நீட் போராட்டத்திற்கு ஆதரவாகத் தொழிலாளர்கள்!

நீட் (National Eligibility and Entrance Test-NEET) என்று குறிப்பிடப்படும் மருத்துவக் கல்விக்கான மத்தியத்துவப்படுத்தப்பட்ட தேர்வு முறைக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் தமிழகத்தைக் குலுக்கி வருகின்றன. நீட் தேர்வுக்கான பொதுமக்களின் எதிர்ப்பு மிகவும் கடுமையானதாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு நீட்டுக்கு எதிர்ப்பு காட்டிவந்ததிலிருந்து பின்வாங்கியது. மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடப்பதற்கான ஒரே முறை நீட் மதிப்பெண்தான் என்று ஒப்புக்கொண்டது. இப்படியாகக் கொள்கை மாற்றம் நிகழ்ந்தது அனிதாவின் தற்கொலைக்குக் காரணமாயிற்று. மருத்துவப் படிக்கும் கனவில் இருந்த அனிதா, நீட் முறையில்தான் தேர்வு என்பதால் கலைந்துபோன கனவினால் தற்கொலை செய்து கொண்டார். அனிதா 12 ஆம் வகுப்புத் தேர்வில் 96 சதம் மார்க் எடுத்திருந்தார். ஆனால், நீட் முறையில் 720 மார்க்கிற்கு அவர் எடுத்தது 86 மட்டுமே. நீட் தேர்வு முறை என்பது ஒரே கேள்விக்குப் பல பதில்கள் கொடுத்து சரியானதைத் தேர்ந்தெடுக்கச் சொல்லும் முறையாகும். இதன் காரணமாக, அனிதாவிற்கு மருத்துவம் படிக்கும் தகுதி இல்லாது போயிற்று. மக்கள் மத்தியில் நீட்டுக்கு எதிராக இருந்த எதிர்ப்பை அனிதாவின் தற்கொலை தூண்டிவிட்டது. மாணவர்கள், கல்வியாளர்கள், தொழிலாளர்கள் தெருவில் திரண்டனர். நீட்டை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று போராட ஆரம்பித்தனர். இருந்தபோதும், நீட்டின் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை அரசு நடத்த ஆரம்பித்தது. வேலூரின் CMC மருத்துவமனை மட்டும் நீட் அடிப்படையிலான தேர்வு முறையில் இருந்து விலகிக்கொண்டது. மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்பட மாட்டாது என்று CMC அறிவித்தது.

நீட்டின் எதிர்மறை விளைவுகள் என்ன என்பது ஏற்கனவே புலப்பட ஆரம்பித்துவிட்டது. கடந்த ஆண்டைக் காட்டிலும் மிகக் குறைவான கிராமப்புர மாணவர்கள்தான் மருத்துவப் படிப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் என்ன அரசியல் நடக்க வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும் என்றால், எத்தகைய பேரழிவு ஏற்படும் என்பதற்கான சிறந்த உதாரணம் நீட்தான்.

தமிழ்நாட்டு மாணவர்களின் பெரும்பகுதி உயர் கல்விக்கு அனுப்பப்படுகின்றனர். இதுபோன்ற முற்போக்கான நிலைப்பாடு உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு நீட் ஆகப் பெரும் ஆபத்தாகும். இணைப்பு (1) பாருங்கள். அது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் கல்விக் கொள்கையை ஒப்பிட்டு ஆய்வு செய்கிறது. கர்நாடகா தன் மாணவர்களில் மிகப் பெரும் பகுதியை 12ஆம் வகுப்பில் வடிகட்டிவிடுகிறது. வெறும் 52 சதம் பேர் மட்டுமே 12ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைகின்றனர். இப்படிச் செய்வதன் மூலம், திறனற்ற உழைப்பும் திறன்மிக உழைப்பும் செயற்கையாக, கல்வி முறையின் மூலம், அரசால் பிரிக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் 12 வகுப்பில் 92 சதம் பேர் வெற்றி பெறுகின்றனர். மாநிலத்தின் கல்வி முறையில் நிறையப் பிரச்சனைகள் இருந்தபோதும், மாநில இளைஞர்களில் ஆகப் பெரும்பகுதியினர் கல்லூரிக்குச் செல்லவும் பட்டப் படிப்புப் படிக்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. அதனால், தமிழ்நாட்டின் தேர்வுகளில் நுழைவுத் தேர்வு என்ற மசாலா சேர்க்கப்படுவதில்லை. நுழைவுத் தேர்வின் நோக்கமே ஆகப் பெரும்பகுதி இளைஞர்களுக்குத் தரமான கல்வி கிடைக்காமல் செய்வதற்காக, வடிகட்டி வெளியேற்றுவதுதான்.

