மும்பை தொழிற்சங்கம் பற்றிய ஆய்வு

தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களில் துடிப்புடன் செயல்படும் 25 தொழிற்சங்க செயல்வீரர்களும், மூத்த தொழிலாளர் தோழர்களும், மும்பை தொழிலாளர் இயக்கத்தின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக ஜனவரி 8 மற்றும் 15 தேதிகளில் ஒன்று கூடினர். இரண்டு நாள் உரையாடலின் போது, தற்போது தொழிற்சங்க இயக்கம் எங்கே நிற்கிறது, பல்வேறு காரணங்களால், (மிக முக்கியமாக, இந்திய அரசு மேற்கொண்ட தாராளமய கொள்கைகளின் காரணமாக) கடந்த 30 ஆண்டுகாலமாக விழுந்த அடிகளையும், இனி எப்படி முன்னோக்கி நடைபோடுவது என்ற அம்சங்களின் மீதும் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.

புகழ்வாய்ந்த பம்பாய் உழைக்கும் வர்க்கத்தின் போர்க்குணமிக்க போராட்டத்தை மறுபடியும் ஒரு முறை நினைத்துப் பார்ப்பதாகவும், புதிய போராட்ட செயல் தந்திரங்களை வடித்தெடுப்பது, புதிய போராட்ட வடிவங்களை உருவாக்குவதை மையப்படுத்தியதாகவும் உரையாடல் அமைந்தது. தலைவர்களும், செயல்வீரர்களும் தங்களை சுய விமர்சனம் செய்துகொண்டதன் அடிப்படையிலான விவாதம், நாட்டின் இன்றைய தொழிலாளர் இயக்கத்துக்கு குறிப்பான பொருத்தம் உடையது என்பது எங்களின் கருத்தாகும். இந்த கூட்டம், மும்பையின் தொழிற்சங்க ஒருமைப்பாடு கமிட்டியின் (Trade Union Solidarity Committee -TUSC) முன்முயற்சியில் நடைபெற்றதாகும். விவாதத்தின் போது எழுப்பப்பட்ட முக்கியமான அம்சங்கள், ஆலோசனைகளை இந்த கட்டுரையில் தொகுத்துத் தருகிறோம்.

1960கள் துவங்கி 1980கள் வரையிலான காலகட்டத்தில் சங்கங்களை முதலாளிகள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த பின்னர், தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் சரிவு ஏற்பட்டது. ஒப்பந்தத் தொழிலாளர்களை அமர்த்துவது அதிகரித்துச் சென்றதாலும், மூலதனம் தனக்கு வாய்ப்பான இடங்களை நோக்கி நகர ஆரம்பித்ததாலும், வெற்றிகரமான போராட்டங்களை நடத்துவதற்கான தொழிற்சங்கங்களின் ஆற்றல் குறைந்து போனது. ஒப்பந்தத் தொழிலாளர்களை அமைப்பாக்குவதிலிருந்து தொழிற்சங்கங்கள் விலகி நின்று கொண்டிருந்தன. முன்பே தங்களின் உறுப்பினர்களாக இருந்த நிரந்தர தொழிலாளர்களை அமைப்பாக்குவதில் மட்டுமே தங்களின் கவனத்தைச் செலுத்தின. ஒப்பந்தத் தொழிலாளர்களையும், அமைப்பாகத் தொழிலாளர்களையும் அமைப்பாக்குவதற்கானத் தேவை இருந்தது. மேலும், அமைப்பாகாத் தொழிலாளர்களில் 40 சதத்தினர் பெண்களாக இருந்த காரணத்தால், பெண்களை பெருமளவில் அமைப்பாக்குவதுடன் தொடர்புள்ளதாக அந்தப் பணியிருந்தது.

வெளியிலிருந்து ஆலைக்குள்ளும், ஆலையிலிருந்து வெளியேயும் தொழிலாளர்களை பேருந்தில் அழைத்துச் செல்வது ஆரம்பித்த பின்பு தொழிலாளர்களை அணுகுவது குறைந்துபோனது. ஆலை வாயில்களில் தொழிலாளர்களை அமைப்பாக்கும் வேலை செய்வது சாத்தியமற்றுப் போனது. எனவே, தொழிலாளர்களை அமைப்பாக்க புதிய வடிவங்கள் தேவைப்பட்டன. தொழிலாளர்கள் வாழும் இடங்களில் அவர்களை அமைப்பாக்குவது போன்ற புதிய வடிவங்களைக் கவனமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. வாழும் இடம் முழுமையையும், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உட்பட உழைக்கும் வர்க்கத்தின் பகுதியாக அமைப்பாக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உள்ள தொழிலாளர்களின் பிரச்சனைகளையும் தொழிலாளர் வர்க்கக் குடும்பங்களின் பிரச்சனைகளையும் இணைப்பது தேவையானதாக இருக்கிறது.

தொழிலாளர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். மற்றவர்களுடன் பட்டும் படாத (டிஜிட்டல்) தொடர்பைத்தான் வைத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையை, உலகமயத்தால் உருவாக்கப்படும் தனிநபர்வாதமும், நுகர்வுக் கலாச்சாரமும் மேலும் வலுப்படுத்துகின்றன. கூட்டு வாழ்க்கை, கூட்டுச் செயல்பாடு என்ற தொழிற்சங்கத்தின் முதுகெலும்பை மீட்டெடுக்க வேண்டிய தேவை நிலவுகிறது.

