் எப்படி இவ்வுலகை மாற்றலாம் என்பதன் நெகிழ்ச்சியான பதிவே இப்படம்.

அந்நாளின் இறுதியில் சுரங்கத் தொழிலாளர்கள் சில டாலர் அதிகமாக மட்டும் ஊதியம் வாங்கவில்லை, சமையலறைக்கான சுடுதண்ணீரை மட்டும் பெண்கள் பெறவில்லை. மாறாக, சமத்துவம், மதிப்பு மற்றும் விடுதலையை, தங்களுக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் பெற்றுத் தந்துள்ளனர். ஊதியம் மீண்டும் குறையக் கூடும், சுடுதண்ணீர் ஆறிவிடக்கூடும் ஆனால் நமது மதிப்பீடுகளை எவ்வாறு மாற்றியமைப்பது என்பதை இப்போராட்டங்களிலிருந்து கற்றுக்கொள்ளத் தவறினால், நம் மரபாகிய போராட்டங்களை உழைக்கும் வர்க்கம் வீணடித்துவிடக் கூடும்.

**இக்கட்டுரையின் தலைப்பு மெக்சிகோ ஆசிரியர் போராட்டத்தின் கோஷ முழக்கமாகும்.

This entry was posted in Art & Life, Working Class Vision, தமிழ் and tagged , . Bookmark the permalink.