ஷாஹீத் மருத்துவமனை : உழைக்கும் வர்க்க தலைமையின் சாட்சியம்

“வளர்ச்சி”யின் காயங்களைத் தாங்கி நிற்கும் சுரங்க நகரமான தல்லி ராஜாராவின் மலைத்தொடர்களில் உழைக்கும் வர்க்க தலைமை, உழைப்பு மற்றும் ஒற்றுமையின் நினைவுச் சின்னம் ஒன்று உள்ளது. மற்ற நினைவுச் சின்னங்களைப் போல் இது சுற்றுலாத் தளமாகவோ கடந்த காலத்தின் நினைவாகவோ விளங்கவில்லை. மாறாக, இது பல நோயாளிகள் தங்கள் மருத்துவ சிகிச்சைக்காக வந்து செல்லும் துடிப்பான மருத்துவமனையாக உள்ளது.

Shaheed Hospital – Photo from Vikalpsangam (http://www.vikalpsangam.org)

‘ஏழைகளின் மருத்துவமனை’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஷாஹீத் மருத்துவமனை, தல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள சட்டீஸ்கரின் சில மாவட்டங்களிலுள்ள படிப்பறிவில்லாத மற்றும் unskilled தொழிலாளர்களின் அன்பளிப்பு என்றே கூறலாம். இது ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிதியாலும் உழைப்பாலும் நிர்வகிக்கப்படுகிறது. இச்செழிப்பான நாட்டின் ஏழை குடிமகன்களது மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இம்மருத்துவமனையின் மைய நோக்கம் ஆகும்.

1977 போராட்டத்தில் உயிரிழந்த 11 தியாகிகளிடமிருந்தே மருத்துவமனை இப்பெயரைப் பெற்றுள்ளது. அப்பொழுது Chattisgarh Mines Shramik Sanghatan (CMSS) என்னும் இயக்கம் உருவாக்கப்பட்டு, கூலி உயர்வும் சிறந்த வேலை சூழலும் வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் கழிந்து விட்டன. சுரங்கங்கள் முழுமையாக இயந்திர மையமாக்கப்பட்டுவிட்டன. மறைந்து வரும் வேலையிடங்கள் காரணமாக, இம்மருத்துவமனையைப் பார்த்துக் கொள்ளும் வேலைப் பளுவும் குறைந்துவிட்டது. இருப்பினும் தல்லி ராஜ்ஹாரா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலுள்ள ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்து மருத்துவ உதவி செய்துவருகிறது.

மருத்துவமனையின் வரலாறு

1982இல் பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக,சுரங்கத்தில் பணிபுரியும் குசுமாபாய் எனும் பெண் ஒப்பந்தத் தொழிலாளி உயிரிரழந்தார்.தல்லி ராஜ்ஹாராவில் சரியான மருத்துவ வசதிகள் இல்லாததாலும், பிலாய் ஸ்டீல் ஆலை மருத்துவமனையைப் பயன்படுத்த முடியாததாலும், அம்மருத்துவமனையின் ஊழியர்களின் அலட்சியம் காரணமாகவும் தொழிலாளர்கள் கிளர்ச்சியடைந்தனர். பாகுபாடுகளிலிருந்து விடுபடும் பொருட்டு, CMSS-ஆல் ஒன்றிணைந்த தொழிலாளர்கள், தங்களுக்கென ஒரு மகப்பேறு மருத்துவமனையைக் கட்ட முடிவெடுத்தனர்.

தொழிலாலளர்களின் ஒரு மாத அரியர் தொகை நிதியாக அளிக்கப்பட்டது. ஒருவரது பங்கு 100 ரூபாய், ஆனால் தொழிலாளர்கள் எண்ணிக்கை பலமாக இருந்ததால் (சுமார் 10000), நிதித் தொகை அதிகரித்தது. தங்களது கடினமான பணி நேரங்களுக்குப் பின்பும், இம்மருத்துவமனையைக் கட்டும் பொருட்டு, தொழிலாளர்கள் தங்கள் உழைப்பை அதற்குச் செலுத்தினர். ஆனால் மருத்துவர்கள் எங்கிருந்து வருவர்? பயிற்சிபெற்ற செவிலியர் எங்கிருந்து வருவர்? ‘அறிவு’ மற்றும் ‘நிபுணத்துவம்’ ஆகியவற்றை ஏழை தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து அந்நியப்படுத்தி வைத்திருந்த இச்சமூகம் இவற்றை மாற்றியமைக்குமா?