நீட் பல்வேறு பதில்களில் இருந்து ஒரு பதிலைத் தேர்ந்தெடுக்கும் முறையிலான தேர்வாகும் (multiple choice questions -MCQ). இவ்வகைத் தேர்வில் வெற்றிபெற சிறப்புப் பயிற்சி அவசியமானதாகும். மருத்துவம் படிக்க நினைத்த தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இந்தத் தேர்வு முறை மரண அடியாகும். நீட் தேர்வை எழுத வேண்டுமானால், மிகவும் முன்னேறிய கல்வித் திட்டத்தில் படித்திருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, தேர்வுகளில் வெற்றியடைய சிறப்புப் பயிற்சிகளையும் பெற்றிருக்க வேண்டும். அதுபோன்ற பயிற்சிகளைப் பெற வேண்டுமானால், அதற்கென்று நேரம் ஒதுக்க வேண்டும். பயிற்சிக் கட்டணத்தைக் கட்டும் அளவு கையில் பணம் இருக்க வேண்டும். இதன் காரணமாக, மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான மாணவர்களின் எண்ணிக்கைக் குறைந்து போய்விடுகிறது. கிராமப்புர மாணவர்களின் ஆகப் பெரும் பகுதியினர் வடிகட்டி மருத்துவக் கல்வியிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். அனிதா தன் கனவு நிறைவேறும் என்று நம்பினார். தனக்கு மருத்துவம் படிக்கும் தகுதி இருக்கிறது என்று நம்பினார். மருத்துவம் படிப்பதற்காக மத்திய அரசின் மீது நீதிமன்றத்தின் வழியே போர் தொடுத்தார். (பல ஆயிரக் கணக்கான விவசாயிகள் சமூகத்தினால் கொலை செய்யப்பட்டு, தற்கொலை மரணம் என்று ஆவதைப்போல,) அனிதாவும் தற்கொலை செய்துகொண்டார். விளைவாக, தமிழக மக்கள் தெருக்களில் இறங்கிப் போராட ஆரம்பித்தனர்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலப் பாடத்திட்டமும், மாநில பள்ளிக் கல்வி முறையும் (state board)இருக்கிறது. அரசியல் சட்டத்தின்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்த உரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமும், கல்வியும் கூட மாநில அதிகாரத்திற்கு உட்பட்டவை. 1960களில், தேசிய அளவில் கல்வியைத் தேசிய அளவில் தரப்படுத்துவது என்ற கூச்சல் எழுந்தது. கோத்தாரி கமிட்டி அமைக்கப்பட்டது. கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என்று கோத்தாரி கமிட்டி பரிந்துரைத்தது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு வகையான சமூகப் பொருளாதார, பண்பாட்டு நிலைமையைக் கொண்டுள்ளன. அத்துடன் மொழி அடிப்படையிலும் மாறுபட்டுள்ளன. இப்படிப்பட்ட ஒரு நாட்டில் கல்வி மாநில அதிகாரத்தின் கீழ் வருவது தவிர்க்கப்பட முடியாதது ஆகும்.