சமூக மாற்றத்திற்கான இயக்கத்திற்கு தொழிலாளர்களை இழுத்துவருவதுதான் 60களிலும் 70களிலும் அடிப்படையான பணியாக இருந்தது. அது இப்போது பின்னுக்குச் சென்றுவிட்டது. அதனை நாம் மீண்டும் செய்யத் துவங்கிட வேண்டும். அதனை நாம் செய்யத் துவங்கினால் மட்டும்தான், மாணவர்களும், சமூகத்தின் முற்போக்கான பிரிவினரும் தொழிலாளர் வர்க்கத்துடன் சேர்ந்து சமூக- அரசியல் பிரச்சனைகளுக்காகப் போராடத் துவங்கிய 70களைப் போன்ற காலம் திரும்பி வரும். நடுத்தர வர்க்கத்து முற்போக்காளர்கள் பலர் தொழிற்சங்க அமைப்பாளர்களாகி வருகிறார்கள். தொழிற்சங்க போராட்டங்களுக்குத் தலைமை தாங்கும்படி இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

பல செயல்வீரர்கள் தொழிலாளர் வர்க்கம் புரட்சிகர தலைமைக்கான ஆற்றல் கொண்டது என்பதன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். ஏனென்றால், சமூகத்தில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியதில் வரலாற்று ரீதியாக தொழிலாளர் வர்க்கம் மேகொண்ட பாத்திரத்தையும் வர்க்கக் குணாம்சத்தையும் அவர்கள் மறந்துவிட்டார்கள். தொழிலாளர்களின் போர்க்குணத்தின் மீது தொழிற்சங்கங்கள் நம்பிக்கை இழந்த காரணத்தால் தொழிற்சங்க வாதம் சரியத் துவங்கியது.தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் ஆய்வு அவதானிப்பையும் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. எவ்வித மெய்யான/ உண்மையான/ மிகச் சரியான தத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

பல இடதுசாரித் தொழிற்சங்கங்கள் பரந்துபட்ட பார்வையினை தங்களின் உறுப்பினர்கள் மத்தியில் விதைக்கின்றன. ஷாப் மட்டப் பிரச்சனைகளில் கூட்டு நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளைத் தாண்டி, அரசியல் பிரச்சனைகளை நோக்கி அந்தப் பரந்த பார்வை நீள்வதில்லை. நீதிமன்ற வழக்குகள், குற்றப் பத்திரிகைகள், போலீஸ் துன்புறுத்தல்கள் என்று பல்வேறு வழிகளில் சங்கங்களை தொந்தரவு செய்யும் நிர்வாகங்கள், தொழிலாளர்களுக்கு அரசியல் கல்வி கொடுப்பதற்கான நேரம் தொழிற் சங்கங்களுக்கு, இல்லாமல் போகும்படி பார்த்துக்கொள்கின்றன. தொழிற்சங்கங்கள் ”நேர்மையான கூலிப் பேரக்காரர்களாக” ஆகிவிட்டனர். தொழிலாளர்கள் தங்களின் தன்னியல்பில், சார்ந்திருக்கும் கட்சியின் அரசியல் பார்வையின் பிரதிபலிப்பாக தொழிலாளர்களின் அரசியல் பார்வை இருக்கிறது.

தொழிற்சங்கத்தில் ஜனநாயகம் இல்லாதிருப்பது மிகப்பெரிய அளவுக்கு வேரூன்றிய பிரச்சனையாக இருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்தை அவர்களின் போராட்டங்கள் , செயல்பாடுகள், கமிட்டிகளின் செயல்பாடுகள், பொதுப் பேரவைகள், இதர அமைப்புகளின் செயல்பாடுகள் என அனைத்திலும் ஜனநாயக பூர்வமாக ஈடுபடுத்துவதன் மூலம், இப்பிரச்சனையை தொழிற்சங்கங்கள் சரி செய்ய இயலும். பரந்துபட்ட தொழிலாளர்களுக்குக் கல்வி கொடுப்பதோ, தலைமைப் பண்பை வளர்ப்பதோ இதுவன்றி சாத்தியமில்லை. போராட்டங்களின் போது முடிவெடுப்பவர்களாக இருக்கும் தொழிலாளர் ஆகச் சிறந்த ஆசிரியர்களாக இருப்பார்கள். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் ‘அரசியல் பள்ளியாக’ இருக்க வேண்டும். அப்படி இருக்கவில்லை என்றால் அவை முதலாளித்துவ நிறுவனங்களாக மாறிப்போய்விடும்.

அரசியல் பிரச்சனைகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்தும்போதுதான் தொழிலாளர்களின் அரசியல் உணர்வு அதிகரிக்கிறது. தொழிற்சாலை மட்டத்தில் அரசியல் வகுப்பு நடத்துவது அவசியம். நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்துப் போராட்டங்களை நடத்துவது தொழிலாளர்கள் வீதிக்கு வரவும் அவர்களை அரசியல்படுத்தவும் பயன்படும்.

தொழிலாளர் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்கள் இருக்க வேண்டும்: பொருளாதாரம், சமூகம், கருத்தியல், கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அப்போது மட்டும்தான் உணர்வு பூர்வமான வர்க்கப் பேராட்டமாக இருக்கும். ஒவ்வொரு அம்சத்திலும் தொழிலாளர்களுக்கு மாற்று ஒன்றை அளிப்பதாக இருக்கும்.

மேலும் பார்க்க:

ஒப்பந்த தொழிலாளர்முறையை ஒழிப்பதன் அவசியத்தை குறித்து நீதிபதி(ஓய்வு) அரிப்பரந்தாமனின் கட்டுரை

This entry was posted in Analysis & Opinions, Featured, Political Economy, Working Class Vision, தமிழ் and tagged , , . Bookmark the permalink.