‘அறிவு’ மற்றும் ‘நிபுணத்துவம்’ இரண்டும் சமூக விளைபொருட்கள் தானே ஒழிய அவற்றை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சொத்தாக அடக்கிவிட முடியாத என்று கருதும் மருத்துவர்கள் இங்கு வர ஆரம்பித்தனர். அவர்கள் தங்கள் சொந்த பரிசோதனையாக, தங்கள் மருத்துவத் தேவைகளைத் தாங்களே பார்த்துக் கொள்ளும் வகையில் உள்ளூர்வாசிகளைப் பயிற்றுவித்தனர், அது ‘பொது மருத்துவ இயக்கமாக’ உருவாகியது.

மருத்துவமனையைத் தற்போது நிர்வகிக்கும் டாக்டர். சாய்பால் ஜனா மற்றும் மருத்துவமனையை தொடங்கிய குழுவில் இருந்த மருத்துவரும் கூறியதாவது ‘ஒரு மருத்துவ இயக்கம் தன்னந்தனியாக இயங்குவது கடினம், எனவே தான் மருத்துவத்தை உள்வாங்கிய ஒரு மக்கள் இயக்கம் தேவைப்பட்டது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் சங்கர் குகா நியோகியின் இந்த முயற்சியைக் கேள்விப்பட்ட பொழுது, அதை ஆதரிக்க நாங்கள் முடிவு செய்தோம்.” டாக்டர். ஜனா மட்டுமல்லாமல், அக்குழுவில் டாக்டர்.பினாயக் சென், டாக்டர்.ஆஷிஷ் குண்டு முதலியவர்களும் உண்டு.

நர்சிங், நோயாளிகளைப் பார்த்துக் கொள்ளுதல், அறுவை சிகிச்சையில் உதவி செய்தல் என பல பணிகளுக்கும் இம்மருத்துவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயிற்றுவித்தனர். மருத்துவமனையின் நிர்வாகப் பணிகளைப் பார்த்துக் கொள்ளும் புகுராம் தாகூர் என்னும் ஓய்வு பெற்ற சுரங்கத் தொழிலாளி, ‘மருத்துவ உதவியாளர்களாகப் பணிபுரிய சில ஒப்பந்தத் தொழிலாளிகள் முன்வந்துள்ளார்கள். எங்கள் பணி நேரம் முடிந்தவுடன்,மருத்துவமனையின் பணிகளில் உதவுவதற்கு இங்கு வந்துவிடுவோம். மருத்துவமனையின் சரக்குகளை சரிபார்த்தல், நோயாளிகளைப் பார்த்துக்கொள்ளுதல் மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், மருத்துவமனையைப் பராமரித்தல் மற்றும் இதர பணிகளிலும் எங்களை இணைத்துக் கொள்வோம். நீரின் தரத்தை உயர்த்த வேண்டியும் டையரியாவை ஒழிக்கும் பொருட்டும் அருகிலுள்ள இடங்களில் பிரச்சாரம் செய்தோம். டையரியாவால் பலர் உயிரிழந்தனர், குறிப்பாக பெண்கள். எனவே அதை முற்றுமுழுதாக ஒழிக்க நாங்கள் தீர்மானித்தோம்”. பொதுமக்களுள் இருந்து தான் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்.

“ஆரம்பத்தில், எந்த தகுதி நிர்ணயமும் இல்லை. நாங்கள் அனைவரையும் நியமித்தோம். இப்பணிகளுக்குப் புத்தக அறிவு தேவை இல்லை. பயிற்சியும் பணி அனுபவமும் கொண்டு இப்பணியைக் கற்றுக்கொள்ளலாம். தற்போது பலரும் இப்பணியில் சேர தயாராக இருப்பதால், பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களைத் தான் இப்பொழுது நியமிக்கிறோம்” எங்கிறார் டாக்டர்.ஜனா. 1984இல் நன்கு பராமரிக்கப்படும், பணியாளர்களை சரியாக நியமிக்கும் மருத்துவமனை இயக்கத்திற்கு வந்தது. இப்பொழுது, குறைந்த செலவில் சிறந்த மருத்துவ வசதிகள் பெறும் வாய்ப்பை தொழிலாளர்கள் பெற்றுள்ளனர்.