1976ல், அவசரநிலை காலகட்டத்தின்போது, அப்போதைய பிரதமமந்திரி இந்திரா காந்தி கல்வியை பொதுப்பட்டியலுக்குக் கொண்டு வந்தார். மத்திய அரசும், மாநில அரசும் கல்வி பற்றிய கொள்கைகளை மாற்றியமைக்கலாம் என்பதுதான் இதன் பொருள் ஆகும். ஒரு துறையைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டுவரும்போது, அந்தத் துறையின் மீதான மாநிலத்தின் தனிப்பட்ட அதிகாரம் பலவீனமடைந்துபோகிறது. ஏனென்றால், மத்திய அரசின் சட்டம் மாநில அரசின் சட்டத்தை விட கூடுதல் செல்லும் தன்மைகொண்டதாகும். ஒரு மாநில அரசு தனக்கு விதிவிலக்கு வேண்டும் என்று நினைத்தாலும் கூட, இந்திய ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். ஆனால், இந்திய ஜனாதிபதி இந்திய மத்திய அரசின் ஆலோசனைகளின்படிதான் செயல்படுவார்! நீட்டுக்கு விதிவிலக்கு கோரும் தமிழ்நாட்டின் தீர்மானத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை. நவ தாராளவாதக் கருத்தியலின் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டில், ஆளும் வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் ஒரு நாட்டில், ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக்கொள்வது அவசியமானதாகிறது. இதன் காரணமாக, பொதுப் பட்டியலில் இருக்கும் ஒரு துறையில் என்ன கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுக்குக் கட்டளையிடுவது சாத்தியமாகிப் போகிறது. மாநில அரசும் கீழ்ப்படிந்து போவது நடக்கிறது.

நமது நாட்டின் இடதுசாரி இயக்கம் தாழ்வான மட்டத்தில் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, மாணவர் இயக்கங்களும் தொழிலாளர் வர்க்க இயக்கங்களும் ஒன்றிலிருந்து ஒன்று விலகி இருப்பதாகும்[2]. இந்தப் பின்புலத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் பல பிரிவுகள் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடுவதும், அனிதாவின் நிறுவனப் படுகொலையைக் கண்டிப்பதும் வரவேற்கத் தக்க முன்னேற்றமாகும். தங்களின் இரண்டு தோழர்களின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் பிரிக்கால் தொழிலாளர்கள், AICCTUவில் அங்கம் வகிக்கும் ஸ்ரீபெரும்புதூர் தொழிலாளர்கள், நிர்வாகத்திற்கு எதிராக வெகு நீண்ட போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் சன்மினா தொழிலாளர்கள் [3], MRF ஆலைத் தொழிலாளர்கள், தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

This slideshow requires JavaScript.

நீட் தேர்வு முறை போன்ற கொள்கைகளை புதிய கல்விக்கொள்கை [4] என்ற விரிந்த பொருளில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். தரமானக் கல்வி என்பது அதிகச் செலவு பிடிக்கும் ஒன்று என்று புதிய கல்விக்கொள்கை மாற்றி வருகிறது. மற்றொரு பக்கம், சமூக ஏணியில் ஒருவர் உயர வேண்டும் என்றால் கல்வி அவசியம் என்றாகிறது. இந்த இரண்டும் சேரும்போது தொழிலாளி ஒருவரின் மகன் தொழிலாளியாக மட்டுமே ஆக முடியும். நீட் என்பது மருத்துவமும் கல்வியும் சந்திக்கும் புள்ளியாக இருக்கிறது. மருத்துவக் கல்வியை வணிகமாக்குவதன் மூலம், படிப்பில் சேர்வதற்கான செலவை அதிகப்படுத்துவதன் மூலம், மருத்துவத் துறையும் தனியார் மயம் ஆவதற்கான நெருக்கடி அதிகமாகிறது. ஏனெனில், அதிக செலவு செய்து படிக்கும் மாணவர்களுக்கு அதற்கான வருமானம் வரவேண்டும் அல்லவா? இதன் காரணமாக நிறுவனங்கள் காட்டும் பாரபட்சம் அதிகரிக்கும். கிராமப்புர, ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினருக்கான மருத்துவக் கல்விக்கும், மருத்துவத்திற்கும் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும்.

இது நடக்காதிருக்க வேண்டும் என்றால், மாணவர்களும் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து விடாப்பிடியான போராட்டங்களை நடத்தியாக வேண்டும்.

[1] https://thewire.in/175230/tamil-nadu-education-neet-education-karnataka-coaching-graduates/

[2]http://tnlabour.in/automobile-industry/3688

[3]http://tnlabour.in/factory-workers/5802

[4] http://tnlabour.in/workers-struggles/3611

 

This entry was posted in Analysis & Opinions, Featured, Working Class Vision, தமிழ் and tagged , , . Bookmark the permalink.