உழைக்கும் வர்க்கத்தின் மதிப்பீடுகள்

Shaheed Hospital Inauguration plaque

படிநிலைகள், அதிகாரத்துவம் மற்றும் Specialization ஆகியவை முதலாளித்துவ அமைப்பின் தனித்துவங்கள். அதன் ஆற்றல்கள் குறித்து பூர்ஷ்வா அறிவுஜீவிகள் புகழ் பாடியுள்ளனர். ஆனால் ஷாஹீத் மருத்துவமனையில், தொழிலாளர்களால் நடத்தப்படும் நிறுவனம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இங்கு வல்லுநர்கள் என்று யாரும் இல்லை. இது வெறும் மகப்பேறு மருத்துவமனையாக மட்டுமில்லாமல், குழந்தை நலம், எலும்பு முறிவு மற்றும் இதர உடன்நலக் கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்கின்றது. இங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாக ஊழியர்கள் அனைவருமே பலதரப்பட்ட பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பணியாளர்களின் பற்றாக்குறை ஒரு புறமும், குவியும் நோயாளிகள் மறுபுறமும் இருக்க, அனைவருமே எல்லா பணிகளுக்கும் தயாராக இருக்க வேண்டியுள்ளது. இதுவும் ‘பொது மருத்துவ இயக்கத்தின்’ ஒரு மைல்கல்லாக விளங்குகிறது.

பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அதிகாரத்துவ முறைக்கு மாறாக, இங்கு மருத்துவமனையை நிர்வகிக்கும் பொருட்டு தொழிலாளர்கள் கமிட்டிகள் உருவாக்கியுள்ளனர். இயந்திரங்கள் வாங்குவது போன்ற நிர்வாக முடிவகளாகட்டும், அன்றாடப் பணிகள் ஆகட்டும், அனைத்தையும் மருத்துவர்கள், மருத்துவத் தொழிலாளர்கள் மற்றும் CMSSஇன் பிரதிநிதிகள் அனைவரையும் உள்ளடக்கிய இக்கமிட்டிகளே முடிவு செய்கின்றன. முக்கிய முடிவுகளில் பங்குபெற தொழிலாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது மட்டுமல்லாமல், இதன் மூலம் பலவற்றை கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிட்டியுள்ளது. மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்குமிடையிலான ஊதிய வேறுபாட்டைக் குறைத்தது மட்டுமல்லாமல், அனைத்துப் பணிகளிலும் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதன் மூலம் ஒரு ஜனநாயக முடிவெடுக்கும் முறையை நடைமுறை படுத்தியுள்ளனர். இவ்வாறு அதிகாரத்துவ படிநிலைகளும் சமன்படுத்தப்பட்டுள்ளன.

வார்டுகளின் வழியாகக் கூட்டிச் சென்றும், செவிலியர்களிடம் உறையாடியும் மருத்துவமனை தொடங்கப்பட்ட காலம் முதல் இங்கு பணிபுரியும் ஜக்குராம் சாகு, எங்களுக்கு மருத்துவமனையைச் சுற்றிக் காட்டினார். அவர்களது உழைப்பில் உருவாகியுள்ள இம்மருத்துவமனை குறித்து அவர் மிகவும் பெருமை கொள்கிறார். “இது எங்கள் மருத்துவமனை. நாங்கள் இதை ஏதோ ஊதியத்திற்கு பணிபுரியும் வேலையாகப் பார்க்கவில்லை. சொல்லப்போனால், பணி ஓய்வு பெறும் வரை, எங்களுக்கு எந்த ஊதியமும் வழங்கப்படவில்லை. ஏனென்றால், தொழிலாளர்களாகிய நாங்களே இதன் உண்மையான உரிமையாளர்கள்” என்கிறார் அவர். அனைத்து நிர்வாக விதிகளையும் விட்டொழித்த பின்னரும் கூட தனியார் மருத்துவமனைகள் வழங்கும் சேவைகளை, குறைந்த விலையில் தக்கவைக்க முடிந்துள்ளது இவர்களால்.

distant view of dalli rajhara mines in 2017

ஆயிரங்களில் இருந்து நூறுகளுக்கு தொழிலாளர்களின் எண்ணிக்கையை சுரங்கங்கள் குறைத்த பிறகு, மருத்துவமனையிலும் தொழிலாளர்களின் பங்கு குறைந்துவிட்டது. அன்றாடப் பணிகளை மேற்கொள்ளும் பல தொழிலாளர்களுக்கு மத்தியில், தற்போது நான்கு தொழிலாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். சிலர் இறந்துவிட்டனர், ஓய்வு மற்றும் வேலையிழப்பு காரணாமாக மற்றவர்கள் இடம் பெயர்ந்துவிட்டார்கள். இவ்வியக்கத்தை வழிநடத்திய சங்கர் குக நியோகியின் படுகொலையாலும், சமீபத்தில் இயக்கம் உடைந்ததாலும், அது வலுவிழந்தது மட்டுமல்லாமல், தொழிலாளர்களால் மருத்துவமனைக்குக் கிடைத்த ஆதரவும் குன்றிவிட்டது. காலப்போக்கில், பழைய பாணியாளர்களின் இடங்களும் புதியவர்களால் நிரப்பப்பட்டுவிட்டது. மிகவும் போற்றப்பட்டு வந்த சில குணாதிசயங்களும் நாளடைவில் வலுவிழந்துவிட்டன. இருப்பினும், மருத்துவர்கள் பணியாளர்கள் மற்றும் இயக்கத்தின் விடாமுயற்சியால் இந்நிறுவனத்தின் தொடக்ககட்ட மதிப்புகள் இன்றும் வலுவாக உள்ளன.

அடுத்த கட்டம் எப்படி இருக்கப் போகிறது?

ஷாஹீத் மருத்துவமனைக்கு எதிர்காலத்தில் பல தடங்கல்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. clinical establishment 2015 சட்டம் மருத்துவ வசதிகள் மற்றும் பணியாளர்களின் தகுதிகளை இறுக்கமாக்கியுள்ளது. புத்தக அறிவைத் தாண்டிய, பயிற்சி அறிவில் நம்பிக்கை கொண்டுள்ள , குறைந்த இயந்திரங்கள் கொண்டு, குறைவான செலவில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு இச்சட்டம் முட்டுக்கல்லாக உள்ளது. பொருளாதாரத் தேவைகளுக்காக மைய மற்றும் மாநில அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நம்பும் நிலைக்கு மருத்துவமனை தள்ளப்பட்டுள்ளது.

குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவை வழங்குவதில் திடமாக மருத்துவமனை இருக்கும்போதிலும், தொழிலாளர்களின் பொருளாதார உதவிகள் குறையும்பொழுது, நிர்வாகத் தேவைகளுக்காக அரசை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பணிபுரிவதற்காக மருத்துவர்களை ஈர்க்கும் பொருட்டு, ஊதிய உயர்வும் மற்ற சலுகைகளும் வழங்க வேண்டி உள்ளது. தனது வர்க்க குணாதிசயங்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியும், தனது தனித்துவமான மதிப்புகளோடு இயங்கவும், உழைக்கும் வர்க்கத்தின் ஆதரவு கண்டிப்பாக வேண்டியுள்ளது.

உழைக்கும் வர்க்கம் எத்தகைய கனவுகளை நடைமுறைப்படுத்த முடியும் என்பதற்கான சாட்சியமாக சாஹீத் மருத்துவமனை நிலைத்து நிற்கும். பொது சிந்தனையின் நம்பிக்கைகள் அனைத்தையும் தகர்க்கும் விதமாக, கடின வேலைகளில் ஈடுபடும் படிப்பறிவில்லாத ஒப்பந்தத் தொழிலாளர்கள் சிலரது உழைப்பால், ஏழை மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய மருத்துவமனையாக ஷாஹீத் விளங்குகிறது.

வல்லுநர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் குறைந்தபட்ச உதவியுடன், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பொது சேவை ஆகிய கொள்கைகள் கொண்டு, நிலைத்து நிற்கும் நிறுவனத்தை உழைக்கும் வர்க்கத்தால் உருவாக்க முடியும் என்பதை CMSS தொழிலாளர்கள் நிரூபித்துள்ளனர். தங்களது அன்றாடத் துயரங்களுக்கு மத்தியில், நியாமான மற்றும் நிலையான நிறுவனத்தை அவர்கள் கனவு கண்டது மட்டுமல்லாமல், தங்களது கனவிற்கு வண்ணமும் கொடுத்துள்ளனர். அன்றாட வாழ்வின் வெறுமைக்குள் நம்மை தொலைத்துவிடாமல், நமது வரம்புகளை விரிவாக்கி, சமத்துவ சமூகத்தை கனவு காணுமாறு நம்மை அழைக்கிறார்கள். இதன் மூலம், தற்போதைய தொழிலாளர்களுக்கு சில செய்திகளைப் படைத்துள்ளனர் : தனி மனித சிந்தனையை விடுத்து, கூட்டாக சிந்திக்குமாறு கூறுகிறார்கள். விரக்தி நிலையில் இருந்து விடுபட்டு, சமத்துவ சமூகம் படைக்கும் நம்பிக்கையில் செயல்பட நம்மைத் தூண்டுகிறார்கள். இத்தகைய கனவுகளை ஆதரிப்பதும், அவற்றை பிரதிபலிப்பதும் நமது கடமையே ஆகும்.

This entry was posted in Analysis & Opinions, Contract Workers, Featured, Working Class Vision, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.